அயோடின் உப்பு Vs தூத்துக்குடி கல்உப்பு கோர்ட் படியேறியிருக்கும் பிரச்னை



பொதுவாக இன்று அயோடின் கலந்த உப்பையே நாம் எல்லோரும் பயன்படுத்தி வருகிறோம். அயோடின் கலந்த உப்பை மட்டுமே சாப்பாட்டிற்குப் பயன்படுத்த வேண்டும் என மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிவிப்பே இதற்குக் காரணம். ஒருகாலத்தில் அயோடின் குறைபாட்டால் தைராய்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை நாம் எதிர்கொண்டோம். குறிப்பாக, இளம் வயது பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். அபார்ஷன், குழந்தை இறந்து பிறத்தல், மனஅழுத்தம் உள்ளிட்ட நிறைய சிக்கல்களைச் சந்தித்தனர்.

இதனால், 1992ல் உண்ணக்கூடிய எல்லாவற்றிலும் அயோடின் உப்பையே பயன்படுத்த வேண்டும் என்றது அரசு. அதன்வழியே அயோடின் குறைபாட்டை தடுத்து வருகிறது.இந்நிலையில், சாப்பிடக் கூடியவற்றைத் தவிர்த்து ஏன் எல்லா உப்பிலும் அயோடின் கலக்க வேண்டும்? இதனால், தங்கள் உப்பு வியாபாரம் பாதிப்புக்குள்ளாகிறது என கோர்ட் படியேறியிருக்கிறார்கள் தூத்துக்குடி உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கத்தினர்.

இவ்வழக்கைத் ெதாடர்ந்திருக்கும் தூத்துக்குடி உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் டி.எஸ்.பி.ஜெயபாலன், ‘‘அயோடின் கலக்காத சாதாரண உப்பைத்தான் பல்வேறு வியாபாரிகள் கேட்கறாங்க. இங்க விளைவிக்கிற உப்புல பத்து சதவீதம்தான் மக்கள் சாப்பாட்டுக்கு அனுப்பறோம். மீதி 90 சதவீதம் தொழில்சாலைகளின் பயன்பாட்டுக்குப் போகுது.

ஆனா, அரசு எல்லா உப்புலயும் அயோடின் கலக்கச் சொல்லுது. இதனால, எங்க வியாபாரம் ரொம்பப் பாதிக்கப்படுது. அதனாலயே மதுரை ஐகோர்ட்ல கேஸ் போட்டிருக்கோம்...’’ என்கிறார்.வழக்கில் ஆஜராகியிருக்கும் வழக்கறிஞர் ரவி அனந்தபத்மநாபன் இன்னும் விவரித்தார்.
‘‘2018ல் மத்திய அரசு சாதாரண கல் உப்பை சாப்பாட்டுக்கு பயன்படுத்தத் தடைவிதிச்சு ஒரு திருத்தம் கொண்டு வந்தது. அயோடின் கலந்த உப்பை மட்டுமே பயன்படுத்தணும்னு சொன்னது.  

அயோடைஸ்டு இல்லாத உப்பை நாம் கல் உப்புனு சொல்றோம். அதைச் சாப்பாட்டுக்கோ, சாப்பாட்டுக்காக விற்கவோ கூடாதுனு திருத்தத்துல சொல்லியிருக்கு.பொதுவா, ஒவ்ெவாரு மனிதனுக்கும் ஒரு நாளைக்கு 150 மைக்ரோ கிராம் அயோடின் தேவை. சாப்பாட்டுல அதைச் சேர்த்துட்டா, ரொம்ப ஈஸியா இருக்கும் என்கிற நோக்கத்துல இந்தத் திருத்தத்தைக் கொண்டு வந்ததா சொல்றாங்க.

ஆனா, உண்மைல வெளிநாட்டு கம்பெனிகள் டிமாண்ட் பண்றதாலயே இப்படி பண்றாங்க. ஏன்னா, அமெரிக்காவுலதான் அயோடின் உற்பத்தி அதிகம்.
சாதாரண கல் உப்பை முழுவதும் பிளீச் பண்ணிதான் இந்த அயோடைஸ்டு உப்பை தயாரிக்கிறாங்க. அப்படி பிளீச் பண்ணும் போது இயற்கையா அதுல இருக்கிற மற்ற தாதுப் பொருட்கள் அழிஞ்சுடுது.

