நிஜமும், கனவும் ஒண்ணு சேர்ந்த மாதிரி ஒளிப்பதிவு இருக்கணும்!



ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல் அதிரடி

‘‘இன்னைக்கு உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு... போட்டோகிராபிதான். ஐரோப்பாவில் பள்ளி, கல்லூரிகளில் ஓவியங்களும் ஒரு பகுதியாக இருக்கு. அதனால் அடிப்படையிலேயே அவர்களிடம் கலர் சென்ஸ் இருக்கு.‘நல்ல மஞ்சள் கலர்ல எனக்கு பேக்ரவுண்ட் கொடுங்க’னு கேட்டால், நமக்கு ‘ஐயையே’னு இருக்கும். ஆனால், அவுட்புட் பார்க்கிறப்ப, அத்தனை பிரமாதமா வந்திருக்கும்.

அப்படி ஒரு ஸ்கூல் இங்க இல்ல. ஹாலிவுட்டில் ஆஸ்கார் அவார்ட் வாங்கின ஒரு படத்தோட ஒளிப்பதிவாளரைப் பார்த்தால் குறைந்தது 50 வயசுக்கு மேலே இருக்கும். அந்த வயசுலதான் வண்ணங்களை கையாளுகிற முதிர்ச்சியே வரும். ஆனால், எங்களுக்கு என்ன வயசுன்னு நீங்களே பாருங்க... இந்தியாவின் நம்பர் 1 ஒளிப்பதிவாளர் ஹாலிவுட்ல ஒரு செகண்ட் கிரேட் படத்தில் வேலை பார்ப்பதே கஷ்டம்.

ஒளிப்பதிவில் உலகத்தரம் என்பது வேற எங்கேயோ இருக்கு...” அற்புதமாக பேச ஆரம்பிக்கிறார் கே.ஏ.சக்திவேல். ‘ரேணிகுண்டா’ ஒளிப்பதிவுக்காக அதிகம் பேசப்பட்ட படம். ‘சண்டக்கோழி 2’ என அடுத்தடுத்து நகர்ந்து இப்போது ‘ராங்கி’ யில் நிற்கிறார். மறைந்த ஜீவாவின் சீடர்.

‘‘வீட்டுல சென்னையில் இஞ்சினியரிங் சேர்த்து விட்டாங்க. எனக்கு ஒளிப்பதிவில்தான் ஆர்வம். படிப்பை விட்டுட்டு ஜீவா சார்கிட்ட போயிட்டேன். எக்கச்சக்கமா திட்டிட்டு, அதே அளவுக்கு குறையாமல் அன்பா இருப்பார்.

‘ரன்’ பண்ணும்போது ஒரு கடிகாரத்தை சுத்தி கேமரா வேணும். மாதவன் 9 மணிக்கு ஷார்ப்பா வந்து ‘உன் தங்கச்சியை தூக்கிட்டு போறேன்’னு சொல்லியிருப்பார். அப்ப ஜிம்மி ஜிப் அந்தளவுக்கு ஃபேமஸ் ஆகல. என்ன பண்றதுன்னு யோசிச்சு ஒரு சட்டியை வாங்கி அதற்குள் கடிகாரத்தை வச்சு சட்டியை சுத்தவுட்டு ஷூட் பண்ண ஐடியா கொடுத்தேன். முதன் முதலாக ஜீவா சாரை இம்ப்ரெஸ் பண்ணுனது அப்பத்தான். அவரோட அஸிஸ்ட்டென்ட்ஸ்ல முதல் படத்தில் நல்ல பேர் வாங்கினதும் நான்தான். ஆனால், இப்ப பார்க்கத்தான் ஜீவா சார் இல்லை...’’ கலங்குகிறது சக்தியின் குரல்.

உங்க அனுபவத்தில் ஒளிப்பதிவை எப்படி புரியவைப்பிங்க..?

படத்தில் பாடல், சண்டைக் காட்சிகள் இயல்பு கிடையாது. அதை அப்படி உணரவிடாமல் செய்து காட்டணும். ஒளிப்பதிவில் கேமராமேனுக்கு சில மாஸ்டர் ஷாட்ஸ் இருக்கும்... காட்சி எங்கே நடக்குது, திருவிழாவா, கோயிலா, மைதானமான்னு ஒரு சில காட்சியில் மக்கள்கிட்ட புரிய வச்சிடணும்.

ஒரு சீன்ல 12 ஷாட்ஸ் இருந்ததுன்னா, அதில் ஒரு நாலு ஷாட்டாவது மேஜிக்கா கொண்டு வந்திடணும். அப்படி செய்துகிட்டே வந்தா மொத்தம் 2000 ஷாட்ல 1000 ஷாட்டாவது மேஜிக் ஆயிடும். மொத்த படமும் அழகாயிடும்னு எங்க ஆசான் ஜீவா சொல்வார்.‘ரேணிகுண்டா’ பண்ணும் போது லொகேஷன் அடிக்கடி மாறும். பசங்கள்லாம் சேர்ந்து ஒரு வேன்ல சுத்திச் சுத்தி மறைஞ்சு நின்னு ‘எப்படி கொலை பண்ணோம்’னு செஞ்சு காட்ற சீன்.எடுத்த இடம் ராமேஸ்வரம் கடற்கரை.

ஒரு பக்கம் தண்ணீர், இன்னொரு பக்கம் கருவக்காடு. கேமராவை லோ ஆங்கிள்ல வச்சிக்கிட்டு வேனை இந்த பக்கமும், அந்த பக்கமும் மாத்தி மாத்தி போட்டு எடுத்தோம். படத்தில் பார்த்தா... அந்த காட்சியில் ஏதோ கேமரா இங்கேயும் அங்கேயும் சரசரன்னு போறது மாதிரி தெரியும்.

