துப்புரவு தொழிலாளர்களாக இருக்கும் எம்பிஏ பட்டதாரிகள்!
எம்.எஸ்சி, பிஇ, எம்பிஏ படித்தவர்கள் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிப்பார்களா..?
சமீபத்தில் கோவையில் நடைபெற்ற சம்பவம், ‘ஆம் விண்ணப்பிப்பார்கள்’ என பதிலளித்திருக்கிறது! ‘எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்...’ என்று எதிர்பார்க்கப்பட்ட கல்வித்தகுதிக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் எம்.எஸ்சி, பிஇ, எம்பிஏ என எழுதித்தான் பூர்த்தி செய்திருந்தார்கள். தமிழகம் முழுக்க பலத்த அதிர்வலையை ஏற்படுத்திய இந்த நிகழ்வு, கோவை மாவட்டம் தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த எம்.எஸ்சி பட்டதாரியான மோனிகாவுக்கு துப்புரவு பணியாளர் வேலைக்கான ஆணை வழங்கப்பட்டபோது பெரு வெடிப்பானது.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் சேர்த்து 2520 நிரந்தர துப்புரவு தொழிலாளர்களும், 2308 ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். மேலும் அங்கு காலியாக இருந்த 549 இடங்களுக்கு 7300 விண்ணப்பங்கள் வந்த நிலையில், 5200 பேர் நேர்காணலுக்கு வந்துள்ளனர். இட ஒதுக்கீடு அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டதில் 321 பேருக்கு துப்புரவு தொழிலாளர் பணிநியமன உத்தரவு வழங்கப்பட்டது.
பணி வழங்கப்பட்டவர்களில் பலரும் எம்.எஸ்சி, எம்பிஏ பட்டதாரிகள். தனியார் நிறுவனங்களில் பணியில் இருந்தவர்கள். மீதியுள்ள 228 பணி இடங்களுக்கு பணியானை வழங்கப்பட இருந்த நிலையில், ஏற்கனவே ஒப்பந்த தொழிலாளர்களாக பணியில் இருப்பவர்கள் அந்த இடங்களில் ஏன் தங்களை நியமிக்கவில்லை என்று கேட்டு போராட்டத்தில் குதித்தனர்.
இந்நிலையில் தூய்மைப் பணியாளராக தங்களை மாற்றிக் கொள்வதில் படித்த இளைஞர்களை எது நிர்பந்திக்கிறது என்ற கேள்விகளோடு பணியானை பெற்ற இருவரை அணுகினோம். பெயரும் ஊரும் வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையோடு பேசத் தொடங்கினார்கள். ‘‘எனது ஊர் கோவை. இங்குள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ பேங்கிங் பைனான்ஸ் முடித்துவிட்டு தனியார் வங்கிகளில் ஒன்பது ஆண்டுகள் விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றினேன்...’’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினார்.
‘‘திருமணமாகி குழந்தை குடும்பம் என்றான பின் பாதுகாப்பற்ற வேலையை நம்பி குடும்பத்தை எப்படி நகர்த்துவது குறித்து கேள்வி எழுந்தது. ஒரு நிறுவனத்தில் வேலை போனால் அடுத்த வேலை கிடைக்க ஆறு மாதங்களாவது ஆகும் என்ற சூழல். ஊதியமும் குறைவு. மன அழுத்தமும் அதிகம். இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் நகர் சுத்தி தொழிலாளர் வேலைவாய்ப்பு குறித்த விளம்பரம் வெளியானது. எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் என்று மட்டுமே விளம்பரம் கொடுத்திருந்தார்கள்.
ஒப்பந்த அடிப்படையில் எடுக்கிறார்களோ என முதலில் யோசித்தேன். விசாரித்ததில் நேரடியான அரசு பணி எனத் தெரிய வந்தது. யோசிக்காமல் விண்ணப்பித்து, நேர்காணலும் முடிந்து இதோ வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். தெருக்களில் இருக்கும் குப்பைகளை வாரி அள்ளுவதுதான் வேலை!
நான் பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவன். என் பெற்றோர், பாட்டி, தாத்தா என மூன்றுத் தலைமுறைகளாக என் குடும்பத்தினர் துப்புரவு பணியில் இருப்பதால் எனக்கு இது பெரிய பிரச்னையாகத் தெரியவில்லை. நமக்காகத்தானே நாம வாழ்கிறோம்? மற்றவர்கள் நம்மை ஏளனமாகப் பார்த்தால் நமக்கென்ன?’’ என்று அதிரடியாக கேட்டு இவர் முடிக்க, அதை ஆமோதித்தபடி தொடர்ந்தார் மற்றொருவர்.
‘‘நான் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவன். ஊர் கோவை. பி.எஸ்சி, எம்பிஏ முடித்து ஹைதராபாத்தில் உள்ள எம்என்சி நிறுவனம் ஒன்றில் 10 ஆண்கள் துணை மேலாளராகப் பணியில் இருந்தேன். இப்போது துப்புரவு பணியாளராக தெருக்களில் இருக்கும் கழிவுகளை லாரியில் ஏற்றிச் செல்லும் பணியில் இருக்கிறேன்.
