சினிமாவில் ஜெயித்த கோவை பெண்!



குறும்பட இயக்குநர்கள், ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமானவர் செம்மலர் அன்னம். பக்கத்து வீட்டு பெண்போல பாந்தம் காட்டும் காந்த முகம்.
லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘அம்மணி’, நயன்தாராவின் ‘அறம்’, ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’, ‘தம்பி’, ‘பொன்மகள் வந்தாள்’ என பல படங்களிலும் சில செகண்ட்களே வந்தாலும் கூட எளிய மனிதர்களை பிரதிபலிக்கும் கேரக்டர்களில் இயல்பும், யதார்த்தமுமாக மினுமினுப்பவர்.

‘தம்பி’யில் மகனை இழந்து தவிக்கும் பழங்குடி பெண்ணாக வாழ்ந்து காட்டியவர். ஷார்ட் ஃபிலிம்ஸ் தவிர இண்டிபென்டன்ட் ஃபிலிம்களை இயக்கியும் சிக்ஸர் அடிக்கிறார் செம்மலர் அன்னம்.‘‘அப்பா பக்கா கம்யூனிஸ்ட். அதனாலயே வீட்ல இப்படி ஒரு பெயர் வச்சுட்டாங்க. பெயரை கேட்ட பலரும், ‘சொல்லுங்க தோழர்’னு டக்குனு தோழமை காட்டறாங்க. ஆனா, என்னை எந்த வட்டத்துக்குள்ளும் சுருக்கிக்க விரும்பல...’’ கலகலக்கும் அன்னம், சமீபத்தில் ‘முதல் மழை’ என்னும் குறும்படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

‘‘ஆக்சுவலா ‘முதல் மழை’ நான் இயக்கும் நாலாவது  குறும்படம். விஷூவல் கம்யூனிகேஷன் ஃபைனல் இயர் படிக்கும் போதே, ‘மலர்மதி’னு ஒரு ஷார்ட் ஃபிலிம் பண்ணியிருக்கேன். சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த இயக்கம்னு மூணு கேட்டகிரில அவார்டும் கிடைச்சது.

பூர்விகம் கோயமுத்தூர் பக்கம் சித்ரா. எங்க தாத்தா கரகாட்ட கலைஞர். எங்க சுத்து வட்டாரங்கள்ல குனியமுத்தூர் கந்தாமினு சொன்னாலே போதும். எல்லாருக்குமே தாத்தாவை தெரியும். அவரோட ஆசிதான் நினைக்கறேன். எனக்கும் நடிப்பு மீது காதல் வந்திடுச்சு.

ரொம்பவே எளிமையான குடும்பம். நான் குழந்தையா இருந்தபோது அப்பா, சின்ன ஒர்க் ஷாப் வச்சாங்க. எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து அப்பாவுக்கு உதவியா ஒர்க் ஷாப்ல இருந்திருக்கேன். இரும்பு வாசனையோடு வளர்ந்திருக்கேன். அப்பா வறுமைல வாடினாலும் மெட்ரிகுலேஷன்ல படிக்க வச்சார். அங்க நான் நல்லா படிச்சேனோ இல்லையோ, டான்ஸ் நல்லா ஆடுவேன். டிவில எந்த பாட்டு வந்தாலும் அதை பார்த்து, அப்படியே பண்ணுவேன். அதிலும் குஷ்புவோட ‘ஒத்த ரூபா தாரேன்...’ பாட்டுக்கு செம ஆட்டம் போடுவேன்.

டான்ஸ்ல என் குரு, டிவி பெட்டிதான். ஆறாவது படிக்கும்போது தமிழ்மீடியத்துல சேர்த்துவிட்டாங்க. அங்க ஸ்கூல் கல்சுரல்ஸ் எல்லாம் அவ்ளோ நடத்தமாட்டாங்க. கொஞ்சம் வருத்தமானேன்.சினிமா ஆர்வம் அதிகமானது அந்த ஏக்கத்துலதான். டைரக்‌ஷன்னா என்னான்னு கூட தெரிஞ்சுக்கிட்டேன். அந்த டைம்ல ஓவியமும் நல்லா வரைவேன். என்னோட கலையார்வத்தை பார்த்துட்டு அப்பாவின் நண்பர் பொன்சந்திரன் சாரால, கோவைல விஸ்காம் படிப்புல சேர்ந்தேன். நாலுவார்த்தை சேர்ந்தா மாதிரி இங்கிலீஷ்ல பேசத் தெரியாம தவிச்ச
காலமும் உண்டு.

கடைசி வருஷம் நான் இயக்கின ‘மலர்மதி’ குறும்படத்துக்கு மூணு அவார்ட்ஸ் கிடைச்சது அவ்ளோ எனர்ஜியா உணர்ந்தேன். அந்த சமயத்துல தனக்கு ஒரு லேடி அசிஸ்டென்ட் வேணும்னு இயக்குநர் மிஷ்கின் சார் எங்க டிபார்ட்மென்ட் ஹெச்ஓடி கிட்ட கேட்டார்.  

