5,517,748,800 Hours...ஒரேயொரு ஆபாச வீடியோ தளத்தை இத்தனை மணிநேரங்கள் மக்கள் பார்த்திருக்கிறார்கள்!

தலைப்பை படித்ததும் அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா..? இதுதான் உண்மை. சம்பந்தப்பட்ட அந்த வீடியோ தளமே இந்த புள்ளிவிவரத்தை கெத்தாக வெளியிட்டிருக்கிறது.ஒரேயொரு ஆபாச வீடியோ தளத்தையே இத்தனை மணிநேரங்கள் மக்கள் பார்த்திருக்கிறார்கள் என்றால்... இணையத்தில் கணக்கற்ற ஆபாச வீடியோ தளங்கள் இருக்கின்றன... அந்த ஒவ்வொன்றும் எத்தனை மணி நேரங்கள் பார்க்கப்பட்டிருக்கும்..? மொத்தமாக ஆபாச வீடியோ தளத்தை எத்தனை மணிநேரங்கள் இதுவரை மக்கள் பார்த்திருப்பார்கள்..?

நினைக்கும்போதே அடிவயிறு கலக்குகிறதல்லவா..?

இதனை எதிர்த்துதான் அமெரிக்காவின் தேசிய போதைத் தடுப்பு இன்ஸ்டிடியூட் குழுவின் இயக்குநர் மற்றும் மருத்துவர் டாக்டர் நோரா வால்கோவும் அவரது குழுவும் தனியாக ஒரு தளத்தை ஆரம்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.ஆபாச வீடியோக்கள் பார்ப்பது அவ்வளவு பெரிய பிரச்னையா எனக் கேட்கலாம். எதற்குமே அடிமையாகாத வரை யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை... என்று சொல்லும் வால்கோ, உலகின் மிகப்பெரும் போதைகள் என மூன்றை வரிசைப்படுத்துகிறார்.

ஆபாச வீடியோ பார்ப்பது, கேம்ப்ளிங், உணவுப் பழக்கம்.இதில் முதன்மையான ஆபத்து - அதாவது ரெட் அலர்ட் போதை - ஆபாச வீடியோ பார்ப்பது.ஒருவேளை நீங்கள் ஆபாச வீடியோக்களை பார்க்கும் பழக்கம் உள்ளவர் என்றால்... டாக்டர் வால்கோ, உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ள ஐந்து கேள்விகளைக் கேட்கிறார்.

1. ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதற்காகவே நேரம் ஒதுக்கி உங்களை நீங்களே தனிமைப் படுத்திக் கொள்கிறீர்களா..?

2. ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதற்காகவே தனியாக டேட்டா செலவிடுகிறீர்களா? ஒருவேளை அன்றைய தினத்துக்கான அல்லது அன்றைய மாதத்துக்கான டேட்டா முடிந்துவிட்டால் அதை டாப் - அப் செய்கிறீர்களா?

3. இணையத்திலோ அல்லது நண்பர்களிடமோ ஏதேனும் ஓர் ஆபாச வீடியோ பரவினால் உடனடியாக அதைப் பார்த்தே தீரவேண்டுமென்று துடிக்கிறீர்களா..?

4. அடிக்கடி பிரவுசிங் ஹிஸ்டரியை கிளியர் செய்கிறீர்களா? யாரேனும் உங்கள் மொபைலை கேட்டால் உடனே பதற்றமாகிறீர்களா..?
5. எதிர்பாலினத்தையோ அல்லது சினிமாக்களில் சாதாரணமாக வரும் முத்தக் காட்சியையோ பார்த்தால் உங்களுக்கு அதிகளவுக்கு ஈர்ப்பு ஏற்படவில்லையா?

இதில் அதிகம் ‘ஆம்’ வந்துவிட்டால், ஆபாச வீடியோ என்னும் போதைப் பழக்கத்துக்கு நீங்கள் அடிமையாகி இருக்கிறீர்கள் என அர்த்தம். உடனடியாக தக்க மனநல நிபுணரிடம் நீங்கள் ஆலோசனை பெறுவது நல்லது. ஆபாச வீடியோ பார்க்கும் போது மூளையில் இரு வேதியியல் மாற்றங்கள் உண்டாகின்றன என்கிறார் டாக்டர் வால்கோ.

