நியூஸ் நூடுல்ஸ்!சமீப நாட்களில் ஸ்பானிய பத்திரிகைகளில் தவறாமல் இடம்பெறுகிற ஒரு பெயர் மரியா ப்ரான்யாஸ். அமெரிக்காவில் பிறந்த மரியா முதல் உலகப்போரின்போது படகு வழியாக ஸ்பெயினில் குடும்பத்துடன் குடியேறினார்.
ஸ்பானிஷ் ப்ளூ கொள்ளை நோய், உள் நாட்டுப் போர் என பல அபாயங்களைக் கடந்த மரியாவை கொரோனா வைரஸ் தாக்கியது. ஆனால், பூரண நலமடைந்துவிட்டார். இதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த உலகின் அதிக வயதானவர் என்ற பட்டத்தை தட்டியிருக்கிறார் மரியா. இவரது வயது 113.

உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபா, இப்போது உலகின் உயரமான நன்கொடை பெட்டி என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.
லாக் டவுன் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பலர் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் பசியைப் போக்குவதற்காக புர்ஜ் கலிஃபா நன்கொடை பெட்டியாக மாறியிருக்கிறது.

இக்கட்டடத்தின் வெளியே 12 லட்சம் அலங்கார மின் விளக்குகள் உள்ளன. ஒரு விளக்கின் விலை ரூ.200. இந்த விளக்குகளை விற்று 12 லட்சம் பேருக்கு உணவு வழங்கியிருக்கிறார்கள். விற்கப்பட்ட விளக்குகள் கழட்டி எடுக்கப்படாது. அவை, வாங்கியவர்களின் நினைவாக அங்கேயே ஒளிரும்.

இன்ஸ்டாகிராமில் கோப் பதிவிடும் ஒவ்வொரு சமையல் குறிப்பு வீடியோவும் லட்சங்களில் லைக்குகளை அள்ளி வைரலாகின்றன. அம்மாவின் துணையோடு பான் கேக், பீட்சா, குக்கீஸ் என ரெசிபிகளைப் பறக்கவிட்டு அசரடிக்கிறான் கோப். கடந்த பிப்ரவரி இறுதியில்தான் இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கியிருக்கான். இரண்டு மாதங்களிலேயே 5 லட்சம் ஃபாலோயர்கள். இத்தனைக்கும் கோப்பின் வயது 1. ‘‘ரெசிபிகளை கோப் விளக்கும் விதம் கொள்ளையழகு...’’ என கமெண்டுகள் குவிகின்றன.

கடந்த வாரம் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. பிரேசிலைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரோட்ரிகோ நடத்திய இசை நிகழ்ச்சிதான் அன்னையர் தின ஸ்பெஷல். மக்கள் கூடுவதற்கு தடையிருப்பதால் மேடை அமைத்து இசை நிகழ்வை நடத்த முடியாத சூழல். மேடை போல ஒரு டிரக் வண்டியை வடிவமைத்து அதில் சாவோ பாவ்லோ நகர் சாலைகளில் பயணித்துக்கொண்டே பியானோவை மீட்டியிருக்கிறார் ரோட்ரிகோ.
அவரது வித்தியாசமான இந்த முயற்சி பாராட்டுகளை அள்ளியிருக்கிறது.

மலேசியாவைச் சேர்ந்த பள்ளி மாணவி நூர் ஆஃபியாவுக்கு வயது 9. கொரோனோ நோயாளிக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்
களுக்கும் தகுந்த பாதுகாப்பு உடையைத் தைக்க தன்னார்வலர்களைத் தேடியது ஒரு மருத்துவமனை. உடனே தன்னார்வலராக இணைத்துக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு கவுன்களைத் தைத்துக்கொடுத்திருக்கிறார் நூர். ஐந்து வயதிலேயே தையல் கற்று விட்டார் நூர். ரமலான் நோன்புக்கு மத்தியில் நூர் செய்த சேவை வைரலாகிவிட்டது.

இன்று உலகம் முழுவதும் ஒர்க் ஃப்ரம் ஹோம் ஒரு கலாசாரம் போலவே மாறிவிட்டது. இந்நிலையில் டுவிட்டர் நிறுவனம் வீட்டிலிருந்தே வேலை செய்வதை நிரந்தரமாக்கியுள்ளது. டுவிட்டர் நினைத்ததைவிட பெரிய அளவில் ஒர்க் ஃப்ரம் ஹோம் வெற்றியடைந்ததே இதற்குக் காரணம். அதன் தலைமைச் செயல் அதிகாரியான ஜாக் டோர்ஸி இந்த ஆச்சர்ய தகவலை ஊழியர்களுக்கு பர்சனலாக இ-மெயிலில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த நாற்பது வருடங்களில் முதல் முறையாக கார்பன் வாயு வெளியேற்றம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு லாக்டவுன் முக்கிய காரணம் என்றாலும் கொரோனா வைரஸ் தாக்குதல் ஆரம்பிப்பதற்கு முன்பே குறைந்துவிட்ட மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாடு இன்னொரு காரணம். மார்ச்சில் 15 சதவீதம் குறைந்த கார்பன் வெளியேற்றம் ஏப்ரலில் 30 சதவீதமாகக் குறைந்துள்ளது.

