லவ் ஸ் டோரி-காதல் என்பது ஒன்றை அடைதல் அல்ல... உணர்தல்!



இயக்குநர் திரு - கனி

இயக்குநர் திரு, தமிழ் சினிமாவின் நம்பிக்கையூட்டும் இயக்குநர். வெற்றிகரமான, வித்தியாசமான திரைக்கதைகளில் கவனம் ஈர்த்தவர். ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘மிஸ்டர் சந்திரமெளலி’ என பாய்ச்சல் காட்டியிருப்பவர். சற்றே காலத்திற்கு முன்நகர்ந்து செல்லும் கதை சொல்லி. காதல் மனைவி கனியோடு சேர்ந்து அவர் தரும் பக்கா காதல் பேக்கேஜ் இது.

திரு:

எந்த வரைபடத்துக்குள்ளும் சிக்காத தேசம் காதல்னு சொல்வாங்க. அதேமாதிரி எந்த கணிதத்துக்குள்ளும் அடங்காத மனக்கணக்கும் காதல்தான்.
இன்னும் இறுக்கிச் சொன்னா காதல் இரண்டு இதயங்களுக்கு மட்டுமே கேட்கிற இன்னிசைனு சொல்லிடலாம். என்னைப் பொறுத்தவரை காதல் என்பது ஒன்றை அடைதல் அல்ல; ஒன்றை உணர்தல். பகிர்தல். சுகம், சோகம்னு எல்லாத்திலும் கூட நிக்கிறது மாதிரி ஒரு நீங்காத உறவு. குடியாத்தம் என் சொந்த ஊர். உலகத்துல பாதிப்பேருக்கு நடக்கிற மாதிரி, நண்பனின் தங்கையை காதலிக்கிற மாதிரி ஒரு நிலை வருது. அவங்க மதம் வேற.

ரெண்டு வருஷம் இப்படியே போறப்ப அவளுக்குத் திருமணம் ஆகுது. கல்யாணத்துக்கும் போய் ஓரமாக நின்னு திரும்புறேன். இனிமேல் காதலும், கல்யாணமும் கிடையாது. சினிமாவுக்குப் போறோம், காதல் படங்களா எடுத்துத் தள்ளுறோம்னு ஒரு முடிவோடு சென்னைக்கு வர்றேன். இங்கே வந்ததும் ஒரு சீரியல்ல சேர்ந்திடுறேன்.

தங்கின இந்த அபார்ட்மெண்ட் வளாகத்திற்கே அடையாளம் இயக்குநர் அகத்தியன் பேருதான். அவர் பெரிய இயக்குநர். அடுத்தடுத்து ரெண்டு, மூணு ஹிட் கொடுத்திட்டு, மும்பையில் இந்திப்படம் எடுத்திட்டு இருக்கார். கனியை ஸ்கூலுக்கு போகும்போதெல்லாம் பார்ப்பேன். முதல் பார்வையில் எந்த
கெமிஸ்ட்ரியும் நடக்கலை. பெரிய டைரக்டர் பொண்ணு, கெத்து போலனு நினைச்சிட்டேன்.

பெயர் விசாரிச்சா, ‘கன்னியம்மாள்’னு காதுல விழுது. அகத்தியன் சார் வைக்கிற பெயரா இதுனு ஆச்சரியமா இருந்துச்சு. அவங்க தங்கச்சி நிரஞ்சனிகிட்டேயே கேட்டுட்டேன். பெயர் தெரிந்திருச்சு. கனி. ‘அலைபாயுதே’வுல வந்த ஷாலினி மாதிரி இருக்காங்கனு சொன்னேன்.
தங்கச்சி, நான் சொன்னதை போஸ்ட் பண்ணிட்டாங்க போல. பிறகு என்னைப் பார்க்கும்போதெல்லாம் தலைகுனிஞ்சிட்டு போறதையும், கன்னங்கள்ல வெட்கம் இருக்கிறதையும் நான் பார்த்தேன்.

