அசோகரின் மொழிபெயர்ப்பாளன்‘‘அசோக்கே... அசோக்கே...’’ என்று வேல்முருகன் குரல் கொடுக்க திரும்பி பார்க்காமல் முன்னால் நடந்தான் அசோக், கூடவே அவன் கையை கெட்டியாக பிடித்தபடி சுதாகர். ஓடிவந்தான் வேல்முருகன். ‘‘என்னடா கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன்... திரும்பி பார்க்காம போற..?’’ என்று அசோக்கின் பள்ளிக்கூட பையை பிடித்து இழுத்தான்.

‘‘என்னை ‘அசோகர்’னு கூப்பிடுடா... அப்பதான் பார்ப்பேன்...’’ முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு சொன்னான்.‘‘என்னடா புதுக்கதை... ஏன்?’’ என்றான் வேல்முருகன்.‘‘இன்னிக்கு மைதிலி டீச்சர் வரலாறு பாடம் எடுத்தாங்கல்ல... அதுல மாமன்னர் அசோகர்னு சொன்னாங்கல... அதனால இன்னியில் இருந்து என் பேரு அசோக் இல்ல... அசோகர்!’’ தலையை உயர்த்தி வானத்தைப் பார்த்தபடி கூறினான் அசோக்.
‘‘ஆமா... இனி அசோக் இல்ல... அசோகர்!’’ அவனது பையை வாங்கி தனது தோளில் போட்டுக் கொண்டு கூறினான் சுதாகர்.‘‘போங்கடா கிறுக்கனுங்களா...’’ கூறிவிட்டு ஓட்டம் பிடித்தான் வேல்முருகன்.

மறுநாள், அனகாபுத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் 8ம் வகுப்பு முழுவதும் அசோகர் என்ற வார்த்தைதான் கேலிப்
பேச்சாக இருந்தது. அசோக் வரும்போதும், போகும்போதும் எல்லா பிள்ளைகளும் ‘அசோகர்... அசோகர்...’ என்று கிண்டலாக கூவினர். ஆனால், அசோக்கும், சுதாகரும் மட்டும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தோள்மேல் கை போட்டபடி பள்ளியை வலம் வந்தனர்.

இடையர் தெருவில் இருந்தது அசோக்கின் வீடு. சுதாகருக்கோ மடுவைத் தாண்டி அம்பேத்கர் காலனியில் கடைசி வீடு. ஆனாலும் இருவரும் ஒன்றாகவே சுற்றித் திரிந்தனர். ஊர்ச் சண்டை நடந்த நாட்களில் கூட இவர்கள் இருவரையும் தனித்துப் பார்க்க முடியாது.

அசோக்கின் அப்பா ஊர்த் தலைவராக இருந்தவர். திடீரென மாரடைப்பால் காலமாக தாய்மாமன் வீட்டில்தான் வாசம். வசதிக்கு குறைச்சல் இல்லை. உடன்பிறந்தவர்களும் இல்லை. செல்லம் கொஞ்சும் மாமா. திட்டிப் பேசாத அம்மா. அதனால் அசோக்கிற்கு பெரிய கவலை என்பதெல்லாம் இல்லை. அந்த வயதில் கவலை என்பதும் பெரிதாக தெரியவில்லை.

ஆனால், சுதாகர் மாடு மேய்த்து வந்த இடைவெளியில்தான் பள்ளிக்கு வருவது வழக்கம். சமயங்களில் அப்பாவுடன் ஊரல் பானைக்கு வெல்லம் சுமந்து கொண்டு போய் கொடுப்பான். கொடுக்காப்புளி மரத்தில் தழை பறித்து முயல்களுக்கு போடும் வேலையும் உண்டு. அவனைப் பொறுத்தவரை அசோகர்தான் அவனுக்கு எல்லாமே. அசோகர் சொல்வதை அப்படியே செய்து முடிப்பதுதான் தன்னுடைய முக்கியமான வேலை என்பது சுதாகரின் எண்ணம்.

ஏழாவது வரை அசோக்கின் நடவடிக்கைகளில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆனால், இப்போதெல்லாம் தனியாக இருக்கும் போது கூட பேசிக் கொண்டே இருக்க ஆரம்பித்தான். சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான். வகுப்பில் கூட அவனது கவனம் அறையின் ஏதாவது ஒரு மூலையில் இருக்குமே தவிர, ஆசிரியரிடம் இருக்காது.