நான் ஷார்ட் ஃபிலிம் அவார்ட் வாங்கியிருந்ததால என்கிட்ட எங்க ஹெச்ஓடி விஷயத்தை சொன்னார். அடுத்த செகண்ட்டே ஆர்வம் தாங்காம, சந்தோஷம் பொங்க என் அப்பாவையும் அழைச்சுட்டு சென்னை கிளம்பி வந்து மிஷ்கின் சாரை போய்ப் பார்த்தேன். ‘நீங்க படிக்கற புக்ஸ் பத்தி சொல்லுங்க’னு மிஷ்கின் சார் ஆர்வமா கேட்டார். நான் சிறுவர் மலர் ரேஞ்சில் சில புக்ஸ்சை சொன்னேன். அவ்ளோதான் ஜெர்க் ஆகிட்டார். விக்கிரமாதித்தன் புக்கை கொடுத்து, ‘நீ இதைப் படிச்சிட்டு, ஒரு வாரம் கழிச்சு பேசு’ன்னார்.

அப்புறம் அவர்கிட்ட இருந்து போன் வராமப் போனதால வேற வழியில்லாமல் மாஸ்காம்ல சேர்ந்தேன். அப்ப எனக்கு கூச்ச சுபாவம் அதிகம். ஸ்டேஜ் பயம் எல்லாம் இருந்துச்சு. அதை எல்லாம் தகர்க்கணும்னு வீதி நாடகங்கள், மேடை நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். சின்னத்திரை சேனல் ஒண்ணுல நடந்த ‘சகலகலா வல்லவன்’ ரியாலிட்டி ஷோவுல பங்கேற்றேன்.

எனக்குள்ள இருந்த திறமைகளை நானே கண்டுபிடிச்சு, அதுல வெளிக்காட்டி டைட்டில் வின்னரானேன். எனக்கு மாருதி காரும் பரிசா கொடுத்தாங்க! இந்த நேரத்துலதான் எனக்கு கல்யாணமும் ஆச்சு...’’ சின்னதொரு வெட்கப் புன்னகையை வீசியபடி தொடர்ந்தார் செம்மலர் அன்னம்.
‘‘நான் முதுகலை பட்டம் பண்ணும்போது, அங்க க்ளாஸ்மேட் ஆக இருந்த அரசு நட்பானார். அவரை பார்க்கும் போதெல்லாம் இனம்புரியாத பாசம் பொங்கும். நான் எடுக்கும் ஷார்ட்ஃபிலிம்களுக்கு அரசு, ஒளிப்பதிவும் பண்ணியிருக்கார். எடிட்டிங், மிக்ஸிங்னு உதவினார்.

ஒருத்தருக்கொருத்தர் நல்ல புரிதல் மலர்ந்தது. மிஷ்கின் சார் மட்டும் என்னை அசிஸ்டெண்ட்டா சேர்த்திருந்தா, அரசு என் வாழ்க்கைல
வந்திருக்க மாட்டார். ரெண்டு பேர் வீட்டிலும் காதலை சொன்னோம். க்ரீன் சிக்னல் கொடுத்து, கல்யாணம் பண்ணி வச்சு, தனிக்குடித்தனமும் வைச்சாங்க. ரெண்டு பேருக்குமே வேலை வெட்டி எதுவுமில்ல! ஆனா, கைல கொஞ்சம் காசு புழங்கினதால சில மாசங்கள் லைஃப் சந்தோஷமா போச்சு. கைல இருந்த பணமும் காலியாச்சு. வறுமை எட்டிப் பார்க்க ஆரம்பிச்சது. ஒரு கட்டத்துல ஓவென அழ ஆரம்பிச்சேன்...’’ விழிகளில் திரளும் கண்ணீரை, அடக்கிக் கொண்டு சகஜமானார்.

‘‘‘கடவுள் இருக்கான் குமாரு’ என்பது மாதிரி, டிவில நான் டைட்டில் வின்னர் ஆனதை பேப்பர்ல பார்த்த அப்ப கோவை பொதிகை டிவில இருந்த ஆண்டாள் பிரியதர்ஷினி மேம், என்னைக் கூப்பிட்டு பொதிகைல ஒரு வேலை கொடுத்தாங்க. என் கணவரும் மாஸ் கம்யூனிகேஷன்னால அவருக்கும் வேலை கிடைச்சது. ரெண்டு பேரும் ஒரே இடத்துல ஒர்க் பண்ணினோம். என் கனவுகள் சினிமா மேல இருந்தாலும், சர்வைவலுக்காக வேலைல இருந்தேன்.

