உலகை உலுக்கிய உயிர் கொல்லிநோய்கள்!



மினி தொடர் 1

இன்று உலகமே கொரோனா என்ற கொடூரமான தொற்றுநோய்க்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறது. சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய இந்நோய் இப்போது நூற்று எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் நரவேட்டையில் இறங்கியுள்ளது. உலகம் முழுதும் சுமார் இரண்டரை லட்சம் பேரை பாதித்துள்ள இந்நோய் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கியுள்ளது.

இந்தியப் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் பேசும்போது ‘இரண்டு உலகப் போர்கள் பாதித்த நாடுகளை விடவும் கொரோனா பாதித்த நாடுகளின் எண்ணிக்கை அதிகம்...’ என்றார். உலகத் தலைவர்கள் பலரும் இது ஒரு போர்க்காலச் சூழல் என்பதைப் போன்ற கருத்தை வெளியிட்டு வருகிறார்கள்.
இவர்கள் தம்மையும் அறியாமல் வெளிப்படுத்தும் வரலாற்று உண்மை ஒன்றுள்ளது. ஆம். போர் என்ற உண்மைதான் அது.

இது போர்தான். ஆனால், மனிதரோடு மனிதர் மோதும் போரல்ல. மனிதரை மனிதர் கொன்றொழிக்கும் போரல்ல. கண்ணுக்குத் தெரியாத ஒரு மர்ம நபருடன், இயற்கையுடன், நுண்ணுயிருடன் மனிதர் நிகழ்த்தும் போர். இந்தப் போருக்கு பல லட்சம் ஆண்டுகள் வரலாறு உள்ளது. இன்று நேற்று அல்ல... மனிதர்கள் அரைக் குரங்காகச் சுற்றிக்கொண்டிருந்த நாட்கள் முதலே, கண்ணுக்குத் தெரியாத எதிரியுடனான இந்தப் போரில் ஈடுபட்டு, வென்றும் தோற்றுமிருக்கிறார்கள்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நுண்ணுயிர் கிருமி மனிதக் கூட்டத்துக்குள் இறங்கி நரவேட்டையாடி வந்திருக்கிறது. அப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் லட்சக்கணக்கான தம் சகோதர, சகோதரிகளை இழந்துதான் நம்மை இந்த பூமிக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். ஒரு கொள்ளை நோய், அது உருவாகும் காலத்தில் சர்வ சாதாரணமாக ஒரு தேசத்தின் அல்லது இனத்தின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களை அழித்து கபளீகரம் செய்துவிட்டுப் போகும்.

எஞ்சியவர்கள் பிழைத்து தம் சந்ததிகளை வளர்த்ததில்தான் நாம் இன்றிருக்கிறோம். கிட்டதட்ட போன நூற்றாண்டின் தொடக்கம் வரைக்குமே நுண்ணுயிர்களுக்கும் மனிதர்களுக்குமான இந்தப் போரில் எதிரிகளின் கையே ஓங்கி வந்திருக்கிறது. கடந்த நூற்றாண்டில் உருவான ஸ்பானிஷ் ஃப்ளூ என்ற மர்மக் காய்ச்சல்கூட ஒரு கோடிப் பேரைக் கொன்று ருத்ரதாண்டவம் ஆடிவிட்டுத்தான் போனது. அப்போது உலகின் மக்கள் தொகை நூற்றுச் சொச்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவம் வளரத் தொடங்கிவிட்ட சென்ற நூற்றாண்டிலேயே இந்தக் கதி என்றால் மனிதர்களுக்கு அறிவே சமைந்திராத வரலாற்றுக்கு முற்பட்ட அரைக் குரங்கு காலகட்டத்தில் இந்தக் கிருமிகளின் ஆட்டம் எப்படி இருந்திருக்கும் என யோசித்துப் பாருங்கள்.

