நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்



தான் படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தன் பிள்ளைகள் படிக்க வேண்டும்... இப்படி என் அப்பா நினைத்த காரணம்தான் மதுரையிலேயே முதல் பட்டதாரி பெண்ணாக என்னை மாற்றியது.இன்னமும் என் போராட்டம் ஓயவே இல்லை. நிலமில்லாத ஏழைகளுக்கு நிலம், உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்னும் அமைப்பு - இதை லாபிட்டி அமைப்பு என சொல்வோம் - வழியாக போராடிட்டு இருக்கேன்.

மதுரை - திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி கிராமத்திலே பிறந்தேன். அப்பா ராமசாமி, அம்மா நாகம்மாள். என்னையும் சேர்ந்து 12 பிள்ளைகள். என் தாத்தா சுவடிகளில் பாடம் படிச்சவர். 108 பாடல்கள் ஒரு சேர பாடுவார். ஆனால், தன் பிள்ளைகளை அவர் படிக்க வைக்காம 100 ஆடுகளைக் கொடுத்து பிழைச்சுக்கோ என சொல்லிட்டார். வீட்டின் கடைசி பிள்ளையான என் அப்பா இதை வைராக்கியமா எடுத்துக்கிட்டு நான் உட்பட தன் பிள்ளைகள் அத்தனை பேரையும் படிக்க வைக்க நினைச்சார்.

தினமும் காலை நாலு மணிக்கெல்லாம் எழுந்து விளக்கேத்தி சத்தம் போட்டு படிக்கணும். எழுதும்போது சொல்லிகிட்டே எழுதணும். அதை அப்பா காதால கேட்பார். சீரான எழுத்து நடை இருக்கணும். இல்லைனா அடி விழும். இந்த அளவுக்கு அப்பா படிப்பை நேசித்தார். நாங்க இருந்த ஊருல ஒரு பஞ்சாயத்து பள்ளிக்கூடம். ஆறாம் வகுப்பு வரை இருக்கும். அதுவரைதான் எங்க ஊர் பெண் பிள்ளைக படிப்பாங்க. பையன்கள் மேற்படிப்புக்கு டவுனுக்கு போவாங்க. பெண்களுக்கு அதன் பிறகு ஓரிரண்டு வருடங்கள்ல திருமணம் செய்துடுவாங்க.

எங்க வீட்டில் என் அண்ணன் மேல்படிப்புக்காக மதுரைக்கு போனவர் என்னையும் கூட்டிட்டு வந்திட்டார். அக்கம் பக்கத்தினர் ஆயிரம் சொல்லியும் என் அப்பா, அம்மா காதில் வாங்காமல் படிப்பு ஒன்றே பிரதானமாக என்னை வழி அனுப்பி வைச்சாங்க.எனக்கு ஏ, பி, சி, டி தெரியலைனு பல பள்ளிகள்ல சேர்க்க மறுத்தாங்க. மீனாட்சி அம்மன் கோயில் பக்கத்துல ஒரு பள்ளி ஆசிரியை - அவங்க பெயர் ஆலீஸ் மகாராஜா - அவங்கதான் என் ஆர்வத்தைப் பார்த்து என்னை சேர்த்துக்கிட்டாங்க.

அந்த ஸ்கூல் பெயர் தட்டி ஸ்கூல். ஒரு வருடம் பள்ளிப் படிப்பு. பள்ளியிலேயே தங்கி, ஆசிரியர் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டுக்கிட்டு
வாழ்ந்தேன். எந்த ஆங்கிலத்துக்காக நிராகரிக்கப்பட்டேனோ அதை தீவிரமா கத்துக்கிட்டேன். எனக்கு அடிப்படைலயே கணக்கு நல்லா வரும். கணக்கில் நூற்றுக்கு நூறு தொடங்கி வகுப்புலயும் முதல் மாணவியா இருந்தேன்.

எனக்கு அமைஞ்ச ஆசிரியை தன் மகள் மாதிரி சொல்லிக் கொடுத்து வளர்த்தாங்க. அவங்கள்லாம் தெய்வம் எனக்கு.  ஒரு வருடம் கழிச்சு ஊருக்குக் கிளம்பினப்போ... எங்க படிப்பை பாதியிலயே விட்டுடுவனோனு பயந்து இன்னொரு அம்மாகிட்ட என்னை கூட்டிட்டுப் போய் அறிமுகப்படுத்தினாங்க. அவங்கதான் டிவிஎஸ் ஐயங்காரின் மகளான செளந்திரம்மாள்.

அவங்க என்னைப் போலவே நிறைய பெண் பிள்ளைகளை படிக்க வெச்சு வளர்த்திட்டு இருந்தாங்க. அந்த இல்லத்தில் நானும் ஒருத்தியா சேர்ந்தேன்.

