எங்க கிராமத்துலயே இவ்வளவு ஊழல்னா தமிழகம் முழுக்க எந்தளவுக்கு முறைகேடு நடக்குதுனு யோசிங்க...



பெரிய  பெரிய ஊழல் செய்திகளுக்கு மட்டுமே செவி கொடுக்கும் நாம், தினம் தினம் சிறு  சிறு விஷயங்களிலும் நடக்கும் சின்னச் சின்ன ஊழல்களை அறியாமலேயே ஓடிக்கொண்டிருக்கிறோம்.
இதை உணர்ந்த நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு  வட்டம், ஓ ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பதினைந்து இளைஞர்கள் ஒன்றிணைந்து  அவர்கள் கிராமத்தில் நடந்த ஊழலை RTI மூலமாக வெளிக்கொண்டு வந்துள்ளனர்.“எங்க  ஊருக்கு அரசால் அறிவிக்கப்படும் வளர்ச்சித் திட்டங்கள், பஞ்சாயத்து  சம்பந்தமான விஷயங்கள் குறித்து எதுவுமே தெரிஞ்சுக்க முடியலை. எங்க  கிராமம்னு இல்ல... தமிழகத்திலுள்ள எல்லா கிராமங்களின் நிலையும் இதுதான்.

எங்க போய்  கேட்டாலும் சரியான பதில் கிடைக்கறதில்ல. இந்த நேரத்துலதான் RTI பற்றிய  அறிமுகம் சமூக வலைத்தளங்கள் மூலமா எங்களுக்குக் கிடைச்சது...’’ என்று பேசத்  தொடங்கினார் 15 இளைஞர்களில் ஒருவரான சந்திரன்:‘‘பொதுவா கிராம  பஞ்சாயத்துகள்ல அந்த ஊருக்குத் தேவையான சாலை வசதி, பாலங்கள் கட்டுவது,  குடிநீர் பிரச்னைக்கான தீர்வுகள், சாலை விளக்குகள்… இதெல்லாம் வரும். இதுல  பெருசா என்ன ஊழல் நடக்கப் போகுதுனுதான் நினைப்போம். ஆனா, RTI போட்டு  எங்களுக்குக் கிடைச்ச தகவல்கள்ல இதுல எந்தளவுக்கு ஊழல் நடக்குதுனு தெரிய  வந்திருக்கு.

காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம், சுதந்திர - குடியரசு  தினங்கள்னு ஆண்டுக்கு நாலு முறை கிராம பஞ்சாயத்து கூட்டம் நடத்தப்படணும்.  அதுல ஊர் பஞ்சாயத்து தலைவர், அரசு அதிகாரிகள் கண்டிப்பா பங்கேற்கணும். ஆனா,  பல கிராமங்கள்ல இதுபத்தின விழிப்புணர்வே இல்ல.
தப்பித் தவறி அப்படி  நடத்தப்படற கூட்டங்கள்ல கணக்கு வழக்குகள் கேட்டப்ப சரியான பதில் கிடைக்கலை.  அதனாலதான் RTI போட்டுக் கேட்க முடிவு செய்தோம்.

ஆனா, யாருக்குப்  போடணும்னு தெரியாம நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்குப் போட்டோம். அவங்க,  ‘பஞ்சாயத்துக்கு அனுப்பியிருப்பதாகவும், நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில்  அங்கிருந்து கிடக்கும்’னும் தகவல் அனுப்பி இருந்தாங்க. சில நாட்களுக்கு அப்புறம் பதிலும் வந்தது. அப்பதான் பல ஊழல்கள் நடந்திருப்பதே தெரிய வந்தது...’’ என்கிறார் சந்திரன்.

இயற்கை  எழில் சூழ, மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் அமோகமாக  நடைபெற்று வந்த விவசாயம், இப்போது அது நடந்த சுவடே இல்லாமல்  தரிசாகியுள்ளது. எதனால் இந்த நிலை என்பது பற்றிக் கூறினார் சந்திரன்:

“15  வருஷங்களுக்கு முன்னாடி ஒரு நிறுவனம் கல்லூரி கட்ட வாய் மொழியாக இடம்  வாங்கினாங்க. கட்டடம் கட்ட ஆரம்பிச்சதும்தான் அது சாயப்பட்டறை ஆலைனே  தெரிஞ்சுது! சாயத் தண்ணீரை வெளில விட்டா உண்மை தெரிஞ்சுடும்னு  சுத்தியுள்ள இடங்கள்ல போர் போட்டு அதுக்குள்ள இறக்கினாங்க.

மோரூர்  மலைக்கு அருகில் அமைந்திருக்கிற அந்த நிறுவனத்துல இருந்து வெளியேறும்  கழிவு, வெள்ளம் தாரை (நீரோடை) வழியா ஒரு ஏரிக்குப் போகுது. இந்த ஓடையையும்  மண்ணு கொட்டி மூடி அது மேல இப்ப பில்டிங் கட்டிட்டாங்க. மலைல இருந்து  வர்ற தண்ணீரையும் அவங்களே தேக்கி பயன்படுத்துறாங்க.

அந்த தண்ணி ஊருக்கு  வந்தாதான் கிணறு நிரம்பும்; நிலத்தடி நீர் ஊறும். எங்களுக்கு ஆத்து பாசனம்  கிடையாது. மழை பெய்யறப்ப ஸ்பிரிங்லர் பயன்படுத்தி அந்தக் கழிவுகளை ஸ்ப்ரே பண்ணி  விட்டுடுறாங்க. இதனால் நிலம் பாதிச்சு கடந்த பத்து, பதினைந்து வருஷங்களா வெள்ளாமையே இல்லாம போயிடுச்சு.