அமெரிக்கன் தைராய்டு அசோஷியேஷனும், ஹார்ட் அசோஷியேஷனும் அயோடின் சத்தை அதிகரிக்கக் கூடிய பனிரெண்டு வகையான உணவுப் பொருட்களின் பட்டியலை வெளியிட்டிருக்கு. அதுல வெண்ணெய், ஐஸ்கிரீம், மீன், சோயா பீன்ஸ் எல்லாம் அடங்குது. இதுல ஒரு வகையாதான் அயோடைஸ்டு உப்பும் இருக்கு.ஆனா, நாம் இந்த அயோடின் சத்துள்ள உணவையும் எடுத்துக்கறோம். தவிர, அயோடைஸ்டு உப்பையும் எல்லா உணவுப் பதார்த்தங்கள்லயும் சேர்க்கறோம். அதிகமான அயோடின் சத்தை ஏன் எடுத்துக்கணும் என்பது ஒரு கேள்வி.

அப்புறம், தமிழகத்துல ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாழ் மக்களுக்கு கொஞ்சம் அயோடின் சத்து குறைபாடு இருக்கலாம். ஆனா, சமவெளில இருக்குறவங்களுக்கும் அப்படி இருக்கும்னு எந்த அவசியமும் இல்லை!அடுத்து, அயோடின் அளவு உடலுக்குக் கொஞ்சம் கூடுதலா போனா ரத்தக்கொதிப்பு, மனஅழுத்தம், மலட்டுத்தன்மை, ஸ்ட்ரோக் எல்லாம் வருதுனு அந்த அமெரிக்கக் கூட்டமைப்பே ஒப்புக் கொள்கிறது. இந்த ஆவணத்தையும் ஐகோர்ட்ல சமர்ப்பிச்சிருக்கோம்.

அமெரிக்காவுல அயோடின் கலந்து உப்பு, கலக்காத உப்புனு ரெண்டையும் அனுமதிக்கறாங்க. அங்கிருந்து பில் போட்டு அந்த ரெண்டு விதமான உப்பையும் வாங்கி அதையும் ஆவணமா தாக்கல் பண்ணிஇருக்கோம்.இன்னைக்கு அமேசான்ல கூட கல் உப்பு கிடைக்குது. அதை விற்க இந்தியாவுல அனுமதிக்கிறாங்க. அதே தூத்துக்குடிக்காரங்க விற்கணும்னு சொன்னா மட்டும் ஏன் தடை சொல்றாங்கனு தெரியல.  

மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் இங்கிலீஷ் மெடிசன்ஸை வச்சு, அந்தச் சயின்ஸ்டிஸ்டுகள் சொன்னாங்கனு சொல்லிட்டு இருக்காங்க. ஆனா, நம்ம இந்தியன் மெடிக்கல் அசோசியேஷனின் மூத்த மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் சேர்ந்து ஒரு தீர்மானம் போட்டிருக்காங்க.இந்தியாவுல சாப்பிடக்கூடிய உணவுப் பழக்க வழக்கங்களைப் பார்க்கிறப்ப அதுல தேவையான அளவு அயோடின் இருக்கு. அயோடைஸ்டு உப்பை உபயோகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லைனு சொல்லியிருக்காங்க.

அதனால, இந்திய மெடிசன் சொல்றதையும் கேட்கணும்னு பெட்டிசன்ல குறிப்பிட்டோம். அவங்களயும் சேர்க்கச் சொல்லி கோர்ட் அனுமதி கொடுத்துடுச்சு.எங்களைப் பொறுத்தவரை நாங்க அயோடைஸ்டு உப்பை விற்கக் கூடாதுனு சொல்லல. பாரம்பரிய கல் உப்புக்கு தடை விதிக்காதீங்கனு சொல்றோம். ரெண்டையும் கொண்டு வாங்க. தேவையானதை மக்கள் எடுத்துக்கட்டும்...’’ என்கிறார் வழக்கறிஞர் ரவி அனந்தபத்மநாபன்.
இதுகுறித்து, தமிழ்நாடு சித்த மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் தமிழ்க்கனியிடம் பேசினாம். ‘‘நம்ம நாட்டுல மட்டுமல்ல. மற்ற நாடுகள்லயும் உடலுக்கான அயோடினுக்கு உப்புதான் சிறந்ததுனு உப்புடன் அயோடின் கலந்து
கொடுக்கறாங்க.

