கொரோனாவால் இறப்பவர்களை மனிதநேயத்துடன் இலவசமாக அடக்கம் செய்கிறோம்!



தமிழகத்தில் இதுவரை 900க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா ெதாற்றால் உயிரிழந்து உள்ளனர். ஒவ்வொரு இறப்பு செய்தியும் நம் அனைவரையுமே அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இப்படியான உயிரிழப்புகளின் போது உறவினர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதில்லை என்பது மிகப்பெரிய சோகம்.
நெருங்கிய சொந்தங்கள் கூட கொரோனா பரவிவிடுமோ என்ற பயத்தில் அருகே வருவதில்லை. இதனால், இரண்டு மூன்று சொந்தங்களுடன் உயிரிழந்தவரின் உடல் மாநகராட்சியால் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. அந்த இரண்டு மூன்று சொந்தங்கள் கூட இடுகாட்டின் வாசலோடுநின்றுவிடுகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில்தான், கொரோனாவால் உயிரிழந்தவர்களை எந்தவித தயக்கமுமின்றி சடங்குகள் செய்து அடக்கம் செய்து வருகிறது இந்திய சமூக ஜனநாயகக் கட்சி எனப்படும் எஸ்டிபிஐயும், அதன் அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும். ‘‘கொரோனா ெதாற்றால் இறப்பவர்களை மாநகராட்சிதான் அடக்கம் பண்ணுது. மாநகராட்சியைப் பொறுத்தவரை எந்த ஒரு மதவழிபாடும் கிடையாது.

பொதுவா, இறந்தவங்கள அந்தந்த மத வழிபாட்டுடன் அடக்கம் பண்றது வழக்கம். முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், இந்துகள்னு எல்லோருக்கும் தனித்தனியா ஒரு வழிபாடு இருக்கு. இந்தக் கொரோனாவால் இறந்தவங்கள எந்தச் சடங்குகளும் இல்லாம அவங்க அடக்கம் பண்ணிட்டு இருந்தாங்க.

மக்களும் கொரோனா தொற்று பீதியால் இதுல கவனம் செலுத்தல. இப்படியிருக்கும் போது எங்களை ரெண்டு விஷயம் ரொம்பப் பாதிச்சது...’’ என்று பேசத் தொடங்குகிறார் இந்தப் பணிக்கான எஸ்டிபிஐ கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம்.

‘‘முதல்ல டாக்டர் சைமனின் இறப்பு. நியூ ஹோப் மருத்துவமனையின் நிறுவனரான அவர் மிகச் சிறந்த தொண்டுள்ளம் கொண்டவர். ஆனா,
கொரோனாவால் அவர் இறந்தப்ப அடக்கம் செய்யவிடாம மக்கள் தடுத்தாங்க. உடன் சென்ற மருத்துவர்களையும் தாக்கினாங்க.

காரணம், பயம்.அப்புறம், வேறொரு இடத்துல கொண்டு போய் அடக்கம் நடந்துச்சு. சமூக சேவை மனப்பான்மையுடன் செயல்பட்ட ஒரு சிறந்த மருத்துவருக்கே இந்தக் கதின்னா சாதாரண மக்களின் நிலைமையை யோசிச்சு பார்க்க வேண்டியிருக்கு.

அடுத்து, புதுச்சேரியில் கொரோனாவால் இறந்தவங்களின் உடல்களை மாநகராட்சிகாரங்க அப்படியே தூக்கிப் போட்டுட்டு வந்த சம்பவம்.
ஒரு மனுஷன் வாழும் நாட்கள்ல இந்தச் சமூகத்துக்கும், குடும்பத்துக்கும் எவ்வளவோ சேவைகள் செய்திருப்பார்.

அப்படிப்பட்டவர் இறக்கும் போது கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்படணும் இல்லையா? ஆனா, ஏதோ ஒரு பொருளை வீசியெறிஞ்சது மாதிரி இருந்தது அந்தச் செயல்.

