காந்தியை சுட்ட தோட்டா குவாலியரில் இருந்து வந்ததா..?



ஆங்கிலேயர் காலம் முதல் இன்று வரை அரசியல் அதிகாரத்தை அனுபவித்து வரும் ஒரு குடும்பத்தின் கதை

அமுல்பேபி போல இருக்கும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சிக்கே கொரோனா வைரஸ் ஆக மாறியிருக்கிறார்!மத்தியப் பிரதேச மாநிலம் 230 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இரு இடங்கள் காலியாக உள்ளன. ஆக மொத்தமுள்ள 228 தொகுதிகளில் காங்கிரஸ் 114 தொகுதிகளிலும் பாஜக 107 தொகுதிகளிலும் வென்றன. பகுஜன் சமாஜ் 2, சமாஜ்வாடி ஒன்று, சுயேட்சைகள்
4 என எஞ்சிய இடங்களைக் கைப்பற்றின.

எனவே 15 வருடங்களாக ஆட்சியில் இருந்த பாஜகவை அப்புறப்படுத்திவிட்டு 2018ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. இதையே கடந்த 13 மாதங்களாக மத்திய பிரதேசத்தை காங்கிரஸ் ஆள்கிறது என்று சொல்லலாம்.ஆனால், மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சி சார்பில் சீனியரான கமல்நாத்தா அல்லது ஜூனியரான ஆதித்ய சிந்தியாவா என்ற கேள்வி 2018லிலேயே எழுந்தது. கடைசியில் ராகுல் காந்தி ஆசியுடன் கமல்நாத் முதல்வரானார்.

சரி... மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பதவியாவது தனக்குக் கிட்டும் என சிந்தியா எதிர்பார்த்தார். அதுவும் கிடைக்காதபோது போபால் முதல் தில்லி வரை சிந்தியாவின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் இதை கண்டுகொள்ளவில்லை. ஆனால், பாஜக இதை கண்டு கொண்டது! விளைவு, காய்களை கச்சிதமாக நகர்த்தத் தொடங்கியது.
இதன் விளைவுதான் ஆதித்ய சிந்தியாவின் வெளியேற்றம். ம்ஹும். தனியாக காங்கிரஸை விட்டு அவர் விலகவில்லை. மாறாக தன்னுடன் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் அழைத்துக் கொண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறியிருக்கிறார். வெளியேறியவர்கள் பாஜகவுக்கு ஆதரவளிக்கிறார்கள்!ஸோ, மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்கிறது! செய்தித்தாள்களை தொடர்ந்து படிப்பவர்களுக்கும் நியூஸ் சேனலை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கும் இதெல்லாம் பழைய செய்திகளாகத் தெரியும்!

என்றாலும் அனைவருக்குள்ளும் யார் இந்த ஆதித்ய சிந்தியா என்ற கேள்வி தொண்டையில் சிக்கிய முள்ளாக துருத்திக் கொண்டிருக்கிறது.
இதற்கான ஒரே பதில் ஆதித்ய சிந்தியா, ராஜ பரம்பரையை சேர்ந்தவர் என்பதுதான்! எஸ். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு மன்னராக திகழ்ந்தார்கள்... இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மத்திய மாநில அமைச்சர்களாக தொடர்ந்து இருக்கிறார்கள்! இப்படி பதவியில் பிறந்து பதவியில் வளர்ந்த ராஜ வம்சம்தான் ஆதித்ய சிந்தியாவின் குடும்பம்.

கடந்த 18 வருடங்களில், 17 வருடங்கள் மத்திய அமைச்சராகவும், எம்பியாகவும் இருந்தவர் ஆதித்ய சிந்தியா என்பது ஒருசோறு பதம்.
அப்படிப்பட்டவர் கடந்த மார்ச் 10ம் தேதி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, தில்லியில் பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்தார்.

இந்த மார்ச் 10ம் தேதி, மாதவராவ் சிந்தியாவின் பிறந்தநாள்! ஆதித்ய சிந்தியாவின் தந்தையான மாதவராவ் சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர் மட்டுமல்ல... காங்கிரஸ் கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரும் கூட! 1967ம் ஆண்டு ராஜமாதா என்ற கவுரவ பெயருடன் அழைக்கப்பட்டு வந்த விஜய ராஜி சிந்தியா, 36 எம்எல்ஏக்களுடன் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கலைத்தார்.

இவர் வேறு யாருமில்லை... இன்று 22 எம்எல்ஏக்களுடன் மத்திய பிரதேச காங்கிரஸ் ஆட்சியை கலைத்திருக்கிறாரே... அந்த ஆதித்யா சிந்தியாவின் பாட்டிதான்! அதாவது மாதவராவ் சிந்தியாவின் தாய். பாட்டிக்கு அன்று கிடைத்த வரவேற்பு இன்று பேரனுக்கு பாஜகவிடம் கிடைக்குமா..? உறுதியாக சொல்ல முடியாது. ஏனெனில் 2017ம் ஆண்டு மத்திய பிரதேச பாஜக முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சோஹன், சிந்தியாவின் குடும்பத்தை நார் நாராக கிழித்து தொங்கவிட்டது அம்மாநில மக்கள் மனதில் கல்வெட்டாக பதிந்திருக்கிறது.

