வாழ்வதற்கான செலவு குறைவுதான்...அடுத்தவர் மாதிரி வாழ்வதற்கான செலவுதான் அதிகம்!



கேன்சரை ஜெயித்த இயக்குநர் ரமணாவின் கொரோனா கால சிந்தனைகள்...

விஜய் நடிப்பில் ‘திருமலை’, ‘ஆதி’; தனுஷ் நடிப்பில் ‘சுள்ளான்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ரமணா, கடுமையான புற்றுநோயால் தாக்கப்பட்டு தன்னம்பிக்கையுடன் போராடி அதிலிருந்து மீண்டவர். அத்தனை நெருக்கடி தருணங்களையும் விவேகத்துடனும், துணிச்சலாகவும், ஜாக்கிரதையாகவும் தாண்டியவருக்கு இந்த கொரொனா லாக்டவுன் காலம் கற்றுத்தந்தது என்ன..?“கேன்சரின்போது 35 நாட்கள் அப்போலோவில் இருந்தேன்.
வெளியில் என்ன நடக்கிறது எனத் தெரியாமல், வெயில் கூடப் படாமல் இருந்த காலங்கள். மரணத்தின் அசல் முகத்தை எட்டிப் பார்த்த தருணங்கள் அவை. இதில் பாதிக்கப்பட்டது நான்தான். உயிர் பிழைப்பேனா என்பது கூட எனக்கான சுயநலம்தான்.

ஆனால் இப்போது பாதிக்கப்பட்டது உலகம். பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என இதைத் தாண்டி யாரும் பெரிய ஆள் இல்லை எனத் தெரிந்துவிட்டது. மன்னரோ, அதிபரோ யாவரும் இதில் அடக்கம். கிரீடம் வைத்தவரும், நடந்து போகிறவரும், செருப்பு இல்லாதவரும் ஒன்றுதான். இவர்கள் யாரையும் வைரஸுக்கு வித்தியாசப்படுத்தத் தெரியவில்லை.

இயற்கைதான் எல்லோரையும் விட பெரியது என்பதை தெளிவாக நடத்திக் காட்டி விட்டது. நமக்கு இது ஒரு பாடம்.
ஒரு மனிதனுக்கு என்னதான் உண்மையான தேவை? முன்பு காரில் போவது, ஆடம்பர உணவகத்துக்குப் போய் சாப்பிடுவது, ஆடைகள் வாங்குவது, மால்களுக்கு செல்வது என்பதுதான் மனிதனுக்கு வேண்டியதாக இருந்தது.

ஆனால், இருப்பதை வைத்திருப்பதே சிறப்பு என்பதை இந்த லாக் டவுன் உணர்த்திவிட்டது. ஊரோடு ஒத்துவாழ் என்ற பழைய நிரூபணம் உண்மையாகியிருக்கிறது. இந்த ஊரடங்கு விரும்பியோ விரும்பாமலோ எல்லோரையும் சமத்துவப்படுத்திவிட்டது. காலையில் மூன்று இட்லி, மதியம் கொஞ்சம் சாம்பார், ஒரு கூட்டு என நிறுத்திவிட்டது. குடும்பம் சாந்தமாகிவிட்ட புரிதல் நடந்திருக்கிறது.

வாழ்வதற்கான செலவு குறைவுதான். அடுத்தவர் மாதிரி வாழ்வதற்கான செலவுதான் அதிகம் என புரிந்துவிட்டது. நம் குழந்தைகள் இந்த 50 நாட்களில் வாழ்வியல் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். தூக்கி தலைமேல் வைத்து செல்லம் கொடுத்து வளர்த்த குழந்தைகளுக்கு நடப்பு புரிந்திருக்கிறது. மனிதத்தன்மை வெளிவருகிறது. ராவணனிடம் மறைந்திருந்த வீணை வித்வான் மாதிரி, அவனில் அமைந்திருந்த சிறந்த அரசனுக்குரிய குணம் மாதிரி நல்ல அம்சங்கள் வெளிப்பட்டன. ஆண்கள் 50 நாட்களுக்கு மேல் பெண்களின் தாலியறுத்து குடிக்காமல் இருந்தார்கள்.

இனிமேல் சுய ஒழுக்கமும், கட்டுப்பாடும் மட்டுமே நம்மைப் பாதுகாக்கும். எய்ட்ஸ் மாதிரி இந்த கொரோனாவையும் நம் பொறுப்பில் அரசு விட்டுவிட்டது. சுயசிந்தனை, சுயபரிசோதனை இருந்தால் மட்டுமே இனி உயிர்த்திருக்க முடியும். இனி யாரும் எதற்கும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கமுடியாது.

கருப்பு வெள்ளை போய் கலர் வந்தது. கூத்து போய், டிராமா குறைந்து, சினிமா வந்தது. அது கூட இன்று நெட்ஃபிளிக்ஸில் வந்து நின்றுவிட்டது.
இதுதான் யதார்த்தம். இனிமேல் மாற்றங்களுக்கு அஞ்சிக் கொண்டிருக்க முடியாது. நெட்ஃபிளிக்ஸ் வந்துவிட்டால் சினிமா என்னாகும் என்ற கேள்வி எழுகிறது. கூத்து, டிராமா இல்லை என்று இப்பொழுது அழுது கொண்டிருக்க முடியுமா!

இந்த சமயம் இயற்கை தன்னை புதுப்பித்துக் கொள்கிற நேரம். நாம் இப்போது எளிமை நோக்கி நகர வேண்டும். மன்னர் அசோகர், போர் வேண்டாம் என்று சொன்னதாலேயே உயர்ந்தவராகிறார். சித்தார்த்தன், புத்தன் ஆனபிறகே மதிப்பிற்குரியவராகிறார். புரிந்து கொள்ளுங்கள்… இது நாம் மாற்றங்களுக்கு உட்பட்டே ஆகவேண்டிய நேரம்.   

நா.கதிர்வேலன்

ஆ.வின்சென்ட் பால்