அசோக்கிற்கும் சேர்த்து அதற்காக அடி வாங்குபவன் சுதாகர்தான்.தேங்காய் எண்ணெய் போட்டு படிய வாரிய தலை, நெற்றியில் சந்தனம், இஸ்திரி போடப்பட்ட சட்டை, பெல்ட் போட்ட அரைக்கால் டவுசர், கையில் தங்க வளையம், கழுத்தில் தங்கச் சங்கிலி என்று இருப்பான் அசோக். ஆனால், இப்போது இவ்வளவு சுத்தபத்தமாக அவன் இருப்பதில்லை. இந்த சூழ்நிலையில்தான் அசோகர் என்ற பட்டப்பெயர் வந்து ஒட்டிக் கொண்டது. அசோகருடன் சுற்றிக் கொண்டிருந்ததாலோ என்னவோ அவனது பல பழக்கங்கள் சுதாகருக்கும் ஒட்டிக் கொண்டன. சத்துணவுக் கூடத்தில் வரிசையில் நின்று வாங்கும் சோற்றைக்கூட நாய்க்கும், காகத்திற்கும் வைத்தபிறகுதான் இப்போது சாப்பிடுகிறான்.

அப்படி ஒருநாள் நாய்க்கு சோறு வைத்தபோது அதனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அசோகர், அதில் இருந்து ஒரு கவளம் எடுத்து சாப்பிட
ஆரம்பித்தான். இதனைப் பார்த்த மற்ற பிள்ளைகள் ‘‘சீ... சீ... நாய் சோற சாப்பிட்ற...’’ என்று முகத்தை சுளித்தனர். காதில் வாங்கிக் கொள்ளாமல் அதனுடனே சாப்பிட்டான் அசோகர்.இதனால் ஆத்திரம் அடைந்த சுதாகர், ‘‘டேய் அசோகருக்கு நாயும் ஒண்ணுதான் எல்லாரும் ஒண்ணுதான்... போங்கடா...’’ என்று கத்தினான். ‘‘நாய் சோறு அசோகர்...’’ என்று சக மாணவர்கள் கத்திக் கொண்டே ஓடினர்.

இந்த விஷயம் அன்று மாலையே அசோகரின் அம்மாவுக்குப் போய் சேர்ந்தது. முதல்முறையாக அவனிடம் கோபப்பட்டாள் ஈஸ்வரி. முதுகில் நாலு போடு போட்டாள். ‘‘ஏண்டா கண்ணு இப்போல்லாம் என்னமோ போல நடந்துக்குற..?’’ அன்றிரவு வெகுநேரம் வீடு திரும்பாத அசோகரை இடையர் தெரு முழுவதும் சேர்ந்து தேடியது. அனகாபுத்தூர் ஆற்றை ஒட்டிய சேற்றில் பன்றிகள் அருகே படுத்திருந்தான் அசோகர்.

மறுநாள் முதல்வேலையாக அவனை குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எல்லா சோதனைகளும் முடிந்தபிறகு ‘‘படிப்புக்கு பயந்து இப்படி எல்லாம் பண்றான் போல...’’ என்ற முடிவோடு வீட்டுக்கு கொண்டு வரப்பட்டான் அசோகர்.
அடுத்தடுத்த தினங்களில் அசோகர் பேசும் சொற்கள் தெளிவாக இல்லாமல் போக ஆரம்பித்தன. சம்பந்தம் இல்லாமல் எதை எதையோ பேசினான். சொன்னதையே மீண்டும் சொன்னான்.

ஆனால், அப்போதும் சுதாகர் மட்டும் அசோகர் என்றால் திரும்பி பார்த்து சிரிப்பான்.ஒருமுறை கண்ணப்ப மாஸ்டர் கேட்ட கேள்விக்கு அசோகர் ஏதோ ஒன்றை சொல்லிக் கொண்டிருந்தான். உடன் எழுந்து நின்ற சுதாகர், பதில் ஒன்றை கூறிவிட்டு இதனைத்தான் அசோகர் கூறினான் என்று அவனை இழுத்து அமரவைத்தான். இப்போதெல்லாம் அசோகர், சுதாகர் கூடவே நாயும் நிரந்தரமாக மதியப் சாப்பாட்டுக்கு ஒன்று கூடியது.
மாங்காடு, குன்றத்தூர், பெரியபாளையம் என்று அசோகரின் அம்மா ஈஸ்வரி ஒவ்வொரு கோயிலாக ஏறி இறங்கினாள்.

