நாலு மூலைஹெல்மெட் போட்டாச்சு. ரோடு எங்க?

ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு, மீறினால் அதற்கான அபராதம் விதிக்கப்பட்டு வருவதெல்லாம் நாம் அறிந்ததுதான்.அரசின் இந்த விதியையடுத்து, மக்கள் முறையாக தலைக்கவசம் அணியத் தொடங்கிவிட்டனர்.

ஆனால், ஹெல்மெட் அணிவதால் மட்டும் விபத்துகள் தடுக்கப்படுமா?

சான்ஸே இல்லை. விபத்துகளைத் தடுக்க மற்ற சாலை பாதுகாப்பு விதிகளும் அவசியம் என்பதையும், முக்கியமாக தரமான சாலைகள் இன்றியமையாதது என்பதையும் வலியுறுத்த, இளைஞர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து, சேதமடைந்து சீரமைக்கப்படாத சாலைகளைப் புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அது வைரலாக, மக்கள் வயிறு குலுங்கச் சிரித்து ஷேர் செய்து வருகின்றனர்.  

கொரோனா நோயாளிக்கு பிரியாணியும், கொரியன் படங்களும்

சீனா வூஹான் பல்கலைக்கழகத்திலிருந்து இந்தியா வந்த மருத்துவ மாணவிக்கு முதல் முறையாக கொரோனா வைரஸ் இருப்பது கண்டு
பிடிக்கப்பட்டது. கேரளாவில் சிகிச்சை பெற்று, அதிர்ஷ்டவசமாக நோயிலிருந்து முழுமையாக அவர் குணமடைந்தார்.

இது குறித்து தன் அனுபவத்தை பகிரும்போது, மருத்துவர்களும் செவிலியர்களும் தன்னை பொறுப்பாகப் பார்த்துக்கொண்டதாகவும், அவருக்கு தினமும் தைரியம் கூறி இணைய வசதி ஏற்படுத்திக் கொடுத்து, பிடித்த உணவை சாப்பிடக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

தனிமையாக இருந்த நேரங்களில், பிரியாணி சாப்பிட்டு, கொரியன் படங்கள் பார்த்து தன் பொழுதைக் கழித்ததாகக் கூறிய மாணவி, படிப்பு முடிந்ததும், நிச்சயம் இந்தியா திரும்பி மருத்துவ சேவையில் இணைவேன் என்று உறுதியளித்துள்ளார்!

பசியால், குட்டியையே வேட்டையாடும் பனிக்கரடிகள்

பனிக்கரடிகள் வாழும் ஆர்க்டிக் பகுதியில், பருவநிலை மாற்றத்தால் தொடர்ந்து பனி உருகி வருகிறது. அத்துடன் பனிக்கரடிகள் வேட்டையாடும் பகுதிகளில், மனிதர்கள் அதிகம் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர்.இதனால் பசியைப் பொறுக்க முடியாமல் தங்கள் இனத்தையே வேட்டையாடி சாப்பிடும் வழக்கம் பனிக்கரடிகள் மத்தியில் அதிகரித்து வருவதாக அறிஞர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதை மெய்ப்பிக்கும் வகையில் ஆண் பனிக்கரடி ஒன்று, தாய் கரடியையும், குட்டியையும் துரத்தி வந்து, குட்டியை வேட்டையாடி புசிக்கும் காட்சி வீடியோவாக வெளியாக... சுற்றுச்சூழல் ஆய்வாளர்களும் மற்றவர்களும் அதிர்ந்து போயுள்ளனர்.

துப்புரவுப் பணியில் இணைந்த எம்.எஸ்சி மாணவி

நாட்டில் வேலையில்லா திண்டாட்டமும்; வேலை பாதுகாப்பில்லாமல் பலர் தினமும் வேலையை இழக்கும் நிலையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த துப்புரவுப் பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பிற்குப் பல பிஇ, பிகாம் பட்டதாரிகள் விண்ணப்பித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அத்துடன், எம்.எஸ்சி படித்து வரும் மாணவி ஒருவர் துப்புரவுப் பணியாளராக தேர்வாகி பணியில் இணைந்திருப்பது இளைஞர்களிடம் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆமாம்... நம்நாடு எங்கு செல்கிறது?

ஐந்து ஆண்டுகளில், ஐந்து அளவுகள் வளரும் காலணிகள்

உலகில் பல கோடி ஏழைக் குழந்தைகளிடம் ஒரு காலணி கூட கிடையாது. பலர், தங்கள் கால்களின் அளவைவிட அதிகமான அல்லது அளவு குறைவான காலணிகளையே பயன்படுத்துகின்றனர்.

இதனால் வளரும் குழந்தைகளுக்குத் தகுந்த காலணிகள் வழங்க வேண்டும் என்று முடிவு செய்த ஆராய்ச்சியாளர் கென்டன் லீ, குழந்தைகளுடன் சேர்ந்து வளரும் காலணிகளைக் கண்டுபிடித்துள்ளார்!எஸ். இந்த காலணிகளை குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப ஐந்து அளவுகள் வரை பெரிதும் சிறிதுமாக மாற்றியமைத்துக் கொள்ள முடியும்!

17 வயது நிரம்பினாலே வாக்காளர் பட்டியலில் சேரலாம்?

வாக்காளர் பட்டியலில் இணைய 18 வயது நிறைந்திருக்க வேண்டும் என்பதுதான் நடைமுறையிலிருக்கிறது. ஆனால், இப்போது 17 வயது நிரம்பி 18 வயது தொடங்கும்போதே - பள்ளி / கல்லூரிகளிலேயே - வாக்காளர் பட்டியலில் இணையம் மூலம் பதிவு செய்து இணையும் வசதியை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.இது தேர்தலின்போது வாக்குப்பதிவை அதிகரித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்