எங்கே எதைப் பாத்தாலும் மனசு அதுக்குள்ள ஃப்ரேமையும் லைட்டிங்கையும் தேடி அலையும்...



ஒளிப்பதிவாளர் கோபிநாத்

‘‘ஒளிப்பதிவாளன்னா அவ்வளவு பொறுப்பு இருக்கு. வெளிச்சத்தையும், இருட்டையும் சொன்னபடி ஆட்டுவிக்கணும். கதையோட கையைப்
பிடிச்சுக்கிட்டு நடக்கணும். காலையில 10 மணிக்கு சர்ச் பக்கம் போய் பாருங்க... நீளமாக வெயில் விழுந்து, சோகமா ஒரு நிழல் படிஞ்சு மனசை அப்படியே அமைதியாக்கும். அதையே ஈவ்னிங் பாத்திங்கன்னா ஒரு அம்பது, நூறு மெழுகுவர்த்திகள் தகதகனு தங்கமும் மஞ்சளுமா ஒரு கலரை இறைச்சு மனசை என்னவோ பண்ணிடும்.

ஒரே இடம்தான். ஆனா, மனசை இப்படியெல்லாம் பாதிக்கிறது எது? அப்படி ஒவ்வொரு ஃப்ரேமும் ஓர் உணர்வைத் தரணும். அப்பறம் ஒரு கேமராமேன் ஸ்க்ரிப்ட்ல ட்ராவல் பண்ணனும். சும்மா ஸ்பாட்டுக்குப் போனோமா, லைட்டை வெச்சோமான்னு பண்ணிட்டு வந்தா அது சரியில்ல. நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி இந்த மக்களோட வாழ்க்கையைத் தெரிஞ்சிக்க நிறைய படிச்சேன்.

அவங்களோட பழகினேன். எதுவொன்றுக்கும் இந்த வாழ்க்கையில ரெஃபரென்ஸ் இருக்கு. இங்க ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. இப்பத்தான் ஓர் ஆளு கூட நடமாட முடியாம கொரோனா இருக்கே. முன்னாடி யெல்லாம் ரயில் வந்து நின்னா, ஆயிரக்கணக்கா தபதபன்னு எறங்கி வருவாங்க. அந்தப் பக்கம் ஆயிரக்கணக்கா திமுதிமுன்னு அதே ரயிலை பிடிக்கப் போவாங்க.

ஒரு ரயிலு, ஒரு பயணம், ஆயிரக்கணக்கான வாழ்க்கை, ஆயிரக் கணக்கான எமோஷன்ஸ்... இதை வெச்சே ஆயிரமாயிரம் கதை பிடிக்கலாம்...” அருமையாகப் பேசுகிறார் ஒளிப்பதிவாளர் கோபிநாத். ‘தில்’, ’தூள்’, ‘கில்லி’ என கடந்து இப்போது ‘தடம்’ வரைக்கும் முத்திரை பதித்தவர். பாரம்பரிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து சினிமாவுக்கு வந்ததெப்படி?

சின்ன வயதிலேயே சினிமா பார்க்க ஆசை. சினிமாவிற்கான எந்த அடையாளமும் இல்லாத குடும்பம். சினிமாவிற்குள் என்னைப் பார்க்கிற துடிப்பு, உள்ளுக்குள்ளேயே இருந்தது. பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலச்சந்தர் படங்கள் பாத்துட்டு, நிவாஸ், பாலு, லோகநாத்னு கேமராமேன்கள் பத்தியே பேசுவோம்.

சித்தப்பா வச்சிருந்த ஸ்டில் கேமரா எனக்கு அரிய பொருள். எங்கே எதைப் பாத்தாலும் மனசு அதுக்குள்ளே ஃப்ரேமையும் லைட்டிங்கையும் தேடி அலையும். நண்பர்கள்  ‘நல்லா எடுத்திருக்கே'ன்னு சொன்னப்போ, உள்ளுக்குள்ள சின்னதா ஒரு பிடிமானம் கூடும்.
+2 முடிச்சதும் திரைப்படக் கல்லூரியில சேரப்போறேன்னு சொன்னா இவ்வளவு விவசாயத்தையும் யாரு பார்க்கிறதுன்னு வீட்டுல பெரிய எதிர்ப்பு. விவசாயமும் படிப்புமா இருக்கிற குடும்பத்துல யாருக்கும் சினிமா பிடிக்கல. அவங்க விருப்பத்துக்கு கொஞ்ச நாள் இருந்துட்டு சென்னை வந்துட்டேன். ‘இதுதான் சினிமா'ன்னு புரிஞ்ச இடம் இங்கதான்.

