இயக்குநர் ஏ.சி. திரிலோகசந்தரின் பேத்தி இப்ப ஹீரோயின்!



நடிகர் திலகம் சிவாஜி, மக்கள் திலகம் எம்ஜிஆர் என அன்றைய ஜாம்பவான் நடிகர்களின் ப்ரியமான இயக்குநர் ஏ.சி.திரிலோகசந்தர். வித்தியாசமான கதை அமைப்புடன் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியதில் ஏ.சி.திரிலோகசந்தருக்கும் முக்கியப் பங்குண்டு.இப்போது அவரது பேத்தி - மகன் ராஜ் சந்தரின் மகள் - யாமினி ஹீரோயினாக அறிமுகமாகிறார்!ஸ்லிம் ஹைட்டும், ஸ்மைல் லிப்ஸுமாக யூத்ஃபுல் ஷில்பா ஷெட்டியை நினைவுபடுத்துகிறார்! சிபிராஜின் ‘வால்டர்’ படத்தில் நட்டி நட்ராஜின் ஸ்டூடண்ட் ஆக கோலிவுட்டில் வலது காலை எடுத்து வைத்து நுழைந்திருக்கிறார்.
யாமினியின் வீட்டுக்குச் சென்றதும் நம்மை அசரடித்து நெகிழ்ச்சியுடன் வரவேற்பது எது தெரியுமா..? ஏவிஎம் தயாரிப்பில் ஏ.சி.திரிலோகசந்தர் இயக்கத்தில் நூறு நாட்கள், சில்வர் ஜூப்ளி கொண்டாடிய படங்களின் ஷீல்டுகள்தான்!

‘‘தாத்தாவுக்கு (ஏசிடி.) என்னை ரொம்ப பிடிக்கும். சினிமால நடிக்கணும்னு நான் முடிவெடுத்ததும் முதன்முதல்ல தாத்தாகிட்டதான் சொன்னேன். அவருக்கு அவ்வளவு சந்தோஷம். கண்கள் விரிய ‘சூப்பர் மா’னு சொன்னார். மிகப்பெரிய ஆசீர்வாதமா அதை நான் நினைக்கறேன்.

அந்தக் காலத்துலயே ஸ்டைலீஷான இயக்குநர்னு தாத்தா பெயர் எடுத்திருக்கார். அவரை மாதிரியே அவர் படங்களும் ஹேண்ட்சம் ஆக இருக்கும்!
தாத்தா டைரக்ட் செய்த ‘அன்பே வா’, ‘பத்ரகாளி’, ‘தெய்வமகன்’ எல்லாம் என் ஆல்டைம் ஃபேவரிட்.

ஆக்ட்டிங் பத்தி தாத்தா எனக்கு நிறைய டிபஸ் கொடுத்திருக்கார். அவர் காலமாகறதுக்கு சில மாதங்களுக்கு முன்னாடி என்னை பக்கத்துல உட்கார வைச்சு, ‘யாமு... உன் கண்கள்தான் உனக்கு ப்ளஸ்... கண்களை பத்திரமா பார்த்துக்க... கண்டிப்பா தமிழ் சினிமால உனக்குனு ஓர் இடத்தை ஏற்படுத்திப்ப...’னு தட்டிக் கொடுத்தார்.இப்ப ‘வால்டர்’ ரிலீசாகி இருக்கு. இந்த சந்தோஷத்தை பார்க்க தாத்தா இல்லையேனு வருத்தமா இருக்கு... ஆனா, என் நடிப்பை அவர் பார்த்துட்டு தான் இருக்கார்னு மனசார நம்பறேன்...’’ நெகிழும் யாமினி, தன் அப்பா ராஜ்சந்தரையும், அம்மா செல்வியையும் அறிமுகப்படுத்தினார்.

‘‘அப்பா இயக்குநர் ஆனதே எதிர்பாராம நடந்ததுதான்...’’ புன்னகைத்தபடி பேசத் தொடங்கினார் ராஜ்சந்தர்:‘‘எம்ஏ முடிச்சதும் ஐஏஎஸ் ஆகணும்னுதான் ஆசைப்பட்டார். ஆனா, கதைகள் எழுதறதுல அவருக்கு ஆசையிருந்ததால சினிமாவுக்கு வந்துட்டார்!

கிட்டத்தட்ட 65 படங்களை அப்பா இயக்கியிருக்கார். அதுல 23 படங்கள்ல சிவாஜி சார்தான் ஹீரோ! உண்மைல இதை பெரிய விஷயமா நாங்க பார்க்கறோம்...’’ என்று சொல்லும் ராஜ்சந்தர், திரைத்துறைக்கு வரவே இல்லை.