சிறுவயதிலேயே அப்பா இறந்துவிட வேலை செய்து கொண்டே படித்தேன். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை இருந்தது. அரசு வேலை என்பது என் கனவு. எத்தனை தேர்வுகளை எழுதினாலும் அரசுப் பணி என்பது இங்கே குதிரைக் கொம்பு. வயது முப்பதை நெருங்கியதும் எங்கே என் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்று நினைத்தேன். அப்போதுதான் துப்புரவு பணியாளருக்கான விளம்பரத்தைப் பார்த்தேன். விண்ணப்பித்தேன். இதோ... அரசுப் பணியில் இருக்கிறேன்.
துப்புரவு பணி என்பது பலரது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் மகத்தானப் பணி. ஆரம்பத்தில் என் குடும்பத்தார் சங்கடப்பட்டாலும் இப்போது ஓரளவு கன்வின்ஸ் ஆகியிருக்கிறார்கள்...’’ என்கிறார் இவர். படித்தவர்களாகவே இருந்தாலும் குலத் தொழிலுக்குள்தான் மீண்டும் செல்ல வேண்டுமா? கல்வி ஏன் இவர்களுக்கு மாற்றத்தைக் கொடுக்கவில்லை என்ற கேள்வியை கோவை மாநகரச் செயலாளரும், கோவை மாநகராட்சியின் முன்னாள் மாமன்ற உறுப்பினரும், சிபிஎம்எல் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான வேல்முருகனிடம் முன்வைத்தோம்.
‘‘தமிழகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களோடு தொடர்பில் இருப்பவன் என்கிற அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன், தனியார் துறைகளிலும் இங்கே சாதி இருக்கிறது. உரிமைகளுக்காக போராடும்போது சாதி பெயரைச் சொல்லி சமாதானப்படுத்துவது, ஒடுக்குவது, மடைமாற்றம் செய்வது, ஏமாற்றுவது என இருக்கிறார்கள். இதற்காகவே சாதி சார்ந்த ஆட்களையே முதலாளிகள் எடுக்கிறார்கள்.
இதைத்தாண்டி பாதிக்கப்படுகிற தொழிலாளர்கள் வர்க்கமாக அணிதிரண்டால் அவர்களை எல்லா வகையிலும் பழி வாங்கி, கடைசியில பணியில் இருந்து நீக்குகிறார்கள். இதுதான் பெருநிறுவனங்களில் நடக்கும் நிகழ்கால உண்மை.
தனியார் துறைகளில் இளம் உழைப்பாளிகளை பொறுக்கித் தேர்வு செய்து உள்ளே கொண்டு வருவதோடு, ஏற்கனவே பணியில் இருப்பவர்களை ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வெளியே அனுப்புகிறார்கள். இதுவே ‘ஹையர் அன்ட் ஃபயர்’. இந்த நிலையற்ற சூழல் குழந்தை பிறக்கும்போதே அதன் இறப்புத் தேதியை குறிப்பது போன்றது!இந்தச் சூழலில்தான் வளமைக்காக போராடுவது என்ற நிலை மறைந்து வயிற்றுக்காக போராடுவது என்னும் நிலை வருகிறது. இதில் விலைவாசி உயர்வும் சேர்ந்து கொள்ள, வாழ்வதற்கான போராட்டத்தில் மனிதன் என்னதான் செய்வான்? இது குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு மட்டும் வந்த பாதிப்பில்லை. ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஏற்பட்டுள்ள மாபெரும் பாதிப்பு.
இந்த சிக்கலில் இருந்துதான் இந்த வேலைவாய்ப்பு பிரச்னையை அணுகவேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் கிடைக்கும் வேலைக்கு ஏன் செல்கிறார்கள், இருந்த வேலையை விடுத்து, பாதுகாப்பான வேலை எங்காவது கிடைக்குமா என ஏன் தேடுகிறார்கள் என்றால்... அதற்கு காரணம் இதுதான்.ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் கொடுத்த அத்தனை வாக்குறுதிகளும் நிர்மூலமான நிலையில், கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக வேலை கொடுப்பது என்ற நிலை மறைந்து, இருக்கும் வேலையும் இங்கே பறிக்கப்படுகிறது.
ஆக, வேலை கிடைக்கும் ஒரே மையம் அரசுத் துறை. அந்த அரசுத் துறையும் தன் எல்லா அமைப்புகளையும் தனியார் மயமாக்கிக் கொண்டே வருகிறது. தூய்மைப் பணியில் யாரும் விரும்பிப் போய் சேருவதில்லை. இந்த வேலைக்குச் செல்லும் இளைஞர்களும், இளம் பெண்களும் ‘நாங்கள் தூய்மை பணி செய்வதன் மூலம் இந்த நகரத்தை சுத்தப்படுத்துகிறோம், இந்த நாட்டை சுகாதாரமாக வைக்கிறோம்...’ எனச் சொல்வது உண்மையாக இருக்கலாம். எதார்த்தத்தில் இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமில்லை, எல்லா சமூக மக்களுக்குமான ஆகப் பெரிய பின்னடைவு...’’ அழுத்தமாக சொல்கிறார் வேல்முருகன்.
மகேஸ்வரி நாகராஜன்
|