தலைப்பில்லாக் கதைகள்...‘‘அப்போ சாய்ங்காலம் போகச் சொல்றீங்களாண்ணே...’’ சாகுல் ஆவல் பீறிடக் கேட்டார். ‘‘ஆமா, இன்னிக்கி சாய்ங்காலம் போய் சம்பளம் பேசி பலசரக்கு சிட்டை எழுதிக் கொடுத்தாச்சுன்னா, நாளைக் காலைல வேலைக்கு போனாப் போதும். மதியச் சாப்பாடுதான...’’ என்றேன். அதற்குள் காதினுள் குறுகுறுப்பு ஓட, போனை அடுத்த காதுக்கு மாற்றிப் பிடித்தேன்.

‘‘வந்திர்ரேண்ணே, சம்பளம் நீங்களே பாத்துப் பேசிவிடுங்க...’’ வாய்ப்பினைத் தவறவிட்டுவிடக் கூடாது என்னும் அவசரம் பேச்சில் தெரிந்தது.
‘‘அதொண்ணும் பிரச்னையில்ல சாகுலு. ஒங்களுக்கும் தெரிஞ்சவங்கதா. ஏற்கனவே அவங்க வீட்ல வேல செஞ்சிருக்கீக...’’ என உற்சாகப்படுத்தினேன்.
‘‘இன்ஷா அல்லாஹ். நல்லவேள, அண்ணெங்கிட்ட ஆயிரம் ரெண்டாயிரம் கைமாத்து வாங்கி ரம்ஜான கழிக்கணுமோன்னு நெனச்சேன். ஆண்டவனாப் பாத்து வழியக் காமிச்சிட்டான். நல்லாருங்கண்ணே!” என்றபடி போன் இணைப்பினைத் துண்டித்தார் சாகுல்.

சாப்பிடுகிற உறங்குகிற நேரம் தவிர முப்பொழுதும் வாடகைப் பாத்திரக் கடையில் ஒன்றாகவே அடைந்து கிடப்போம். காலை ஏழுமணிக்கு கடை திறந்தால் இரவு ஒன்பது மணிவரை அங்கேதான் கிடை. முகூர்த்த நாளில் வேலை இருந்தால் போய்வருவார். அப்போது மட்டும் ஒரு பிரிவு.

ஆனால், இப்போதோ நாற்பது நாட்களாக போனில் பேசக்கூட வாய்க்கவில்லை. இத்தனைக்கும் ஒரே ஊர். கால்மணிப்பொழுது நடந்தால் வீடு. ஊரடங்கு இப்படி உலகத்தையே முடக்கி விட்டதே. கனவிலும் நினையாத ஒரு நிகழ்வு.

வீட்டு வாசல்படியைத் தாண்டவிடாத தொலைக்காட்சியின் அச்சுறுத்தல், தெருமுனையினைக் கடக்கவிடாத இரும்புவேலித் தடுப்புகள், வார்டு பகுதி யைக் கடந்து போக முடியாத காவலர்களின் விசாரணைகள்... மனம் கருகிப் போய்விடுகிறது.இதில் அன்றாட பாடுபார்க்கும் சாகுல் போன்றவர் நிலைமைதான் சொல்லில் அடங்காதது.

‘‘நம்ம மட்டும் என்னவாம், ரிசர்வ் பேங்குல அக்கோண்டு இருக்குதாக்கும்...’’ என்ற சகதர்மிணியின் அங்கலாய்ப்பினை ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது.
‘‘ஏதோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட மாதிரி இந்தமாசம் கடன்காரனுக எல்லாம் அமேதியா இருக்காக. ஒரு கட தெறக்கட்டும் பாருங்க... மொதல்ல ஒங்க சட்டி பொட்டியத்தேந் தூக்க வருவாங்கெ. அன்னைக்கித் தெரியும்...’’