இந்த வேதியியல் மாற்றத்தில் டோபமைன் மற்றும் செரோட்டனின் ஆகிய இரு கெமிக்கல்களை மூளை வெளியிடுகின்றன. இந்த இரண்டும்தான் மிகப்பெரும் ஹேப்பி கெமிக்கல்ஸ். இவற்றை ரொமான்டிக் கெமிக்கல்ஸ் என்றும் சொல்வார்கள். பொதுவாக காதல் அல்லது காமத்தால்... ஒருவர் மற்றவரைத் தொடும்போது இந்த கெமிக்கல்ஸ் அதிகம் சுரப்பவை. இதே கெமிக்கல்ஸ்தான் நம்மை அதிகம் சந்தோஷப்படுத்தக் கூடிய அல்லது இதயத்தை படபடக்க வைக்கக் கூடிய எந்த விஷயத்துக்கும் / செயலுக்கும் கூட சுரக்கின்றன.

ஆபாச வீடியோக்கள் பார்க்கும்பொழுது இந்த கெமிக்கல்ஸ் அதிகமாக சுரந்து போதுமான அளவுக்கு இன்பத்தைத் தருவதால் மூளை அங்கேயே ஃப்ரீஸ் ஆகி நின்றுவிடுகிறது. மேலும் திரும்பத் திரும்ப அந்த இன்பமே போதுமென மூளையும் திருப்தி அடைகிறது.

இதன் விளைவு, கண் முன்னால் இருக்கும் உண்மையை மறந்துவிட்டு ‘இதுதான் உண்மை’ என்னும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதனாலேயே ஆபாச வீடியோக்கள் பார்ப்போருக்கு பெரும்பாலும் காதல், காமம் போன்ற உணர்வுகள் நாளடைவில் குறைகின்றன. வெறுமனே வீடியோ பார்த்து பொழுதைப் போக்கி வாழ்க்கையிலிருந்தே தனிமைப்படுகின்றனர் என்கிறார் டாக்டர் வால்கோ.

பெரும்பாலும் ஆபாச வீடியோக்களில் நடிக்கும் நடிகர்களின் உடல் பாகங்கள் முதல் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள், உறவு கொள்ளும் முறைகள் என அனைத்தும் எதார்த்த வாழ்க்கையை மீறி போலித்தனமாக இருக்கின்றன... இதனால் சாதாரண வாழ்க்கையில் கிடைக்கும் ரொமான்ஸ், செக்ஸ் இவைகளில் மூளை திருப்தியடையாமல் போகிறது... விவாகரத்து, ரகசிய உறவு, பலருடன் உறவு என வளர்ந்து பலாத்காரத்தில் முடிகிறது என எச்சரிக்கிறார். ஹேப்பி கெமிக்கல்ஸான டோபமைனும் செரோட்டனினும் இதயம் வேகமாக துடிக்கும் எந்த செயல்களைச் செய்தாலும் சுலபமாக சுரக்கும். எனவே காலை எழுந்ததும் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சிகள் செய்தாலும் அவை சுரக்கும்.

இதுபோன்ற தருணங்களில் சுரக்கும் ஹேப்பி கெமிக்கல்ஸால் மன அழுத்தங்கள் ஏற்படுவதில்லை. மாறாக மூளையில் தன்னம்பிக்கையும் உற்சாகமுமே பூக்கின்றன.அதுவே ஆபாச வீடியோக்கள் பார்க்கும்போது இதே ஹேப்பி கெமிக்கல்ஸ் சுரந்தாலும் அவை மன அழுத்தத்தையும் குற்ற உணர்வையுமே ஏற்படுத்துகின்றன... இவை மூளைக்கு ஆபத்து... என விஞ்ஞானபூர்வமாகவும் மருத்துவரீதியாகவும் எச்சரிக்கிறார் டாக்டர் வால்கோ.
ஆபாச வீடியோக்களைத் தவிர்க்க என்ன செய்யலாம்..? மாற்று வழிகள் இருக்கின்றனவா..?

