WORK FROM HOME- மாற்றங்களை அதன் போக்கில் வரவேற்போம்!



நத்தை தன் கூட்டிற்குள் சுருங்குவது போல், ஒட்டு மொத்த உலகமும் ஒரு வைரஸால் முடங்கிக் கிடக்க, பெரும்பாலான துறைகள் வொர்க் ஃப்ரம் ஹோம் முறைக்குள் வந்து விட்டன. ‘‘இணையம் கைகளில் இருந்தால் உலகமே கூரைதான். யார் எங்கிருந்தும் பணியாற்றலாம். வேலைகளை எங்கிருந்தும் கண்காணிக்கலாம். தேவையானவற்றை விரல் நுனியில் வீட்டிற்கே வர வைக்கலாம்.

சடனாக வந்த லாக்டவுனில், தொழில் நுட்ப நிறுவனங்களான கூகுள், ஃபேஸ்புக், டுவிட்டர், மைக்ரோசாஃப்ட், அமேசான், ஆப்பிள் நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் முறைக்குள் மாறிவிட்டதை அறிவிப்பே செய்துவிட்டன. மற்ற துறையினருக்கு இது சாத்தியம் இல்லையா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.அரசு பாதுகாப்பு சார்ந்த வேலைகளுக்கும், வங்கி பணிகளுக்கும் அலுவலகம் சென்றுதான் வேலை செய்ய முடியும். அதேபோல் சில செக்யூர்டான டேட்டா பணிகளையும் வங்கிக்குள்தான் செய்ய முடியும்.  

நான் பேங்கிக் செக்டார்களான கஸ்டமர் கேர், சேல்ஸ், இன்ஷூரன்ஸ் மியூட்சுவல் பண்ட்ஸ் மாதிரியான விஷயங்களுக்கு முதல் 15 நாள் விடுமுறை கொடுத்த வங்கிகள், பிறகு சில செக்யூர்டான சாஃப்வேர்களை வீட்டிற்கே வழங்கி வீட்டில் இருந்து வேலை செய்யச் சொல்லிவிட்டார்கள்.

அதில் எங்கள் நிறுவனமும் வொர்க் ஃப்ரெம் ஹோம் முறையில் எங்களை வேலை செய்யச் சொல்லிவிட்டார்கள்...’’ எனப் பேசத் தொடங்கினார் தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் மியூட்சுவல் பண்ட்ஸ் விற்பனை பிரிவில் பணியாற்றும் முருகானந்தம்.

‘‘மார்க்கெட்டிங் துறையில் மிகவும் முக்கியமானது ரிலேஷன்ஷிப் பில்ட் செய்வது. இதில் தொடர்ந்து வாடிக்கையாளர்களை சந்திப்பதும், அவர்களோடு தொடர்பில் இருப்பதுமே முக்கியம்.  என்னுடைய 80% பணி, வெளியில்தான். வேலை. எனது வொர்க்கிங் ஸ்டைல் B2B. அதாவது பிஸ்னஸ் டூ பிஸ்னஸ் மெத்தெட். காலையில் அலுவலகம் நுழைந்ததும் அன்றைய மார்க்கெட்டிங் அப்டேஷன்களை சிஸ்டத்தில் பதிவேற்றிய பின் வெளியே சென்று பலரையும் சந்திப்பேன்.

புதுப்புது மனிதர்களை தொடர்புக்குள் கொண்டு வருவதாலேயே விற்பனையை நாங்கள் அதிகப்படுத்த முடியும். நேரடியாக ஒரு வாடிக்கையாளரை சந்தித்து, முகம் பார்த்துப் பேசும்போது வேறுசில புராடக்டுகளையும் சேர்த்தே விற்பனை செய்ய முடியும். இதன் மூலமாக விற்பனையில் மேலும் பல வாய்ப்புகள் தானாகவே கிடைக்கும்.