ஆதிமனிதனுக்கு திடீரென தங்கள் சகமனிதர்கள் ஏன் இறக்கிறார்கள் என்றே புரிந்திருக்காது. அப்படி இறந்தவர்கள் உயிரோடு இருப்பவர்களுக்கும் தொற்றுக்களை அனுப்பி அவர்களின் மரணத்துக்கும் காரணமாகிறார்கள் என்கிற உண்மையும் தெரிந்திருக்காது. கடவுளின் கோபம், இயற்கையின் சாபம் என்று எதையாவது கற்பனை செய்துகொண்டு கலங்கி நின்றிருப்பார்கள் முற்கால மனிதர்கள். அதற்கு முந்தைய மனிதர்களான வாலில்லா குரங்களுகளுக்கு அதுவும்கூட புரிந்திருக்காது. ஏனென்று புரியாமலே கொத்துக் கொத்தாக செத்துப் போயிருப்பார்கள்.

ஆதி மனிதர்களில் ஓர் இனத்துக்கு நோய்த் தொற்றுப் பரவியதும் அங்கு கொத்துக் கொத்தாக மரணங்கள் நிகழ்ந்திருக்கும். அசந்தர்ப்பமாகவோ, தேவையின் நிமித்தமோ அந்த இனத்தை சந்திக்க நேர்ந்த இன்னொரு இனத்துக்கும் அந்தத் தொற்றுப் பரவி காவு வாங்கத் தொடங்கிஇருக்கும்.
அந்த இனம்தான் தங்களுக்கு மரணத்தைக் கொண்டுவருகிறது என்று புரிந்துகொண்டு, நோய் பாதித்த இனத்தை இந்த இனம் மிருகத்தனமாக சண்டையிட்டுக் கொன்றிருக்கும்.

இந்தப் போராலும் நோய் தொற்றாலும் பாதிக்கப்பட்ட இனம் நோய் மீண்டு திரும்பியதும் தம்மைக் கொன்ற இனத்தின் மேல் தீராத வெஞ்சினம் கொண்டு பழிவாங்கப் புறப்பட்டிருக்கும். மீண்டும் ஒரு ரத்த ஆறு. இப்படித்தான் இன ஒதுக்கல்கள் நடந்தன. இனங்களுக்கு இடையிலான வெறுப்பும் பகையும் வளர்ந்தன. இப்படித்தான் கண்ணுக்குத் தெரியாத நம் நுண்ணிய எதிரி, மனிதர்களை மனிதர்களோடு மோதவிட்டு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவர்களை நரவேட்டையாடி அவர்கள் உடலிலேயே சவாரி செய்து வந்திருக்கிறது.

இன்று நாம் வளர்ந்துவிட்டோம். கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய எதிரிகள் யார் யார் என்று நுண்ணோக்கி கொண்டு காணும் ஆற்றல் பெற்றுவிட்டோம். எதிரிகளை எப்படி முறியடிப்பது, எதிரிகளுக்கு எதிரான போர் வியூகங்களை எப்படி வகுப்பது, எதிரிகளின் தாக்குதல் முறை என்னென்ன என்பதை எல்லாம் நாம் துல்லியமாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய எதிரியுடனான பல லட்சக்கணக்கான ஆண்டுப் போரில் இன்று நம் கை ஓங்கியிருக்கிறது.

இந்தப் போரை நாம் ஓரளவு நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம்.பொதுவாக, கொள்ளை நோய் என்பதும் தொற்றுநோய் என்பதும் ஒன்றுதான். ஆனால், எல்லா தொற்றுநோய்களும் கொள்ளை நோய்கள் அல்ல. உதாரணமாக சாதாரண சளி ஒரு தொற்றுநோய்தான். ஆனால், அதனால் உயிருக்கு ஆபத்தில்லை என்பதால் அது கொள்ளை நோய் அல்ல. டைப்பாய்டு காய்ச்சல், காலரா, யானைக்கால் நோய் போன்றவையும் தொற்று நோய்கள்தான். ஒரு காலத்தில் கொள்ளை நோயாக இருந்து கொத்து கொத்தாக மனிதர்களைக் கொன்றிருந்தாலும் இவை எல்லாம் இன்று கட்டுப்படுத்தக்கூடியவை.
பாம்புக்குப் பல்லைப் பிடுங்கி மண் புழுவாக்கியது போல் மனிதகுலம் இந்தக் கொடூர நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்து இக்கொள்ளை நோய்களை வெறும் தொற்று நோய்களாக்கிவிட்டது.