இந்த ரெண்டு விஷயங்களும் எங்களை ரொம்பப் பாதிச்சது. இதுக்கு ஏதாவது பண்ணணும்னு தோணுச்சு. உடனே, இந்தப் பணியை நாங்க நம்பிக்கையா கையிலெடுத்தோம்.  

கடந்த பதினைஞ்சு நாட்களுக்கும் மேலா இந்தப் பணியை செய்திட்டு வர்றோம். சென்னையில் இதுவரை 45 உடல்களை அடக்கம் செய்திருக்கோம். புதுச்சேரியில் பத்து உடல்களும், நெல்லை, ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள்ல சில உடல்களும் அடக்கம் பண்ணியிருக்கோம்.

மொத்தமா, அறுபதுக்கும் மேற்பட்ட உடல்களை நல்லபடியா அடக்கம் செய்திருக்கோம்...’’ என்கிற கரீம், இதற்கென தன்னார்வலர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்.  ‘‘சென்னையில மட்டும் 18 குழுக்கள் வைச்சிருக்கோம். இங்க  மரணம் அதிகம் என்பதால் அதிகக் குழுக்கள் உருவாக்கினோம். ஒரு குழுவுல எட்டு பேர் இருப்பாங்க. ஆக, 144 பேர் இங்க தன்னார்வலர்களா இருக்காங்க. மாவட்டங்கள்ல 20 பேர் கொண்ட குழு இருக்கு.

ஒரே குழுவை நாங்க தொடர்ச்சியா பயன்படுத்தறதில்ல. ஐந்து உடல் வந்ததுன்னா ஐந்து குழு போகும். இப்படி போகும் குழு மறுநாள் போகாது. வேறு குழுக்கள்தான் போகும்.இப்படி மாறி மாறிதான் குழுக்களை அனுப்பறோம்.

அடுத்து, இந்தத் தொற்று எங்களுக்கு வராமல் இருக்க உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளைச் சரியா பின்பற்றுகிறோம். சானிடைசரும், மருந்துகளும் எடுப்பதில் தொடங்கி பிபிஇ கிட் அணிவது வரை எல்லாமே கச்சிதமா செய்றோம்.

அடக்கம் செய்யும் போது இறந்தவங்களின் உறவினர்கள் நம்மை தொடர்பு கொள்வாங்க. உதாரணத்துக்கு ராயபுரத்துல ஒருத்தர் இறந்தார்னா, அவங்களுக்கான அடக்கஸ்தலம் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருக்கும். அதுக்கான அனுமதியை உறவினர்களே வாங்கியிருவாங்க.

அப்புறம் எங்களைத் தொடர்பு கொண்டதும் அங்க போய் சடங்குகள் செய்து அடக்கம் பண்ணுவோம். அந்த உடலை ஆம்புலன்ஸில் இருந்து இறக்குவதில் இருந்து அடக்கம் பண்ற வரை முழு வேலையும் எங்களோடது.

முஸ்லிம்களா இருந்தா குழிக்குள் வைக்கிறதுக்கு முன்னாடி ஒரு ப்ரையர் பண்ணுவோம். சென்னையில இந்துகள் யாரையும் தகனம் பண்ணல. ஆனா, புதுச்சேரியில ஒன்பது உடல்கள் முஸ்லிம் அல்லாதவர்கள்தான். அங்க நாங்க தகனம் செய்து கொடுத்தோம்.

இந்து மதத்தைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி இறந்துட்டாங்க. அவங்க சடங்குபடி தகனம் செய்தோம். எங்கக் கட்சியில இந்துகளும் இருக்காங்க. அவங்க முன்னின்று அந்தச் சடங்குகள செய்தாங்க. ரொம்ப நெருங்கிய உறவினர்கள் மட்டும் சாம்பல் வாங்க வருவாங்க.

