லவ் ஸ்டோரி-காதல் என்பது காட்டுப்புலி!இயக்குநர் பிரம்மா - ஐஸ்வர்யா

‘குற்றம் கடிதல்’, ஜோதிகா நடிப்பில் வெளியான ‘மகளிர் மட்டும்’ ஆகியவை மக்களின் நல்லுணர்வுகளை, பிரச்னைகளை தார்மீக நெறியுடன் பேசிய படங்கள். இப்படங்களை இயக்கியவர், தேசிய விருது வரைக்கும் பெற்று கவனம் ஈர்த்த பிரம்மா. தியேட்டர், மைம், வீதி நாடகம் என பல்துறையில் தன்னை ஒப்புக் கொடுத்து புகழ் பெற்ற அவர், தன் காதல் வாழ்க்கையை இடம் பெயர்த்து நமக்கு நகர்த்தித் தருகிறார்.

பிரம்மா

வீட்டில் ஒரு கட்டத்தில் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். பஸ்ஸில், ரயிலில், கூடப்படிக்கிறவர்களிடம் கூட அந்த முகத்தை தேடிக்கொண்டே இருப்போம். யாரோடு சேர்ந்து வாழப்போகிறோம் என்ற தேடல் மிதமிஞ்சிய காலம். கஷ்டப்படுத்தியது, காயப்படுத்தியது, காலிசெய்தது, தெருத் தெருவாக அலையவிட்டதெல்லாம் காதலா என்று இப்பொழுது அறிய முடியவில்லை.

அடுத்து காதலை விடுதலையாக உணர ஆரம்பித்தேன். காதல் என்பது வெறும் பண்ட மாற்றா? எதிர்பார்ப்பா? கூட்டல் கழித்தல் கணக்குதானா?
காதல் பலருக்கும் பரீட்சையாக, சிலருக்குத்தான் அமைகிறது. தேறியவன் திருமணம் செய்கிறான். அதிலும் உடையாமல் குடும்பம் நடத்துகிறவன் காதலைப் பற்றி நம்பிக்கை தருகிறான்.

இந்தப் பெண் ஐஸ்வர்யா என் அலுவலகம் வருகிறார். வந்திருந்த இரண்டு பேரில் ஒருவர் முகம் எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. என்னை முன்தினம் மாப்பிள்ளை பார்க்க வந்த ஒரு குடும்பத்தின் அண்ணனின் அப்பிய சாயல். பார்த்தவுடனே எனக்கு இந்தப் பெண்ணைப் பிடித்துவிட்டது.
அலுவலகத்தில் பார்த்துவிடுவோம் என்பதற்காக கட்டமைத்த காரணத்தைச் சொல்லி தோழியோடு வந்திருக்கிறார். அதனால் பதற்றமும், வெட்கமும், கொஞ்சம் வியர்வையுமாக அழகிய முகம். பிடித்தேவிட்டது. ரிஜிஸ்தரில் பதிந்திருந்த தொலைபேசிக்கான இடத்தில், கூட வந்திருந்த பெண்ணின் இ-மெயில் முகவரி இருக்கிறது.

‘உங்களோடு வந்த பெண்ணிடம் பேச விரும்புகிறேன்’ என விருப்பம் தெரிவிக்கிறேன். மெயிலில் பேச ஆரம்பிக்கிறேன். எங்கள் வீட்டில் ‘மாடசாமி’ ஓகே சொன்னால்தான் கல்யாணம் நடக்கும் என்கிறாள். பார்த்தால் அது அவர்களின் குலதெய்வம்! அந்த தெய்வத்தின் குரலுக்காகக் காத்திருக்க, ஒரு நாள் முதல் தடவையாக ஃபோன் வருகிறது. ‘மாடசாமி சரி சொல்லிட்டார்’ என ஒற்றைக் குரல் உற்சாகமாக ஒலிக்கிறது. அப்புறம் கொஞ்சம் சந்திப்புகள், அன்பில் நனைந்த நீடித்த உரையாடல்கள், பொருள் சேர்க்கும் மௌனங்கள். சமயங்களில் ...ம் ...ம் ...ம் என ஒற்றைச் சொல்லில் உயிர் குடித்த நிமிஷங்கள் எல்லாம் நிகழ்ந்தன.

காதல் வயப்படும்போது அரசுத் தரப்பு வேலை பார்க்க, நிச்சயத்தின்போது கார்ப்பரேட்டில் சேர்ந்திருக்க, கல்யாணத்தின்போது என்ஜிஓவுக்கு வந்திருந்தேன். எல்லாவற்றுக்கும் தலையசைத்த பெருந்தன்மை ஐஸ்வர்யாவுக்கே உரியது. என்னைப் பொறுத்து காதல் ஒரு காட்டுப்புலி. அதைப் பழக்கப்படுத்தியே ஆகவேண்டும். கொஞ்சம் அசந்தால், பிடி மறந்தால் அது எதுவும் செய்யும். ஓங்கி அறைந்து உயிரைக்கூட குடிக்கும்.
காதலைப் பழக்கப்படுத்தி நாம் சொன்னதைக் கேட்க வைக்கும் கட்டாயம் இருக்கிறது. எனது பழைய உறவுகள் இதைக் கற்றுக்கொடுத்தது. இன்னமும் அந்தப் புலியை பழக்கப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன்.

