கொரோனாவால் உலகமே பிச்சை எடுக்கப் போகிறது?ஐக்கிய நாடுகள் சபையின் வணிக சபை, ‘கொரோனாவால் உலகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கும். இதனால், எல்லா நாடுகளும் உடனடியாகத் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று எச்சரித்துள்ளது. இந்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி இரண்டு சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது என்றும், இதனால் கிட்டத் தட்ட எழுபது லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உலகப் பொருளாதாரப் பின்னடைவு ஏற்படும் என்றும் அந்த அமைப்பு சொல்கிறது.

இந்த கொரோனா வைரஸ் பரவல் ஒவ்வொரு நாட்டையும் எந்தெந்த விதத்தில் பாதிக்கும் என்பதைத் துல்லியமாக வரையறுக்க முடியாது. ஆனால், பாதிப்பு நிச்சயம். எந்த நாட்டாலும் இதிலிருந்து தப்பிக்க முடியாது என்பது நிதர்சனம். சரி... இந்த வைரஸ் தொற்று தோன்றிய நாடான சீனாவில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?

பொருளாதாரப் பின்னடைவை எதிர்கொள்ள தேவையான விரிவாக்க நடவடிக்கை,கள் முடுக்கிவிடப்படும் என்றும். வரிக்குறைப்பு, அரசு முதலீடு அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் இந்த இழப்பு சரிசெய்யப்படும் என்றும் அந்நாடு சொல்கிறது.

அதே சமயம் அமெரிக்காவில் நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. அடுத்த வருடம் தேர்தல் வரவுள்ள நிலையில் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காகவும் மக்களின் வாங்கும் சக்தியை ஊக்கப்படுத்தவும் வரிக் குறைப்பு இருக்கலாம் என நிபுணர்கள்
கருதுகிறார்கள்.  ஏற்கெனவே, பரிதாபமான பொருளாதார நிலையில் இருக்கும் ஐரோப்பிய நாடுகளின் பாடுதான் திண்டாட்டம். அங்கு கொரோனாவும் வந்து படுத்தி எடுப்பதால், தீப்பட்ட காயத்தில் தேள் கொட்டிய கதையாகத் தவிக்கிறார்கள். இத்தாலியும் ஜெர்மனியும் ஒடுங்கிப்போய் இருக்கின்றன.

தென் அமெரிக்கக் கண்டமும் விதிவிலக்கல்ல. குறிப்பாக, அர்ஜென்டினா மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகள், வளங்களை உற்பத்தி செய்யும் நாடுகள் எப்படியும் தப்பிவிடும். கடன் வாங்கிக் குடும்பம் நடத்தும் நடுத்தர வர்க்கம் போல வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள்தான் கொரோனாவால் மிக மோசமான பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கும் என்கிறார்கள். இங்கு பொருளாதார வளர்ச்சி குறைந்தபட்சம் 0.5% என்ற விகிதத்திலேயே இருக்குமாம்.

மொத்தத்தில் உலக அரங்கில் கொரோனாவின் வருகை திடீர் பொருளாதார முடக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மட்டும் உண்மை.
கடந்த ஆண்டு சீனாவின் வூகானில் கொரோனா பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததுமே உலகப் பொருளாதாரத்தின் வயிறு கலங்கிவிட்டது. பயந்தது போலவே கடந்த பிப்ரவரி 24ம் தேதி வணிக உலகில் கொரோனா நுழைந்தது.

அன்று முதல் ஆறேழு நாட்கள் தொடர்ந்து பங்குச் சந்தை பரபரப்பாக இருந்தது. வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்தன. சுமார் பத்து சதவீதம் அளவுக்கு அதன் உச்ச வளர்ச்சி சரிந்தது. இதையெல்லாம் வைத்துக்கொண்டு உலகப் பொருளாதாரம் கொரோனாவால் சரிகிறது என்று நாம் சொல்ல முடியுமா என்று கேட்கிறார்கள் சில நிபுணர்கள். அதாவது, நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பது போல் ‘ஏற்கெனவே நொடிந்து கிடந்த பொருளாதாரத்துக்கு கொரோனாவைக் காரணமாக்குகிறார்களா’ என்ற கேள்வியை அவர்கள் முன்வைக்கிறார்கள்.  

தீவிரமான பொருளாதார - நிதி - அரசியல் மாற்றங்களுக்கு அடிப்படையான காரணிகள் ஏற்கெனவே நிறைய இருக்கின்றன. உதாரணமாக, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போர் ஒரு சமீப உதாரணம். காலநிலை - பருவநிலை மாற்றம் ஆகியவை மற்றொரு காரணம்.
கொரோனாவை நம்மால் கட்டுப்படுத்த இயலாவிட்டாலும் அதுவே முழுப் பொருளாதாரப் பின்னடைவுக்கும் காரணமல்ல. இப்போதைய பொருளாதாரப் பின்னடைவை கொரோனா வேகமாக்குகிறது என்பதே உண்மை.

