இந்தியா, கோமியத்தை விளம்பரப்படுத்துகிறது... சீனா, ஆப்பிரிக்காவை சுற்றி வளைக்கிறது!
ஆப்பிரிக்கா என்றாலே நமக்கு உலர்ந்த, எலும்புக்கூடாக வற்றிய மனிதர்களும் வறுமையும்தானே நினைவுக்கு வரும்..? ஆனால், இதெல்லாம் ஒரு காலம். இப்போது நிலைமை முன்புக்கு எவ்வளவோ மாறியிருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகள் பலவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரமாக உருவெடுக்கத் தொடங்கியிருக்கின்றன. சமீபத்தில் உலக வர்த்தகக் கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்று, ஆப்பிரிக்காவை ‘உலகிலேயே அதி வேகமாக நகரமயமாகிக் கொண்டிருக்கும் நாடுகளில் பிரதானமானது’ என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவையும் சீனாவையும் அடுத்து நகரமயமாதல் ஆப்பிரிக்க நாடுகளில்தான் துரிதமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எதிர்வரும் 2050ம் ஆண்டில் ஆப்பிரிக்க கண்டத்தில் நூறு கோடிக்கு மேற்பட்ட மக்கள் நகரங்களில்தான் வாழ்வார்கள் என்கிறார்கள் நிபுணர்கள்.
இது இப்போதைய நிலவரத்தைக் காட்டிலும் இரு மடங்கு. லாகோஸில் மட்டும் ஒரு மணி நேரத்துக்கு எழுபத்தேழு பேர் குடியேறுகிறார்கள் என்கிறது மெக்கின்ஸியின் ஆய்வு ஒன்று.இன்னும் ஐந்தே ஆண்டுகளில் ஆப்பிரிக்க கண்டத்தின் நூறு நகரங்களின் மக்கள் தொகை சராசரியாக பத்து லட்சத்தைக் கடந்திருக்கும் என்றும் கணித்திருக்கிறார்கள்.
இப்படி குவியும் மக்கள் தொகையால் அபரிமிதமான மனிதவளம் உருவாகி பொருளாதார வளர்ச்சியும் நல்ல நிலையில் உயர்கிறது என்கிறது உலக வங்கி. இன்று உலக அரங்கில் ஆப்பிரிக்காதான் இரண்டாவது பெரிய வளர்ச்சிப் பகுதியாக இருக்கிறது. வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் சக்தியில் ஆண்டுதோறும் 3.8% வளர்ச்சி இருக்கிறது. எதிர்வரும் 2025ல் இது நூற்று நாற்பது லட்சம் கோடி ரூபாயிலிருந்து விரைவில் முந்நூற்று ஐம்பது லட்சம் கோடி என்பதாக உயரும் என்று கணித்திருக்கிறார்கள்.
சரி, எப்படி திடீரென இப்படி ஒரு வளர்ச்சி என்று கேட்டால், சீனாவைக் கைகாட்டுகிறார்கள் நிபுணர்கள். இன்றைய தேதிக்கு சீனாதான் ஆப்பிரிக்க நாடுகளின் அன்னதாதாவாக இருக்கிறது. இன்று ஆப்பிரிக்க நாடுகளில் கட்டப்படும் பெரிய பெரிய கட்டடங்கள் முதல் அனுமன் வாலாக நீளும் நெடுஞ்சாலைகள் வரை அனைத்தும் சீனாவின் உபயம்தான் என்கிறார்கள்.
சீனாவின் அரசும் சீனாவின் தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் முதலீட்டை ஆப்பிரிக்காவில் கொட்டி அதன் உள்கட்டுமானத்தை மேம்படுத்தி வருகிறார்கள். கடந்த 2013ம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் உள்கட்டுமானத்தை மேம்படுத்துவது தொடர்பாக முறையாக அறிவிக்கும் முன்பே அதன் நகர்ப்புற வளர்ச்சிக்கான முதலீடுகளை சீன அரசு தொடங்கிவிட்டது என்கிறார்கள்.
1949ம் ஆண்டில் சீனா கம்யூனிச அரசாக, செஞ்சீனம் என்று தன்னை அறிவித்துக்கொண்டபோது உலகின் பெரும்பாலான நாடுகள் அதனைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அப்போது முதலே ஆப்பிரிக்க நாடுகள் சீனத்தோடு ஒரு நல்லுறவைப் பேணிவருகின்றன. பெரும்பகுதி மக்கள் வறுமையில் வாடும் ஒரு நாட்டில் கம்யூனிசம் என்ற சிந்தனை மீது ஒரு கவர்ச்சி இருப்பது இயல்புதான் என்பதற்கேற்பவே சீனாவின் முதலீடுகள் ஆப்பிரிக்க நாடுகளில் விரும்பி ஏற்கப்பட்டன.
சிமெண்ட், இரும்பு உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் வழங்குவதோடு இருப்புப் பாதைகள், மருத்துவமனைகள், பல்கலைக் கழகங்கள், விளையாட்டு அரங்கங்கள் உட்பட பல்வேறு அடிப்படை உட்கட்டுமானங்களை ஆப்பிரிக்க கண்டம் முழுதுமே சீனா பல ஆண்டுகளாகச் செய்து வருகிறது. காலனி என்ற கோட்பாட்டை விட்டு ஐரோப்பிய நாடுகள் சென்ற நூற்றாண்டின் பாதிலேயே வெளியேறினாலும், ஐரோப்பியர்கள் உறிஞ்சி கொழுத்து உண்டு சென்றது போக மிச்சம் மீதி வளங்களே ஆப்பிரிக்காவில் அபரிமிதமாக இருந்தன.