‘நேரில் வாங்க’ என சந்தோஷமாகச் சொன்ன வாடிக்கையாளர்கள் இப்போது நேரில் சந்திப்பதை தவிர்க்கிறார்கள். காரணம் நோய் தொற்று.
இதில் விற்பனை பிரிவை சார்ந்து வேலை செய்பவர்களுக்கு டிஜிட்டல் வளர்ச்சி சாத்தியப்படவில்லை. முகத்தை பார்க்காமல் போனில் பேசும்போது, போனை எடுப்பவர் மனநிலையும் சூழலும் இங்கே முக்கியம். விற்பனை முன்பை விட ஒன் தேர்டு என்னும் முறையில் குறைந்துவிட்டது. இதே நிலை நீடித்தால் எதிர்காலம் என்னவாகும் எனத் தெரியவில்லை.

மேலும் இது குடும்பத்திற்கான நேரம், இது வேலைக்கான நேரம் என பிரித்துப் பார்க்க முடியாத சூழலில் நேரக் கட்டுப்பாடின்றி நாங்கள் வேலை செய்கிறோம். இப்போதைய பொருளாதாரச் சூழலில் வேலையை தக்க வைத்துக் கொள்வதே பெரிய சாகசம்தான்...’’ என்கிறார் முருகானந்தம்.
‘‘லாக்டவுன் ஆன முதல் நாளிலிருந்தே வெளியில் எங்கும் நான் செல்லவில்லை. இதோ மூன்று மாதங்களைக் கடந்தாச்சு. இந்த வருடம் முழுதும் இப்படியே போயிடுமோ என தோன்ற ஆரம்பித்துவிட்டது...’’ எனப் பேசத் தொடங்கிய ராஜ்குமார், தொழில்நுட்பம் சார்ந்த கன்ஸ்ட்ரெக்‌ஷன் நிறுவனம் ஒன்றின் எலெக்ட்ரிக்கல் பிரிவில் லீட் இஞ்சினியராக பணியில் இருக்கிறார்.

‘‘நான் மாற்றுத் திறனாளியும்கூட. லாக்டவுனுக்குப் பிறகே முழுவதும் வீட்டில் இருந்து வேலை செய்கிறேன். எங்கள் நிறுவனத்தில் மாதத்தில் இரண்டு நாள் வொர்க் ஃப்ரெம் ஹோம் சிஸ்டம் இருந்தது. இருந்தாலும் நான் தினமும் காரில் அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தேன்.
வீட்டுக்குள் முடங்கி வேலை செய்வதை நான் எப்போதும் விரும்பவில்லை. இப்போது இருப்பது ஒரு பயங்கரமான சூழல். தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல நான்கு சுவற்றுக்குள் கம்யூட்டர் முன் தவம் கிடப்பது அலுப்பைத் தரத் தொடங்கி இருக்கிறது.  
எங்களுடையது கொரியன் புராஜெக்ட். மெயின் அலுவலகம் ஸ்வீடனில் உள்ளது. எனது டீமில் எனக்குக் கீழ் 7 பேர் வேலை செய்கிறார்கள். நான் ஃப்ளான்ட் ஸ்பாட் ஹெட்டாக இருக்கிறேன்.  

எங்களது டீம் வொர்க், ஐடி துறை மாதிரி தனியாக எடுத்துச் செய்யும் வேலை கிடையாது. இதில் டீம் கோ-ஆர்டினேஷன் ரொம்ப முக்கியம். எப்போதுமே அனைவருடனும் தொடர்பில் இருக்க வேண்டும். எனக்கு கீழே வேலை செய்பவர்களிடத்தில் வேலை வாங்குவது, சரியாக முடிக்கிறார்களா என அவர்களைக் கண்காணிப்பது, வேலைக்கு நடுவே ஸ்வீடனில் இருக்கும் தலைமை அலுவலுகத்துடன் மீட்டிங், டீம் இன்ட்ரக்‌ஷன்ஸ் என வேலைகள் செல்லும்.