உள்ளன. அவற்றை எல்லாம் தனது தளத்தில் (https://fightthenewdrug.org/) விரிவாக டாக்டர் வால்கோ எழுதியிருக்கிறார். அத்துடன் அவரது குழுவினர் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகளும் அத்தளத்தில் உள்ளன. இந்த இடத்தில் இது அமெரிக்க நாட்டின் பிரச்னைதானே... என்ற கேள்வி எழலாம். கூடவே நம்மைச் சுற்றி இந்த ஆபாசப் படம் பார்க்கும் பிரச்னை எப்படி இருக்கிறது... என்ன செய்யலாம்... என்ற வினாக்களும் கிளை பரப்பலாம்.
இதற்கு விளக்கம் தருகிறார் Consultant Clinical Psychologist  ஆன டாக்டர் எஸ்.வந்தனா:

‘‘எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதான். ஆபாச வீடியோக்களை எப்போதாவது ஜாலியாகப் பார்ப்பது வேறு. ஆனால், ஒரு நாளைக்கு ஐந்து - ஆறு மணிநேரம் பார்க்கறதெல்லாம் ஆபத்து. நிச்சயமா அப்படிப்பட்டவங்க சிகிச்சை எடுத்துக்கிட்டே ஆகணும்.

போதைக்கு அடிமையாகறது மாதிரி ஆபாச வீடியோ பார்ப்பதற்கு அடிமையானவங்களோட மூளையின் வடிவமைப்பே மாறிடும். மன அழுத்தம், சோர்வு, பதட்டம், ஆளுமைத் தன்மை பிரச்னை, சீரற்ற மனநிலைனு எல்லாமே அழையா விருந்தாளிகளா வந்து குடியேறும்.
இந்த நிலையை நாங்க கோ-மர்பிட் (Co-morbid conditions) நிலைனு சொல்வோம். அதாவது ஒரு முக்கிய பிரச்னை... அதனுடன் இணைந்த கிளைப் பிரச்னைகள்.

எங்ககிட்ட வர்ற பலர் ஆபாச வீடியோ பார்த்தாதான் தங்களுக்கு உணர்ச்சியே வருவதா சொல்றாங்க. இது எவ்வளவு பெரிய ஆபத்தான சோகம்..? இப்படிப்பட்டவங்களுக்கு உறவு கொண்ட பிறகும் திருப்தி ஏற்படறதில்ல... வெறுமைதான் சூழுது. ஏன்னா, அவங்க பார்த்த ஆபாச வீடியோக்கள்ல வந்த மாதிரி, தாங்க உறவு கொள்ளலையேனு நினைப்பதுதான்.

நடைமுறை எதார்த்தம் வேற... ஆபாச வீடியோக்கள்ல காட்டப்படற மாய உலகம் வேற. இந்த உண்மை புரியாததுனால விவாகரத்து, தனிமைனு எக்ஸ்ட்ரீமுக்கு போறாங்க. இவங்களுக்கு சிகிச்சை மட்டுமே தீர்வு.சிலருக்கு நைட் ஒரு மணி நேரம் மட்டும் ஆபாச வீடியோ பார்த்தே ஆகணும். இதை பழக்கமாவே கடைப்பிடிப்பாங்க. இப்படிப்பட்டவங்க தங்களுக்குத் தாங்களே சுயகட்டுப்பாடு விதிச்சுக்கணும். அதாவது பார்க்கணும்னு தோணும்போது பார்க்காமல் இருப்பது... தள்ளிப்போடுவது... தாமதப்படுத்துவது.

இந்தக் கட்டுப்பாடுகளில் மூன்று நிலைகள் இருக்கு.

1. உள் எல்லை (Inner boundary) - அதாவது நம் உள் எண்ணங்களை நாமே புரிஞ்சு எல்லை அமைப்பது;

2. நடுத்தர எல்லை (Middle boundary) - தூண்டுதல்களை அடையாளம் கண்டு திசை திருப்புதல்;

3. வெளி எல்லை (Outer boundary) - பிரச்னைகளுக்கு காரணமா இருக்கற மொபைல், கணினி... மாதிரியான விஷயங்கள்ல இருந்து தூரமா இருப்பது. ஆரம்ப நிலைலயே இதை ஒவ்வொருத்தரும் சரி செய்துடறது அவங்களுக்கு மட்டுமில்ல... சமூகத்துக்கும் நல்லது...’’ என்கிறார் டாக்டர் வந்தனா.l

ஷாலினி நியூட்டன்

22. ரஞ்சன் கோகோய் எம்பி ஆனது  நீதித்துறைக்கு களங்கமா..? தெளிவுப்படுத்துகிறார் நீதியரசர் அரிபரந்தாமன்

“சட்டம் இயற்றும் நாடாளுமன்றமும் நீதித் துறையும் ஒருகட்டத்தில் தேசத்தைக் கட்டி எழுப்புவதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற வலுவான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால்தான் நான் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். நாடாளுமன்றத்தில் எனது இருப்பு நீதித் துறையின் கருத்துகளைச் சட்டம் இயற்றும் மன்றத்தின் முன் நேர்மறையாக வைப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்...”  

