குரு மகரத்தில் நீச்சம் அடைந்தால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படுமா..?



ஒரு வாட்ஸ்அப் பரவிக்கொண்டிருந்தது. ஜோதிடத்தில் நிதி விவகாரங்களுக்கான காரகன் (ruling planet) குருதான். குரு மகர ராசியில் நீச்சம் (debilitation) பெறுகிறது. அதாவது முற்றிலும் வலுவிழக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு மகரத்திற்கு செல்கிறது. மகரத்தில் வலுவிழக்கும் காலங்களில் உலகப் பொருளாதார வீழ்ச்சி, பெரு மந்தங்கள் நிகழ்வது வழக்கம்.

1997ல் ஆசியப் பொருளாதார மந்தம் நடந்தபோது குரு மகரத்தில் இருந்தது. கரூர், கோவை, ஈரோடு ஜவுளித் துறை பெரிய அடி வாங்கியது.
பிறகு 12 ஆண்டுகள் கழித்து, 2009ல் மீண்டும் மகரத்தில் குரு வந்தபோது உருவான அமெரிக்க பெரு மந்தம் உலக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு இறுதியில் மகரத்திற்கு குரு மாறும்போது, மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி, மந்தம் உருவாகலாம். இப்பொழுதே அதன் அறிகுறிகள் தோன்றியுள்ளன...

இதுதான் அந்த வாட்ஸ்அப் மெசேஜ். இதெல்லாம் காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதையா... பனம் பழம் விழும் நேரம் பார்த்து காகத்தை அமரச் செய்யும் கதையா என்றுதான் நடக்கும் விஷயங்களைப் பார்த்தால் ஐயமாக இருக்கிறது. குரு நீச்சம் அடைகிறாரோ இல்லையோ… இப்போது பொருளாதாரம் நன்றாக இல்லை என்பது மட்டும் வெளிப்படையாகத் தெரியும் கவலைக்குரிய விஷயம் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதும், இந்தியப் பொருளாதார மந்த நிலை 2019 ஜூலை - செப்டம்பரில் மேலும் ஆழமானது. 2019 - 20 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) ஒட்டுமொத்த வளர்ச்சி 4.5% ஆக இருந்தது. இதுவே முதல் காலாண்டில் 5% என்பதாக இருந்தது.

இந்தக் காலத்தில் 3.6% புள்ளிகள் என்ற வீதத்தில் குறைந்து, தொடர்ச்சியாக ஆறாவது காலாண்டில் வளர்ச்சி விகிதம் குறைந்தது. இப்போதைய ஜிடிபி வரிசையில், 4.5% ஆக உள்ள வளர்ச்சி விகிதம்தான் மிகவும் குறைவு. இதற்கு முன் 2013ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 4.3% ஆக இருந்தது.
தனியார் தேவை மிகவும் பலவீனமாக உள்ளதையும்.

அவர்களின் பங்களிப்பு குறைந்திருப்பதையும் இது காட்டுகிறது. அரசு அதிகபட்சமாக செலவு செய்தபோதிலும் இந்தச் சூழ்நிலை மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. நுகர்வு அதிகமாகவில்லை என்பதுதான் இதன் காரணம். தனியார் முதலீடு நிலையாக உள்ளது. வரிசையாக அனுசரிக்கப்பட்ட ஆண்டு விகித அடிப்படையில் ஜிடிபி வளர்ச்சி 3.6% ஆக இருந்தது. செலவு போக்குகளின்படி, தனியார் இறுதி நுகர்வு செலவு 5% ஆக இரண்டாவது காலாண்டில் வளர்ந்திருந்தது. இது முதல் காலாண்டில் 3.1% ஆனது. ஆனால், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளிலிருந்து வரும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அடக்கமான நுகர்வுகளுக்கான ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது இந்த வளர்ச்சி முரண்பாடானது.

இரண்டாவது காலாண்டில் ஒட்டுமொத்த நிலையான மூலதன உருவாக்கம் 1% ஆக இருந்தது. ஆனால், முதல் காலாண்டில் இந்த மதிப்பு 4%.
அரசின் இறுதி நுகர்வு செலவினம் முதல் காலாண்டில் 8.8% ஆக இருந்தது. ஆனால், இரண்டாம் காலாண்டில் இது 15.6% ஆக அதிகரித்துள்ளது.
பெருநிறுவனங்களின் கடன், வங்கிகளால் உருவாகும் இடர் தவிர்ப்பு, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் உள்ள நெருக்கடி ஆகியவை முதலீட்டு தேவையின் வழியில் குறுக்கே வந்துள்ளன.