இப்போது வீட்டிலிருந்தே இந்த வேலைகளைச் செய்வதில் நெருக்கடிகள் அதிகம் உள்ளன. இணையத் தொடர்புச் சிக்கல், இடையிடையே ஏற்படும் பவர் கட் இவைகள் சோர்வைத் தருகின்றன. டீம் ஒருங்கிணைப்பும் சிக்கலாக இருக்கிறது.  எனது டீமில் ஊருக்குச் சென்றவர்கள் மொபைல் டேட்டா வழியாகவே வேலை செய்கிறார்கள். அவர்களால் நேரத்துக்குள் வேலைகளை முடிக்க முடியவில்லை. இதனால் கூடுதல் நேரம் வேலை செய்வதோடு, சனி ஞாயிறும் வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.  

பல நேரங்களில் இது மன ரீதியான அழுத்தத்தை தருகிறது. அலுவலகம் என்றால் இடையிடையே செஸ், கேரம், டென்னில் என ரெக்ரியேஷன் விஷயங்களில் ஈடுபடுவோம். நண்பர்கள் முகம் பார்த்துப் பேசுவதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கும்.இந்த லாக்டவுன் வீட்டில் இருப்பவர்களின் நேரத்தையும் சேர்த்தே எடுப்பதை உணர்கிறேன். டிவி பார்ப்பதில் தொடங்கி அவர்களுக்கான கம்யூனிகேஷனும் வீட்டிற்குள் குறைகிறது.

கூட்டுக் குடும்பமாக இருப்பவர்களுக்கு இன்னும் கூடுதல் பிரச்னைகள். வீட்டு வேலைகளையும் செய்து சிஸ்டத்திலும் அமர்வது, மேலும் வீட்டில் இருக்கும் குழந்தைகள், பெரியவர்களின் குறுக்கீடு இதெல்லாம் வேலையில் பின்னடைவை ஏற்படுத்துகின்றன. வேலை செய்வதற்கான சூழல் ரொம்பவே முக்கியம். வீட்டிற்குள் அலுவலகச் சூழலைக் கொண்டுவர முடியாதுதான். ஆனால், என்ன செய்வது? சூழல் இப்படி அமைந்துவிட்டது.
பெரும்பாலானவர்கள் வீடுகளில் உட்கார்ந்து வேலை செய்யத் தேவையான டேபிள் சேர் வசதியாக இல்லை. கட்டில், சோஃபா என கிடைக்கும் இடத்தில் அமர்ந்து மடிக் கணினியோடு வேலை செய்கிறார்கள்.

இதனால் நெக் பெயின், பேக் பெயின் என ஹெல்த் பிரச்னைகளும் வருகின்றன. சில மணி நேரத்தில் அலுவலகத்தில் முடிக்கும் வேலைகள்கூட, வீட்டில் நீண்ட நேரத்தை எடுத்து, லேட் நைட்டை தொடுகின்றன...’’ என விரக்தியுடன் முடித்தார் ராஜ்குமார்.  

‘‘திடீரென வந்த இந்த லாக்டவுனால்தான், ‘பெண்களுக்கு இத்தனை வீட்டு வேலைகள் இருக்கின்றதா’ என்ற உண்மையே ஆண்களுக்குப் புரிந்திருக்கிறது...’’ என்றபடி பேசத் தொடங்கினார் டெவலப்மெண்ட் கன்சல்டெண்ட் மற்றும் ரிசர்ச் சார்ந்து இயங்கும் கீதா நாராயணன்.
‘‘வொர்க் ஃப்ரெம் ஹோம் சிஸ்டம் பெண்களுக்கு சாதகம்தான். சென்னை மாதிரியான நகரங்களுக்கு இந்த வொர்க் ஃப்ரெம் ஹோம் மெத்தெட் மிகப் பெரிய பூம். தினமும் பல கிலோ மீட்டர் பயணித்து டிராஃபிக் நெருக்கடிகளைக் கடந்து நசுங்கி அலுவலகம் சென்று மீண்டும் வேலை முடிந்ததும் அதே நிலையில் வீடு வந்து சேர்ந்தவர்களுக்கு இது வரப்பிரசாதம். போக்குவரத்திற்கான நேரம் ரொம்பவே மிச்சம். அலைச்சல் இல்லை.

