சாத்தான்குளத்தில் மட்டும்தான் போலீசார் அராஜகம் செய்திருக்கிறார்களா..?



சட்டம் - ஒழுங்கை மீறுபவர்களுக்குத் தண்டனை உண்டு. ஆகையால்தான் நாம் சட்டங்களுக்குக் கட்டுப்படுகிறோம். சட்டத்துறை, காவல்துறை, நீதித்துறை என்ற மூன்று அமைப்புகளின் முகமாக அரசு நம் சார்பில் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை - எழுதப்படாத ஒப்பந்தம் - நமக்கும் அரசுக்கும் இடையில் நிலவுகிறது.

ஆனால், நடைமுறை முற்றிலும் வேறாக இருக்கிறது. சமீபத்தில் கூட ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம் உலகின் மனசாட்சியை உலுக்கியது.போலீஸ் மிருகத்தனத்திற்கும், அதிகப்படியான அதிகாரத்தனத்துக்கும் எதிராக கண்டனங்களையும் காவல்துறையில் ஏற்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் உலகம் இப்பொழுது பேசத் தொடங்கியுள்ளது.

இதன் நீட்சியாகவே சாத்தான்குளத்தில் நடந்த சம்பவமும் பார்க்கப்படுகிறது. இவை எல்லாம் இந்த கொரோனா காலத்தில் காவல்துறையின் கை ஓங்கியுள்ளதா... என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. “இல்லை... எல்லா காலத்திலும் காவல்துறையின் கை ஓங்கியே இருக்கிறது...” என்கிறார் வழக்கறிஞர் கிருபா முனுசாமி.

“சாத்தான்குளம் என்றில்லை... எல்லா இடங்களிலும் போலீஸ் அராஜகம் தலைவிரித்தாடுகிறது. ஆனால், இந்த சம்பவங்கள் எல்லாம் சாத்தான்குளம் போல் மக்கள் மத்தியில் விவாதிக்கப்படுகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

உதாரணத்துக்கு இதே லாக்டவுனில் தஞ்சாவூரை சேர்ந்த குறவர் சமூகத்தைச் சார்ந்த ஒருவரை காவல்துறை 11 பவுன் நகை திருடியதாக கைது செய்தது. விசாரணைக்கு சென்றவர் மறுநாள், தான் அணிந்திருந்த லுங்கியில் தூக்குப் போட்டு இறந்ததாக செய்தியானார். அவர் உடல் எங்கும் காயம் இருந்ததை யாருமே பொருட்படுத்தவில்லை.

இந்த சம்பவத்தை நாம் சாத்தான்குளம் வழக்கு போல் விவாதிக்கிறோமா? இல்லை. காரணம் அவர்களுக்குக் கேட்க வணிகர் சங்கம் இருக்கிறது. அவர்களுக்கென்று சில அரசியல் அதிகாரம் இருக்கிறது. அதற்காக ஒன்று திரண்டு போராடும்போது அவை ஊடக வெளிச்சம்
பெறுகின்றன. உண்மையில் வெளியில் தெரியாத எவ்வளவோ காவல்துறை வன்முறைகள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் இப்பொழுது காவல்துறையின் அராஜகம் குறித்து மக்கள் பேசக் காரணம், ஊரடங்கு நேரத்தில் நேருக்கு நேராக காவல்துறையின் நடவடிக்கைகளை அவர்கள் கண்கூடாகப் பார்ப்பதுதான். ‘இ-பாஸ், ஐடி கார்ட் காட்டு...’ என நேரடியாக அனுபவிப்பதுதான்.

உண்மையில் ஐடி கார்டை காண்பிக்கச் சொல்லி கேட்பதும் இ-பாஸை பரிசோதிப்பதும் காவல்துறையின் பணிகள். இதுவே மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது என்றால்... விசாரணை என்னும் பெயரில் காலம்தோறும் எண்ணற்றவர்களை அவர்கள் அடித்துக் கொல்வதை எந்த அடைமொழியில் அழைப்பது? மக்கள் என்றேனும் இதுகுறித்து யோசித்திருக்கிறார்களா...’’ கேட்கும் கிருபா முனுசாமியிடம் எல்லா காவலர்களையும் ஒரே தராசில் எடை போட முடியுமா என்று கேட்டோம்.  

“ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு சூழல். தன் அதிகாரம் என்ன... தன் பொறுப்பு என்னவாக இருக்கிறது போன்ற விஷயங்களை இச்சூழலே
தீர்மானிக்கிறது. இயல்பிலேயே சாதி வெறிபிடித்த சமூகமாக இருக்கும் பட்சத்தில், தன் சாதிக்காரன் மாட்டும்போது அவனை விடுவிப்பதும் மற்ற சமூகத்தைச் சேர்ந்தவன் சிக்கும்போது வெளுத்து வாங்குவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்த வரை ஒரு பிரச்னையின் ஆரம்பமும், முடிவும் சாதியைப் பொறுத்தே அமைகிறது.

குறவர் சமூகத்திற்கு எதிரான காவல்துறையின் வன்முறையை தேசிய மனித உரிமை ஆணையமே வெளியிடுகிறது. ஏன் குறவர் சமூகத்தைக் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால் இந்த கொரோனா காலத்தில் அவரும் காவல்துறை வன்முறையால் இறந்திருக்கிறார். அதேபோல் ராம்குமார் மரணம்.

அந்த குற்றம் நிரூபிக்கப்படாமலேயே... காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் அவர் இருக்கும்போதே... இறந்தார்.சாதாரணமாக சாலையில் மூன்று நான்கு பேர் நின்று பேசினால், அவர்கள் எந்த சமூகத்தை சார்ந்தவர்களோ அதற்கு ஏற்பவே காவல்துறையின் அணுகுமுறை இருக்கிறது.

இந்தியா மட்டுமல்ல... உலகம் முழுவதுமே சார்புத்தன்மையுடன்தான் தன் அதிகாரத்தை காவல்துறை வெளிப்படுத்துகிறது. அதனால்தான் ஜார்ஜ் ஃபிளாய்டின் கழுத்தில் ஒரு காவலரால் கால் வைத்து அழுத்த முடிகிறது...’’ என்று கூறும் கிருபா, ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்கிறார்.

“சாத்தான்குளம் சம்பவம் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகிறது. அரசியல்வாதிகள், நடிகர்கள்… என்று பல பிரபலங்கள் குரல் கொடுக்கிறார்கள்.
வன்முறைக்கு எதிரான எல்லா குரல்களுமே வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், அது சார்பு நிலைக்கு ஏற்ப இருப்பதுதான் கண்டனத்துக்குரியது. அந்த குரலின் சத்தம் வேறுபடுவதுதான் வருத்தமாக இருக்கிறது.

சமூக ஊடகத்தில் எந்த பிரச்னை முதன்மைப்படுத்தப்படுகிறது... அதை யார் முன்னெடுக்கிறார்கள்... யாருக்கு எதிராக முன்னெடுக்கிறார்கள் என்பதற்கு பின்னால் பெரும் அரசியல் இருக்கிறது. இதே சாத்தான்குளம் சம்பவத்தின்போதே ஆணவக் கொலையால் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் வழக்கிற்கான தீர்ப்பும் வந்தது.

இந்த வழக்குக்கு ஆதாரமான வீடியோ, பாதிக்கப்பட்ட நேரடி சாட்சிகள் எல்லாம் இருந்தபோதும் நீதிமன்றம் விடுதலை செய்கிறது. இதற்கு எதிராக எந்த அதிர்வும் சமூகத்தில் ஏற்படவில்லை. ஆனால், நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை கொஞ்சம் தாமதமானதும் எல்லோரும் குதித்தார்கள். இப்படி மதத்தாலும், சாதியாலும் தண்டனைகளும், குரல்களும் வேறுபடுவதை பட்டியலிட முடியும்.

ஒரு தலித் இளைஞரைக் கொன்றவர்களை நீதிமன்றம் விடுவித்ததை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால், ஒரு கடை திறந்தவரைக் காவல் துறை அதிகாரி கொன்றுவிட்டார் என்று பரவும் செய்தியை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், நீங்கள் சார்பாக இருப்பதாகவே பொருள்.

இப்படி சொல்வதற்காக சாத்தான்குளம் சம்பவத்திற்கு நான் ஆதரவு என்று நினைக்க வேண்டாம். அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. என் வேண்டுகோள் எல்லாம் சார்புத்தன்மை இல்லாமல் வன்முறைக்கு எதிராக குரல் கொடுங்கள் என்பதுதான்...’’ அழுத்தமாக சொல்கிறார் கிருபா முனுசாமி.  

அன்னம் அரசு