கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?



கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நோய் தொற்றியவர்களில் அறிகுறிகள் இல்லாதவர்கள் அல்லது இலேசான அறிகுறிகளுடன் இருப்பவர்கள், போதுமான வீட்டு வசதி இருந்தால், தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கட்டாயமாக 14 நாட்கள், முடிந்தால் 28 நாட்கள் தனிமையில் இருப்பது மிகவும் நல்லது.

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர், 10 நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். ஆனால், சிகிச்சை அதோடு முடிந்து விடுவதில்லை. அவர் வீட்டிற்கு சென்ற பிறகு, 2 வாரங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கிக் கொள்ள வேண்டும்.

கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை கிடைக்கும். அறிகுறிகள் குறைவாக உள்ளவர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெறும் நிலை வரலாம்.
அதனால், கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் உட்பட அனைத்து குடும்ப உறுப்பினர்களும், வீட்டில் பின்பற்றவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.அதேநேரத்தில், இந்நோய் நூறு பேருக்குத் தொற்றினால் 80 விழுக்காட்டினர் எளிதில், தாமாகவே குணமடைந்து விடுவதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

வீட்டில் உள்ளவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தனி கழிப்பறையுடன் கூடிய நல்ல காற்றோட்டமான தனி அறையை தொற்றாளருக்கு ஒதுக்க வேண்டும். அவர் வீட்டிற்குள்ளேயே அலையாமல் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையிலேயே, மற்ற குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. தனது ஆடைகள், படுக்கை விரிப்புகளைத் தானே துவைத்து வெயிலில் உலர்த்திய பிறகு அணிய வேண்டும்.

தங்கியுள்ள அறை மற்றும் மேசை, கைப்பிடி, தாழ்ப்பாள் ஆகியவற்றை, 1% சோடியம் ஹைபோ குளோரைடு, 2.5% லைசால் போன்ற கிருமி நாசினியைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.வீட்டில் ஒரு குறிப்பிட்ட நபர் மட்டுமே, தனிமைப் படுத்தப்பட்ட நபருக்கு பராமரிப்பு பணிகளைச் செய்ய பராமரிப்பாளராக இருக்க வேண்டும்.

தனிமைப் படுத்தப்பட்ட நபருக்கு உணவை அவரது அறையிலேயே வழங்க வேண்டும். அவர் பயன்படுத்திய பாத்திரங்கள் மற்றும் பிற பொருட்களை கையுறை அணிந்து சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். இவர்கள் 20 வினாடிகள் கைகளை அடிக்கடி சோப்புப் போட்டு கழுவ வேண்டும்.

பராமரிப்பாளரும் முகக்கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும். மூன்றடுக்கு முகக்கவசங்களை 6 மணி நேரமானாலோ அல்லது ஈரமானாலோ மாற்ற வேண்டும். வீட்டை தினமும் மூன்று முறையாவது கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

அதிக காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் போன்ற ஏதேனும் அபாய அறிகுறிகள் ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
ஏன் தனித்திருக்க வேண்டும்?

அறிகுறிகள் இல்லாவிட்டாலும், ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு பேசும் போதும் கூட நோய் பரவும் வாய்ப்புள்ளதால், நோய் தொற்றியவரை தனிமைப்படுத்த வேண்டும். குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி விட்டே பழக வேண்டும்.

என்ன சாப்பிட வேண்டும்?

குளிர்பானங்கள், குளிரூட்டப்பட்டப் பொருட்களைத் தவிர்க்கலாம். வீட்டில் தயாரிக்கப்பட்ட, சுத்தமான உணவுகளை உண்ண வேண்டும். புதிய காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும்.

கீரைகள், ஆரஞ்சு, எலுமிச்சை, கேரட், தேங்காய், பாதாம், இஞ்சி, மஞ்சள், பருப்பு போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். மீன், இறைச்சி போன்றவைகளை நன்கு வேகவைத்து உண்ண வேண்டும்.வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஏ மற்றும் ஜிங்க் புரதம், இரும்புச் சத்து, ஒமேகா 3 நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.

மருத்துவ அறிகுறிகளும் சிகிச்சைகளும்...

ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள், உடற்பருமன் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் உள்ளவர்கள், சிறுநீரகம் அல்லது கல்லீரல் குறைபாடு கொண்டவர்கள், புற்று நோயாளிகள், நோயெதிர்ப்பு மருந்துகள் உட்கொள்பவர்கள் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.