இந்த நேரத்துல ஃபேஸ்புக்ல என் புகைப்படத்தை பார்த்த ஒரு காஸ்ட்டிங் டைரக்டர் ‘உங்களுக்கு நடிக்க விருப்பமா’னு கேட்டார். அவ்ளோதான்... என்னைத் தேடி சினிமா வாய்ப்பு வருதேனு வானத்துல பறந்தேன். எங்க காலேஜுக்கு ஒருமுறை இயக்குநர் வஸந்த், வந்திருந்தார். அவரோட தொடர்பு எண் என்கிட்ட இருந்ததால, காஸ்டிங் டைரக்டர் பத்தி வஸந்த் சார்கிட்ட விசாரிச்சேன்.  

‘நீ உடனே என்கிட அசிஸ்டென்ட்டா வந்து சேரு. ஆனா, சம்பளம் தரமாட்டேன்.’ என்றார். சம்பளத்தை விட சினிமாதான் முக்கியம்னு அவர்கிட்ட சேர்ந்தேன். கொஞ்ச மாசத்துல எனக்கு ஒர்க் செட் ஆகாம, வேலையை உதறினேன். அப்பத்தான் அருண்மொழி சார் அறிமுகம் கிடைச்சது. அப்ப அவர் நடிப்புப் பயிற்சி கல்லூரி தொடங்கும் முயற்சில இருந்தார். கொஞ்சமும் கமர்ஷியலாக இருக்க விரும்பாதவர். மத்தவங்களின் கனவுகளை நனவாக்க, அவ்ளோ உதவுவார்.

என்னையும், இன்னொருவரையும் கொண்டு ஒரு ஆக்ட்டிங் ஸ்கூல் ஆரம்பிச்சார். அங்க ஃப்ரீயா படிக்கலாம்னதும் கூட்டம் சேர ஆரம்பிச்சது. என் நடிப்பார்வத்தை புரிஞ்சுக்கிட்டு குறும்படங்களுக்கு சிபாரிசு செய்தார். ‘காஞ்சரமரம்’னு அவர் இயக்கின நாடகத்துல நடிச்சேன்...’’ என்கிற செம்மலர் அன்னத்தின் சினிமா என்ட்ரி இதன் பிறகு நிகழ்ந்தது.

‘‘என் போட்டோவை எங்கோ  பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன் மேம், என்னைக் கூப்பிட்டு அவங்களோட ‘அம்மணி’ படத்துல வெயிட்டான பெரிய ரோல் கொடுத்தார். படம் ரிலீஸாகி எனக்கு நல்ல பெயர் கிடைச்சது. ஆனா, சினிமாவை பத்தின புரிதல் இல்லாம கிடைச்ச ரோல்களை எல்லாம் பண்ண ஆரம்பிச்சேன். தலைகாட்டுற சீன்ல வந்தாக் கூட, நல்ல படத்துல நாமளும் இருக்கோம்னு நினைச்சு, கமிட் ஆக ஆரம்பிச்சேன்.
ஒருவகைல அது எனக்கு கை கொடுக்கவும் செய்தது. இப்ப அதை நினைவுல வைச்சு பலரும் குறிப்பிட்டு பேசறாங்க.

‘மகளிர் மட்டும்’, ‘குரங்கு பொம்மை’, ‘தம்பி’னு பல படங்கள் பண்ணிட்டேன். இப்ப ‘ஆயிரம் பொற்காசுகள்’, ‘பொன்மகள் வந்தாள்’, ஸ்போர்ட்ஸ் பயோகிராஃபி படம் ஒண்ணுனு பிசியா இருக்கேன்.இதுபோக ‘மாடத்தீ’ மாதிரி இன்டிபென்டன்ட் படமும் பண்ணிட்டிருக்கேன். மலையாளத்துல ‘ஸ்டிரீட் லைட்ஸ்’னு ஒரு படம் பண்ணியிருக்கேன்.

அம்மா கேரக்டர்தான் பண்ணுவேன்னு ஒரு வட்டத்துக்குள்ள சிக்கிக்க விரும்பல. எல்லா ரோல்களும் பண்ண விரும்பறேன். தொடர்ந்து ஜோதிகா மேமோட நடிக்கறதால என் மேல அவங்க ப்ரியமா இருக்காங்க. ஸ்பாட்டுல என்னை பார்த்தாலே அன்பும் அக்கறையுமா நலம்
விசாரிக்கறாங்க.‘நிறைய படி’னு மிஷ்கின் சார் கொடுத்த அட்வைஸை இப்ப சின்ஸியரா ஃபாலோ பண்றேன். சந்தோஷமான டிராவலா இருக்கு...’’ நெகிழ்கிறார் செம்மலர் அன்னம்.

செய்தி:  மை.பாரதிராஜா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்