இருவரும் சேர்ந்து ஒருவராகவும்; இருவர் சேர்ந்து இன்னொருவராகவும் ஆக வேண்டியிருக்கிறது. காதலென்பது பாயாசத்தில் முந்திரி மிதப்பதாகாது. அதுவே பசிக்கு உணவாக வேண்டும். பள்ளம் குழிந்துவிடாமல் சமநிலை பாவிக்க வேண்டும். அசலான காதல் சபையேறித் தீருமென உள்மனசு சொல்லுகிறது.

ஐஸ்வர்யா

ஒரு நாள் காலை என்னருகே வந்து ‘நான் சினிமா டைரக்ட் செய்யப் போகிறேன்’ என்கிறார். ‘குற்றம் கடிதல்’ எல்லோராலும் பாராட்டப்பட்டது. தேசிய விருது கையில் கிடைக்க, சார்கிட்ட ‘இவ்வளவு விஷயம் இருக்கா’னு சந்தோஷம் வருகிறது. எங்களுக்குள் சண்டை ஒரு நாளில் முடியாது. ஆனால், அந்த சமயம் எங்களுக்குள் மூன்றாம் நபர் நுழைய அனுமதி இல்லை. வேறு எதற்கும், வேறு எவருக்கும் அங்கே அனுமதியே இல்லை.

எங்களால் வகையாக சண்டையும் போட முடியும். அதே நேரம் பிரியத்தின் தொடுதூர எல்லைக்கும் போக முடியும். குழந்தைகளின் முன்னால் கூட சமயங்களில் சண்டையிட்டு, பிறகு கட்டிப்பிடி வைத்தியம் செய்து, நாங்கள் நாலுபேருமாக அந்த நாளை மகிழ்ச்சியாக்கி இருக்கிறோம்.

ஒரு நாளும் பிரம்மா கடுகு குறையை மலையளவாக ஆக்கியதில்லை. நான்கூட சிலசமயம் என் கோபத்தை நீட்டியிருக்கிறேன். ஆனால், அவர் சின்னச் சின்ன விளையாட்டுக்களைக் கண்டுபிடித்து சமன்படுத்தி விடுவார். இது தோல்வியென்று வாதிட்டால், விட்டுக்கொடுப்பதிலும் வெற்றியுண்டு என்பார்.

பிரம்மா

நான் எப்படி இருக்கிறேனோ அப்படியும்; அவள் எவ்விதமோ அவ்விதமாகவும் நடக்கப் பழகி யிருக்கிறோம். குழந்தைகள் நம்மைப் பார்த்தே வளர்கிறார்கள். நாம் என்ன செய்கிறோமோ அதையே திருப்பிச் செய்கிறார்கள். நாங்கள் சண்டையிட்டால் உடன் அன்பு பாராட்டி விடுகிறோம். எல்லாம் உணர்ந்து அவர்கள் வளர்வதே எங்கள் விருப்பம்.

இப்பொழுது ஒரு நினைவு திரும்புகிறது… ஐஸ்வர்யாவின் பிறந்தநாள் ஒன்றில் நள்ளிரவு அவள் வீட்டிற்குச் செல்கிறேன். கதவைத் திறந்த அவள் அம்மா பதற்றமாகிவிட்டார். அது திருமணத்திற்கு சம்மதம் பெற்றிருந்த நேரந்தான். அவளுக்கு மோதிரம் போட வேண்டும் என்கிறேன். ஐஸ் பாதி தூக்கத்தில் எழுந்து வந்தாலும் உலகத்தின் அத்தனை சந்தோஷங்களையும் கண்களில் தேக்கித் தருகிறாள்.

ஆனால், அம்மாவுக்கு முன்னால் மட்டும் சிறு படபடப்பு. அந்த நாளின் விநோதங்களை இன்னமும் நாங்கள் கைப்பற்றி கையில் வைத்திருக்கத் துடிக்கிறோம். இதயத்தின் பெரிய பாகத்தில் எங்கள் காதலை இறுக்கியும், இளகியும், துடிக்கவும் வைத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தனித்திருக்கிற ஒரே நாளில் இருவரும் அருகில் இல்லை என்பதை உணர்ந்துவிடுகிறோம்.

ஐஸ்வர்யா என்னுள் உயிரியாக இருந்து என் உயர்வுகளில் கூடவே இருந்திருக்கிறாள். இத்தனை பேரில் என் மனம் கொண்டு பார்த்த பெண்
ஐஸ்வர்யாதான். அவளே அற்புதம்... அதியற்புதம்!

செய்தி: நா.கதிர்வேலன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்