மாற்று மருத்துவம் Vs கொரோனா!
உலகம் முழுதும் கொரோனா சூறாவளியாகச் சுழன்றி, நர வேட்டையாடிக் கொண்டிருக்கும் சூழலில் அலோபதி என்னும் ஆங்கில மருத்துவத்துக்கும் மாற்று மருத்துவங்களுக்கும் இடையிலான போரும் மறுபுறம் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
 ஆம்! இதைப் போர் என்றுதான் சொல்ல வேண்டும். கொரோனாவுக்கு மருந்து, தடுப்பு மருந்து என எதையும் கண்டுபிடிக்கப்படாத சூழலில் எதைத் தின்றால் பித்தம் தீரும் என்று இருக்கும் மக்கள் தங்களுக்குத் தெரிந்த மாற்று மருத்துவங்களை நாட, விஞ்ஞானிகளும், அலோபதி மருத்துவர்களும், பல்வேறு நாடுகளின் மருத்துவக்கழகங்களும் தனது அதிருப்தையும் எதிர்ப்ையும் தெரிவித்து வருகின்றன.  உண்மையில் கொரோனா போன்ற பெருந்தொற்று ஒன்றை நாம் இவ்வளவு மருத்துவக் கட்டுமானம் வளர்ந்த பிறகு சந்தித்ததில்லை என்பதால் யாருக்குமே இதை எப்படி கையாள வேண்டும் என்றுத் தெரியவில்லை என்பதுதான் நிஜம். இப்படியான சூழலில் ஒவ்வொரு வரும் தத்தமது வழிமுறையில் மருந்தைக் கண்டுபிடிக்கச் செயல்படுவது எப்படித் தவறாகும் என்பது மாற்று மருத்துவர்கள் தரப்புக் கேள்வி.
மனிதர்களுக்கு நோய் எப்போது உருவானதோ அப்போதே மருத்துவமுறையும் உருவாகிவிட்டது. உலகம் முழுதும் எல்லா பண்பாடுகளிலும் அவரவர் சூழல், சமூக முதிர்ச்சிக்கு ஏற்ப மருத்துவமுறைகள் இருக்கவே செய்கின்றன. இவற்றையே இன்று பாரம்பரிய மருத்துவம் என்று சொல்கிறோம். இன்று நாம் அலோபதி அல்லது ஆங்கில மருத்துவம் என்று சொல்லும் மருத்துவம் கூட ஐரோப்பிய, கிரேக்க மரபுகளின் பாரம்பரிய மருத்துவத்தின் வளர்ச்சி நிலைதான்.
இந்த மரபு என்றில்லை உலகின் எந்த மிகப் பெரிய மருத்துவ மரபுமே தன்னந்தனியாக வளர்ந்து விடவில்லை. உலகின் பல்வேறு மருத்துவ மரபுகளோடு கலந்துறவாடிதான் இன்றைய நிலையை அவை அடைந்திருக்கிறன. அந்தவகையில் இன்றைய நவீன மருத்துவம் என்பது பாரம்பரிய ஐரோப்பிய மருத்துவம், மத்திய கிழக்கின் மருத்துவமுறைகள், இந்தியாவின் ஆயுர்வேத சிந்தனைகள் உட்பட பல்வேறு மருத்துவமுறைகள் மற்றும் அறிவொளிக் கால நிருபணவாத மரபு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதுதான்.
நோய்குறியை கண்டறிதல், நோயைப் பகுத்தல் என்ற முறையில் அலோபதியில் ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்பம் சார்ந்த முன்னேற்றம் உலகின் வேறு எந்த பாரம்பரிய மருத்துவத்திலும் உருவாகவில்லை என்பதால் இன்று உலகம் முழுதும் அவசரகால சிகிச்சைகள், புற்றுநோய், இதயநோய், சர்க்கரை நோய், போன்ற வாழ்வியல் நோய்கள், கொரோனா போன்ற கொடுந்தொற்றுகளுக்கு அலோபதிதான் சிறந்த தீர்வு என்ற கருத்து எல்லா தரப்பிலும் வலுவாக உள்ளது.
