திருமணத்தை மீறிய காதல்(கள்)!



ஏதொவொரு தவறான விஷயத்துக்கு அடிமையாகி மனம் போன போக்கில் செல்வதால் வாழ்க்கை எப்படியெல்லாம் திசைமாறும் என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்கிறது ‘அடிக்ட்டேட்’.நல்ல கணவர், இரண்டு குழந்தைகள், மாளிகை போல வீடு என வசதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாள் ஜோ. கலைஞர்களை ஊக்குவிக்கும் ஒரு நிறுவனத்தை நடத்துகிறாள்.

இருந்தாலும் ஜோவுக்குள் ஒரு போதாமை. அவளால் எதிலும் ஈடுபாடு காட்ட முடியவில்லை. காரணம், கணவனுடனான தாம்பத்யத்தில் கிடைக்கும் திருப்தியின்மை. இந்நிலையில் இளம் ஓவியன் ஒருவன் அவளுக்கு அறிமுகமாகிறான். குடும்பத்தை மறந்து அந்த ஓவியன் மீது காதல்கொண்டு படுக்கையையும் பகிர்ந்து கொள்கிறாள்.

ஆரம்பத்தில் இந்த உறவு ஜோவை மகிழ்ச்சிபடுத்துகிறது. நாளடைவில் கணவருக்குத் தெரியாமல் இன்னொருவருடான உறவு ஜோவைக் குற்றவுணர்க்குள் தள்ளுகிறது. அவளின் அமைதி பறிபோகிறது. குடும்பம்தான் முக்கியம் என்று ஓவியனுடன் பிரேக்-அப் செய்துகொள்ள முடிவு செய்கிறாள்.
ஆனால், திரும்பவும் ஓவியன் வீட்டுக்குச் செல்கிறாள். அவள் அங்கே சென்ற நேரம் ஓவியன் இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டிருக்கிறான்.

அதிர்ச்சியடையும் ஜோ நிலைகுலைகிறாள். இதிலிருந்து விடுபடவும் ஆசுவாசம் அடையவும் இன்னொரு நபரைத் தேடிச் செல்கிறாள். அந்த நபருடனும் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறாள். இடையில் ஓவியன் ஜோவைத் தொந்தரவு செய்கிறான். இவையெல்லாம் எதுவும் ஜோவின் கணவருக்குத் தெரிவதில்லை. ஒரு நாள் அந்த புதிய நபர் ஜோவின் வீடு தேடி வந்துவிடுகிறான். அப்போதுதான், தான் அகப்பட்டுக்கொண்டிருக்கும் பிரச்னையின் தீவிரத்தை உணர்கிறாள்.

இரண்டு காதலர்களிடமிருந்து விலகவும், மீண்டும் கணவனுடன் இணையவும் ஆலோசனை வேண்டி ஒரு மன நல மருத்துவரைச் சந்திக்கிறார்.
ஜோவை அந்த மருத்துவர் ‘பாலியல் உணர்வுகளுக்கு அடிமையானவள்’ என்று சொல்கிறார். அத்துடன் ஜோவுக்கும் ஓவியனுக்கும் இடையிலான விஷயம் அவளது கணவருக்குத் தெரிய வர, இருவருக்குமிடையில் விரிசல் ஏற்படுகிறது.

இதற்கிடையில் அந்த ஓவியன் ஜோவைத் தன்னுடன் வந்துவிடுமாறு அழைக்கிறான். இறுதியில் ஜோ மன நல மருத்துவரிடம் தனக்கு குழந்தைப்பருவத்தில் நிகழ்ந்த கொடுமையைச் சொல்கிறாள். ஜோவிற்கு பத்து வயதாக இருந்தபோது மூன்று சிறுவர்கள் ஜோவை பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர். அந்தச் சம்பவம்தான் அவள் பாலியல் உணர்வுக்கு அடிமையானதுக்கு முக்கிய காரணம் என்கிறார் மன நல மருத்துவர். இதிலிருந்து வெளிவந்து இயல்பாக இருக்க முடியும் என்றும் சொல்கிறார்.

பிறகுதான் ஜோ தன் நிலையைப் புரிந்து புது வாழ்க்கையைத் தொடங்க ஆயத்தமாகிறாள். இது பார்வையாளனுக்குள்ளும் நல்ல உணர்வை விதைக்கிறது. 2014ல் வெளியான இப்படத்தின் இயக்குனர் பில்லி வுட்ரப். நெட்பிளிக்ஸில் காணக்கிடைக்கிறது.

தொகுப்பு: த.சக்திவேல்