- இப்படிக் கூறியுள்ள, ரஞ்சன் கோகோய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்று வெறும் நான்கு மாதங்களே ஆன நிலையில், மாநிலங்களவை நியமன உறுப்பினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் பரிந்துரைக்கப்பட்டு, பதவியும் ஏற்றுக் கொண்டார்.
அசாம் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கோகோய், 1978ம் ஆண்டு தன் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். பின்னர் கவுஹாத்தி, பஞ்சாப், அரியானா ஆகிய உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து இறுதியாக உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை
நீதிபதியாக உயர்ந்தார்.

‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் (1) பிரிவு 80ன் உட்பிரிவு (a)ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி ரஞ்சன் கோகோயை மாநிலங்களவைக்கு ஏற்பட்ட காலியிடத்துக்காகப் பரிந்துரைப்பதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைகிறார்...” என்று அரசின் கெசட்டில்
குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்தியாவில் மத்திய அரசு, ஓர் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியை மாநிலங்களவைக்குப் பரிந்துரைத்தது இதுவே முதன்முறை.
கோகோய் தனது நீதிபதி இருக்கையில் இருந்த கடைசி காலங்களில் ரஃபேல் விவகாரம், மத்திய புலனாய்வு இயக்குநர் அலோக் வர்மா பதவி நீக்கம், அயோத்தி பாபர் மசூதி விவகாரம், சபரிமலை… உள்ளிட்ட நாட்டின் மிக முக்கிய விவகாரங்களில் தீர்ப்பளித்திருந்த நிலையில், இப்பதவி பல்வேறு கேள்விகளையும், ஊகங்களையும் எழுப்பியிருக்கிறது.

கோகோய் பதவியில் இருந்தபோது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் வந்தன. அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து, இந்த விஷயத்தில் ஓர் அவசர விசாரணைக்கு அவரே தலைமை தாங்கி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கடந்த ஜனவரி மாதத்தில் அரசாங்கம் ரஞ்சன் கோகோயின் சகோதரர் ஏர் மார்ஷல் (ஓய்வு) அஞ்சன் குமார் கோகோயை வடகிழக்கு கவுன்சிலின் (என்.இ.சி) முழுநேர அதிகாரபூர்வமற்ற உறுப்பினராக நியமித்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரசு பதவி வகிப்பதற்கு எதிரான கருத்தை சட்ட ஆணையம் கூறியிருக்கிறது. 1958ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய சட்ட ஆணையம் தனது 14வது அறிக்கையை சமர்ப்பித்தது.அதன் 28வது பத்தியில், ‘‘உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஓய்வுபெற்ற பிறகு எந்தவொரு நீதிமன்றத்தின் முன்பாகவோ அல்லது அதிகாரத்துக்கும் முன்பாகவோ வழக்கறிஞராக வாதிட தடை உள்ளது. இதன் விளைவாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிலர், தங்களின் ஓய்வுக்குப் பிறகு அரசாங்கத்தின் கீழ் முக்கியமான பதவிகளை பெற்றுள்ளனர். அதுமட்டுமில்லாமல் சேம்பர் அமைத்து தங்களது வழக்கறிஞர் பணியையும் தொடர்கின்றனர்.

ஓய்வுபெற்ற பிறகு வழக்கறிஞர் பணியை தொடங்குவது, ஓய்வுபெற்ற நீதிபதிகளின் கவுரவத்துக்கு ஒத்துப்போகிறதா என்ற சந்தேகம் உள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெற்ற பிறகு அரசாங்கத்தின் பணிகளை விரும்புவது, தெளிவாக விரும்பத்தகாதது என்பதில் சந்தேகமில்லை...” என்று
தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் இத்தகைய சலுகைகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏன் எதிர்க்க வேண்டும் என்பதற்கான காரணத்தை சுட்டிக்காட்டியுள்ள சட்ட ஆணையம், “கீழ்நிலை நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் வாதி மற்றும் பிரதிவாதியாக இரண்டு குடிமகன்கள் இருப்பர். அதே நேரம் நாட்டின் உயர், உச்ச நீதிமன்றங்களில் பல வழக்குகளில் மத்திய அரசும் ஒரு கட்சிக்காரராக உள்ளது.