ஆனால், உலகம் முழுதும் பிரபலமாக உள்ள சீன மருத்துவ முறைகள், அக்குபஞ்சர், அக்கு ப்ரெஷர், யுனானி, ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவமுறைகள் சர்க்கரை நோய் போன்றவற்றுக்குத் தங்களிடமே மருந்து உள்ளது என்று சொல்கிறது.இதைத் தவிர இந்தக் கொரோனாவுக்கும் தங்களிடம் மருந்து உள்ளது என்று சில பாரம்பரிய மருத்துவர்கள் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்கள்.
இதில் இந்திய அரசின் மாற்று மருத்துவத் துறைதான் பெரும் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறது.ஆயுஷ் (AYUSH) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இதன் விரிவாக்கம் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி என்பதாகும். இந்திய மருத்துவமுறை மற்றும் ஹோமியோபதித் துறை (ISM&H) என்ற அமைப்பு இந்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் கடந்த 1995ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதனை 2003ம் ஆண்டில் AYUSH என்று பெயர் மாற்றம் செய்தார்கள். தொடர்ந்து, கடந்த 2014ம் ஆண்டு மோடி அரசு இதனை தனி அமைச்சகமாக அறிவித்தது.
அப்போது முதலே இந்த அமைச்சகத்தின் மீது விமர்சனங்கள் வரத் தொடங்கிவிட்டன. இந்திய மருத்துவ கவுன்சில் இந்த அமைப்பின் சில பரிந்துரைகளை நிராகரித்துள்ளது. இருவேறு அரசுத் துறைக்களுக்கு இடையிலான இந்த முரண்பாட்டைத் தீர்க்க மத்திய அரசு முன்வரவும் இல்லை. ஆயுஷ் தனி அமைச்சகமாக மாறியதுமே அதற்கான நிதி ஒதுக்கீடும் அதிகரித்தது. கடந்த 2017 - 18ம் ஆண்டில் மட்டும் இதற்கு, ரூ.1428.7 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு.
இந்தியாவில் ஹோமியோபதிக்கு என்று 195 இளங்கலைக் கல்லூரிகளையும் 43 முதுகலை அமைப்புகளையும் உருவாக்கியது. இந்தத் துறையின் அமைச்சர் பாத் யசோ நாயக் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். நாடு முழுதும் 100 ஆயுஷ் மருத்துவமனைகள் நிறுவுவது, AIIM போல ஆயுர்வேதத்துக்கான மருத்துவ அமைப்பை உருவாக்குவது, புனேவில் ஆயிரம் கோடி ரூபாயில் நேச்சுரோபதிக்கு ஒரு நிறுவனத்தை உருவாக்குவது, நாடு முழுதும் 4000 ஆயுஷ் பணியாளர்கள் நியமிப்பது, ஹோமியோபதி தினம், யோகா தினம், ஆயுர்வேத தினம் ஆகிய தேசிய நாட்களை உருவாக்குவது... என அதிரடியான திட்டங்கள் உருவாகின.
இதற்கு எல்லாம்கூட பெரிய எதிர்ப்புகள் வரவில்லை. ஆனால், கடந்த 2017ம் ஆண்டில் ஆயுஷ் அமைச்சகம் ஒரு நோட்டீஸ் பிரசாரத்தை மேற்கொண்டது. அதில், யோகா மூலமும் நேச்சுரோபதி மூலமும் பிரசவங்களை எதிர்கொள்வதற்கான பரிந்துரை இருந்தது. அதில், அசைவம் முட்டை போன்றவற்றை உண்பதை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் என்றும். கர்ப்ப கால முழுதுமே உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் கூறப்பட்டிருந்தது.