 இந்தியாவில் பொருளாதாரம் முடக்கமாகி வருவதற்கான முக்கியமான காரணங்களுள் ஒன்று நிதி நிலைமைகள் மிகவும் இறுக்கமாகி வருவது. உலகளாவிய காரணங்கள் தவிர விநியோகப் பகுதியில் உள்ள சிக்கல் இதற்கு இன்னொரு காரணம்.

ஒட்டுமொத்த மதிப்பில் சொல்வதென்றால், முந்தைய காலாண்டில் 4.9% ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி பிறகு 4.3% ஆனது. வளர்ச்சியில் ஒருவிதமான பின்னடைவை உற்பத்தித் துறைகள் பிரதிபலித்தன. இது மிகவும் கவலைக்குரியது. இரண்டாவது காலாண்டில் விவசாயத்துறை 2.1% ஆக வளர்ச்சி அடைந்தது. முதல் காலாண்டில் இந்த வளர்ச்சி 2%தான்.

முதல் காலாண்டில் 2.7% ஆக இருந்த சுரங்கத்துறை வளர்ச்சி இரண்டாவது காலாண்டில் 0.1% வளர்ந்தது. அதைப்போலவே உற்பத்தித் துறை முதல் காலாண்டில் 0.6% வளர்ந்தது. ஆனால், இந்த வளர்ச்சி இரண்டாவது காலாண்டில் 1% என சுருங்கியது. முதல் காலாண்டில் 8.6% ஆக இருந்த மின்னியல் மற்றும் இதர பொது பயன்பாடுகள் இரண்டாம் காலாண்டில் 3.6% ஆகக் குறைந்தது. முதல் காலாண்டில் 5.7% ஆக இருந்த கட்டுமானம் இரண்டாம் காலாண்டில் 3.3% ஆகக் குறைந்தது.

வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றின் வளர்ச்சி முதல் காலாண்டில் 7.1% ஆக இருந்தது. பின்னர் இரண்டாம் காலாண்டில் 4.8% ஆக மாறியது. முதல் காலாண்டில் 5.9% ஆக இருந்த நிதிச்சேவைகள் துறையின் வளர்ச்சி இரண்டாவது காலாண்டில் 5.8% ஆக இருந்தது. அரசின் உதவியில் இயங்கும் பொது நிர்வாகம், பாதுகாப்புத்துறை மற்றும் பிற துறைகள் முதல் காலாண்டில் 8.5% ஆக இருந்தது, இரண்டாவது காலாண்டில் 11.6% ஆக மாறியது.

வீழ்ந்துவரும் பொருளாதார மந்தத்தினால் முறைசாரா துறைகளும்கூட பாதிக்கப்படலாம் என்கிறார்கள். ஆனால், அரசு ரீதியான புள்ளியியலினால் இது வெளிக் கொணரப்படவில்லை. பொருளாதார மந்தத்தின் பாதிப்புகளை தொழிலாளர் சந்தைதான் எதிர்கொண்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தை ஆய்வு செய்யும் மையத்தின் கருத்துப்படி, கடந்த அக்டோபர் மாதம் வேலையில்லாத் திண்டாட்டத்தின் விகிதம் 8.45% ஆக இருந்தது. இதற்கு முந்தைய மாதங்களான செப்டம்பர் மற்றும் ஆகஸ்ட்டில் வேலையில்லா விகிதம் முறையே 7.16% ஆகவும் 8.19% ஆகவும் இருந்தன.
இந்தியப் பொருளாதாரத்தை ஆய்வு செய்யும் மையம் வெளியிட்டுள்ள நுகர்வோர் பிரமிடுகளின் வீட்டுவாரியான ஆய்வறிக்கையின்படி, 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் தொழிலாளர் சக்தியின் பங்கு 77 அடிப்படை புள்ளிகளாக சுருங்கி 42.37% ஆக உள்ளது.