அவள் சொல்வது உண்மைதான் என்றாலும் பேசி என்னவாகப்போகிறது. வரும்போது பார்த்துக்கலாம். இருக்கும் அமைதியைக் குலைக்கும் விதத்தில் பேசவேண்டாமே!எத்தனை நேரம்தான் பதற்றத்திலேயே  வாழ்வது? மெல்ல கீழிறங்கி வந்தேன். கீழே, வீட்டின் சொந்தக்காரரான வாத்தியார் சண்முகம் பால் வாங்கிக் கொண்டிருந்தார்.

‘‘அரசாங்கத்தோட அக்கறைய ஜனங்க புரிஞ்சுக்கவே மாட்டாம கும்பல் கும்பலா குவிஞ்சுகிட்டிருந்தா எப்படி நிலமை சரியாகும்?” முகக் கவசத்தை வீட்டினுள்ளும் பராமரித்தபடி வருத்தப்பட்டு சுமந்த தன் பாரத்தை பக்கத்து வீட்டுக்காரர்களிடம் இறக்கி வைத்தார்.
‘‘வாத்தியார் அய்யாவுக்கு எப்பவுமே கேள்வி கேட்டே பழகீட்டதால அப்பிடித்தேம் பேசுவாரு...’’ அவரது அந்த சமூகக் கவலையை சாதாரணமாகக் கடத்திவிட்ட பால்காரம்மாள் மீது பாய்ந்தார்.

‘‘நா ஒங்களச் சொல்லலம்மா... படிச்சவங்களே அப்பிடித்தான ஹெல்மட், மாஸ்க் எதையும் கடைப்பிடிக்காம சர்ரு புர்ருன்னு வண்டிய எடுத்துகிட்டு பறக்கறாங்களே... நாடு என்னைக்குத்தான் திருந்தப்போவுதோ!”’ பாலை வாங்கி பணத்தை எட்ட நின்று நீட்டினார். இனி கைகால் அலம்பிவிட்டுத்தான் வீட்டினுள் நுழையமுடியும். டீச்சரம்மாள் தன்னைவிட கெட்டி.

‘‘நா வீட்டுக்கு பால் கொண்டுட்டு வராட்டி நீங்க என்வீட்டுக்கு தேடி வந்துதான ஆகணும் சார். இதுபோல எல்லாமே வீட்டு வாசலுக்கு வந்துட்டா இந்தத் தடுப்பு எதுக்கு, இம்பிட்டுப் போலீசு எதுக்கு? அவங்கபாட்டுக்கு ராசாவாட்டம் வீட்டுக்குள்ள ஒக்காந்துக்க மாட்டாங்களா? ரோட்டுக்கு போய் போலீசுகிட்ட பேச்சு வாங்கணும்னு நேத்திக் கடனா அவங்களுக்கு...’’சாதாரணமாகச் சிரித்துக்கொண்டே தெருவைக் கடந்து விட்டார். ஆசிரியரும் இதுகளைத் திருத்தமுடியாது என்பதுபோல தலையில் அடித்துக் கொண்டு சோப்புக்கட்டியை நாடிச் சென்றார்.

உண்மைதானே, பால்காரம்மாள் சொல்வது போல தத்தமது உயிர்மீது அவரவர்களுக்கு அக்கறை இல்லாமல் இருக்குமா!
இரண்டு லாக் டவுன்களுக்கும் அடங்கியிருக்க முடிந்த தம்மால், வந்த வியாபாரத்தைக் கூட தவிர்த்த தம்மால், இப்போது தவிர்க்க முடியவில்லை. ஆள்குறைந்த நேரமாகப் பார்த்து பொருட்களை எடுத்துக் கொடுத்துவர நேர்ந்தது. வாத்தியாருக்குத் தெரிந்தால் கோபிப்பார்.