இதனை இந்திய அலோபதி மருத்துவர்கள் உட்பட பலரும் கடுமையாக எதிர்த்தார்கள். ஆளும் பாஜக அரசின் தூய இந்துத்துவ சிந்தனைகளின் விளைவே இது என்றும், எவ்வகையிலும் மருத்துவ விஞ்ஞானத்தில் சேராது என்றும் எதிர்வினை செய்தனர். இப்படியான நிலையில்தான் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனாவை பெருந்தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்த சூழலில், ஆயுஷ் நிறுவனம் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது. ‘‘கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளைத் தடுக்க ஹோமியோபதி, யுனானி மருத்துவம் பயனுள்ளதாக இருக்கும்...’’ என்ற தலைப்பில் ஜனவரி 29 அன்று வெளியிடப்பட்ட ஆயுஷ் அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
கொரோனா வைரஸைத் தவிர்க்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அதோடு, தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக, ஹோமியோபதியின் ஆர்சனிகம் ஆல்பம் 30 மருந்தை உட்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்தத் தகவல் உலகம் முழுதும் வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் என்று பரவி உலக டிரெண்டிங் ஆனது. உடனே, உலகம் முழுதும் உள்ள அலோபதி மருத்துவர்கள் கொதித்து எழுந்துவிட்டார்கள்.
ஹோமியோபதி மருத்துவத்தின் கோட்பாடுகளின்படி, அதிகப்படியான தண்ணீருடன் சேர்ந்து உணவு ஒருவரின் வயிற்றுக்குள் செல்லும்போது, அவருடைய ‘நினைவகம்’ உடலின் நோய் எதிர்ப்பு செயல்முறையைத் தொடங்கிவிடும். ஆயுஷ் அமைச்சகம் குறிப்பிட்ட 30 சி டயல்யூஷன், பொதுவாக வயிற்றை அடையும் போது ஆர்சனிகம் மூலக்கூறு பூஜ்ஜியமாக மாறிவிடும்.
ஆர்சனிக் ட்ரையாக்ஸைட் நீர்த்துப்போனால் ஆர்சனிகம் உருவாகிறது. ஹோமியோபதியில் பல நோய் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க இது பயன்படுத்தப்படுகிறது.30 சி நீர்த்துப்போன பிறகு ஆர்சனிகம் கிடைப்பதால், அதில் ஆர்சனிக்கின் அசல் மூலக்கூறு எதுவும் இருப்பதில்லை. எனவே இது பொதுவாக பாதுகாப்பானது என்றாலும், இதன் விளைவு பயனற்றது என்றும் கருதப்படுகிறது.
அமைச்சகத்தின் செய்திக்குறிப்புக்கு விமர்சனங்கள் எழுந்த பின்னர், ஆயுஷ் துறை அமைச்சர் பாத் நாயக் கடந்த வாரம் இது தொடர்பாக கருத்து தெரிவித்தார். அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் ‘‘உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய மருந்துகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதில் கொரோனா வைரஸ் முற்றிலுமாக அழிக்கப்படும் என்று ஒருபோதும் கூறப்படவில்லை...’’ என்றார்.
இதைத்தவிர சித்தாவின் கபசுரக் குடிநீர் உள்ளிட்ட மருந்துகளையும் பரவலாகவே பயன்படுத்தி வருகிறார்கள். கொரோனாவின் தாய்மடியான சீனாவிலும் நீண்ட நெடிய பாரம்பரிய மருத்துவமுறைகள் உள்ளன. அவற்றிலும் சில மருந்துகளைக் கொடுத்து வருகிறார்கள். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும். கொரோனா கிருமிகள் உடல் உறுப்பில் உருவாக்கும் பாதிப்புகளை எதிர்கொள்ளவுமே இந்த மருந்துகள் பயன்படுகின்றன.
மற்றபடி கொரோனா கிருமிகளைக் கொல்வதற்கு அல்லது உடலில் அவை நுழையாமல் தடுப்பதற்கான மருந்து இதுவரை இல்லை! இதை மக்கள் நினைவில் கொள்வது நல்லது!
இளங்கோ கிருஷ்ணன்
|