ஆனால், அது ஒரே ஆங்கிள்ல எடுக்கப்பட்டது. செட் பிராபர்ட்டீஸ் மட்டும் மாத்தி மாத்தி வச்சிட்டேயிருந்தோம்.முழுக் கடலில் நாம் குளிக்கிற பகுதி கடல் கிடையாது சார். எட்டு அடிக்குள்ள குளிச்சிட்டு வர்றோம். ஆனால், கடலில் குளிச்சதாக சொல்றோம்.

 என்னை பொறுத்தவரை கிட்டத்தட்ட நிஜமும், கனவும் ஒண்ணு சேர்ந்தா மாதிரி ஒளிப்பதிவு இருக்கணும். நம்பிக்கையா கேமராவை கையகப்படுத்தி, அப்படியே மனசில் டைரக்டர் நினைச்சதை வாரி சுருட்டி அடைக்கிறதுதான் நம்ம வேலை. அது ஒரு கனவுங்க. அந்தக் கனவு மெய் பட்டால் அழகாயிருக்கும்.

ஜீவாவுக்கு நிறைய சிஷ்யர்கள் இருக்காங்க...

அவரைப் பத்தி பேசவே இன்னும் நான் தகுதியை வளர்த்துக்கணும். இன்னும் வளர்ந்தால் என் படங்களில் நல்ல கேரக்டருக்கு ஜீவான்னு பேரு வைப்பேன். எதிர்காலத்தில் என் பெயரைக்கூட ஜீவா சக்தின்னு மாத்திப்பேன். நாங்க அஸிஸ்ட்டென்ட்ஸ் உக்கார்ந்து இத்தனை ஜன்னல், இத்தனை லைட் வைப்பார்னு எங்களுக்குள்ள பேசிட்டு இருப்போம். அங்கே ஒரு லைட் இங்கே ஒரு லைட்னு வச்சுட்டு ஜீவா சார் போயிட்டே இருப்பார்.

சமயங்களில் மேகம் இருண்டு வெளிச்சம் குறைஞ்சிடும். சரி, பேக்கப்னு நினைச்சால், ‘ரெடி ரெடி’ன்னு சொல்லிட்டு தெர்மக்கோல் வச்சிட்டு ரெண்டு ஷாட் எடுப்பார். லேப்ல போய்ப் பார்த்தால் அந்த ஷாட் லட்டு மாதிரி இருக்கும். என்ன மாயம்னே தெரியாது.

‘12B’ பண்ணிட்டு அதை உள்ள உட்கார்ந்து பி.சி.சார் பார்க்கிறார். வெளியே எங்களோடு இருந்த ஜீவா சார், பார்த்துட்டு என்ன சொல்லுவாரோன்னு நகம் கடிச்சிட்டே இருந்தார். அப்படி என் படத்தை பார்க்க ஜீவா சார் இல்லையேன்னு வருத்தமா இருக்கு. கணிசமா விஜய் சேதுபதி, லிங்குசாமி கிட்ட ஒர்க் பண்ணியிருக்கீங்க...

லிங்கு சார் என்னை ‘சண்டக்கோழி 2’வில் சேர்க்க காரணமாக இருந்தார். என் குரு வேலை பார்த்த முதல் பாகத்தை தொடர்ந்து, நான் இடம்பெற்றது என் நல்வினை. சேதுபதி சார் கிட்ட ரோம்ப பழகியிருக்கேன். ஒரு ஷாட்ல அவர் எப்படி கடந்து போவார்னு நமக்கே தெரியாது. அவர் நடிப்பை விடுங்க, ஊருக்கே தெரியும். சேது சாரை இப்ப சந்திக்க போயிருந்தேன். அவர் ரூம்ல காத்திருந்தேன். அங்கே ஒரு முழு மாம்பழம் இருக்க, கருப்பு எறும்புகள் சுத்திக்கிட்டே இருந்தது.

நான் ஆபிஸ் பாய்கிட்ட இதை கிளீன் பண்ணுங்கன்னு சொன்னதுக்கு அவர் சிரிச்சிட்டு போயிட்டார். அப்பறம் சேது வந்து மாம்பழத்த நாலு துண்டு கட் பண்ணி வைக்க, எறும்புகள் கூட்டமா இருந்து திண்ணுட்டு போயிடிச்சு. கேட்டால் ‘ஒரு தடவ வெட்டி வைக்க குடும்பமா வந்துட்டாங்க. என்ன தாண்டி உயிருள்ள ஒரு பொருளைப் பார்க்க சந்தோஷமா இருந்தது... விட்டுட்டேன். இப்ப நாங்க ஃபிரண்ட்ஸ்’னு சொல்றார். என்ன மனுஷன்யான்னு எனக்கு தோணுச்சு. எப்படி இருக்கீங்க?

சிலருக்கு முன்கூட்டியே எல்லாம் நடக்கிறது. சிலருக்கு சுலபமாக, சீக்கிரமாக நடக்கிறது. இன்னும் மக்களின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கிறேன். அந்த காத்திருப்பு நீண்டு விடாமல் இருக்க கடவுளின் அருள்தான் தேவைப்படும். என் மனைவி பிரியதர்ஷினியும், மகள்கள் அஷ்மிதா, ஆஷிதா ஆகியோரும் என்னைப் பாதுகாக்கிறார்கள்.

நா.கதிர்வேலன்