இந்த வழக்குகளை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி, ஓய்வுக்குப் பிறகு அரசு வழங்கும் பதவியை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், மத்திய அரசு வழக்குகளில் அவருடைய பார்வை என்னவாக இருந்திருக்கும் என்ற சந்தேகம் சாமான்ய மக்களுக்கு எழும். இந்த நடைமுறை நீதிபதிகளின் சுதந்திரத்தை பாதிக்கும் போக்கைக் கொண்டுள்ளது என்றும், அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் தெளிவாகக் கருதுகிறோம்...” என்று கூறியுள்ளது.

சட்டம் இவ்வாறு சொல்ல, உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷனின் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான துஷ்யந்த் தேவ், “இது முற்றிலும் அருவெறுப்பானது. இது ஒரு தெளிவான வெகுமதி. நீதித் துறையின் சுதந்திரத்தின் ஒற்றுமை முற்றிலும் அழிக்கப்படுகிறது...” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘‘என் 40 ஆண்டுகால நீதித்துறை வாழ்க்கையில் ரஞ்சன் கோேகாய் போல ஒரு நபரைப் பார்த்ததில்லை...” என்று முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு குற்றம் சாட்டியுள்ளார்.

பல்வேறு தரப்பினரிடமிருந்து முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது விமர்சனங்கள் குவிந்து கொண்டிருக்கும் இவ்வேலையில், இவ்விமர்சனங்கள் ஏன் என்பது பற்றி தெளிவாக்கினார் முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன்.

‘‘இந்த நியமனம் நீதித்துறை மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க நேரிடும் என்கிற பொதுவான விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. சட்டத்துறையில் ஒருவர் ஆற்றிய அரும் பணிக்காக கொடுக்கப்படுவது, வழக்கறிஞர் நரிமனுக்கு வழங்கப்பட்டது. இப்போது கொடுக்கப்பட்டிருப்பது அரசின் பரிசு. பணிக் காலத்தில் கோகோய் அளித்த தீர்ப்புகளான அயோத்தி, ரபேல், சபரிமலை… போன்ற வழக்குகள் சந்தேகத்துக்கு இடம் அளிப்பதாக கருதப்படுகிறது.

சபரிமலை வழக்கில், தீபக் மிஸ்ரா ஓய்வுக்குப் பின், நான்கு பேர் ரிவியூவில் இவரும் ஒரு நபர். அந்த வழக்கில் சம்பந்தமே இல்லாமல், ‘இஸ்லாம் பெண்கள், பார்சி இன பெண்கள் சம்பந்தமான வழக்குகளை எல்லாம் சேர்த்து விசாரிக்கணும்’ என்றார்.   இதேபோல் 370 சம்பந்தமான வழக்குகள் விசாரிக்கும் பெஞ்சுக்கு முக்கியத்துவம் தராததோடு, உமர் அப்துல்லா உட்பட, சிறையில் இருப்பவர்களுக்கான வழக்குகளுக்கும் முக்கியத்துவம் தரவில்லை. இதையெல்லாம் வைத்து ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது கேள்விக்குறியாக இருக்கிறது...” என்று கூறும் அரிபரந்தாமன், “கோகோய் பேச்சுக்கும், செயலுக்கும் நடைமுறையில் மலையளவு வித்தியாசங்கள் இருக்கிறது...” என்கிறார்.

‘‘12-01-2018ல், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், ரஞ்சன் கோகோய், ஜே.செலமேஸ்வர், மதன் பி லோகூர் ஆகியோர் ஊடகத்தை சந்தித்து, ‘இந்த நாட்டுக்கு நாங்கள் பட்ட கடனை திரும்பச் செலுத்துகிறோம்’ என்று கூறி, ‘இப்போது இருக்கக் கூடிய தலைமை நீதிபதி சில அமர்வுகள் அரசின் தேவைக்கு ஏற்றார் போல் அமைக்கிறார். முக்கியமான வழக்குகளுக்கு இப்படி நடந்து கொள்கிறார்...’ என்று கடுமையான குற்றச் சாட்டினை முன் வைத்தார்கள்.

