லாக்டவுன்ல என் பையனை ஆசை தீர கொஞ்சறேன்!



இசைக்குயிலாகவும் புன்னகைக்கிறார் கீர்த்தி சுரேஷ். ‘மாஸ்டர்’ படத்தின் ‘குட்டி ஸ்டோரி...’ பாடலை வயலினில் வாசித்து, விஜய்க்கு இசைமழையாக பர்த் டே வாழ்த்தைச் சொல்லி அசத்திவிட்டார். கூடவே, ‘பெண்குயின்’ பர்ஃபாமென்ஸுக்கும் பொக்கேஸ் குவிய, குஷியில் துள்ளுகிறார் கீர்த்தி. மோகன்லாலின் ‘மரக்கார்’, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ தவிர தெலுங்கிலும் பரபரக்கிறார்.

‘‘ஸ்கூல் படிக்கறப்ப வயலின் கிளாஸ் போவேன். அடிப்படை விஷயங்களை அங்கதான் கத்துக்கிட்டேன். அப்புறம், டைம் கிடைக்கறப்ப எடுத்து வாசிப்பேன். ஒரு கட்டத்துக்கு பிறகு ஷூட்டிங்ல பிசியாகிட்டேன். இந்த லாக்டவுன்லதான் திரும்பவும் வயலினை கைல தொட டைம் கிடைச்சது. ‘நடிகையர் திலகம்’ ரிலீஸுக்கு முன்னாடி ‘சர்கார்’ படத்தை முடிச்சிருந்தேன். இடைல கிடைச்ச பிரேக் சின்னது. ஆனா, இந்த கொரோனா காலத்துலதான் பெரிய பிரேக் கிடைச்சிருக்கு.

இது கிட்டத்தட்ட ரியாலிட்டி செக் மாதிரி இருக்கு. ஒரு சூழலை எப்படி சமாளிக்கணும்... எதிர்கொள்ளணும்னு கத்துக் கொடுத்திட்டிருக்கு.
கடந்த மார்ச் மாசமே என் படங்கள் தியேட்டர்ல ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. ஊரடங்கு காரணமா எல்லாமே தள்ளிப் போயிருக்கு.
இந்த சூழல்ல ‘பெண்குயின்’ ஒடிடி ப்ளாட்ஃபார்ம்ல ரிலீஸ் ஆகி, ஆடியன்ஸ்கிட்ட என்னைக் கொண்டு போய் சேர்த்திடுச்சு.

இந்த லாக் டவுன் பீரியடை பயன்படுத்தி கிச்சன் பக்கம் போறேன்; சமைக்கறேன்; என் பையனை (செல்ல நாய்க்குட்டி) கொஞ்சுறேன். அவனும் அன்பை அள்ளிக் கொட்டுறான். ஹேப்பியா போயிட்டிருக்கு...’’ கலகலக்கிறார் கீர்த்தி.திடீர்னு வேற ஒரு லுக்ல இருக்கீங்க... ஏன்?
திடீர்னு இல்ல. ‘நடிகையர் திலக’த்துக்கு பிறகு நல்ல ஸ்கிரிப்ட்ஸ் செலக்ட் பண்ணலாம்னு ஒரு பிரேக் எடுத்தேன். ஒவ்வொரு கதைகளா கேட்டுக்கிட்டே இருந்தேன். அப்படியே ஆறெழு மாசம் போயிடுச்சு.

அந்த டைம்ல ஒர்க் அவுட்ல கவனம் செலுத்தினேன். இந்த நியூ லுக் வந்திடுச்சு. பெண்களை மையப்படுத்தும் கதைகள் செட் ஆனா, நடிக்கலாம்னு நினைச்சிருக்கும் போதுதான் ‘பெண்குயின்’ கதையை கேட்டேன். இயக்குநர் ஈஸ்வர், நாலரை மணிநேரம் கதையை நேரேட் பண்ணினார். தாய்மையை பிரதிபலிக்கும் கதை. கர்ப்பிணி ரோல்னு நிறைய ஸ்கோப் இருந்ததால உடனே ஓகே சொல்லிட்டேன்.

அம்மாவா நடிக்கணுமானு கேள்வி எழல. இளம் கர்ப்பிணி பெண்ணாதானே நடிச்சிருக்கேன்? கதையும், என் கேரக்டரும் பிடிச்சு, செட் ஆச்சுனா தொடர்ந்து இளம் அம்மாவாவும் நடிப்பேன்.உங்க அக்கா ரேவதி என்ன பண்றாங்க?அக்காவுக்கு டைரக்ட் பண்ற ஆசையிருக்கு. நிறைய ஸ்கிரிப்ட்ஸ் எழுதி வச்சிருக்கா. அப்பா தயாரிப்பில் அக்கா டைரக்ட் பண்ண, நான், அம்மா, பாட்டினு ஃபேமிலில உள்ள அத்தனை பேரும் நடிச்சு ஒரு படம் வரணும்னு விரும்புறேன். பதில் அக்காகிட்டதான் இருக்கு!எப்படி வந்திருக்கு ‘மரக்கார்’?

பிரமாண்டமா! ‘மரக்கார் - அரபிக்கடலின்டே சிம்ஹம்’ல நான் ஹீரோயின் இல்ல. என்னை கதாநாயகியாக அறிமுகப்படுத்தின ப்ரியதர்ஷன் சார் டைரக்ட் பண்ணியிருக்கற பீரியட் ஃபிலிம் அது. கேரளாவுக்கு பெருமை சேர்க்கும் மிகப்பெரிய வரலாற்று படத்தில் என் பங்கும் கொஞ்சமாவது இருக்கணும்னு இதுல நடிச்சிருக்கேன். சம்மரில் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. லாக்டவுன் வந்துடுச்சு!

செய்தி: மை.பாரதிராஜா

படங்கள்: கிரண்ஷா