அணையா அடுப்பு-6
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
கண்டார் முருகனை!
அப்போதெல்லாம் பிரசங்கம் செய்பவர்கள் கையேடு வைத்திருப்பார்கள்.முந்தைய நாளே முக்கியமான கருத்துகளை, இலக்கியம் மற்றும் இதிகாசப் புராணங்களிலிருக்கும் சில பகுதிகளை எழுதி வைத்திருப்பார்கள்.மேடையில் பிரசங்கம் செய்யும்போது அக்கையேட்டை ஒரு பார்வை பார்த்தவாறே பிரசங்கிப்பார்கள்.இராமலிங்கத்திடம் எந்தக் கையேடும் இல்லை.பெரிய புராணத்தை அந்த சிறுவன் அக்குவேறு ஆணிவேராக மடை திறந்த வெள்ளமாக அப்படியே மனசிலிருந்து எடுத்துக் கொட்டியதை கேட்ட கூட்டம் சிலிர்த்தது.
 அண்ணன் சபாபதி பிள்ளையும்தான். ‘பிரசங்கத்தில் அண்ணனை மிஞ்சுகிறான் தம்பி’ என்று தன் மனைவி பாராட்டுரைத்தது மிகையல்ல என்பதை உணர்ந்தார். நெகிழ்ந்தார். கரைந்தார்.அவரது கண்கள் தாரைதாரையாக கண்ணீரை உதிர்த்தன.பிரசங்கம் முடிந்து அன்று வீட்டுக்கு வந்த தம்பியிடம் ஆவல் தாங்காமல் கேட்டார்.“தம்பி, கேட்குறேன்னு தப்பா எடுத்துக்கப்படாது…” பீடிகையோடு ஆரம்பித்தார்.
“நான் முறைப்படி ஆசிரியர்களிடம் கல்வி கற்று, ஏராளமான தமிழ்நூல்களை கரைத்துக் குடித்து பிரசங்கம் செய்கிறேன். எனக்கும் கூட அமையாத பிரவாகம் உன்னிடம் இருக்கு. இதையெல்லாம் எங்கு... யாரிடம் கற்றாய்?”“தமிழ்க் கடவுள் முருகனிடம் கற்றேன்...” சொல்லிவிட்டு புன்னகைத்தார் இராமலிங்கம்.தம்பி தனியாக அறையில் அமர்ந்து ஏதேதோ நூல்களை வாசிக்கிறான் என்று சபாபதி பிள்ளைக்குத் தெரியும்.தம்பியின் முருக பக்தியை தம்பியே சொல்லி அப்போதுதான் அறிந்தார்.
சில காலம் முன்பு வீட்டில் அண்ணனிடம் கோபித்துக் கொண்டு வெளியே போய்விடுவார் இல்லையா? அதுமாதிரி அவர் போய் சேர்ந்த இடம்தான் கந்தசாமி கோயில்.பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் சென்னையில் வெவ்வேறு சமூகத்தினரின் பங்களிப்பால் உருவான கோயில் அது. மன்னர்கள் காலத்துக் கோயில்களைப் போல கற்கோயிலாக உறுதியாக உருபெற்றது. இங்கிருந்த கந்தசாமியே, இராமலிங்கத்தின் இஷ்ட தெய்வமானார்.
இக்கோயிலில்தான் தனிமையைக் கற்றார். நேரம் போவது தெரியாமல் தியானம் செய்தார். இராமலிங்கத்தின் தமிழ்ப் பயிற்சியே இங்கிருக்கும் முருகப் பெருமானை அவர் மெய்யுருகிப் பாடியதின் மூலம்தான் கிடைத்தது.வள்ளலாரான பின்பு அவர் பாடிய பாடல்கள் ‘திருவருட்பா’வாக தொகுக்கப்பட்டன. திருவருட்பாவின் முதல் பாடலாக அமைந்திருக்கும் ஓங்கு திருப்பாடல் (திருஓங்கு என்று தொடங்குவதால்) சென்னை கந்தக்கோட்டம் கந்தசாமியை வணங்கி இராமலிங்கம் பாடியதே!
கந்தசாமி கோயிலை கந்தக்கோட்டம் என்று முதன்முதலாக அழைத்தவரே இராமலிங்கம்தான்.இவரால் பாடல்பெற்ற தலமான பின்னரே கந்தசாமி கோயில் பிரபலம் அடைந்து வளர்ந்தது.‘திருவருட்பா’வில் இடம்பெற்ற ‘தெய்வமணிமாலை’ என்கிற நூலின் முப்பத்தோரு பாடல்களுமே கந்தசாமிக்காக இராமலிங்கம் பாடியவையே.இன்றும் தினப் பிரார்த்தனைகளில் பலரால் பாடப்படும் ‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்’ என்கிற பிரபலமான பாடல் ‘தெய்வமணிமாலை’ நூலில் இடம்பெற்றதே.