நாங்க சாதி மதம் எதையும் பார்க்கறதில்ல. மனிதநேயத்துடன் இந்தப் பணியை செய்றோம். அப்புறம், இதுல வசதியானவங்க, வசதியில்லாதவங்கனு பிரிக்க முடியாது. உடலை புதைப்பதற்கு பணமில்லைனு யாரும் வரல. முழுக்க முழுக்க நோய் தொற்றின் பயம் மட்டும்தான். ரொம்ப வசதியானவங்களையும் நாங்க அடக்கம் செய்திருக்கோம். ரொம்பக் கஷ்டப்பட்டவங்களையும் அடக்கம் பண்ணியிருக்கோம்.

குறிப்பா, நம்மை அணுகிறவங்களின் உடலை மட்டுமே அடக்கம் செய்றோம். நிறைய பேருக்கு நாங்க இதுமாதிரி செய்வது தெரியாது. அதனால, கார்ப்பரேஷன் மூலமா அடக்கம் பண்ணிட்டு போயிடறாங்க. இதுக்காக நாங்க எந்தப் பணமும் வாங்கறதில்ல. இலவசமாவே செய்றோம். துணி எல்லாம் நாங்களே வாங்கி புதைக்கிறோம். பிபிஇ கிட் கூட எங்க சொந்தக் காசுல வாங்கியே அணியறோம்.

எங்க பாதுகாப்புக்கான மருந்துகள், சானிடைசர் மட்டும் சில நல்ல உள்ளத்தினர் எங்களுக்குக் கொடுத்து உதவறாங்க. இதுவரை தமிழக அரசு எங்களுக்கு எந்த உதவியும் செய்யல. ஆனா, புதுச்சேரி அரசு எங்களுக்கு அடக்கம் செய்ய அனுமதி அளிச்சிருக்கு.

ஜிப்மர்ல யாராவது இறந்து, அடக்கம் பண்ணாத உடல்கள் இருந்தா அதை எங்ககிட்ட தர்றாங்க. எங்ககிட்ட ஆம்புலன்ஸ் இருக்கு. அதுல கொண்டு போய் அடக்கம் செய்றோம். அதனால, யார் வேணாலும் எங்களத் தொடர்பு கொள்ளலாம்...’’ என்கிற கரீமைத் தொடர்கிறார் இந்தப் பணியில் தன்னார்வலராக இருக்கும் எஸ்வி.ராஜா.

‘‘நான் எஸ்டிபிஐ கட்சியின் சென்னை மாவட்ட பொதுச் செயலாளரா இருக்கேன். சென்னைல 12 உடல்கள் அடக்கம் பண்ண போயிருக்கேன். வண்ணாரப்பேட்டை, ராயபுரம், எண்ணூர்னு போய் செய்திருக்கோம்.

முதல்முதலா பிபிஇ கிட் அணிந்து அந்த உடலை தூக்கிட்டு போகும்போது மூச்சுவிட முடியல. ஒருமணி நேரம் கூட இந்தக் கிட்டைப் போட்டுகிட்டு எங்களால வேலை செய்ய முடியல. ஆனா, ஆறு மணிநேரத்துக்கு மேலா டாக்டர்களும், செவிலியர்களும் இதை அணிந்து எப்படிதான் பணி செய்றாங்களோ? அவங்களுக்கு நாம் முதல்ல தலை வணங்கணும்.  

சென்னையை பொறுத்தவரை உயிர்பலி அதிகமாகிட்டு வருது. முதல்ல ஒரு நாளைக்கு ஒண்ணுதான் வரும். இன்னைக்கு மூணு உடல்களை புதைச்சிட்டு வந்திருக்கோம். இதுல அடக்கம் பண்றப்ப 70 சதவீதம் சொந்தங்கள் வர்றதில்ல. இதுக்கு ரெண்டு காரணங்கள் இருக்கு. ஒண்ணு அவங்கள தனிமைப்படுத்தி இருப்பாங்க. அல்லது ெதாற்றுக்குப் பயந்து வராம இருப்பாங்க. ஆம்புலன்ஸ் வரும்போது உறவினர்களே இல்லாம இருக்கறதைப் பார்க்க ரொம்ப வேதனையா இருக்கும்.