‘‘அவருக்கென்னாங்க... அரசாங்கச் சம்பளம். ஆடைன்னாலும் கோடைன்னாலும் சிந்தாமச் செதறாம வீட்டத் தேடி வரும். நம்மள்க்கு கடைலபோய் நின்னு பொருள எடுத்துக் கொடுத்து வாங்குனாத்தான காசு. அவரோட எணப்போட முடியுமா?”‘‘அவகளே, சம்பளத்தப் பிடிச்சிடுவாங்களோன்னு போராடிக்கிட்டிருக்காங்க பாவம்...’’‘‘வீட்டுக்கு வாடகையுங் கொடுத்து அவக வாய்க்கும் பயப்பட வேண்டியிருக்கு...’’  என்ன செய்ய... சமூகம் என்பது நாலுபேரையும் உள்ளடக்கியதுதானே. அனுசரித்துப் போகாவிட்டால் சிரமம்தானே.

இதுவரை சொன்னதிலிருந்தே நான் சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுகிற கடை வைத்திருப்பவன் என்பதும், சாகுல் எனது வாடிக்கையாளர் என்பதையும் அறிந்திருப்பீர்கள். ஊரடங்கில் எல்லாமே மதிமயங்கியதுபோல அவ்வப்போது மறந்தும் போய்விடுகிறது.

நேற்றையதினம். எனது கடையின் சொந்தக்காரரது வீட்டில் ஓர் இறப்பு. சாதாரணமானதுதான். அதனால் கடையைத் திறந்து சேர் எடுத்துக்கொடுக்க வேண்டியதாயிற்று. அதற்குமே போலீஸ் பந்தோபஸ்தோடுதான் - போலீசார்கள்தான் எண்ணி அனுப்பினார்கள். அரசு உத்தரவுக்குமேல் ஒரு சேர்கூட கூடுதலாய் எடுக்க அனுமதிக்கவில்லை.

நாளை சம்பந்தக்காரர்கள் காய்ச்சி ஊத்த வேண்டுமாம். சமையல்காரர் ஒருவரை ஏற்பாடு செய்து தரவும் கேட்டுக் கொண்டனர். அதுவும் நல்லதுதான். நான் அனுப்புகிற நபர் நிச்சயம் எனது கடையில்தான் பாத்திரம் எடுக்க வேணும். வேற ஆள் என்றால் அவனுக்கு வேண்டிய கடையில் எடுப்பான். நான் சொல்லிவிடும் நபருக்கு கமிசன் தரவேண்டியதில்லை. நூத்துக்கு இருபது ரூபாய் மிச்சம்.‘‘பிரியாணி போடணும். எண்ணெய் அடிக்கக்குடாது. அதே மாதிரி வர்ர ஆளு தண்ணிபோடக்குடாது...’’கண்டிசன்களோடு பேசினார்கள். ‘‘தண்ணியடிக்கவெல்லாம் முடியாது. ஏழுநூறு ரூவாயாம் கோட்ரு. பிரியாணி சூப்பரா இருக்கணும்...’’ அவர்களே பதிலும் சொல்லிக் கொண்டார்கள்.

இப்போதுதான் பெருங்குழப்பம் வந்தது. ஆறுபேர் கடையில் இருக்கிறார்கள். எல்லோருமே வேலையில்லாமல்தான் கிடக்கிறார்கள். இரண்டுபேரை இணைத்துவிடலாம். ஆனால், ஒராள் போதும் என்கிறார்கள். நாங்களே கைக்கு நிற்கிறோம் என சாதிக்கிறார்கள். எந்த ஒராளை போகச்சொல்வது? யாரைச் சொன்னாலும் மீதமுள்ளவர்களுக்கு எதிரியாக வேண்டும்.  பாலு, முருகன், கோவிந்தன், நாகராசு ஒவ்வொருவராக மனக்கண்ணில் வந்து ‘உள்ளேன் அய்யா’ என்றனர். ஊரடங்கின் நாள் கடக்கக் கடக்க ஆயிரம், ஐந்நூறு, இருநூறு, நூறு வரைக்கும் கடனும் கைமாத்தும் செலவுக்குமென விதவிதமாக கோரிக்கையோடு ஒவ்வொருவராக வீட்டுக்கு வர ஆரம்பித்தனர்.

