மோடி மஸ்தான்!‘மோடி மஸ்தான்…’ என்னும் சொல்லை பல ஆண்டுகளாக சர்வ சாதாரணமாக சாமான்ய மக்களும் உச்சரித்து வருகிறார்கள். இச்சொல்லுக்கு என்ன அர்த்தம்..? “மோடி மஸ்தான் என்கிற சொல் தமிழ் அகராதியிலேயே இல்லாத வார்த்தை...” என்று ஆரம்பித்தார் பேராசிரியர் சம்பத்.“கண்கட்டு வித்தைக்காரர்களில் ஒரு வகையினர் மோடி மஸ்தான்.

கிராமப்புறங்களில் ஊருக்குள் வந்து வித்தை காட்டக் கூடிய நாடோடிக் குழுவினர்.தெருக்களில் மந்திரமும் தந்திரமும் கலந்து வித்தை காட்டுகிறவர்களுக்குப் பெயர் மோடி மஸ்தான். ‘பாம்பும் கீரியும் சண்டை போடப் போகிறது பாருங்கள்’ என்று மணிக்கணக்காகச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆனால், கடைசிவரை கீரியும் பாம்பும் சண்டையே போடாது! கூட்டம் சலித்துப் போய் கலைந்து போய்விடுவார்கள்.

அதேபோல் வட்டம் போட்டு ஒரு பொருளை வைத்து எடுக்கும் போது அப்பொருள் காணாமல் போவது... சாட்டையால் தன்னைத் தானே அடிப்பது மாதிரி காட்டிக் கொள்வது… போன்று திறமையாகத் தந்திரம் செய்து விளையாடுபவர்கள்...ஒரே வரியில் சொல்வதென்றால் ‘செய்கிறேன் செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டு எதுவுமே செய்யாமல் ஏமாற்றுபவர்களுக்குப் பெயரே மோடி மஸ்தான்! அவர்கள் காட்டுகின்ற அந்த வித்தைக்குப் பெயர் மோடி வித்தை...” என்கிறார் பேராசிரியர் சம்பத்.

“மோடி என்றால் வித்தை காட்டுவது, மயக்கம் ஏற்படுத்துவது...” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் டி.ஐ.அரவிந்தன்.“மோடி என்கிற சொல்லின் வேர் உருது அல்லது இந்தியிலிருந்து வந்திருக்கலாம். இது மக்கள் மொழியிலும், முறையான மொழியிலும் வழக்கத்தில் உள்ளது. ‘என்ன மோடி வித்தை காட்டுறியா...’ என்று மக்கள் மொழியில் வருகிறது.

முறையான மொழியாக 1955ம் ஆண்டு அனார்கலி என்ற திரைப்படத்தில், ‘ராஜசேகரா... என் மேல் மோடி செய்யலாகுமா…’ என்ற பாடல் வரிகளில் இடம்பெறுகிறது. அதாவது  ‘என்னை நீ மயக்கலாமா’ என்ற அர்த்தம் கொண்டிருக்கும். அதன்பின் எந்தப் பாடலிலும் இந்தச் சொல்லைக் கேட்கவில்லை.‘சொக்குப் பொடி’யை பாசிட்டிவாகவும், ‘மோடி’யை நியூட்ரலாகவும் பார்க்கலாம். ஆனால், மஸ்தான் என்கிற வார்த்தை எப்படி இணைந்தது என்று பார்க்கும் போது, மாஜின் மஸ்தான் என்பவர் சிறந்த மேஜிக்மேன். மஸ்தான் என்பது முஸ்லீம் பெயர்களின் இரண்டாவது பெயர்.

இந்தப் பெயர் ரோட்டில் வித்தை காட்டுபவர்களுக்கெல்லாம் வந்திருக்கிறது. ஆனால், அவர்கள் எல்லோருமே முஸ்லீம்கள் கிடையாது. ஒரு சமூகத்தில் சொற்கள் எவ்வாறு உருவாகிறது என்பதே மோடி (மேஜிக்)தான், அழகான ஓர் விஷயம்தான்...” என்று கூறும் அரவிந்தன், இப்போது இந்த சொல் அரசியலில் பயன்படும் முறையினை விளக்கினார்.

