யார் இந்த பவ்னிந்தர் சிங்? அமலாபால் வெட்டிங் ஸ்பெஷல்



தலேர் மெஹந்தியின் ‘ஹயரப்பா... போலோ தரரா... ரரரா...’ நாட்டுப்புற பாடலைப் போல, கலர்ஃபுல்லாக இனிக்கிறது அமலாபாலின் கல்யாண புகைப்படங்கள். மும்பை பாடகர் பவ்னிந்தர் சிங்கை காதலித்து மணமுடித்திருக்கிறார் அமலாபால். பாலிவுட்டில் தாம்தூமாக நடக்க வேண்டிய கல்யாண வைபவம், நாடெங்கும் நிலவிய கொரோனா வைரஸால் ரொம்பவே எளிமையாக நிகழ்ந்தேறிஇருக்கிறது.

சமீபத்திய ஹோலி பண்டிகையின் போதே, வண்ணங்கள் தெறிக்க, ‘தைரியத்துடன் எழில்கொஞ்சும் வண்ணமயமான கனவுகளை காணுங்கள். காதலை... நம்பிக்கையை, வாழ்க்கையை மீண்டும் அளிக்கக்கூடிய வெற்றியை காண கனவு காணுங்கள்... சுழலட்டும் இதயங்கள்...’ என டுவிட்டியிருந்தார் பூரிப்பாக! இப்போது அவருக்கு மகிழ்ச்சி கைகூடியிருக்கிறது.

சின்ன ஃப்ளாஷ்பேக்.ஒரு சில வருடங்களுக்கு முன்...‘தலைவா’ படத்தின் போது அதன் இயக்குநர் ஏ.எல்.விஜய், அமலாபாலின் மீது காதலில் விழுந்து, அவரை கரம் பிடித்தார். அதன்பின் சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட... பிரிந்தார்கள். சட்டப்படி விவகாரத்தும் செய்து கொண்டார்கள்.

மணமுறிவினால் ஏற்பட்ட விரக்தியினால் சிறிது காலம் தனிமையை விரும்பிய அமலாபாலை, அவரது நட்பு வட்டங்கள் தேற்றி, மீண்டும் சினிமாவில் நடிக்க வைத்தனர். ஆனாலும் ஆன்மீகம், யோகா, தியானம், இமயமலை ட்ரிப் என்று ஸ்பிரிச்சுவலில் லயிக்க ஆரம்பித்தார்.

இந்த நேரத்தில் ட்ரெக்கிங்கில் ஆர்வமானார்அமலாபால். அங்கேதான் மும்பை பாடகர் பவ்னிந்தர் சிங்கை சந்தித்திருக்கிறார்.

தில்லியை பூர்வீகமாகக் கொண்ட பவ்னிந்தர், பிசினஸ்மேனாக இருந்து, பாடகராகவும் ஆனவர். அமலாபாலை போலவே ட்ரெக்கிங், ஸ்பிரிச்சுவல், இயற்கை மற்றும் பெட் அனிமல்ஸை நேசிக்கக்கூடியவர். மனங்கள் இணைய... நண்பர்களாக தொடங்கிய பயணம்... நாளொரு காதலும் பொழுதொரு செல்ஃபியுமாக டெவலப் ஆனது.

சில மாதங்களுக்கு பின்...

பாடகர் பவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில், ஒரு பெண்ணை கட்டிப் பிடித்து காதலி என பதிவிட்டுவிட்டார்.அவ்வளவுதான். அது அமலாபால்தான் என்று கோலிவுட் தடதடத்தது.அதன்பின், அமலா பாலும், ‘தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவர் தன்னை அம்மா போல் பார்த்துக் கொள்கிறார்’ என்றும் நெகிழ்ந்திருந்தார். இந்நிலையில் அமலாபாலின் அப்பா திடீடென தவறிவிட... ரொம்பவே எமோஷனலானார்.

அப்போது அமலாவை தேற்றியது பவ்னிந்தர்தானாம். இருவரின் நலம் விரும்பிகளும் வற்புறுத்தவே, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, வெற்றிகரமாக டும் டும் டும்மும் நடந்தேறியது. பவ்னிந்தர் தன் திருமண போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட அடுத்த சில நொடிகளில் அதில் இருந்து நீக்கினார். கொேரானா டைமில், நாம் வேறு பரபரப்பை கிளப்பணுமா என தம்பதிகள் நினைத்திருக்கலாம்.

ஒருமுறை ‘குங்குமம்’ பேட்டியில் அமலாபால் சொன்னது இது:‘‘நம் ஒவ்வொருவரின் மகிழ்ச்சியும் அவங்க கண்டுபிடிக்கிற Passionனில் மட்டுமே இருக்கு. நீடிச்சு இருந்து சாதனை செய்தவங்க யாரைப் பார்த்தாலும் இது புரியும். கொஞ்சம் சரிவானாலும் உடனே நிமிர்ந்து உட்கார்ந்து விடலாம்...’’ பவ்னிந்தர் சிங் மூலம் இப்போது தன் மகிழ்ச்சியை கண்டுபிடித்துவிட்டார். நீடிக்கட்டும் இந்த மகிழ்ச்சி!

மை.பாரதிராஜா