அந்த வருஷம் ஆடி மாதம் ஆலவட்டம்மன் கோயிலில் முதன்முறையாக தீ மிதித்தார் ஈஸ்வரி அம்மா. வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சுதாகர் என்ன நினைத்தானோ தெரியாது மாலைப் போட்டுக் கொள்ளாத நிலையிலும் கனன்று எரிந்த தீக் கங்குகள் மீது திகுதிகுவென்று ஓடி மயங்கி விழுந்தான்.அந்த வருடம் எட்டாம் வகுப்பில் சொல்லி வைத்தார்போல் அசோகரும், சுதாகரும் தோல்வி அடைந்தார்கள்.

ஆனாலும் பள்ளிச் சீருடையோடு காலையிலேயே கிளம்பி விடுவான் அசோகர். எங்கு செல்கிறோம் என்று தெரியாது. கணேஷ் தியேட்டரில் சில நாட்கள் பார்க்கலாம். மாந்தோப்பில் படுத்தபடி மாங்காய்களை எண்ணிக் கொண்டிருப்பதை பார்க்கலாம். கைவிடப்பட்ட யாருமற்ற தறிக் கொட்டகையின் இருள்மண்டிய அறைகளுக்குள் குட்டிப் போட்ட நாய்களுடன் படுத்திருப்பான். மற்றவர்கள் யாராவது போனால் ‘கிர்ர்ர்ர்’ என்று பற்களை காட்டும் நாய் அசோகரை ஒன்றுமே செய்யாது. இதனை விட ஆச்சர்யம் அசோகருடன் எல்லா இடத்திலும் சுதாகர் இருந்தான்.

‘‘அவன்தான் பைத்தியம் புடிச்சு சுத்துறான்... அவன்கூட சேர்ந்து நீயும் சுத்துறியா..?’’ தேங்காய் மட்டையை எடுத்து விளாசி விட்டார் சுதாகரின் அப்பா கோவிந்தன்.‘‘யப்பா, யப்பா வலிக்குதுப்பா... வுடுப்பா வுடுப்பா...’’ கால்களை எத்தி எத்தி கதறினான் சுதாகர்.அவன் அழுவதைப் பார்த்து நொந்து போன கோவிந்தன், ‘‘ஏண்டா தம்பி இப்படி என்கிட்ட அடிவாங்குற? ஒழுங்கு மரியாதையா ஸ்கூலுக்குப் போ... நல்லா படிடா...’’ என்று கண்கலங்கினார்.‘‘இல்லப்பா... அசோகருக்கு பசிச்சா கூட சொல்லத் தெரியாதுப்பா. அவன் சொல்றது யாருக்கும் புரியாதுப்பா. எனக்கு மட்டும் தாப்பா புரியும். நானும் கூட இல்லன்னா அவன் சோறு போடுங்கனு கேக்குறானா இல்ல வேற ஏதாவது சொல்றானு புரியாம போய்டுவாங்கப்பா...’’ மூக்கை உறிஞ்சியபடி அழுதான் சுதாகர்.

‘‘என் செல்லமே...’’ என்று கட்டிக் கொண்டார் கோவிந்தன்.மருந்து மாத்திரைகள், வேண்டுதல்கள், பரிகாரங்கள் என எதுவும் கை கொடுக்கவில்லை. முன்னைவிடவும் அசோகரின் சொற்கள் குழறி புதுவித ஒலியோடு வெளிவந்தன. அழுக்குச் சட்டையோடும், எண்ணெய் காணாத தலையோடும், கால்களில் புதுவித சிரங்குகள் வந்து எப்போதும் நீர்வடிந்த நிலையில் ஈக்கள் மொய்க்க ஆரம்பித்தன. ஆனாலும் அவற்றோடு பேசிக் கொண்டிருந்தான் அசோகர். அதற்கும் ‘ஆமாம்’ என்று தலையாட்டிக் கொண்டு பதில் பேசினான் சுதாகர்.