‘‘ஏண்ணே, நீங்க சமையல் கூலி. ஐயாயிரம் ஆறாயிரம்னு வாங்குற நீங்களே பஞ்சப்பாட்டு பாடுறப்ப ஐநூறு ஆயிரம்னு பில் போடுற எங்ககிட்ட எப்பிடிண்ணே கைமாத்து கேக்கலாம்னு வாரீக...’’ சகதர்மினியின் சாமர்த்தியம் எல்லாம் அவர்களது ஒரு வார்த்தையில் முங்கிப்போகும்.
‘‘நாங்க எங்க சம்பளத்தில பாதிய... ஏன் முழுசையுமே அரசாங்கத்துக்கு வரியா கட்டுறோம்.

அண்ணாச்சி அப்பிடியில்லீல்ல? பொறுப்பா வீடு சேத்துடுறாரு...’’சாகுலின் கோரிக்கைதான் நீளமானதாக இருந்தது. மகளை கலியாணம் செய்து கொடுத்திருக்கிறார். ரம்ஜானுக்கு அழைக்க வேண்டுமாம். ‘‘சித்திரைல திருவிழாபூராம் காலியாகிடுச்சு. வைய்யாசியாச்சும் கைகுடுக்கும்னு பாக்கேன். ரெண்டுவேல. இருவது முப்பதாயிரம் சம்பளம் கிடைக்கும்.

வேலையாள்களுக்குக் குடுத்த மிச்சம் பத்து ரூவாயாச்சும் நிக்கிம்னு நெனச்சேன். ஆனா, அல்லா இப்பிடி சோதிச்சுட்டானேண்ணே... ரெம்ப வேணாம்ணே... ரம்ஜான ஒட்டி ரெண்டாயிரம் மட்டும் ரெடிபண்ணி வைங்க...’’இந்தவேலையை அவருக்கு மாத்திவிட்டால் நம்மை நிர்ப்பந்திக்கமாட்டார் என கணக்குப் போட்டது தவறவில்லை. அவரே இந்தக் கூலியிலேயே சமாளித்து விடுவதாகச் சொன்னதும் நிம்மதியாய் இருந்தது.  சாயங்காலம் நேரில் வைத்து சம்பளம் மட்டும் பேசிவிட்டால் போதும், வேலையை முடித்து வந்து விடுவார்.

மாலையில் நாலேமுக்காலுக்கு கடை உரிமையாளருக்கும் சாகுலுக்கும் போன் செய்து கடைப்பக்கம் வரச் சொன்னேன். கடையில் நிற்கமுடியாது. கடைக்குப் பின்னால் அவர்கள் வீட்டில் நின்று பேசலாம். முகக்கவசம் போட்டுக்கொண்டு வந்தேன். இறப்பு வீட்டில் பந்தலெல்லாம் போடவில்லை. வீட்டின் முன்னால் இரண்டு சமுக்காளம் மட்டும் நிலைப்படிக்கு மேலாக உயர்த்தி கயிறு இழுத்துக் கட்டியிருந்தார்கள். சேர்களை வீட்டுக்குள் அடுக்கி வைத்திருந்தனர்.

தெருவில் சில வயதானவர்கள் மட்டும் கவசத்தோடு திரிந்தனர். வீட்டுக்குள் போக விருப்பமில்லாமல் வெளியிலேயே நின்று கொண்டேன். கடை சொந்தக்காரர் உள்ளே வர நிர்ப்பந்தித்தார். நான் சமையல் ஆள் வரவும் வருவதாகச் சொன்னதும் அனைவரும் ஒரொருத்தராக வெளியில் வரத் துவங்கினர்.