இதனை சுட்டிக் காட்டி குரியன் ஜோசப், ‘நீதித்துறையின் சுதந்திரத்தைக் காப்பாற்ற அத்தகைய மனத்திடத்துடன் போராடிய ரஞ்சன் கோகோய்தான் இப்போது நீதி சுதந்திரத்தையும் சார்பின்மையையும் சமரசம் செய்துகொண்டார் என்பது அதிர்ச்சியளிக்கிறது...’ என்று பகிர்ந்திருக்கிறார்.
கோகோய், தலைமை நீதிபதி ஆவதற்கு முன் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஃபவுண்டர் பிரியங்காவின் நினைவு நாள் சொற்பொழிவில், ‘நாய்ஸி ஜட்ஜஸ் ஆர் நெசசரி ஃபார் டுடே’ என்று கூறினார். ஊடகத்தினர் என்றால் சத்தம் போடுபவர்கள், ஜட்ஜ் என்றால் அமைதியாக இருப்பவர்கள் என்று
வழக்கமாக சொல்லப்படுவதற்கு மாறாக பேசினார்.

பணி ஓய்வுக்குப் பிறகு அரசுப் பணிகள் வாங்குவது நீதித் துறைக்கு கலங்கம் என்று சொன்னவர், இப்போது கலங்கம் இல்லை என்கிறார்! ஒரு முறை முன்னாள் சட்ட அமைச்சர் ஜெட்லி ‘அவுட் லுக்’ பத்திரிகையில், ‘ஓய்வு பெறக்கூடிய நீதிபதிகள், ஓய்வு பெற்றவர்களை சந்திக்கும் போதெல்லாம் என்னிடம் பையோ டேட்டாவை கொடுப்பது மிகப்பெரிய சோம்பலாக இருக்கும்...’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எந்தவிதமான அரசு பணிகளில் எடுக்கக் கூடாது என்கிற சட்டம் வர வேண்டும்...” என்று அழுத்தம் திருத்தமாக சொன்ன அரிபரந்தாமனிடம், இந்த விஷயத்தில் மோடிக்கு முன்னோடியாக இந்திரா காந்தி இருக்கிறார் என்கிற ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது பற்றி கேட்டோம்.

“கோகோய் போல் ரங்கநாதன் மிஸ்ராவுக்கும், பஹருல் இஸ்லாமுக்கும் நான்கு மாதத்தில் பதவி வழங்கப்படவில்லை. பஹருல் இஸ்லாம், 1983 ஜனவரியில் உச்ச நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற பின், அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியால் ஜூன் மாதம் மேலவைக்கு அனுப்பப்பட்டார். இவர் நீதிபதியாக ஆவதற்கு முன்பு 1962 முதல் 1972வரை மாநிலங்களவை எம்பியாக இருந்தவர்.   

இதையும் நியாயம் என்று சொல்ல மாட்டேன். ஆனால், அதைவிட மோசமாக இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது சட்டத்துக்கு ஆற்றிய பணிக்காக அல்ல, பிஜேபிக்கு ஆற்றிய பணிக்காக வழங்கப்பட்ட பதவி என்றே தோன்றுகிறது.  நாரிமன், பராசுரர் சட்டத்துறைக்கு ஆற்றிய பணிக்காக கொடுக்கப்பட்டதா என்ற கேள்வியும் இருக்கிறது. காங்கிரசும் இந்த தவறுகளை செய்தார்கள். இன்னும் நிறைய ட்ரைபூனல் பதவிகள் இருக்கின்றன. ஓய்வு பெற்ற பலர் போட்டி போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அரசியல் சம்பந்தமான பதவிகளுக்கு செல்லாமல் பொது காரியங்களில் ஈடுபடலாம். அப்படியல்லாமல் கட்சி அரசியல், ஆளுங்கட்சிக்கு சாதகமாக போகும்போது மிகப்பெரிய சந்தேகத்தை மக்கள் முன் விதைக்கிறார்கள். அது நீதித்துறையின் பேரில் உண்டாகிறது. நீதித்துறையின் நம்பிக்கை தகர்க்கப்படுகிறது என்பதுதான் நம் கவலை. கோகோய்க்கு பதவி கொடுத்திருப்பதில் அல்ல…” அழுத்தம்திருத்தமாக சொல்கிறார் நீதியரசர் அரிபரந்தாமன்.           

அன்னம் அரசு