உலகை உலுக்கிய உயிர்கொல்லி நோய்கள்



மினி தொடர் 11

காலராவின் வருகை!


மனித குல வரலாற்றில் எவ்வளவோ தொற்று நோய்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகி கால, தேச வர்த்தமானங்களைக் கடந்து நாடு விட்டு நாடு, கண்டம் விட்டுக் கண்டம் பரவியிருக்கின்றன. இதில், டைபாய்டு, பெரியம்மை, பிளேக் முதல் எத்தனையோ நோய்கள் வேற்று நிலங்களிலிருந்து நமக்கு வந்தவை. ஆனால், ஒரு கொள்ளை நோய் நம் நிலத்தில் உருவாகி, பிறகு உலகையே ஆட்டிப் படைத்தது என்றால் அது காலராதான்.

விப்ரியோ கொலரே (Vibrio cholerae) அல்லது ‘வி காலரா’ என்ற பாக்டீரியாதான் காலரா என்ற கொடூர நோய்க்கு மூலக் காரணம்.

நீர் நிலைகளில் பரவும் இந்தக் கிருமி, அதனை மனிதர்கள் பருகுவதன் மூலம் அவர்கள் உடலுக்குள் நுழைந்து, பெருங்குடலைத் தாக்கி கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி, நீரிழப்பு ஆகியவற்றை உருவாக்குகிறது.

மாசடைந்த நீர் அல்லது அதில் தயாரிக்கப்பட்ட உணவு இரண்டின் மூலமாகவும் பரவும் தன்மையுடைய இக்கிருமி, உடலில் சேர்ந்த இருபத்தி நான்கு மணி நேரத்துக்குள் மரணத்தை சம்பவிக்கக்கூடிய அளவுக்கு கடினமானது. ஆரோக்கியமான ஓர் உடலில் நுழைந்தால் பனிரெண்டு மணி நேரம் முதல் ஐந்து நாட்களுக்குள் நோய் அறிகுறியை உருவாக்கும். உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுக்காவிடில் உயிரையே பறிக்கும்.உலகம் முழுதும் ஒவ்வோர் ஆண்டும் பதிமூன்று லட்சம் முதல் நாற்பது லட்சம் பேர் வரை காலராவால் பாதிக்கப்படுவதாகவும் இதில் 1,43,000 பேர் வரை மரணிப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

மருத்துவம் நன்கு வளர்ந்துள்ள இந்த நவீன காலத்திலேயே காலரா இத்தனைக் கொடூரமாக இருந்திருக்கிறது என்றால், கிருமிகள் பற்றிய அறிதலே இல்லாத வரலாற்று காலத்தில் இது நிகழ்த்திய கொடூரங்களை கற்பனை செய்யவே பீதியாக இருக்கிறது.காலரா என்ற சொல்லை முதன் முதலில் கிரேக்க வரலாற்றாசிரியர் ஹிப்போகிரட்டஸ்தான் பயன்படுத்துகிறார். அவர் குறிப்பிட்டது இந்த நோயைத்தானா என்ற சர்ச்சை அறிஞர்களிடையே இன்னமும் நிகழ்ந்தாலும் கோலஸ் என்ற மூலச் சொல்லுக்கு பழைய கிரேக்கத்தில் குடல் என்ற பொருள் உள்ளதை வைத்து இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்கிறார்கள் சிலர்.

கி.மு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹிப்போகிரட்டஸ் காலத்தில் மட்டுமின்றி அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த புத்தர் காலத்திலும் காலரா இருந்ததற்கான குறிப்புகள் கிடைத்திருக்கின்றன.சொல்லப்போனால் காலராவின் பூர்விகமே புத்தர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த கங்கைச்
சமவெளிப் பகுதிகள்தான். அந்நாட்களில் இந்தியா முழுதுமே காலரா அடிக்கடி பரவும். இதற்கு முக்கியமான காரணமாக இருந்தது இந்தியர்களின் புனித யாத்திரை.

அந்நாளின் கிரேக்க சமூகங்களோடு நமக்கு இருந்த வணிக, கலாசார தொடர்புகள் மூலம் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு இந்த நோய் சென்றிருக்கலாம் அல்லது நோயைப் பற்றி ஹிப்போகிரட்டஸ் கேள்விபட்டு எழுதியிருக்கலாம் என்று இருவேறு கருத்துகள் இருக்கின்றன.
எப்படி இருந்தாலும் காலரா இந்திய கங்கைச் சமவெளியில் உருவானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பதிவு செய்யப்பட்ட முதல் காலரா பரவல் என்பது 1563ம் ஆண்டின் கங்கைச் சமவெளிப் பகுதிகளில் நிகழ்ந்தது. இதில் பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு என்பது தெளிவாகத் தெரியவில்லை.கி.பி.1817ம் ஆண்டு முதல் கி,பி. 1824ம் ஆண்டு வரை கங்கைச் சமவெளிகளில் தொடங்கி வங்காளம் வழியாக இந்தியா முழுதும் பரவிய காலரா தொற்றுதான் முதல் பெரும் காலரா கொள்ளை நோய் எனப்படுகிறது.