“நம் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒப்பிட்டு இந்தக் கேள்வியைக் கேட்டால், அவர் பெயர் நரேந்திர மோதி! மோடி அல்ல. குஜராத்தில் மோதி என்பதுதான் சரியானது. ஆனால், இங்கு ‘மோடி’ என்றே உச்சரிக்கப்படுகிறது.   

இந்த மோடியும், அந்த மோடியும் ஒன்றல்ல. இந்த மோடி செய்வதை மோடி வித்தை என அரசியல் விமர்சனமாகச் சொல்லலாம். ஆனால், சொல் என்பது வேறு. சொல் ஒரே மாதிரி இருப்பதால் அரசியல் விமர்சனத்திற்குப் பயன்படுத்தக் கூடிய சொல்லாக அது அமைந்துவிட்டது...” என்றார் அரவிந்தன்.  

இன்னும் சிலரிடம் விசாரிக்கும்போது, ஹாஜி மஸ்தானையே மோடி மஸ்தான் என்று கூறுவதாகச் சொல்கிறார்கள்.
யார் இந்த ஹாஜி மஸ்தான்?மும்பை நிழலுலக தாதாக்கள் தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன், சோட்டா ஷகீல் போன்றவர்களுக்கெல்லாம் வரதாபாய் என்ற வரதராஜ முனுசாமி முதலியாரும், ஹாஜி மஸ்தான் என்ற மற்றொரு தமிழரும்தான் முன்னோடிகள்.

ஹாஜி மஸ்தான் ராமநாத புரம் மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்தவர். தென் தமிழகத்தில் தூத்துக்குடியில் பிறந்த வரதராஜ முதலியார், 1960ம் ஆண்டுவாக்கில் விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையத்தில் சாதாரண கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

அதேவேளையில் ஹாஜி மஸ்தான் மும்பை கிராஃபோர்ட் மார்க்கெட்டில் சைக்கிள் கடை வைத்து நடத்தி வந்தார். பின்னர் மும்பை துறைமுகத்தில் போர்ட்டராக வேலைக்கு சேர்ந்தார்.ஹாஜி மஸ்தானும், வரதா பாயும் தமிழர்கள் என்ற வகையில் நெருங்கிய நண்பர்கள். தாராவி, சயான், மாதுங்கா பகுதி களில் உள்ள தமிழ் மக்களிடம் வரதாபாய் ஹீரோவாகவே வலம் வந்தார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து மும்பை துறைமுகத்தையே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். இதனால் கடத்தல் தொழில் மூலம் கோடி கோடியாக பணம்  கொட்டத் தொடங்கியது. இவர்கள் கடத்தல் தொழிலில் கில்லாடிகள். அவர்களது வேலையை கண்கட்டு வித்தையோடு ஒப்பிடு வார்கள். அதனாலேயே ஹாஜி மஸ்தான், மோடி மஸ்தானாக அடையாளம் காணப்பட்டார்.  

ஹாஜி மஸ்தான் பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல்வாதி கள், மும்பையின் பெரும் தொழிலதிபர்கள் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.தங்கம், வெள்ளி மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கடத்தலிலும் ஹாஜி மஸ்தானுக்குப் பணம் கொட்டியது.
கடந்த 2010ம் ஆண்டு அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ‘ஒன்ஸ் அபான் அ டைம் இன் மும்பை’ இந்திப் படம், ஹாஜி மஸ்தான் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

அமிதாப்பச்சன் நடித்த ‘தீவார்’ (இப்படமே ரஜினி நடிப்பில் ‘தீ’ என ரீமேக் ஆனது)திரைப்படமும் மோடி மஸ்தானை மையமாகக் கொண்டு வெளிவந்ததுதான்!

அன்னம் அரசு