ஆங்கிலத்தில் எபிடெமிக் (Epidemic) என்ற கலைச் சொல் உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது பிராந்தியத்தில் உருவாகும் தொற்று நோயைக் குறிக்கும். இந்தத் தொற்று அந்த தேச அல்லது பிராந்திய, இன எல்லைகளைக் கடந்து இன்னொரு எல்லைக்குள் நுழையும் கணம் அவை பேண்டெமிக் (Pandemic) என்ற நிலையை அடையும். அப்படி வரலாற்றில் நிகழ்ந்த சில பேண்டெமிக்களை பார்ப்போம்.ஆவணப்படுத்தப்பட்ட முதல் கொள்ளை நோய் என்றால் அது கிரீஸில் உருவான ஏதென்ஸ் ப்ளேக் என்ற மர்ம நோய்தான்.

அந்நாட்களில் ப்ளேக் என்ற சொல், காரணம் அறிய முடியாத நோய்களுக்கான பொதுப் பெயராகவே இருந்தது. பெலோபோனேசியப் போரின் இரண்டாம் ஆண்டில் ஒரு புயல் போல் ஏதென்ஸ் ப்ளேக், ஏதென்சுக்குள் நுழைந்தது. லிபியா, எத்தியோப்பியா, எகிப்து ஆகிய தேசங்களின் எல்லைகளைத் தாண்டிக் கொண்டு ஏதென்ஸின் சுவர்களைத் துளைத்து இது நுழைந்தது என்கிறார் தூசிடைடட்ஸ் என்ற கிரேக்க அறிஞர்.
ஸ்பார்டன்கள் ஏதென்சியர்களை வெற்றி கண்ட நேரத்தில் இந்தக் கொள்ளைநோய் பரவியது.

திடீர் காய்ச்சல், உடல்வலி, தீராத தாகம், புண்ணான தொண்டை மற்றும் நாவுகள், சிவந்த தோலோடு பல லட்சக்கணக்கான மக்கள் வாடினார்கள்.
சுமார் ஒரு லட்சம் பேரைக் காவு வாங்கியது இந்தக் கொடூர நோய். அந்நாளின் மொத்த ஏதென்ஸ் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு இது.
சரி, ஏதென்சை இப்படிப் புரட்டி எடுத்த அந்த மர்ம நோய் என்ன என்று தெரிந்தால் உங்கள் உதட்டில் புன்னகை அமரக்கூடும். இதற்கா இப்படி டரியலானிங்க என்று தோன்றும்.

ஆமாம்! டைஃபாய்டு காய்ச்சல்தான் அது. அன்றைய வரலாற்றாசிரியர்கள் இந்த நோயின் அறிகுறிகள் எனச் சொல்லும் விஷயங்களையும், அந்நாளைய எலும்புக்கூடுகளின் புதைபடிவங்களையும் ஆராய்ந்த விஞ்ஞானிகள் அநேகமாக அது டைஃபாய்டு காய்ச்சலாக இருக்கலாம் என்கிறார்கள். டைப்பஸ், வைரல் காய்ச்சல் போன்றவையாகவும் இருக்கலாம் என்கிறார்கள் சிலர்.

தொழில்நுட்பத்தின் உதவியால் டைஃபாய்டு போன்ற நோயை வென்றிருக்கும் நமக்கு வேண்டுமானால் இன்று அது புன்னகையை வரவைக்கும் பிரச்னையாக இருக்கலாம். எந்த மருத்துவ முன்னேற்றமும் இல்லாத அந்நாட்களில் அது கொடூரமான நோய். நம் முன்னோர்கள் கண்ணுக்குத் தெரியாத அந்தக் கிருமியுடன் எப்படிப் போராடித் தோற்றார்கள் என்பதன் ரத்த சாட்சியாக இருக்கின்றன அந்த ஏதென்ஸ் மரணங்கள்.

(போர் தொடரும்…)  

இளங்கோ கிருஷ்ணன்