நீங்களும் இயக்குநர் தரணியும் அமைத்த கூட்டு அருமையானது...ஆச்சரியம் என்னன்னா எனக்கு அவரை ‘தில்’ பண்றதுக்கு முன்னாடி வரை தெரியாது! அந்தப் படத்தை பாலசுப்ரமணியெம்தான் செய்வதாக இருந்தது. வேறு ஒரு பட வேலையால் என்னை தரணியைப் பார்க்கச் செல்லுமாறு நண்பர் பாலு சொன்னார்.

அப்படி போய்ப் பார்த்ததுதான். ஏதோ கடவுள் பந்தம் மாதிரி அவரோடு சேர்ந்து பயணிக்க வாய்ப்பு வந்தது. அவரை ‘அண்ணா’ன்னு அன்போடு அழைப்பேன். எனக்கொரு சரியான இடத்தைக் கொடுத்ததில் அவரோட படங்களூக்கு பெரிய இடம் உண்டு. அவரோட மனசறிந்து வெற்றிக்காக உழைச்சிருக்கேன் என்பதில் எனக்கு பெரிய சந்தோஷம்.

விஜய் கூட சேர்ந்தா மாதிரி மூன்று படங்கள் செய்திருக்கீங்க...

நான் அப்படி ஒரு தொழில்முறை நடிகரைப் பார்த்ததே இல்லை. ஸ்க்ரிப்டை ஒருமுறைக்கு இருமுறை தெரிஞ்சு, அறிஞ்சு, விளக்கங்கள் கேட்டு முடித்துவிட்டால் அப்படியே டைரக்டர் கைக்குச் சேர்ந்து விடுவார். பயங்கர பர்ஃபெக்ட். மரியாதை ஓர் இடத்தில்கூட நழுவாது. டைமிங்கில் எப்போதும் அசத்துவார்.

நான் முதல் ஆளாய் ஸ்பாட்டுக்கு போனால் அடுத்த அஞ்சு நிமிடத்தில் அங்கு வந்து நிற்பார். இல்லாவிட்டால் நான் போகும் முன்பே அங்கு உட்காந்திருப்பார். ‘கில்லி’ பாடல்கள் எல்லாம் அசால்ட்டான ஆட்டம் மாதிரி தெரியும். ஆனால், கடுமையான உழைப்பையே லைட்டா தெரிகிற மாதிரி செய்து விடுவார். ஆச்சரியம் என்னன்னா அது இன்னும் குறையவேயில்லை என்பதுதான்!

‘தடம்’ படத்தில் ஒளிப்பதிவு புதிதாக இருந்தது...

மகிழ் திருமேனியோடு ‘முன்தினம் பார்த்தேனே’ செய்திருக்க வேண்டியது. முடியவில்லை. அப்புறம் செய்ததுதான் ‘தடம்’. எனக்கான இடங்கள் நிறைய இருந்தது. கதையை எந்தளவு உணர்ந்திருக்கோம்னு ஒளிப்பதிவுதான் காட்டும். அதற்கெல்லாம் நிறைய இடங்கள் அதில் இருந்தது. அருண் விஜய் தன் நடிப்பில் நல்ல இடங்களைத் தொட்டு வருகிறார். இப்போ ஜி.என்.ஆர்.குமரவேலனோட ‘சினம்’, சசிகுமார் நடிக்கும் ‘பரமகுரு’னு இரண்டு படங்கள் போய்க் கொண்டிருக்கிறது.

வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தா என்ன தோணுது..?

நான் எப்பவுமே அவ்வளவு அதிகமாக திரும்பிப் பார்க்கிறதில்லை. வேணும்னா ஞாபகத்துல வெச்சுக்கலாம். வண்டி ஓட்டிட்டு போகும் போது திரும்பிப் பார்த்தா முன்னால் போன பயணம் கெட்டுப் போய்டும். எனக்கு நான் செல்லுகிற பாதையும் முக்கியம். இந்த வாழ்க்கை எனக்கு தொடர்ந்து ஆச்சரியங்களைத் தந்துக்கிட்டே இருக்கு. இப்பவும் வெற்றியின் ரகசியம் என்னாங்கிற கேள்விக்கு யாராலும் ஒரு வார்த்தையில பதில் சொல்ல முடியலை.

நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு விபத்துல சிக்கினேன். உடைஞ்சு போக வேண்டிய மனைவி மேனகா என்னை அப்படியே உள்ளங்கையில் தாங்கி காப்பாற்றிக் கொடுத்தார். குழந்தைகள் வீரசோழனும் கரிகால்சோழனும் என்னை ஒவ்வொரு சமயமும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். வீட்டிற்குப் போனால் மூவரும் அன்பு செய்யக் காத்திருப்பது எனக்கான பலம்!

செய்தி:நா.கதிர்வேலன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்