‘‘சம்பளம் பேசிட்டீங்களா?” கடை சொந்தக்காரர் கேட்டார்.
‘‘அதெப்பிடிண்ணே, நீங்கதேம் பேசணும்...’’ என்றேன்.
‘‘சமையல் நல்லாருக்கணும்ணே...’’ அவரது மனைவி.
‘‘நாங் கேரண்டிக்கா...’’
‘‘யாரக் கூப்பிட்டிருக்கீங்க..?’’
‘‘சாகுலு. நம்ம கடைலயே ஒக்காந்துருப்பார்ல..?’’
‘‘அந்த ஒல்லியா இருப்பாரே...’’
‘‘ஆமாக்கா. தாடிக்காரரு...’’

‘‘ஆமா, நம்ம வீட்டுக்கு பால்காச்ச அவரத்தான அனுப்பிச்சு விட்டீக. காளாம் பிரியாணி நல்லா போட்ருந்தாரு. அதேமாதிரி வாழக்காய்ல கோலா உருண்ட சூப்பரா இருந்திச்சு. என்னாங்க..?’’ அகமகிழ்ந்தார்.

‘‘மட்டன் பிரியாணியும் நல்லாருக்கும்க்கா...’’
‘‘பாயா..?” மழித்த முகமும் கரளைபாய்ந்த உடம்பும் வாய்த்த ஒராள் கேட்டார்.
‘‘எந் தம்பிண்ணே. நாளைக்கி இவகதே ஆக்கி ஊத்தறாக...’’ அந்தக்கா அறிமுகப்படுத்தினார்.

‘‘ஆமாங்க தம்பி. நம்ம கடை ஆள்தான்...’’
தெலுங்கில் அக்காவிடம் தம்பி எதுவோ சொன்னான். மாநாடு, டெல்லி என்ற வார்த்தைகள் மட்டும் புரிந்தன. மூவரும் ஒருகணம் மவுனமாயிருந்தனர்.
‘‘வேற ஆளக் கூப்பிடலாம்ண்ணே...’’ என்ற அக்கா, ‘‘கருமாதிக்கு மறுநாள் நெறையா பிரியாணி போட வேண்டியிருக்கும். இப்ப சும்மா இருவது முப்பதுபேர்தான? இங்கன நம்ம வகைல இருந்தா நல்லதுங்கறான்...’’ தயக்கமும் தடுமாற்றமுமாய்ச் சொன்னார். சாகுலிடமிருந்து போன் வந்தது.

கீர்த்தியின் கீர்த்தி!

தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘மிஸ் இண்டியா’ சென்ற ஏப்ரல் 17ல் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும். லாக் டவுனில் எந்தப் படமும் ரிலீஸ் இல்லை என்பதால், கவலையில் ஆழ்ந்த கீர்த்தியை மே 2ம் தேதி மாற்றிவிட்டதாம். ‘‘யெஸ். மே மாசம் ரெண்டாம் தேதி என் கேரியரில் முக்கியமான நாள். என் வாழ்க்கையை மாற்றிய தினம் அது. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அந்த நாள்லதான் ‘நடிகையர் திலகம்’ ரிலீஸ் ஆச்சு. மே 2ம் தேதினாலே இப்ப சிலிர்க்குது...’’ என புல்லரிக்கிறார் கீர்த்தி.

பூங்குழலி!

கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வர ரெடியாகிவிட்டார் மல்லுவுட் ஐஸ்வர்யா லட்சுமி. ‘ஆக்‌ஷனி’ல் அசத்தியவர். தமிழில் அடுத்து ‘பொன்னியின் செல்வன்’, ‘ஜகமே தந்திரம்’ என கெத்து காட்டும் பொண்ணு.

மாடலிங்கில் இருந்து சினிமாவிற்கு வந்த இந்த சில் பேபிக்கு விதவிதமான குக்கீஸ் சாப்பிடுவதும் தூங்காமல் டிவி பார்ப்பதும் இஷ்டமாம். இன்னொரு முக்கியமான நியூஸ். ‘பொன்னியின் செல்வனி’ல் பூங்குழலியாக வரப்போகும் ஐஸ், இப்போது பாடகியாகும் ஐடியாவில் பாடல்களை பாட ஆரம்பித்திருக்கிறார்!

ம.காமுத்துரை