இந்நிறுவனம் அதன் ஆராய்ச்சியைத் தொடங்கிய 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒப்பிட்டால் இது மிகவும் குறைவான நிலை. இந்த மையம் 25 மாநிலங்களை ஆய்வு செய்தது. இவற்றுள் 15 மாநிலங்களில் தொழிலாளர் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தைவிட நவம்பர் மாதம் குறைந்துவிட்டது.
வேலைகளும் வருமான இழப்புகளும் நுகர்வோர் தேவையைக் குறைத்துவிட்டன. இவற்றுள் முக்கியமான காரணங்களுள் ஒன்று கிராமப்புற வீழ்ச்சி.
முதல் காலாண்டில் பொருளாதாரத்தில் நடந்திருக்க வேண்டிய தேவை புகுத்தல், இன்னும் நடைபெறவில்லை. எனவே கிராமப்புறத்துறைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசரத்தேவை உள்ளது.

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா சரியாக அமல்படுத்தப்படவில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிலுவைத்தொகையும் அளிக்கப்படவில்லை. இந்தத் தொகையானது 25 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இந்தக் குழப்பத்திலிருந்து வெளியே வருவதற்கு, வருமானம் மற்றும் நுகர்வு புதுப்பித்தலுக்குத் தேவைப்படும் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பையும் உருவாக்க வேண்டும். ஆனால், இது அவ்வளவு எளிதில் நடக்காது. எளிதான உள்நாட்டு நிதி சூழல்களுக்கு, நேர்மறையான நிதி உத்வேகங்கள் மற்றும் விநியோகத்தில் உள்ள தடைகளை எளிதாக்குவது அவசியம்.

விரிவான நிதிக் கொள்கை நிலையாகச் செயல்பட்டால், ஒட்டுமொத்த தேவையை அதன் இலக்கில் சரியாக நிலை நிறுத்த முடியும். பரிமாற்றம் இலகுவாக இருக்கும்போது பணக்கொள்கை சிறப்பாக அமையும். ஆனால், இப்போதுள்ள இடரைத் தவிர்க்கும் நிதி அமைப்பில் இவ்வாறு நடப்பதில்லை.

உண்மையான பொருளாதாரத்தில் பணப் புழக்கத்துக்கு குறைவான தாக்கம் உள்ளது. பணவீக்கம் உயரும் சூழலில், வட்டி விகிதங்கள் குறையும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. ஆனால், இதற்கு மாற்றாக, டிசம்பர் மாதம் 5ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தின் மீதான வட்டி விகிதத்தில் இப்போதைய நிலையை நீடித்தது. பொருளாதாரத்தைப் புதுப்பிக்க கடந்த 9 மாதங்களில் 135 அடிப்படை புள்ளிகளை, ரெப்போ விகிதத்தில் மத்திய வங்கி குறைத்துள்ளது.

2020க்கான நிதி ஆண்டுத் திட்டத்தில் ஜிடிபி வளர்ச்சி 5% என கணக்கிடப்பட்டது. முன்னர் இந்த வளர்ச்சி விகிதம் 6.1% எனக் கணக்கிடப்பட்டது. சில்லரைப் பணவீக்கம் 2020 நிதி ஆண்டுக்கான இரண்டாம் பாதியில் 5.1% - 4.7% ஆக உள்ளது. ஆனால், இந்த விகிதம் முன்னர் 3.5% - 3.7%ஆக காண்பிக்கப்பட்டது.

அக்டோபர் மாதம் இறுதிவரை, முதல் ஆண்டு இலக்கில் நிதிப் பற்றாக்குறை ஏற்கெனவே 100%ஐத் தாண்டிவிட்டது. பொருளாதாரத்தின் நிலையுடன் ஒப்பிடும்போது, அரசு செலவினத்துக்கு இது மிகவும் இயல்பானது. இது வளர்ச்சி விகிதத்தை மேலும் குறைவாக்கும் என்கிறார்கள்.

மொத்தத்தில் திட்டமிடலுக்கும் நடைமுறைக்குமான முரண்பாடு பாரதூரமாக இருந்து கொண்டிருக்கிறது. இது, வண்டியின் கட்டுப்பாடு ஓட்டுநரின் கையை மீறிவிட்டதன் அறிகுறி என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

உலகம் முழுதுமே கிட்டத்தட்ட இதுதான் சூழல் என்பதைப் போன்ற சித்திரம் ஒன்று இருப்பதால் நமக்கு மட்டுமா இது நடக்கிறது என்கிற மனநிலை ஆளும் தரப்பு முதல் சாமானியர்கள் வரை அனைவருக்கும் இருக்கிறது. எப்படி மீளப் போகிறோம் என்பதுதான் புதிராக இருக்கிறது. நல்லதே நடக்கட்டும்.

இளங்கோ கிருஷ்ணன்