அதனால்தான் அந்த அதிகார வெற்றிடத்தைக் கைக்கொள்ள சீனா அத்தனை அவசரமாக ஆப்பிரிக்க நாடுகளை நட்புறவாக்கிக்கொண்டது என்கிறார்கள் நிபுணர்கள்.இன்று சீனாதான் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய தொழில் கூட்டாளி. ஆண்டுதோறும் சீன - ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையே ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய்க்கு வணிகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மெக்கின்ஸியின் அறிக்கையின்படி சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் ஆப்பிரிக்க கண்டம் முழுதும் கிளை பரப்பியுள்ளன. கடந்த 2005ம் ஆண்டில் அதாவது பதினைந்து வருடங்களுக்கு முன்பே நூற்று நாற்பது லட்சம் கோடியாக இருந்த சீன வணிகம், இப்போது மேலும் அதிகரித்துள்ளது.
சீனா சமீபத்தில் எழுநூறு கோடி ரூபாயில் புதிய ஃபெல்ட் சாலை ஒன்றை ஆப்பிரிக்காவில் நிர்மாணித்துள்ளது. ஆப்பிரிக்காவின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஆண்டுதோறும் நூற்று எழுபது பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படுகிறது. இதில் ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கியின் கூற்றுப்படி சுமார் 68 - 108 பில்லியன்கள் பற்றாக்குறையாகவே இருக்கிறது. ஆப்பிரிக்காவின் இந்த பகாசுர பசிக்கு இன்று தீனி போடும் சாத்தியமும் ஆர்வமும் உள்ள ஒரே நாடு சீனாதான்.
சென்ற நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்காவின் உட்கட்டுமானத்தை நிர்மாணித்ததில் அதன் உள்நாட்டு வளர்ச்சி நிகழ்ந்தாலும் ஆப்பிரிக்காவின் வளங்களைக் கபளீகரம் செய்வதே அதன் நோக்கமாக இருந்தது. நைரோபி - மோம்சா, அடிஸ் அபாபா - ஜிபோடி ஆகிய ரயில் பாதைகளே இதற்கு உதாரணம். இவை, உள்நாட்டின் கனிம வளம் நிறைந்த பகுதிகளை இந்தியப் பெருங்கடலின் துறைமுக நகரங்களோடு இணைப்பதாக இருந்தன.
சீனாவின் நோக்கமும் இப்படியானதுதான். என்றாலும் ஐரோப்பியர்கள் போல் சுரண்டலாக அல்லாமல் இருபக்கமுமான வளர்ச்சியை சீனர்கள் சாத்தியமாக்குவார்கள் என்று ஆப்பிரிக்கர்கள் நம்புகிறார்கள்.
இன்று ஆப்பிரிக்கா எந்த நிலையில் இருக்கிறதோ கிட்டத்தட்ட அப்படித்தான் சென்ற நூற்றாண்டின் மத்தியில் சீனா இருந்தது. ஆப்பிரிக்காவைப் போலவே அன்று சீனா, பின்தங்கிய நாடு. உலக ஜிடிபியில் வெறும் இரண்டு சதவீதமே அதன் பங்களிப்பாக இருந்தது. ஆனால், இன்று அமெரிக்காவையே சவாலுக்கு அழைக்கும் வல்லரசாக உயர்ந்து நிற்கிறது. சீனாவின் இந்த வளர்ச்சி மீது ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு ஒரு கவர்ச்சி உள்ளது. சீனாவின் இந்த மேஜிக் தங்கள் நாட்டிலும் நடக்க வேண்டும் என்று சில தலைவர்கள் நிஜமாகவே விரும்புகிறார்கள். அதனால் சீனா போடும் நிபந்தனைகளுக்கு எல்லாம் தலையாட்டிக் கையொப்பமிடுகிறார்கள். சீனாவும் ஆப்பிரிக்க நாடுகளை தனது இரண்டாம் நிலம் போல, காலனி போலப் பயன்படுத்தி வருகிறது.
நைஜீரியாவின் கடற்கரையோர ரயில்வே திட்டம் சுமார் பனிரெண்டு பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நடந்து வருகிறது. அதுபோலவே, 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அடிஸ் அபாபா - ஜிபோடி ரயில்வே பணிகளும், பதினொரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் பகாமாயோவில் மெகா துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலமும் சமீபத்தில் சீனாவின் ஒத்துழைப்போடு நடைபெற்று வருகின்றன.2011ம் ஆண்டுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மேலும் வலுவாகியுள்ளது.
கிட்டத்தட்ட நாற்பது சதவீதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதேநேரம் மற்ற நாடுகளின் முதலீடு ஆப்பிரிக்காவில் குறைந்து வருகிறது. ஆம்... ஐரோப்பிய முதலீடுகள் 44 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகவும், அமெரிக்கப் பங்களிப்பு 24 சதவீதம் முதல் 6.7 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
காலனி என்பதை சென்ற நூற்றாண்டில் கைவிட்ட ஐரோப்பிய அரசுகள், வணிக ஒப்பந்தங்கள் என்கிற நவகாலனியத் திட்டங்களோடு மூன்றாம் உலக நாடுகளுக்குள் நுழையும் இந்தக் காலத்தில், அதேபோன்ற திட்டத்தோடுதான் சீனா ஆப்பிரிக்காவை வளைத்து வருகிறது. வளர்ச்சி என்ற பெயரில் ஆப்பிரிக்க நாடுகளும் இதனை அனுமதித்து வருகின்றன. புழுவுக்கு ஆசைப்பட்டு போகும் மீனின் கதை ஆகாமல் இருந்தால் சரி.
இளங்கோ கிருஷ்ணன்
|