இப்ப மீடியாவுல நிறைய செய்திகள் போட்டப்பிறகு சொந்தங்களும் சுடுகாடு வரை வர ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா, பிபிஇ கிட்டைப் போட்டுகிட்டு உள்ள வர்ற தைரியம் இன்னும் வரல. எங்கப் பரவியிடுமோனு பயப்படுறாங்க.

எப்ப சொந்தங்கள் பயத்தையும் தயக்கத்தையும் விட்டுட்டு, பிபிஇ கிட்டை அணிந்து அடக்கம் பண்ண முன்வர்றாங்களோ அப்பதான் எங்கப் பணி வெற்றி அடைஞ்சதா நினைப்பேன். இந்த விஷயத்துல பயத்தைவிட எச்சரிக்கை தேவை. அரசு நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கு. அதை சரியா கடைபிடிச்சாலே போதும். குழந்தைங்க இருக்காங்க. எல்லோரும் வெறும் அசட்டு தைரியத்துல வரல. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திட்டுதான் வர்றாங்க.

இதுக்காவே நாங்க பனியன், ஷார்ட்ஸ் எல்லாம் வாங்கி வைச்சிருக்கோம். சுடுகாடு போனதும் எங்க டிரஸை கழற்றி தனியா வச்சிட்டு, இந்த பனியன், ஷார்ட்ஸை போட்டுப்போம். அப்புறம், பிபிஇ கிட், க்ளவுஸ், மாஸ்க் எல்லாம் மாட்டிக்குவோம். பாதுகாப்புனு 12 அடி வரை குழி தோண்டறாங்க. சில இடங்கள்ல புல்டோசரை வச்சு தோண்டி, மூடறாங்க. சில இடங்கள்ல இதுக்குனு பணியாளர்கள் இருக்காங்க.

அங்க நாங்க போனதும் முதல்ல சடங்குகள் செய்வோம். அப்புறம், கொண்டு போன துணியை வச்சு உடலை குழிக்குள்ள இறக்கி அடக்கம் செய்வோம். பாதி மணல் போட்டு மூடியதும் எங்க பிபிஇ கிட்டை கழற்றி அந்தக் குழிக்குள்ளயே போட்டுடுவோம். ஒருமுறைதான் அந்தப் பிபிஇ கிட்டை பயன்படுத்தறோம்.

க்ளவுஸை மட்டும் கழற்ற மாட்டோம். ஏன்னா, மறுபடியும் மண் போட்டு மூடணும். அப்புறம், கொஞ்சம் தள்ளி எங்களுக்காக பைப்ல தண்ணீரும்,  தனித்தனியா சோப்பும் வைச்சிருப்பாங்க. எட்டுப் பேருக்கும் எட்டு சேம்பிள் சோப். அதையும் ஒருமுறைதான் பயன்படுத்துவோம்.

அங்கயே குளிச்சுட்டு வீட்டுக்கு வருவோம். அப்புறம் வீட்டுக்கு வந்து இன்னொரு தடவை குளிப்போம். இப்ப எங்க வீட்டுல இதுக்குனு தனியா டப், வாஷிங்மிஷன், டிரம்னு வைச்சிட்டேன். நான் யூஸ் பண்ணினப் பொருளை யாரும் தொடக்கூடாதுனு சொல்லியிருக்கேன்.

அப்புறம், ஹோமியோபதி மருந்து, சத்து மாத்திரைகள்னு எடுத்துக்கறோம். ஆண்டவன் அருளால் எல்லாருமே திடகாத்திரமா இருந்து இந்தப் பணியைச் செய்திட்டு இருக்கோம்...’’ என்கிறார் ராஜா.

பேராச்சி கண்ணன்