பாதாள உலகின் இளவரசி!
நம்மை இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கேயே சிறிது காலம் தங்கியிருந்ததைப் போன்ற ஓர் அனுபவத்தைத் தருகின்ற படம் ‘Pan’s Labyrinth’. இதுவரைக்கும் வெளியான ஸ்பானிய மொழிப்படங்களில் முக்கியமானது இது. சூரிய ஒளி புக முடியாத பாதாள உலகத்தை ஒரு ராஜா ஆட்சி செய்து வந்தார். அங்கே வசித்து வந்த மக்கள் செல்வ செழிப்புடன், மகிழ்ச்சியாக நீண்ட காலம் வாழ்ந்து வந்தார்கள்.
 ராஜாவுக்கு அழகான ஒரு மகள் இருந்தாள். அவள்தான் அந்த பாதாளத்தின் இளவரசி. பூமியையும், மனிதர்களையும் பார்க்க வேண்டும் என்பது அவள் ஆசை. மகளின் ஆசையை நிராகரிக்கிறார் ராஜா. ஒரு நாள் அரண்மனையின் காவலாளிகளை ஏமாற்றிவிட்டு பூமிக்கு வந்து முதன் முதலாக சூரிய ஒளியைத் தரிசிக்கிறாள். ஆனால், சூரிய ஒளி இளவரசியின் பார்வையைப் பறித்து விடுகிறது. பூமியில் அவளை யாருக்கும் தெரியவில்லை. யாரும் அவளுக்கு உதவ முன் வரவில்லை.
சரியான உணவு, ஓய்வு இல்லாமல் உடல்நிலை பாதிக்கப்படுகிறாள். சில நாட்களில் இறந்தும் விடுகிறாள்.100 வருடங்கள் ஓடிவிடுகின்றன. இறந்துபோன இளவரசியின் ஆன்மா ஸ்பெயினில் வசிக்கும் ஒபிலியா என்ற சிறுமியின் உடலுக்குள் வந்து சேர்கிறது. ஒபிலியா பெரிய புத்தகப் புழு. தேவதை கதைகள் என்றால் அவளுக்கு உயிர். கதையில் சொல்லப் படுவதை எல்லாம் அப்படியே நம்பி வாழ்க்கையில் செயல்படுத்துபவள்.
அவளின் தந்தை ஒரு டெய்லர். யுத்தத்தில் இறந்துபோகிறார். அவளும், அம்மாவும் தனியாக வாழ்ந்துவந்தார்கள். ஓர் ராணுவ அதிகாரிக்கும் ஒபிலியாவின் அம்மாவுக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
புதிய தந்தையை ஒபிலியாவுக்குப் பிடிப்பதில்லை. ராணுவ அதிகாரி ஒபிலியாவையும், அவளின் அம்மாவையும் தன்னுடைய இடத்தில் வந்து தங்கச் சொல்கிறார். அதனால் வலுக்கட்டாயமாக ஒபிலியாவை அந்த இடத்துக்கு அழைத்துச் செல்கிறாள் அம்மா. ஒரு நாள் ஒபிலியாவுக்கு, தான் பூமியின் மகள் அல்ல; பாதாள உலகத்தின் இளவரசி என்று தெரிய வருகிறது.
ஆனால், தான் ஓர் இளவரசி என்று நிரூபிக்க மூன்று கடமையை அவள் நிறைவேற்ற வேண்டும். அதை நிறைவேற்றும் போது உயிருக்கு ஆபத்தும் இருக்கிறது. ஒபிலியா தன் கடமையை நிறைவேற்றி தனக்காக காத்துக்கிடக்கும் தந்தையைச் சந்தித்தாளா... ஒபிலியாவின் அம்மா என்ன ஆனாள் என்பதே மீதிப்படம்.
ஒரு பக்கம் போர். இன்னொரு பக்கம் அமானுஷ்ய கதை. இரண்டையும் இணைக்கும் திரைக்கதை. அற்புதமான ஒளி, ஒலிப்பதிவுகள், அரங்க அமைப்பு, மேக் அப், கிராபிக்ஸ் காட்சிகள், இசை, ஒபிலியாவின் அப்பாவித்தனம் எல்லாம் படத்தை பலமுறை பார்க்க வைக்கும். மூன்று ஆஸ்கர் வென்ற இப்படத்தின் இயக்குநர் டெல் டோரா. இப்போது நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது.
|