எனக்கும் அந்த அம்மாவுக்கும் என்னவோ ஒரு பந்தம். எங்கே போனாலும் என்னை கூடவே கூட்டிட்டு போவாங்க. அப்படிதான் ஒருநாள் அம்மா, ஒரு போலீஸ்காரர் சகிதமா நகரத்துக்கு அருகே இருந்த கிராமங்களுக்கு போனேன்.

அங்கிருந்த இளம் விதவைகள் - அதாவது 10, 11, 12 வயது பிள்ளைக. குழந்தைத் திருமணம். இளம் வயசிலேயே விதவை. பின் அவங்களை மொட்டை அடிச்சு ஒரு ஓரமா மறைச்சு வைச்சிடுவாங்க. வாழ்க்கை முழுக்க அந்த மூலையிலேயே அல்லது ஓர் அறையிலேயே போயிடும் - அவங்களை எல்லாம் தேடிப் பிடிச்சு அம்மா இல்லத்துக்குக் கூட்டி வந்து படிக்க வைச்சதை கண்கூடா பார்த்தேன்.  

சாதாரண போராட்டம் இல்ல. சில இடங்கள்ல அடியெல்லாம் வாங்குவாங்க. இது ஒரு போர், புரட்சினு தெரியாமலேயே அம்மா கூட எல்லா பக்கமும் போவேன். அப்படியே பள்ளிப் படிப்பு முடிஞ்சு அமெரிக்கன் கல்லூரில வரலாறு. இதற்கிடைல தமுக்கம் மைதானத்திலே குடிசை கட்டி வாழ்ந்திட்டு இருந்த மக்களுடைய பிள்ளைகள் 52 பேரை கூட்டி வந்து இல்லத்தில் சேர்த்தேன்.

எனக்கும் அம்மாவுக்குமாக பந்தம் வார்த்தைகளால் சொல்ல முடியாது. நான் கல்லூரியில் சேர இருந்த நேரம் ஒரு பட்டுப் புடவை, தங்க வளையல் ரெண்டு கொடுத்து ‘கல்லூரிக்குப் போறவ இனிமே அம்சமா போகணும்’னு சொன்னாங்க. ஆனால், எனக்கு தங்கம், பட்டாடைகள் மேல நாட்டம் இல்ல. அம்மாவுக்கு ஆச்சர்யமும், ஆனந்தமும் சேர... எங்க பந்தம் இன்னமும் பலமானது.

ரெண்டு கதர் புடவையையே துவைச்சிக் கட்டிப்பேன். நான் என்ன கேட்டாலும் செய்து கொடுக்க அம்மா தயாரா இருந்தும் நான் மறுத்திட்டேன்.
ஏழைகள் வலி தெரிய நானும் அவங்க வாழ்க்கையை வாழ்ந்தாதான் அதற்கான தீர்வு காண முடியும்னு நினைச்சேன்.

ஆசைகளே வேண்டாம்னு முடிவுசெய்தேன். அம்மாவும் காந்தியடிகள் அமைப்பு காரணமா சென்னைக்கு கிளம்பிட்டாங்க. அவர்களுடைய பணியை அவங்க இடத்தில் இருந்து செய்ய வேண்டிய கடமை மதுரைல எனக்கு அமைஞ்சது.

சுதந்திர போராட்டம், நிலப் பிரச்னை... இப்படி காந்தியக் கொள்கை பக்கம் ஈர்க்கப்பட்டு முழுமையா புரட்சிகளுக்குள்ள இறங்கினேன். 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துக்கிட்டு பல ஆண்டுகள் சிறையிலே இருந்தேன்.  இந்த நேரம் காந்தி ஐயா மதுரை வருவதாக செய்தி. ஊரே அவரைப் பார்க்க குடும்பம் குடும்பமா வந்து சித்திரை திருவிழா கூட்டம் போல குடிசை அமைச்சு தங்கி சமைச்சு சாப்பிட்டுட்டு இருந்த வேளை.

ஐயா சாய்ங்காலம் வர இருக்கார். காலையிலேயே அம்மா ஒரு புது கதர் புடவை சகிதமா வந்து என்னையும் கிளம்ப சொல்லி காந்தி ஐயா மேடையிலே எனக்கும் ஓர் இடம் ஏற்பாடு செய்து கொடுக்க... மதுரை மண் சார்பா மேடைல ஓரிரு வார்த்தைகள் பேச எனக்கு வாய்ப்புக் கிடைச்சது.

இப்படியே என் எண்ணம் முழுக்க காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் பக்கம் போனது. 1950 மற்றும் 1952 இடையே ரெண்டு ஆண்டுகளாக வட இந்தியாவில் வினோபா பாவே பூமிதான இயக்கத்தில் கலந்துக்கிட்டேன்.
 