குடும்பத்தில் இருவருமே வேலைக்குச் செல்பவர் என்றால், குழந்தைகளுக்கான டே கேர் பிரச்னை, யாரிடத்தில் விடுவது, என்ன செய்வது என்று திணறியவர்களுக்கு இந்த முறை பெரிய ரிலீஃப் கொடுத்திருக்கு.இணைய தொடர்பு இருந்தாலே சென்னைக்கு வெளியில் எங்கேயும் வேலை செய்யலாம் என்ற மனநிலையையும் உருவாக்கி இருக்கு. மாதத்தில் இரண்டு நாள் அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை அலுவலகத்திற்கு வந்து மற்ற விஷயங்களைச் செய்யலாம். இதில் வீட்டுப் பிரச்னை, கரெண்ட் பிரச்னை, இட நெருக்கடி, போக்குவரத்து பிரச்னைகள் குறைகின்றன.

திருநெல்வேலி, மதுரை என சொந்த ஊர் தேடிச் சென்றுவிட்ட பெரும்பாலான ஐடி ஊழியர்களுக்கும் பெரிய ரிலீஃப். வேலை வேலை என ஓடிய செக்டாரில் பலர் இப்போதுதான் உட்கார்ந்து ஃப்ரீயாக தன் குடும்பத்தோடு பேசவே ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்களுக்கான  இளைப்பாறும் நேரமாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

வொர்க் ஃப்ரம் ஹோம் மிடில் க்ளாஸ் கான்செப்ட். இதனால் நிறைய வேலைகளை வீட்டில் இருந்தே செய்ய முடிகிறது. குறிப்பாக சைக்காலஜி படித்த மாணவிகள் டெலி கவுன்சிலிங், டெலி மெடிசன், சிலர் டெலி அஸ்ட்ராலஜி என சூழலை சாதகமாக மாற்றத் தொடங்கியுள்ளனர். சில டிரான்ஸ்லேஷன் வேலைகள், ஆன்லைன் மெகந்தி வகுப்புகள், ஆன்லைன் மியூசிக்கல் க்ளாஸ், ஆன்லைன் மார்க்கெட்டிங், ப்ளானிங் மீட்டிங், கல்லூரி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு, ஸ்போக்கன் வகுப்பு என வீட்டிலிருந்தே பல விஷயங்களை ஆல்டர்நேட்டிவாக செய்யத் தொடங்கிவிட்டனர். இதெல்லாம் மகிழ்ச்சியான விஷயங்களே...’’ என்கிறார் கீதா நாராயணன்.

‘‘என்னோட வொர்க்கிங் ஸ்டைல் எப்போதுமே அலுவலகம், வீடு என இரண்டிலுமே வேலை செய்வது...’’ எனப் பேசத் தொடங்கினார் ஐடி நிறுவனம் ஒன்றின் சென்னை, ஹைதராபாத் கிளைகளின் டீம் மேனேஜராக இருக்கும் திவ்யா நடராஜன். ‘‘என் க்ளையன்ட்ஸ் அனைவருமே யுஎஸ்ஸில் இருப்பவர்கள். இந்த வொர்க் ஃபிரெம் ஹோம் மெத்தெட் ஏற்கனவே ஐடி ஊழியர்களுக்கு பழக்கமான ஒன்றுதான்.