அந்த குற்றச்சாட்டுகள் சாதாரணமானதல்ல.ஜான்சி ராணி லட்சுமி பாய் ஆங்கிலேயரை எதிர்த்து போராடியபோது விஜய ராஜ் சிந்தியாவின் அரச குடும்பம் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்தது! போலவே லக்‌ஷ்மி பாய்க்கு நொண்டி குதிரை அனுப்பியது இவர்கள் குடும்பம் என்று குவாலியர் முனிசிபாலிட்டின் அங்கீகரிக்கப்பட்ட இணையத்தில் எழுதினர் பாஜகவினர்.

நொண்டிக் குதிரையை நாங்கள் அனுப்பியது உண்மையில்லை என்று சிந்தியா குடும்பம் மறுத்தாலும், 1987ம் ஆண்டு முதல் இந்த கறை இவர்கள் மீது படிந்துள்ளது.2006ம் ஆண்டு ஜோதிர் ஆதித்யா சிந்தியாவின் அத்தையும், ராஜஸ்தான் முதலமைச்சருமான பாஜகவை சேர்ந்த வசுந்தரா ராஜி, இந்தூரில் லக்‌ஷ்மி பாய் சிலை திறப்பின் போது கடும் விமர்சனங்களுக்கு ஆளானார்.     

விஜய் ராஜ் சிந்தியா காங்கிரசில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். அதேநேரம் அவரது கணவர் ஜிவாஜிராவ் சிந்தியா, குவாலியர் இந்து மகா சபையின் முக்கிய புரவலராக இருந்தார். காந்தியை சுட்ட தோட்டா குவாலியரிலிருந்துதான் வந்தது என்கிறது செய்தி! இது பற்றி விரிவான விசாரணை நடக்கவில்லை. சிந்தியாவின் குடும்பத்தினரோடு நேரடி தொடர்பில் கோட்சே இல்லை என்றாலும், தோட்டா குவாலியர் அரச குடும்பத்தினரோடு தொடர்பு கொண்டது என்கிற வாதம் இன்றளவும் நிலவுகிறது!  

சமீபத்தில் கூட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங், “காந்தியை சுட்ட தோட்டா எங்கிருந்து வந்தது என்பதற்கான விசாரணை தேவை...” என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதியில் காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் பெயர் எடுக்காத போது, 1957ம் ஆண்டு விஜய் ராஜ் சிந்தியாவை அணுகிய நேரு, குவாலியர் மக்களவை தொகுதியில் அவரை நிறுத்தி, இந்து மகா சபையை தோற்கடித்தார்.

நல்லதொரு உறவு முறையிலும், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கால் ஊன்றவும் முக்கிய காரணமாக இருந்த விஜய் ராஜ் சிந்தியா, அப்போதைய காங்கிரஸ் முதல்வர் டிபி.மிஷ்ராவை, தேர்தல் இட ஒதுக்கீட்டுக்காக 1967ம் ஆண்டு சந்திக்கச் சென்றார். அப்போது சில காரணங்களுக்காக 15 - 20 நிமிடங்கள் வெளியே அவர் காக்க வைக்கப்பட்டார்.

இதனையடுத்து தனது ஆதரவு 36 எம்எல்ஏக்களுடன் விஜய் ராஜ் சிந்தியா வெளியேறினார். இதனையடுத்து முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத கோவிந்த் நாராயண சிங், 20 மாதகாலம் மத்திய பிரதேச ஆட்சியில் இருந்தார். காங்கிரசிலிருந்து புறக்கணிக்கப்பட்டப்பின் 1971ம் ஆண்டு இந்திரா காந்தி காலத்தில், தனது குடும்ப பாரம்பரியத்தை காப்பாற்ற, ஜன சங்கத்துடன் இணைந்து மூன்று மக்களவை தொகுதியில் வென்றார் விஜய் ராஜ் சிந்தியா.

விஜய் ராஜ் சிந்தியா இறந்த பின் காங்கிரசுடன் நல்லுறவு கொண்டு மார்ச் 10ம் தேதி வரை காங்கிரசின் அங்கமாக இருந்தது மாதவராவ் சிந்தியாவின் குடும்பம்.  பிரிட்டிஷ்சார் காலத்திலிருந்தே மரியாதையுடன் நடத்தப்பட்டு வந்த இவர்களது குடும்பம், சுதந்திர இந்தியாவில் அதே போன்றதொரு சூழலை எதிர்பார்த்து, அதை நிறைவேற்றியும் வந்தது என்பதே வரலாறு. அதேநேரம் பிரிட்டிஷ் காலத்திலிருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நெருக்கமாகவே இக்குடும்பம் இருந்து வருகிறது.  

இப்படி அதிகாரத்தில் இருக்கும் பாரம்பரியமிக்க சிந்தியா குடும்பம், போட்டி, பொறாமைகளால் சீரழிந்தது. கோடிக்கணக்கான சொத்துக்கள் சம்பந்தமாக இன்று வரை சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. அரசியல் கொள்கைகளையோ அல்லது மக்களின் நலனையோ கருத்தில் கொள்ளாமல் தங்கள் குடும்பத்தின் பாரம்பரியத்தையும், அந்தஸ்தையும் காப்பதற்காகவே பல சச்சரவுகளுக்கும் நடுவே சிந்தியா குடும்பம் அரசியலில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து மத்திய பிரதேச அரசியலை பார்வையிட்டு வருபவர்கள் சொல்கிறார்கள்.அதில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது!

அன்னம் அரசு