கந்தக் கோட்டத்தில் தமிழ்க் கடவுளை வாழ்த்திப் பாடி தமிழ் ஞானம் பெற்றபோது இராமலிங்கத்துக்கு பத்து வயதுக்குள்தான் இருக்கும்.இந்த காலக்கட்டத்தில்தான் அவருக்குள் ஞானம் ஊற்றெடுத்துக் கொண்டே இருந்தது.முருக பக்தியே அவரை நெறிப்படுத்திக் கொண்டிருந்தது.மாடியிலிருந்த அவரது பிரத்யேக அறைக்குள் மிகப்பெரிய நிலைக்கண்ணாடி ஒன்று இருந்தது.இது கண்டிப்பாக வேண்டுமென்று அடம் பிடித்து வாங்கி வைத்திருந்தார். காரணம்?
திருவாசகத்தில் மாணிக்க வாசகர் குறிப்பிடுகிறார்.வேடன் ஒருவனுக்கு சிவபெருமான் கண்ணாடியில் தோன்றி தரிசனம் தந்ததாக. அதுபோல முருகன் தனக்கு கண்ணாடியில் தரிசனம் தருவார் என்று நம்பினார் இராமலிங்கம்.எந்நேரமும் முருகனை நினைத்து தியானம் செய்துக் கொண்டிருந்தார்.தியானத்தில் மனம் ஒன்றாத சமயங்களில் நிறைய நூல்களை வாசித்துக் கொண்டே இருந்தார்.கண்டதை வாசித்தவன் பண்டிதன் ஆவான் என்பார்கள்.
தமிழின் அரிய பொக்கிஷங்களை தேடித்தேடி தேர்ந்தெடுத்து வாசித்த இராமலிங்கமோ பண்டிதருக்கெல்லாம் பண்டிதர் ஆனார். ஒரு நாள். இராமலிங்கத்தின் பிரார்த்தனைக்கு முருகன் செவி சாய்த்தார்.ஆம். அவர் எதிர்ப்பார்த்த அந்த அதிசயம் நடந்தே விட்டது. தன் அறையில் இருந்த பெரிய நிலைக்கண்ணாடியில் அவர் முருகனை தரிசித்ததாகக் குறிப்பிட்டார். முருகன் என்றால் ஆறுமுகன்.
பன்னிரு கரங்கள்.சேவல் கொடி.வேல்.மயில்.அந்தக் காட்சியைப் பாடலாக விவரிக்கிறார் இராமலிங்கம். ‘சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்த் தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர் கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட் கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே...’ இராமலிங்கத்தின் தமிழாசிரியர் வேறு யாருமல்ல. தமிழ்க்கடவுளேதான்.
அவர் பள்ளிக்குச் செல்ல விரும்பியதில்லை. ஆசிரியர்களிடம் கற்க அவருக்கு எதுவும் இருந்ததில்லை.தான், கற்க விரும்பியதை இறைவனிடமே கற்றார்.தான், கேட்க விரும்பியதை இறைவனிடமே கேட்டார்.இத்தகையச் சூழலில் எவருக்கும் எழக்கூடிய துறவு ஆசை அவருக்கும் இருந்தது.தன் வயதை ஒத்த நண்பன் ஒருவனிடம் சொன்னார். “பொய்யுலக வாழ்வில் நம்பிக்கை இல்லை. துறவு பூணலாம் என்றிருக்கிறேன்...”
விளையாட்டு வயதிலிருந்த நண்பன் தானும் சேர்ந்துக் கொள்கிறேன் என்றான்.தலையை மழித்துக் கொண்டனர். ஆடைகளை துறந்து கோவணம் பூண்டனர். ஆண்டிக் கோலத்தில் எங்கெங்கோ அலைந்தனர்.வேடத்தில் இல்லை ஆன்மீகம் என்பதை வெகுவிரைவிலேயே உணர்ந்துக் கொண்டார் இராமலிங்கம்.இச்சம்பவத்தை ‘நினது மெய்யருள் மீட்டிட மீண்டேம்’ என்று பாடியிருக்கிறார் வள்ளலார்.
(அடுப்பு எரியும்)
-தமிழ்மொழி
ஓவியம்: ஸ்யாம்
|