அயோடின் குறைபாடு, முதல்ல தைராய்டு ஹார்மோனின் உற்பத்தியை பாதிக்கும். இந்தத் தைராய்டு ஹார்மோன்தான் நம் உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு முக்கிய காரணம். ஆக, அயோடின் குறைபாட்டால் மூளைவளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட பல பிரச்னைகள் வரும். அதனால, அயோடின் ரொம்ப முக்கியம். இந்த அயோடின் குறைபாடு கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுற பெண்கள், அப்புறம் சைவ உணவுக்காரர்களுக்கும், வீகன் உணவுக்காரர்களுக்கும் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஏன்னா அயோடின், அயோடைஸ்டு உப்பைத் தவிர கடல் உணவுகள், பால், தயிர், முட்டை, தானியங்கள்லதான் அதிகம் இருக்கு.

சைவ உணவுக்காரர்களுக்கு தானியங்கள், பால் மட்டும் அயோடின் சத்துக்குப் போதுமானதா இருக்காது. வீகன்காரங்க பாலையும் சேர்க்கிறதில்ல. அதனால, சைவம், அசைவம் எடுக்கிறவங்களுக்கே அயோடின் போதுமானதா கிடைக்கும். அதுக்காகவே இத உப்புடன் கலந்து அறிமுகப்படுத்தினாங்க. ஆனா, அயோடைஸ்டு உப்புனு நாம் வாங்குவது பேக் பண்ணிதான் வருது. அப்ப, பதப்படுத்தப்பட்டே வரும்.

சில அயோடின் உப்பு விளம்பரங்கள்ல உப்பைக் கொட்டும் போது கைகள்ல ஒட்டாது. அப்படியே உதிரும். அதுக்கெல்லாம் ஆன்டிகேக்கிங் ஏஜென்ட்னு ஒரு கெமிக்கலை சேர்க்கறாங்க. உப்பு, கட்டியாகாமல் இருக்கவே இப்படி செய்றாங்க. தவிர, பளீர்னு வெள்ளைக் கலர்ல வர அதை பிராசஸூம் பண்றாங்க.

சித்த மருத்துவம் எப்பவும் பேக்கேஜ், பிராசஸ் ஐயிட்டங்கள பரிந்துரைப்பதில்லை. இப்ப அந்த உப்பும் இந்த வகைக்குள்ள வந்துடுச்சு. நம் பாரம்பரியமான இயற்கை உப்புல அயோடின் கொஞ்சமாவே இருக்கும். அது நமக்கு தினமும் தேவைப்படுற அளவுல இருக்காதுதான்.
அதனால, மற்ற அயோடின் சத்துள்ள உணவுகளையும் தொடர்ந்து எடுத்துகிட்டா நமக்கு அயோடின் உப்பே தேவை இருக்காது. இதை அரசு ஒரு விழிப்புணர்வா உருவாக்கணுமே ஒழிய சட்டமா கட்டாயம்னு சொல்லக் கூடாது.

முன்னாடி நல்லெண்ணெய், கடலை எண்ணெய்ல கொழுப்பு அதிகம்னு சொன்னாங்க. அதுக்கு ரீஃபைண்ட் ஆயில் நல்லதுன்னாங்க. இதை உடல்நலத்துக்கான விழிப்புணர்வா கொடுத்தாங்களே தவிர சட்டமாக்கல.

அப்புறம், அயோடின் உப்பை பிராசஸ் பண்ணும்போது கெமிக்கலால் உடலுக்கு என்ன தீங்கு வரும் என்பது பத்தி எந்த ஆய்வுமில்ல. ரொம்ப நாட்கள் எடுக்கும்போது பக்கவிளைவுகள் வராதுனு சொல்றதுக்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது.

அப்படியிருக்கும் போது அரசு, அயோடின் உப்பை ஒரு தேர்வா சொல்லலாமே ஒழிய கட்டாயம்னு சொல்றது நியாயமில்ல. அதனால, அரசு அயோடின் உப்பைத் தவிர மற்ற அயோடின் உள்ள உணவுகளுக்கும் நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தணும். அப்பதான் நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியும்...’’ என்கிறார் டாக்டர் தமிழ்க்கனி நிறைவாக!

பேராச்சி கண்ணன்