இதற்கு பிறகு, 1829 - 37, 1846 - 60, 1863 - 75, 1881 - 96, 1899 - 1923, 1961 - 75 என உலகம் முழுதும் வெவ்வேறு பகுதிகளில் ஏழு முறை காலரா பரவியுள்ளது.  1975ம் ஆண்டுக்கான நிலைமைக்குப் பிறகு உள்ள எட்டாம் நிலைப் பரவலை சமகாலப் பரவல் என்று அழைக்கிறோம்.கி.பி.1817ம் ஆண்டில் வங்காளத்தின் ஜெசூர் நகரத்தில்தான் காலரா முதன் முதலில் உற்பத்தியானது என்று நம்பப்படுகிறது. சிலர் நுண்ணுயிரியல் ஆய்வாளர்கள், மேல் கங்கைப் பகுதிகளில் நிகழ்ந்த கும்பமேளா போன்ற திருவிழா ஒன்றில்தான் முதன் முதலில் சமூகப் பரவலாக காலரா நிகழ்ந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

இந்த அண்டின் செப்டம்பர் மாதம் காலரா கல்கத்தாவை அடைந்தது. அங்கிருந்து வங்காள விரிகுடா மூலம் உலகின் பிற பகுதிகளுக்குள் எளிதாக நுழைந்தது. உலகம் முழுதையும் இணைத்துக் கொண்டிருந்த சரக்குக் கப்பல்களும், வணிகர்களும், வெள்ளை அதிகாரிகள், ராணுவ வீரர்களும் இந்தப் பரவலில் முக்கியப் பங்கு வகித்தார்கள்.

அடுத்த மூன்றாண்டுகளில் காலரா தாய்லாந்தின் சயாம் நகரை அடைந்தது. பாங்காக், மணிலா என்று நகர்ந்து மறு ஆண்டான 1821ம் ஆண்டின் வசந்த காலத்தில் ஜாவா, ஓமன், அன்ஹாயை அடைந்தது. அடுத்த ஆண்டே ஜப்பானை நெருங்கியது. மேலும், பாரசீக வளைகுடா, பாக்தாத், சிரியா, ட்ரான்ஸ்காக்கஸ் என்று மத்திய கிழக்கிலும் பரவத் தொடங்கியது.

கி.பி. 1823ம் ஆண்டில் சாசிபார் (இன்றைய தான்சானிய பகுதியில் ஒன்று), மொரீசியஸ் தீவுகள் ஆகியவற்றையும் அடைந்தது.இப்படி ஒவ்வொரு நிலமாக பரவிக் கொண்டிருந்த காலரா தீடீரென நம்பவியலாதது போல, 1824ம் ஆண்டு பரவாமல் நின்றது. அந்த ஆண்டு பருவநிலையில் ஏற்பட்ட மாற்றம் நீரை அதிகக் குளிர்ச்சியாக்கி பாக்டீரியா கிருமிகள் அழிந்துபோகும்படி செய்திருக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

இப்படியாக, பக்தர்கள் இந்திய துணைக் கண்டம் முழுக்க எடுத்துச் சென்ற காலராவை ஆங்கிலேயர்கள் உலகம் முழுதும் எடுத்துச் சென்றார்கள்.
இந்த முதலாம் காலரா தாக்குதலில் எத்தனை மரணங்கள் நிகழ்ந்தன என்பதற்கு தெளிவான சான்றுகள் இல்லை. ஜேம்ஸ் ஜேம்ஸன் என்பவர் தாக்கல் செய்த வங்க மருத்துவ அறிக்கையின்படி ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் மட்டும் ஒன்றே கால் லட்சம் பேர் இறந்தார்கள் எனப்படுகிறது.

அப்படிப் பார்த்தால் நம் நாட்டில் மட்டும் சுமார், எட்டே முக்கால் லட்சம் பேர் மரணித்திருக்க வேண்டும். ஆனால், டேவிட் அர்னால்டு என்ற ஆய்வாளர் இந்த எண்ணிக்கையை மறுக்கிறார். இந்த எண்ணிக்கை இந்தியா முழுதும் ஒரே மாதிரியானதாக இருக்கவில்லை என்கிறார்.

சென்னை மாகாணத்தின் அறிக்கையின் படி காலரா தாக்குதலில் ஆயிரம் பேரில் 11 பேர்தான் மரணித்திருக்கிறார்கள். எனவே, அந்தக் கணக்கின்படி பார்த்தால், அதிகபட்சம் இருபது லட்சம் பேர்தான் இறந்திருப்பார்கள் என்கிறார்.காலராவின் இந்த முதல் பரவல் எஞ்சிய நாடுகளில் எத்தனை லட்சம் பேரை விழுங்கியது என்பதற்கும் போதுமான சான்றுகள் இல்லை. அவற்றையும் சேர்த்தால் எண்ணிக்கை கோடியையும் தொடக்கூடும்.

ஆசியர்கள் மீது குறிப்பாக இந்தியர்கள் மீது வெள்ளையர்கள் இனவெறி கொள்வதற்குத் தூண்டுதலாக காலரா  இருந்தது. ஏற்கெனவே இந்தியர்களை நாகரிகமற்ற காட்டுமிராண்டிகள் என நம்பி வந்த ஐரோப்பியர்கள் இந்தக் காலரா தாக்குதலால், மேலும் வெறுப்பை வளர்த்துக் கொண்டார்கள்.

வரலாற்றில் அம்மை, பிளேக் என எத்தனையோ கொடூரமான நோய்களை எல்லாம் தங்கள் நாடு பிடிக்கும் ஆசையால் நம்மிடம் கொண்டு வந்த வெள்ளையர்கள், ஒரே ஒரு காலராவுக்காக நம்மை அசுத்தமானவர்கள், நாகரிகமற்றவர்கள் என்று கருதியது எவ்வளவு பெரிய வரலாற்று முரண்!   

(உயிர்கொல்லிகளுக்கு எதிரான போர் தொடரும்)

இளங்கோ கிருஷ்ணன்