நிலமற்றவர்களுக்கு தங்கள் நிலங்களிலிருந்து ஆறில் ஒரு பங்கை நிலக் கொடையாக கொடுக்கணும்னு நிலப்பிரபுக்களைக் கேட்டுக் கொண்டு வினோபா பாவே பாத யாத்திரையாக போனார்.அவர் கூட நானும் அரிக்கன் விளக்கேந்தி முன் வரிசையிலே நடந்தேன். இப்ப அந்த நிகழ்ச்சியை நினைச்சாலும் என் கண்கள்ல கண்ணீர் வரும். அந்தளவுக்கு ஈடுபாடு.

படிப்பையும் விடாம ஆசிரியர் பயிற்சி படிப்பை சென்னையில் முடிச்சேன். வினோபா பாவே இயக்கத்தில்தான் சங்கரலிங்கம் ஜெகநாதனை சந்திச்சேன். செழிப்பான குடும்பத்திலே பிறந்தவர். ஆனால், சுதந்திரப் போராட்டம், புரட்சி இப்படி தன்னைத்தானே இணைச்சிக்கிட்டவர்.

அவர் மேல ஈர்ப்பு வந்தது. சுதந்திரம் கிடைச்சதுக்கு பிறகுதான் திருமணம்னு முடிவு செய்துக்கிட்டோம். தீர்மானிச்ச படி 1950 ஜூலை 6ம் தேதி சுதந்திர இந்தியாவில் திருமணம் செய்துகிட்டோம்.

சுதந்திர தாகமும், சமூகம் சார்ந்த எண்ணமும்தான் எங்களை ஒன்றிணைச்சது. போராட்டங்களும், வாழ்க்கையுமாக ரெண்டு பேரும் சேர்ந்தே பயணிக்க ஆரம்பிச்சோம். நாகை மாவட்டத்திலே கீழ வெண்மணி அப்படின்னு ஒரு சிற்றூர். அங்க 42 தாழ்த்தப்பட்ட உழவுத் தொழிலாளர்கள் குடிசையோடு சேர்ந்து கொளுத்தப்பட்ட நிகழ்ச்சி 25-12-1968ல் நடந்துச்சு.

அந்தக் கோர நிகழ்ச்சியை இப்ப நினைச்சாலும் எனக்கு படபடக்கும். ஆத்திரமும், கோபமுமாக சேர்ந்து ‘உழுபவனின் நில உரிமை இயக்கம்’ (லாப்டி) என்னும் அமைப்பை இன்னும் பலமாக ஆரம்பிச்சோம். இறால் பண்ணைகளுக்காக விளைநிலங்களை அபகரிச்சு நாசம் செய்திட்டு இருந்தாங்க.

அதையெல்லாம் சரி செய்ய போராட ஆரம்பிச்சோம். இந்த இயக்கம் 10 ஆயிரத்துக்கும் மேலான ஏழைகளுக்கு நிலத்தை மீட்டுக் கொடுத்திச்சு. இந்த செயல் மூலமாதான் எனக்கு பல விருதுகள் கிடைச்சது. 1989ல் பத்மஸ்ரீ... 2020ல் பத்ம பூஷன் விருதுகள் வாங்கினேன்.

நில அபகரிப்பு ஓரளவு கட்டுக்குள்ள வந்தது. அப்ப ஆரம்பிச்ச போராட்டம் அடுத்து வீடில்லா ஏழைகளுக்கு வீடு வசதி ஏற்படுத்தணும் என்கிற போராட்டமா மாறி இப்பவும் தொடர்ந்துட்டிருக்கு.2013ல் என் கணவர் இறந்தார். அதுவரை ஒன்றாக போராடிய போராட்டம் அந்த நாள் முதல் தனிப் போராட்டமாக மாறிடுச்சு. இன்னைக்கு விவசாய நிலங்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு ரியல் எஸ்டேட்டுகளா மாறிட்டு வருது.

நாங்கள்லாம் போராடி வாங்கிக் கொடுத்த சுதந்திரம் எத்தனையோ மாற்றங்களைக் கொண்டு வந்தாலும் இந்த நில அபகரிப்பு மட்டும் இன்று வரை ஏழைகளை அடிமைப்படுத்திகிட்டுதான் இருக்கு.

உயிருள்ள வரை காந்திய வழியிலேயே என் போராட்டம் தொடரும். 94 வயசாச்சு. கடைசி மூச்சு வரை இந்த போராட்டம் ஓயப்போவதில்லை.
ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன்... எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி உங்களுடைய மிகப்பெரிய உரிமை கல்வி. அதை மட்டும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீங்க. சேர்த்து வைத்த சொத்தும், செல்வமும் கூட ஒரு நாள் நமக்கில்லாம போகும். ஆனால், படிச்ச படிப்பு எக்காலத்திலும் நம்மை கைவிடாது!  

ஷாலினி நியூட்டன்