கனி:

இப்பதான் என் பொண்ணு வந்து, ‘இங்கே ஒரு பையன் எங்கிட்ட ஐ லவ் யூ சொல்லிட்டாம்மா... பக்கத்தில இருந்த ரெண்டு அத்தைங்க, அவன் கூட பேச வேண்டாம்னு சொல்லிட்டாங்க’னு சொன்னாள். ‘நான் அப்பா, அம்மாவை லவ் பண்றேன். அதேமாதிரியே உன்னையும் லவ் பண்றேன்னு சொல்லிடு. அதுக்குமேல இதுல ஒண்ணுமே கிடையாது. இதுக்கு ஏன் பேசாம இருக்கணும். பேசாட்டிதான் அவன் வித்
தியாசமா எடுத்துக்குவான்’னு சொன்னேன்.

‘போம்மா, போர்’னு சொல்லிட்டு அவள் போயிட்டாள். ஆனா, நிஜத்துல இது போர் அடிக்கிற விஷயம் கிடையாது. விட்டுக் கொடுப்பதே லவ். ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் மட்டும் வர்றதில்லை காதல். எல்லோர்கிட்டயும் படர்ந்து பெருகுவது. அன்பு பெருகாத உலகத்துல வாழ்றதும் ஒண்ணு தான், வாழாமல் போறதும் ஒண்ணுதான்.

எங்க அப்பா ‘உன் இரண்டு தங்கச்சியையும் நீதான் நல்லபடியா பார்த்துக்கணும்’னு எப்பவும் சொல்வார். விஜி, நிரஞ்சனி ரெண்டு பேரும் இவர்கிட்டே பேசினா நானே பேசக்கூடாதுனு சொல்லியிருக்கேன். எங்க வீட்டிற்கு எதிரே திரு குடியிருந்தார். அவரோட ஃப்ரண்ட்ஸ் கேங் இருந்தது. அதுல இவர்தான் ப்ளூ ஷர்ட் போட்டுக்கிட்டு அதிகம் தென்படுவார்.

இத்தனை பேர்ல என்னைத்தான் பிடிச்சிருக்குனு சொன்னதும் இவரைப் பார்த்தாலே வெட்கமாகப்போச்சு. ஒரு நாள் போன்ல, ‘ஒரே டென்ஷன். உங்ககிட்டே பேச ஒண்ணே ஒண்ணுதான் இருக்கு. உங்க முகத்திற்கு நான் அடிமை’னு சொன்னார். அப்புறம் ஒருநாள் போன்ல ப்ரப்போஸ் செய்தார். ‘அப்பாகிட்டே சொல்றேன். அவர் ஓகே சொல்லாம நான் எதுவும் சொல்ல முடியாது’னு சொல்லிட்டேன்.

ஒருநாள் அப்பாகிட்டே போய் மெதுவா உட்கார்ந்தேன். ‘அப்பா ஒருத்தர் எனக்கு ப்ரப்போஸ் பண்ணியிருக்கார். எனக்கும் பிடிக்குது. ஓகே சொல்லலாம்னு தோணுது’னு சொன்னேன். ‘என்ன பண்ணிட்டு இருக்கார்’னு கேட்க, ‘சீரியல்’னு சொல்றேன். அப்பாவிற்கு முகம் மாறிடுச்சு. ‘9  to 5 வேலைன்னா ஓகே சொல்லியிருப்பேன். சினிமான்னா படம் வரும், வராது. எனக்கு இதுல உடன்பாடில்லை. இதுக்குப் பிறகு உன் முடிவு’னு சொல்லிட்டார்.

லவ் எல்லாத்தையும் புரட்டிப்போடும் இல்லையா? ‘எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. பார்க்கலாம். காத்திருக்கலாம்’னு திருகிட்ட சொல்லிட்டேன். பிறகு என் தீவிரத்தைப் பார்த்திட்டு, ‘நல்ல பையனானு விசாரிக்கலாம்’னு அப்பா சொன்னார்.

திரு:

அகத்தியன் சார் லீ கிளப்புல ஷட்டில் விளையாடுவார். போய் நிற்பேன். நான் ஒருத்தன் நிற்கிறதையே பார்த்த மாதிரி கண்டுக்கமாட்டார். அப்புறம் ஒருநாள் அவரோட அசிஸ்ட்டன்ட்ஸ் மூணு பேர் என்னைப் பார்க்க வர்றாங்க. நிறைய விசாரிக்கிறாங்க. நான் ஒரு நிமிஷம்னு வெளியே போய் மும்பையில் இருக்கிற அவருக்கு போன் போட்டு, ‘சார், மூணு பேரை விசாரிக்க அனுப்பியிருக்கீங்க. நீங்க என்கிட்டயே எதையும் கேட்கலாம். ஏன் ஆள் அனுப்பி தகவல் சேகரிக்கணும்’னு அணுக்கமா கேட்டேன்.