உங்களின் சொந்தங்களுக்கு கிஃப்ட்டாகக் கொடுக்க நல்ல சாய்ஸ் இந்த 5 இன் 1. இந்தப் பேனாவை டார்ச்லைட்டாகவும், காந்தமாகவும், லேசராகவும், பாயின்ட்டராகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் எழுதுவதும் நன்றாக இருக்கிறது. அழகான வடிவமைப்பு இதன் ஹைலைட். மூன்று மாதங்களுக்கு உத்தரவாதம் உண்டு.

கலிபோர்னியாவை கலக்கிக் கொண்டிருக்கும் நிகழ்வு இது. எப்போதும் வாகன நெரிசல் உள்ள சாலை அது. ஆனால், லாக்டவுன் காரணமாக வெறிச்சோடிக் கிடந்தது. அந்த சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் படையாக நடந்துசென்ற காட்சி கலிபோர்னியா எங்கும் பேசுபொருள் ஆகிவிட்டது. கொரோனா காலத்தில் நிகழ்ந்த அதிசயம் என்று அமெரிக்கர்கள் இந்நிகழ்வை இணையத்தில் பகிர்கின்றனர். கடந்த வாரம் துருக்கி சாலையில் செம்மறி ஆடுகள் கூட்டமாகச் சென்றது ஹிட் அடித்தது.

ஒர்க் ஃப்ரம் ஹோம் போல ‘டிரிங் அட் ஹோம்’தான் ஜப்பானில் புது டிரெண்ட். ஜப்பானியர்கள் வீட்டிலிருந்தே மது அருந்துவதை சக நண்பர்களுடன் வீடியோ சாட் மூலம் பகிர்ந்துகொள்கின்றனர். இந்த விர்ச்சுவல் பார்ட்டிக்காகவே ‘டான்காம்’ என்ற வீடியோ பிளாட்பார்மை உருவாக்கியிருக்கிறார்கள். இப்போது 24 லட்சம் பேர் இதைப் பயன்படுத்தி விர்ச்சுவல் பார்ட்டியைக் கொண்டாடி வருகின்றனர்.

மனம் உடைந்து போன உமர் தந்தையிடம் நடந்ததை சொல்லியிருக்கிறான். தந்தையோ இதில் தலையிட விரும்பாமல் ‘‘போலீஸில் சொல்லு...’’ என்று உமருக்கு அறிவுரை கூறியிருக்கிறார். ‘‘என்னுடன் யாருமே விளையாட வர மாட்டேங்கிறாங்க. கிண்டல் செய்றாங்க...’’ என்று ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதி அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் தொடர்ந்திருக்கிறான் உமர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகளான உமேஷும் நிராஷும் உமரின் வீட்டுக்கு வந்து சிறுமி களிடம் பஞ்சாயத்து செய்து, ‘‘உமரைக்
கிண்டல் செய்யக்கூடாது; விளையாட்டில் சேர்த்துக்க வேண்டும்...’’ என்று சொல்லியிருக்கிறார்கள்!‘‘உமர் எங்கள் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றுவது எங்களது கடமை. அப்போதுதான் அவனுக்கு எதிர்காலத்தில் காவல்துறையின் மீது நம்பிக்கை வரும்!’’ என்கிறார் காவல்துறை அதிகாரியான உமேஷ்.

கேரளாவை அதிரவைத்த வழக்கு

உமர் என்ற எட்டு வயது சிறுவன் தொடுத்த வழக்குதான் இப்போது கேரளாவில் ஹாட் டாக். பள்ளி இன்னும் திறக்கவில்லை என்பதால் வீட்டிலேயே இருந்த உமருக்கு சலிப்பு தட்டியிருக்கிறது. லுடோ, பேட்மின்டன், திருடன் போலீஸ் விளையாடலாம் என்று தனது சகோரியிடமும் பக்கத்து வீட்டுச் சிறுமிகளிடமும் கேட்டிருக்கிறான். எல்லோருமே அவனுடன் விளையாட மறுத்துவிட்டார்கள். அத்துடன் அவர்கள் உமரைக் கிண்டல் செய்திருக்கின்றனர்.

தொகுப்பு: த.சக்திவேல்