எனவே, அவர்கள் மருத்துவர்களின் தகுந்த ஆலோசனைகளோடு சிறப்புச் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. நாட்பட்ட நோயாளிகள் அனைவரும் தாங்கள் பயன்படுத்தும் மருந்து மாத்திரைகள், இன்சுலின், சிரிஞ்சுகள், ஆஸ்துமா இன்ஹேலர் போன்ற அத்தியாவசிய மருந்துகளைத் தேவையான அளவில் வாங்கிவைக்க வேண்டும்.

மது கூடவே கூடாது. அது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். யோகா உள்ளிட்ட எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம். மூச்சுப்பயிற்சிகள், பலூன் ஊதுதல் போன்றவை நுரையீரல் திறனை காக்கும். வெந்நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்க வேண்டும். தொண்டை, வாய், மூக்குப்பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் சி, டி மற்றும் ஜிங்க் மாத்திரைகளை 10 நாட்களுக்கு தரவேண்டும். நோயாளிகள் சுய மருத்துவம் செய்து கொள்ளக்கூடாது. மருத்துவர்களின் அறிவுரைப்படியே மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.ஆயுர்வேதா, சித்தா போன்ற மருத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், அவசியம் அத்துறை மருத்துவர்களை கலந்தாலோசித்து சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

உயிர்காக்கும் ஆக்சிஜன் அளவைமானி...

சாதாரணமாக இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 100 ஆக இருக்கும். பொதுவாக ஏதாவது காரணத்தால், அந்த அளவு 95 அளவை விட குறையும் போது
மூச்சுவிட சிரமம் ஏற்படும்.

ஆனால், இக்கொரோனா தொற்றில் இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு மேலும் குறைந்தாலும் அறிகுறிகள் வருவதில்லை. இது மிகவும் குறையும் போதே மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இந்நிலையில் நோயாளிகள் மருத்துவமனை செல்லும் போது அவர்களைக் காப்பாற்றசிரமமாக உள்ளது.

இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை தெரிந்து கொள்ள ஒரு கருவி இருக்கிறது. அது கை விரலில் மாட்டி அளக்கும். அந்த எளிய கருவியின் பெயர் `பல்ஸ் ஆக்சிமீட்டர்’. விலை குறைவான இக்கருவியின் உதவியால் நாமே எளிதாக பரிசோதித்துக் கொள்ளலாம்.

தினமும் இந்த பரிசோதனையை 6 முறைக்கு மேல் மேற்கொள்ள வேண்டும். வீட்டிலேயே 6 நிமிட நடைப்பயிற்சிக்குப் பின் இந்த சோதனை செய்ய வேண்டும். 6 நிமிட நடைப்பயிற்சிக்குபின், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 92 சதவீதத்திற்கு கீழ் இருப்பின் அவர்கள் மருத்துவரை அணுக வேண்டும். மூச்சுத்திணறல் ஏற்பட்டால் குப்புறப்படுக்க வேண்டும். மருத்துவமனைக்கு உடனே செல்ல வேண்டும்.

மனநலம் காப்போம்...

சாதாரணமாக நல்ல மனநிலையில் உள்ளவர்கள்கூட, கொரோனா ஏற்படுத்தியுள்ள பொதுமுடக்கம், பொருளாதார பிரச்னைகளால், மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். அதற்கு மனநல மருத்துவர் ஆலோசனை பெறவேண்டும். மனநலப் பிரச்னைக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுவோர் அதைத் தொடர வேண்டும்.

சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளையும், ஆதாரமில்லாத செய்திகளையும் நம்பக்கூடாது. இசை கேட்டல், ஓவியம் தீட்டுவது, நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அதன் மூலம் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள முடியும்.
தொற்று உடையவர்களை சமூகம் எப்படி பார்க்க வேண்டும்?

நாம் நோயுடன் போராட வேண்டும் நோயாளிகளுடன் அல்ல என்ற அரசின் விளம்பரத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தொற்றாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அவமானப்படுத்தக் கூடாது. வாடகை வீடுகளில் குடியிருக்கும் தொற்றாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் போன்ற சுகாதாரத்துறைப் பணியாளர்களை வீடுகளைக் காலி செய்ய நிர்பந்திக்கக் கூடாது.

அச்சம் தேவையில்லை. ஆனால், எச்சரிக்கை உணர்வுடன், கவனத்துடன் இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. விரைவில் தடுப்பு மருந்துகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெரியம்மை, போலியோவை வென்றது போல், நாம் கொரோனாவையும் நிச்சயம் வெல்வோம்!  

டாக்டர் ஏ.ஆர்.சாந்தி

செயலாளர் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்