சாத்தான்குளம் சம்பவம் முதல் கோயம்பேடு சந்தை வரை...



தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவுடன் நேருக்கு நேர்

#Justice For Jeyaraj And Fenix   இந்த ஹேஷ்டேக்தான் இந்திய அளவில் கடந்த வாரம் டிரெண்டிங். தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டிக்கு அருகிலுள்ள சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் மொபைல் கடையை நடத்தி வந்தார்கள்.
ஊரடங்கின் போது அக்கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் இருவரையும் விசாரணைக்காக சாத்தான்குளம் போலீஸார் அழைத்துச் சென்றனர்.

ஆனால், சடலமாகத்தான் திரும்பியுள்ளனர்.  மர்மமான முறையில் ஜெயராஜும் பென்னிக்ஸும் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்தன. திமுக சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது. இதற்கிடையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முன்வந்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
இந்நிலையில் தமிழக வியாபாரிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், கடை திறப்பு நேர அவகாசம், கோயம்பேடு சந்தை… போன்ற பல கேள்விகளுடன் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவை சந்தித்தோம். கொரோனா காலத்தில் வியாபாரிகள் எதிர் கொள்ளும் சிக்கல்கள் என்னென்ன..?

மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அறிவித்த நாளிலிருந்து இந்த நிமிடம் வரை வியாபாரிகள் படாதபாடுபடுகின்றனர். கடைகள் அடைப்பதில் நேரங்கள், மாற்றங்கள், அதன் விதிமுறைகள்… என்று பல்வேறு குறிக்கீடுகள். 80% வியாபாரிகள் பொருளாதாரம் இழந்து நிற்கிறார்கள். லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை.

இந்த ஊழியர்கள் சம்பளம் வாங்கினால்தான் கிராம்ப்புறங்களில் பொருட்கள் வாங்க முடியும். உதாரணமாக சென்னையிலுள்ள பெரும் துணிக்கடைகளில் பணிபுரியும் பலர் கிராமப்புறங்களில் இருந்து வருபவர்கள். தங்கள் சம்பளத்தை ஊரில் இருக்கும் சொந்தங்களுக்கு அனுப்புகிறார்கள். அந்தச் சொந்தங்கள் அங்குள்ள கடைகளில் பொருட்களை வாங்குகிறார்கள். இந்த சுழற்சி இப்பொழுது முற்றிலுமாக நிலைகுலைந்துள்ளது.
கிராமப்புறங்களை பொருத்தவரை அங்குள்ள மக்கள் அனைவரும் வியாபாரிக்கு பழக்கப்பட்டவர்கள். எனவே இந்த இக்கட்டான சூழலில் கடனுக்கு பொருட்களை வாங்க மக்கள் வரும்போது அங்குள்ள வணிகர்களால் மறுப்பு சொல்ல முடியவில்லை.

தமிழகத்தில் உள்ள எந்த குறு சிறு வணிகர்களிடமும் சேமிப்பு இல்லை. பொருட்களை வாங்கி, விற்று அதில் வரும் பணத்தில் மீண்டும் பொருட்களை கொள்முதல் செய்து... விற்று... இப்படித்தான் வாழ்கிறார்கள்.இப்பொழுது தவிர்க்க முடியாமல் கடனுக்கு பொருட்களை தர வேண்டியிருப்பதால் அடுத்தகட்ட கொள்முதலுக்கு - முதலீட்டுக்கு - வணிகர்களிடம் பணமில்லை. எனவே வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இது போக வங்கியில் கடன் வாங்கியவர்களின் நிலை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. சில மாதங்களுக்கு தவணை வசூலிக்க வேண்டாம் என அரசு அறிவித்தும் வங்கிகள் வணிகர்களின் கழுத்தை நெறிக்கிறார்கள். குறைந்தது ரூ.50 ஆயிரம் முதல் ரூபாய் ஐந்து லட்சம் வரை வட்டியில்லா கடனை அரசு வழங்கினால் வணிகர்கள் மூழ்காமல் இருப்பார்கள். ஒரு வருடம் வட்டி கேட்காமல் இருந்தால்போதும். அடுத்த நாட்களில் நிச்சயம் வட்டியோடு அசலையும் வணிகர்கள் திருப்பி செலுத்தி விடுவார்கள்.

கடை திறப்பு - அடைப்பில் உள்ள குளறுபடிகள் என்னென்ன..?

ஒவ்வொருவரும் ஒவ்வொரு அறிவிப்பை வெளியிடுகிறார்கள். தமிழகத்தில் இருப்பது ஒரே ஒரு முதல்வர். அவர், ‘எந்த நிர்பந்தமும் இல்லை. யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லை. இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்’ என்று சொல்கிறார். அடுத்த நிமிடமே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து… போன்ற அமைப்புகள் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப ஒரு முடிவை எடுக்கின்றன. காவல்துறை, ரெவென்யூ டிப்பாட்மெண்ட் உள்ளிட்டவை வேறொரு முடிவை அறிவிக்கின்றன.

முதல்வர் பேச்சையா அல்லது இவர்கள் அறிவிப்பையா... யார் சொல்வதை நாங்கள் கேட்பது? ஒவ்வொரு துறையும் வியாபாரிகளிடம் அபராதம் வசூலிக்கத்தான் முற்படுகிறதே தவிர எந்தவிதமான நன்மையையும் எங்களுக்குச் செய்ய முன்வருவதில்லை. கொரோனா தொற்றின் ஹாட்ஸ்பாட் கோயம்பேடு என்கிறார்களே..?
 