சாயப்பட்டறை  ஆலைலயும் இந்திக்காரங்களைத்தான் வேலைக்கு அமர்த்தியிருக்காங்க. ஊருக்கு  ரொம்ப தொந்தரவா இருக்கற அந்த ஆலை முறையா அனுமதி வாங்கினதானு RTI போட்டு  கேட்டோம். வந்த பதில்ல பொறம்போக்கு நிலங்களை அவங்க ஆக்கிரமிப்பு  செய்திருப்பதும், ஃபாரஸ்ட் இடங்கள்ல குழி தோண்டியிருப்பதும் தெரிய  வந்திருக்கு.

இதுல என்ன வேதனைனா குழி பறிக்கவோ, மண் எடுக்கவோ  ஃபாரஸ்ட்டுல அனுமதி கொடுக்கவேயில்ல! அதே மாதிரி விவசாய இடத்துல 40 - 50  அடிக்கு பறிச்சிருக்காங்க. இதுக்கு சுரங்கத்துறைல இருந்து அனுமதியும்  வாங்கலை. குறிப்பிட்ட அந்த நிலத்தோட சர்வே நம்பர் போட்டு கேட்டதுல கிடைச்ச பதில் இது!இப்படி  எந்தத் துறைலயும் எந்த அனுமதியும் வாங்காம மக்களோட வாழ்வாதாரத்துக்கு  அச்சாணியா இருக்கற நிலங்களை அபகரிச்சிருக்காங்க. அரசாங்கம் இதை  கண்டுக்காமயே இருக்கு...’’ வேதனையுடன் சொல்கிறார் சந்திரன்.

சென்னையைத்  தவிர 36 மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற கிராமப்புற வேலைத்  திட்டத்தின் மூலம், ரூ.4,200 கோடிக்கும் மேலாக முறைகேடு நடந்துள்ளதாக  சமீபத்தில் செய்தி வெளியானதை அறிந்திருப்போம்.

அந்த 100 நாள் வேலை  வாய்ப்பு திட்டம் பற்றியும் அம்பலப்படுத்துகிறார் சந்திரன்: “அரசு சொல்லும்  சம்பளம் ரூ.224. ஆனா, வேலை செய்யறவங்களுக்கு இதுல 50 - 60%தான்  கொடுக்கறாங்க. பலரோட அட்டைகள்ல புரியாத மாதிரி ஏதேதோ எழுதியிருக்காங்க.  சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு கணக்கு வழக்கு தெரியாது என்பதால் ஈசியா  ஏமாத்தறாங்க.

இது தொடர்பா RTI போட்டு விவரங்கள் வாங்கியிருக்கோம்.எங்க  பக்கத்து கிராமத்துல, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் கழிவறை  கட்டும் திட்டத்துல கடந்த மூணு வருஷங்களா பஞ்சாயத்து தலைவர் இல்லாததால  பஞ்சாயத்து கிளர்க்கும், 100 நாள் வேலையை கண்காணிப்பவரும் சேர்ந்து ரூ.47  லட்சத்துக்கும் மேல ஊழல் செய்திருப்பது அம்பலமாகி இருக்கு! அந்த ஒரேயொரு  கிராமத்துல மட்டும் இப்படீன்னா, தமிழகம் முழுக்க எப்படினு நீங்களே  யோசிச்சுப் பாருங்க.

எங்க கோரிக்கை என்னன்னா, கேரளால இருக்கற மாதிரி  இங்கயும் இருக்கணும். அதாவது ஒரு விவசாயி தனது நிலத்துல வேலை செய்ய இத்தனை  நபர்கள் வேணும்னு கிராம நிர்வாக அலுவலகத்துக்கு எழுதி கேட்கணும். அரசு உரிய  நபர்களை சம்பளத்தோடு அனுப்பி வைக்கணும். இப்படி நடந்தா விவசாயம்  பாதுகாக்கப்படும். இதேமாதிரி தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களின்  நிலங்கள்லயும் நடக்கணும். ஏன்னா, தங்களோட நிலங்கள்ல 100 நாள் வேலைத்திட்ட  பணிகள் வருது என்பதே அவங்களுக்குத் தெரியாம இருக்கு. தெரிவிக்காமயும்  இருக்காங்க!

100 நாள் வேலைவாய்ப்பால யாரும் இப்ப காட்டு வேலைகளுக்குப்  போறதில்ல. பல ஊர்கள்ல 100 நாள் வேலைனு சொல்லாம, ‘ஏரி வேலை’னுதான்  சொல்றாங்க. அந்தளவுக்கு ஏரியோட மட்டுமே சுருங்கியிருக்கு. கிராமப்புற  ஏரிக்கரைகள்ல ஆண்களும், பெண்களும் காலைல கூட்டம் கூட்டமா  உட்கார்ந்திருப்பதே இதுக்கு சாட்சி. இதனாலயே பல கிராமங்கள்ல பயிரிடவே  பயப்படறாங்க.

திட்டத்தின் நோக்கம் சரியான முறையில் அமைந்திருந்தா,  தமிழகத்திலுள்ள 39,202 ஏரிகள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குளங்கள்  புதுப்பிக்கப்பட்டிருக்கணும். இதன் வழியா வருடத்துக்கு 400 டி எம்சிக்கும் மேற்பட்ட  மழை நீரைச் சேமித்திருக்கலாம்.
ஆனா, இது எதுவுமே நடக்கலை...  தமிழக அரசு ஏன் இதை கண்டுக்காம இருக்குனு கொஞ்சம் யோசிங்க...’’ என தமிழக  மக்களுக்கு வேண்டுகோள் வைக்கிறார் சந்திரன்.

அன்னம் அரசு