டிஸ்ஸாஸ்டர் மேனேஜ்மெண்ட் பயிற்சிகளை நாங்கள் ஏற்கனவே எங்கள் ஊழியர்களுக்கு வழங்கி இருக்கிறோம். திடீரென புயல், வெள்ளம் என அறிவித்து ஹைதராபாத் நிறுவன பணிகளை சென்னை நிறுவன ஊழியர்களைச் செய்ய வைப்பது, சொல்லாமல் திடீரென கனெக்டிட்டிவிட்டிகளை கட் செய்து வீட்டிலிருந்தே வேலை செய்ய பழக்கப்படுத்துவது என இந்த சூழல் ஊழியர்களுக்கு பழக்கமே.

என்ன... முன்பு பிரஷராக இருந்த விஷயம் இப்போது ப்ளஷராக அவர்களுக்கு மாறியுள்ளது! சென்னையில் வெள்ளம் வந்தபோது இங்குள்ள பணிகளை ஹைதராபாத் நிறுவனத்தை செய்ய வைத்த அனுபவமும் எங்களுக்கு ஏற்கனவே இருக்கிறது.லாக்டவுன் தொடங்கிய புதிதில் வீட்டிலிருந்து பணி செய்வதைக் கையாள்வது கஷ்டமாக இருந்தது. முதல் இரண்டு வாரங்கள் அனைவரும் ஒருவித பதட்டம், பயத்தில் இருந்தார்கள்.

அடுத்த சில நாட்களிலே நம்முடைய புது வொர்க்கிங் ஸ்டைல் இப்படிதான் என எல்லோருக்கும் புரிய, சூழலுக்கு அவர்களாகவே அடாப்ட் ஆகிவிட்டார்கள். நிறுவன ரீதியாக வந்த சில பிரச்னைகளை நாங்களும் சரிசெய்துவிட்டோம்.என் டீமில் இருந்தவர்கள் பெரும்பாலும் ஹைதராபாத் மும்பையில் இருந்து வந்து வேலை செய்பவர்கள். இப்போதிருக்கும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் குடும்பத்தினரோடு வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். குழந்தைகளையும் அவர்களால் கவனிக்க முடிகிறது. இதனால் அவர்களின் திறன் அதிகமாகி இருக்கிறது.

இப்போது வீட்டில் இருப்பவர்களும் எங்கள் வேலைகளைப் புரிந்துகொள்ள முடிவதோடு, குழந்தைகளும் ‘அம்மாவுக்கு வேலை இருக்கு, டீம் மீட்டிங் இருக்கு’ எனப் புரிந்து நடக்கிறார்கள். அவ்வப்போது பணியாளர்களை மோட்டிவேட் செய்ய ஆன்லைன் விளையாட்டுக்களை நடத்தி வருகிறோம். இதில் அவர்கள் குழந்தைகளையும் பங்குபெறச் செய்கிறோம். குழந்தைகள் ஆர்வத்தோடும், ஐடியாக்களோடும் வருகிறார்கள். இதனால் பணிச் சூழலில் இருந்து விலகி ஊழியர்களுக்கு புத்துணர்வு கிடைக்கிறது.

நோய் தொற்று நேரத்தில் அனைவருமே குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருப்பதையும், வீட்டு உணவு கிடைப்பதையும் அனுபவித்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். திருமணமாகாத இளைஞர்களுக்கு ஹோம் அட்மாஸ்ஃபியர் தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல bore அடிப்பதாக முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களின்  வீக் எண்ட் பார்டி, ஷாப்பிங், எஞ்சாய்மெண்ட், என்டர்டெய்ன்மெண்ட் என எல்லாமே கட்டான நிலையில் வீட்டில் முடக்கி இருப்பது இளைஞர்களுக்கு சுத்தமாக செட்டாகவில்லை.

பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு நிறுவனத்தை சீக்கிரம் திறக்க வேண்டும் என்பதுதான். மாற்றங்களை அதன் போக்கில் வரவேற்க வேண்டும் என்பதை இளைஞர்களுக்கு இந்தச் சூழல் கற்றுத் தரும்...’’ என்று புன்னகைக்கிறார் திவ்யா நடராஜன்.  

மகேஸ்வரி நாகராஜன்