உலகம் முழுவதுமான கடன் நிலை என்பது உலக உற்பத்தியை விடவும் 322% அதிகமாக உள்ளது. இது உலகம் முழுதுமே சொத்து
களின் விலையை உயர்த்தியிருக்கிறது. கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிலேயே இது நிகழத் தொடங்கிவிட்டது. அப்போது கொரோனா உலகில் அறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது திடீர் பொருளாதார முடக்கம் என்ற நிலை உருவாகியுள்ளது. கடந்த ஜனவரி 31ம் தேதி உலக சுகாதார நிறுவனத்தின் உலக மக்கள் ஆரோக்கியம் மற்றும் அவசரநிலை அமைப்பு, சர்வதேச முதலீட்டாளர்களை எச்சரித்தது. உடனே அவர்கள் சந்தையிலிருந்து பின்வாங்கினார்கள். இதனால், உலகப் பொருளாதார வளர்ச்சி பலவீனமடைந்தது. உலகின் பல முக்கியமான, மைய வங்கிகளின் திறன் குறைந்தன. இதுவே திடீர் பொருளாதார முடக்கத்துக்கு வழி வகுத்தது.

எல் எரின் என்ற அமெரிக்க பொருளாதார ஆலோசகர்தான் இந்தக் கருத்தை முன்வைக்கிறார். சிக்கலான பொருளாதார விளக்கங்கள் நிறைந்த அந்தக் கோட்பாட்டை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்.கொரோனோவால் சுமார் நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள், அதன் பெரு நகரங்கள் திடீரென முடங்க நேர்ந்திருப்பதால், பொருளாதாரத்துக்கு அடிப்படையான தேவை மற்றும் வழங்கலில் முடக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதுவே திடீர் பொருளாதார முடக்கம்.

ரஷ்யா மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையிலான எண்ணெய் விலை நிர்ணயப் போர் இந்த நிலையை மேலும் மோசமாக்கி இருக்கிறது.
நியூயார்க்கில் கடந்த மார்ச் 8ம் தேதி பங்குச் சந்தையின் ஃப்யூச்சர் மார்க்கெட் திறந்ததுமே எண்ணெய் நிறுவனப் பங்குகள் சுமார் 21% சரிவடைந்தன. தங்கம் விலை சரிந்தது. ஒட்டுமொத்த அமெரிக்க பங்குச்சந்தைக் குறியீடு நான்கு சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

இதில் மோசமான விஷயம் என்னவென்றால், அமெரிக்கக் கருவூலப் பெட்டகங்கள் அவற்றின் வரலாறு காணாத அளவுக்கு சரிவைக் கண்டதுதான். பத்து வருட பெட்டகங்கள் 0.5% அளவுக்கும் 30 ஆண்டுகால பெட்டகங்கள் 1% அளவுக்கும் சரிந்தன. முதலீட்டுச் சந்தை
களும் உறைந்தன. கிட்டத்தட்ட ஓர் ஆண்டு காலமாகவே உலக அளவில் கடனை எதிர்கொள்ளவியலாமல் சொத்துகளை விற்கும் நிதிசேவையல்லாத தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

பொருளாதாரத்தில் இதனை கடன் அடைப்பு (Deliveraging) என்பார்கள். உலகப் பொருளாதாரம் மந்தமடைய இந்தச் செயல் ஒரு காரணம்.
இதைத் தொடர்ந்துதான் உலகின் பொருளாதார மந்தம் உருவானது. சில நாடுகளில் அது பொருளாதார அழுத்தமாக மாறியது.
வளர்ந்த மற்றும் அதிக வருவாய் உள்ள வளரும் நாடுகளில் நிதிசாரா தனியார் நிறுவனங்களின் கடன் அதிகமாக இருந்தது.

மறுபுறம் மத்தியதர வளரும் நாடுகளிலோ அரசு நிறுவனங்களின் கடன் தொகை அதிகமாக இருந்தது. இதில், உலக அளவிலான நிதிசாரா நிறுவனங்களின் டெலிவரேஜிங் ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

இதன் தொடர்ச்சியாக வளரும் நாடுகளின் அரசுத் துறைகளிலும் இந்த டெலிவரேஜிங் நடப்பதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. இது நிகழ்வதால் அரசின் நிதியாதாரங்கள் பாதிக்கப்பட்டு அரசுகள் பொருளாதார ஸ்திரத்தன்மை இழப்புக்குள் நுழைகின்றன.

இப்படியான சூழலில்தான் கொரோனா வந்துள்ளது. இதனால், அரசுகள் இந்த அவசரப் பிரச்னையை சமாளிப்பதற்கென நிதி ஒதுக்க வேண்டும். மறுபுறம் ஒரு பெருந்திரளான மக்கள் எந்த வேலைக்கும் செல்லாமல் நோய்க்கு பயந்து வீட்டில் ஒதுங்கியிருக்கிறார்கள். இதனால் உற்பத்தி முடங்கியுள்ளன. அளிப்பு குறைவதால் தேவை பாதிக்கப்படும். தேவை அதிகரிப்பு, விலைவாசி உயர்வை உருவாக்கும். இதனால் பணவீக்கம் மேலும் அதிகமாகும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு மேலும் முதலீட்டை அதிகரிக்க கடன் வாங்க நேரிடும். அதிகக் கடன் மேலும் சொத்துகளை கபளீகரம் செய்யும்.

இது ஒரு விஷச் சுழல். வளரும் நாடுகளின் அரசுகள் இதிலிருந்து எப்படி மீண்டு வரும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.  கொரோனாவிலிருந்து நாம் விரைவில் மீண்டு வருவோம். ஆனால், அது உருவாக்கப் போகும் இந்தப் பொருளாதாரப் பின்னடைவுகளிலிருந்து மீள கொஞ்சம் காலமாகும்.