ஒருநாள் சாலையோரம் கிடந்த காய்ந்த தென்னங்காயை எட்டி உதைத்தபடி நடந்து வந்தான் அசோகர். வேகமாக உதைத்தபோது அது சாலைக்கு நடுவே ஓடியது. அசோகர் அதனைப் பார்க்க, அதன் பொருளை புரிந்து கொண்ட சுதாகர் ஓடி அதனை எடுக்கக் குனிந்தான். வேகமாக வந்த லாரி சுதாகரை ‘தட்’ என்று மோத நொடியில் மண்டை பிளக்க உயிரற்ற உடலாக மல்லாந்து விழுந்தான் சுதாகர்.  அன்றிலிருந்து அசோகர் பேசி யாருமே கேட்கவில்லை.

பன்ச் சிங்!

கோலிவுட்டை விட பாலிவுட்டில்தான் பாய்ச்சல் காட்ட விரும்புகிறார் ரகுல் ப்ரீத் சிங். ஃபிட்னஸில் பிச்சு உதறிக்கொண்டிருந்தவரிடம், ‘‘உங்க ஸ்ட்ரெஸ் பஸ்டர் எது?’’ எனக்கேட்டால்... கைகளை முறுக்குகிறார். ‘‘கிங் பாக்ஸிங்தான். என் கோபம், அழுத்தம் எல்லாத்தையுமே பாக்ஸிங்ல காட்டுவேன். அரைமணிநேரம் பன்ச்சுல ஸ்ட்ரெஸ் காணாமல் போயிடும்...’’ என்கிறார் கண்கள் சிமிட்டி!

காவியத் தலைவியின் குத்தாட்டம்!

‘காவியத்தலைவன்’ அனைகா, இப்போது தமிழில் ரம்யா நம்பீசன் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியிருக்கிறார். சந்தானத்தின் ஜோடியாகவும் ஒரு படம் கமிட் ஆகியிருக்கிறார். ‘‘‘செம போத ஆகாத’ இயக்குநர் படம் என்பதாலேயே ஒரு பாடலுக்கு ஆட சம்மதிச்சேன். இனி என்னை நீங்க ஹீரோயினாகத்தான் பார்க்க முடியும். அதான் என் ஆசையும் கூட!’’ என்கிறார் உறுதியாக!

இந்திக்கு செல்லும் விஜய் அப்பாவின் கண்டுபிடிப்பு!

ஏஸ்.ஏ.சந்திரசேகரின் கண்டுபிடிப்பான கோமல் சர்மா, நீண்ட இடைவெளிக்கு பின், மல்லுவுட் வந்திருக்கிறார். மோகன்லாலின் ‘மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹ’மில் நடித்திருக்கிறார். ‘‘பிரியதர்ஷன் சாராலதான் இப்படி ஓர் அதிர்ஷ்டம் அடிச்சிருக்கு. இதுல அர்ஜூன் சாரோடதான் அதிகம் நடிச்சேன். ஆனாலும் மோகன்லால் சாரோட காம்பினேஷனும் இருக்கு.

அடுத்து பிரியதர்ஷன் சார் இந்தியில் இயக்கும் படத்திலும் கமிட் ஆகியிருக்கேன். அதில் ஷில்பா ஷெட்டியும் நடிக்கறார். அதோட ஷூட்டும் முடிச்சிடுச்சு...’’ என சிலிர்க்கிறார் கோமல்.

கேலரியை திறக்கும் ஐஸ்!

‘தமிழ்ப்படம்2’ ஐஸ்வர்யா மேனனுக்கு பிடித்த ஆக்ட்ரஸ் யார்? கேட்டால் தன் மொபைலை எடுத்து கேலரியை திறக்கிறார்.
‘‘ஆலியா பட்தான் என்னோட ஃபேவரிட். அவரோட ‘ஹைவேஸ்’ மூவி ரொம்ப பிடிக்கும். அப்படி ஒரு கேரக்டர் பண்ணணும்னு ஆசை இருக்கு. ஆனாலும், எல்லா ஜானரிலும் நடிப்பேன்...’’ என்கிறார் ஜில் சிரிப்பில்!

க.அரவிந்த் குமார்