அவருக்கு நான் கேட்டவிதம் பிடிச்சிருக்கு. பிறகு, அகத்தியன் சார் தலைகீழா மாறிட்டாரு. என்னை வீட்டுக்குக் கூப்பிட்டுப் பேசுறார். எப்ப வேணும்னாலும் வீட்டிற்கு வந்து போக அனுமதி கிடைக்குது. படம் ரிலீஸ் ஆன சமயம் வந்து பார்க்குறார். ‘ஒரு சமயம் உடனே படம் வரும். இன் னொரு சமயம் தாமதம் ஆகலாம். நீ அவரை நல்லா கவனிச்சுப் பார்த்துக்கணும்’னு கனிகிட்ட சொல்லி நல்லபடியா கல்யாணம் செஞ்சு அனுப்பி வைச்சார்.

கனி:

கல்யாணம் ஆன பிறகு திரு வேற ஆள். கல்யாணம் ஆன அந்த நாளிலிருந்து நம்ப முடியாத மாற்றம். முன்னாடி அப்படி ஒரு கோபம் வரும். அதை உடனே விட்டொழிச்சார். எப்ப சண்டை வந்தாலும் நான்தான் ஸாரி கேட்கணும். இப்ப அவரும் முந்திக்கிட்டு ஸாரி கேட்குறார்.
எட்டு வருஷ லவ்… 12 வருஷ வாழ்க்கை. எங்களுக்குனு பொதுவான கனவு இருந்தது. அகத்தியன் பொண்ணு... அதனால திமிரா இருக்குனு சொல்லிடக் கூடாதுனு ரொம்ப கவனமா இருந்தேன்.

சண்டை போட்டா ரெண்டு நாளுக்கு மேல இவரோட பேசாம இருக்கவே முடியாது. ஒரு நாள் மட்டுமே தாங்கும். வானவில் வாழ்க்கை மாதிரி ஒண்ணை பேசிப் பேசி மனசளவுல தயாரிச்சு வைச்சிருந்தோம். அதுக்காகவே வாழ்க்கையை ஆரம்பிச்சு, சேர்ந்து வாழ்ந்து, விட்டுக் கொடுக்கிறதிலும் வெற்றி உண்டுனு உணர்ந்தேன்.

நம்பிக்கையூட்டும் காதலே நம்மை நமக்குள் இழக்க வைக்கும். எப்போதும் மூளையின் ஒரு ஓரத்துல அல்லது இதயத்தின் பெரிய பாகத்துல அது ஜீவனோடு இருக்கத்தான் செய்யும். ஜீவனை இறுக்கத்தான் செய்யும். வாழ்க்கைக்கு புத்தி முக்கியம். வாழ்வதற்கு மனசே முக்கியம். இவரோட வாழ்றது கஷ்டம். இவர் இல்லாமல் வாழ்றது அதைவிட கஷ்டம்! அதனால் அவர் அன்புல ஆட்டுக்குட்டியா அடைக்கலம் தேடுறேன்.

திரு:

எதையும் நான் கனியிடம் மறைக்கிறதில்ல. என் அவமானங்கள், அசிங்கங்கள், எண்ணங்கள், கோபங்கள், பிரியங்கள்னு அத்தனையும் அவளிடம் பகிர்றதால ரகசியங்கள்னு எதுவுமில்ல. அவள் தீவிர இடதுசாரி. பேசுறப்ப அரசியல், சமூகப் பிரச்னைகள்ல அனல் பறக்கும். நான் வலதுசாரி கூட இல்ல. இன்னும் ஒரு வழியிருக்கு, பார்க்கலாம்னு சொல்ற ஆளு. எங்களுக்குள்ள நல்ல கருத்துச் சுதந்திரம் இருக்கு. இந்தத் தீராத அன்பும், காதலும் மட்டுமே ஒவ்வொரு நாளையும் சந்தோஷமா நகர்த்திட்டு இருக்கு!

செய்தி:  நா.கதிர்வேலன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்