தமிழக முதல்வர் இப்படி சொன்னதும், ‘வியாபாரிகளை குற்றம் சொல்லாதீர்கள்’ என உடனே மறுப்பு தெரிவித்தோம். உளவுத்துறையும் மேலாண்மைத் துறையும் அரசிடம்தானே இருக்கின்றன... எந்தப் பொருள் எங்கிருந்து வருகிறது என அவர்களுக்குத் தெரியாதா? தொற்று அதிகமுள்ள பகுதியிலிருந்து வரும் பொருட்களை அவர்கள் நிறுத்தியிருக்கலாமே?

கோயம்பேடு சந்தைக்கு அவ்வளவு மக்கள் வருவார்கள் என வணிகர்கள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஆனால், உளவுத்துறை மூலம் அரசு இதை முன்கூட்டியே கணித்திருக்கலாமே? தகுந்த நடவடிக்கைகளை அப்பொழுதே எடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா..?
தொற்று பரவுவதைத் தடுக்க கோயம்பேடிலிருந்து திருமிழிசைக்கு சந்தையை மாற்றினார்கள். முதல்வர், துணை முதல்வர் உட்பட பலரும் அந்த இடத்தைப் பார்வையிட்டார்கள்.

ஆனால், மார்க்கெட் வசதியாக இருக்கிறதா என யாரிடம் கேட்க வேண்டும்? வியாபாரிகளிடம்தானே? மாறாக அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டார். அவர்கள் ‘வசதியாக நன்றாக இருக்கிறது’ என்றார்கள். உடனே முதல்வர் எல்லாம் சரியாகிவிட்டது என அமைதியாகிவிட்டார்.

உண்மையில் சாதாரண சிறு தூறலுக்கே திருமிழிசை தாங்கவில்லை. அப்படியொரு இடத்தில் எப்படி கடை போட..? இது போன்ற இக்கட்டான சூழலில் அரசுக்கு ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதேநேரம் எந்த முடிவை எடுப்பதற்கு முன்பும் எங்களிடமும் கலந்தாலோசியுங்கள் என்று கேட்கிறோம். அரசு இதை செய்யமாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறது...

சாத்தான்குளம் சம்பவம்…

வியாபாரிகள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த மக்கள் மனதிலும் ஓர் அழுத்தம், அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது. பஜாரில் கடை திறந்து வைத்து வியாபாரம் செய்யக் கூடிய ஒருவருக்கே இந்த நிலமை என்றால்... தனி நபருக்கு? கடை என்பதால் ஊடகங்கள் உடனே அச்செய்தியை ஃப்ளாஷ் செய்தன. சங்கங்கள் ஓடோடி வந்தன.

ஆனால், தினந்தோறும் மாநிலம் முழுக்க நடைபாதை வியாபாரிகள் அதிகாரிகளால் தாக்கப்படுகிறார்கள். அந்தந்த பகுதி அல்லது தெருவைத் தாண்டி இந்த விஷயம் பரவுவதில்லை. இதுதான் எதார்த்தம். இதுதான் வணிகர்களின் நிலை.கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் வணிகர்கள் உறுதுணையாக நிற்கிறார்கள். முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்.

அப்படியிருந்தும் எங்களை அடித்துக் கொல்வதும், அபராதம் வசூலிப்பதும் சரியா..? சாத்தான்குளம் போலவே வேறு பல இடங்களிலும் அதிகாரிகள் எங்களை படாதபாடு படுத்துகிறார்கள். இவர்கள் அனைவர் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் வியாபாரிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அரசின் மீது நம்பிக்கை ஏற்படும்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தை தொடர்ந்து கடைகள் அடைக்கப்பட்டன. இதற்கு சாதி ரீதியான விமர்சனம் எழுந்துள்ளதே…
பொய். ஒரு காலத்திலும் அதற்கு நாங்கள் இடம் தர மாட்டோம். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கடையடைப்பு என்று எடுத்தவுடன் அறிவிக்கவில்லை. அவர்கள் இறந்ததாக செய்தி கிடைத்த சிறிது நேரத்திலேயே மாநில பொருளாலருடன் டிஜிபி அலுவலகத்தில் புகார் செய்தோம். கோட்டையில் முதல்வரை சந்திக்க முடியாததால் அவர் செயலரிடம் கடிதம் கொடுத்தோம்.

அதன் பிறகு இதன் வலி அதிகமாக இருந்ததால் நேரடியாக அங்கு சென்றேன். பாதிக்கப்பட்ட வணிகர்கள் எந்த ஊர்காரன், சாதிகாரன் என்பதில் எல்லாம் நாங்கள் கவனம் செலுத்துவது கிடையாது. இப்படியொரு குற்றச்சாட்டை சுமத்துவது ஒட்டுமொத்த வணிகர்களையும்
அவமதிப்பதற்கு சமம்.

மருத்துவமனையில் நேரில் பார்த்த பின் மாநிலத்தில் உள்ள நிர்வாகிகளிடம் கருத்து கேட்டேன். தமிழகம் முழுவதும் எல்லா சமுதாய மக்களும் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். சொல்லப்போனால் நாடார் சமுதாயத்தை விட மற்ற சமூகத்தை சார்ந்தவர்கள்தான் அதிகளவு நிர்வாகிகளாக இருக்கின்றனர்.

அவர்களின் முழு ஆதரவோடுதான் 85% கடைகள் அடைக்கப்பட்டன. இதில் சாதி, சமயம், மதம் என எதுவுமில்லை. மனிதம் என்கிற ஒரே அடிப்படையில்தான் கடை அடைப்பு நடத்தினோம்.

மத்திய அரசும், மாநில அரசும் வியாபாரிகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. உண்மையில் வியாபாரிகள்தான் அரசு இயங்குவதற்கு பல லட்சம் கோடி ரூபாய்களை வரியாக செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை அரசு புரிந்து கொள்ளவேண்டும்!

அன்னம் அரசு