‘‘எனக்கு படிப்புலதான் இன்ட்ரஸ்ட் இருந்தது. படங்கள் பார்ப்பேனே தவிர, அந்த இண்டஸ்ட்ரிக்கு வரணும்னு நினைக்கலை... அப்பா டிவி சீரியல்ஸ் பண்ணினப்ப தயாரிப்புல அவருக்கு ஹெல்ப் பண்ணியிருக்கேன். மத்தபடி என் பிசினஸ்தான் என் உலகம்! ஆனா, என் மக யாமினி, நடிக்கணும்னு விரும்பினா. எப்படி என் போக்குல நான் போக எங்கப்பா அனுமதிச்சாரோ அப்படி யாமினியையும் அவ வழில போக நானும் என் மனைவியும் அனுமதிச்சோம். ஆனா, ‘முதல்ல படிப்பை முடி... அப்புறமா நடி’னு மட்டும் சொன்னேன்.

அப்பா டைரக்ட் செஞ்ச படங்கள்ல குழந்தை நட்சத்திரமா ‘மயில்’ தேவி நடிச்சிருக்காங்க. அதனாலயே அப்பா மேல அவங்களுக்கு மரியாதையும் பக்தியும் அதிகம். தென்னிந்திய சினிமாலயும் இந்திலயும் அவங்க கோலோச்சினப்ப கூட சென்னை வரும்போதெல்லாம் அப்பாவை பார்த்துட்டுப் போவாங்க. ஒருவகைல எங்க ஃபேமிலி ஃப்ரெண்டாவே மாறிட்டாங்கனு சொல்லலாம்.

அவங்களுக்கு யாமினியை ரொம்ப பிடிக்கும். ‘நானும் உன்னை மாதிரி அம்மா சொல் தட்டாத பொண்ணாதான் வளர்ந்தேன். ஒருநாள் நீயும் என்னை மாதிரி பெரிய நட்சத்திரமா ஜொலிப்பே’னு யாமினியை விஷ் பண்ணியிருக்காங்க. விரைவில் தேவியோட வாக்கு பலிக்கும்னு நம்பறேன்...’’ யாமினி யைப் பார்த்தபடி புன்னகைக்கிறார் ராஜ்சந்தர்.

‘‘நானும் அப்படித்தான் நினைக்கறேன்...’’ தன் கணவரையும் மகளையும் பார்த்தபடி சொல்கிறார் செல்வி: ‘‘யாமினி மாடலிங் பண்ணும்போதே அவளை கவனிச்சேன். அவளுக்குள்ள நிறைய டேலன்ட்ஸ் இருக்கு. முக்கியமா டிசிப்ளின். ‘சினிமால நடிக்க விரும்பறேம்மா’னு என்கிட்ட அவ சொன்னதும் நான் பச்சைக் கொடி காட்டவே அந்த டிசிப்ளின்தான் காரணம்.

என் மாமனாருக்கு யாமினியை ரொம்ப பிடிக்கும். ரெண்டு பேரும் எப்பவும் சினிமா பத்தியே பேசிட்டிருப்பாங்க...’’ என்ற செல்வியை அணைத்தபடி தன் பயோடேட்டாவை ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆக சொன்னார் யாமினி: ‘‘பிசினஸ் மேனேஜ்மென்ட் படிக்கிறப்ப மாடலிங்குல ஆர்வம் வந்தது.

‘மிஸ் சவுத் இண்டியா’ போட்டில கலந்துகிட்டு ‘ஃப்ரெஷ் ஃபேஸ்’ அவார்ட் வாங்கினேன். துணிக்கடை, நகைக்கடை விளம்பரப் படங்கள்ல நடிச்சிருக்கேன். ஆக்ட்டிங் தவிர டான்ஸிலும் ஆர்வம் அதிகம். வெஸ்டர்ன் டான்ஸை முறைப்படி கத்துக்கலைனாலும் நல்லா ஆடுவேன்!

என் வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்குனு ஸ்ரீதேவி மேம் அடிக்கடி சொல்வாங்க. இந்த நேரத்துல அவங்க இல்லாதது என்னளவுல பெரிய இழப்பு. அம்மாவும் தேவி மேமும் திக் ஃப்ரெண்ட்ஸ். ஸோ, அம்மா என்னைப் பார்த்து சந்தோஷப்படுகிற இந்த தருணத்துல ஸ்ரீதேவி மேமும் எங்கிருந்தாலும் என்னைப் பார்த்து மகிழ்ச்சி அடைவாங்கனு நம்பறேன்...’’ என்ற யாமினி, தன் ஃப்ரெண்ட் வழியாகவே ‘வால்டர்’ படத்துக்கு ஆடிஷன் நடப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறார்:

‘‘நம்பிக்கையோடு போனேன். ஆடிஷன்ல பாஸ் ஆனேன். என் போர்ஷனை கேட்டேன். கேரக்டர் பிடிச்சிருந்தது. இதை மிஸ் பண்ணக்கூடாதுனு மனசு சொல்லிச்சு. இப்படித்தான் ‘வால்டர்’ல நடிச்சேன்.

இப்படியொரு கேரக்டரை எனக்குக் கொடுத்த டைரக்டர் அன்பு சாருக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ். இப்ப சில படங்கள்ல கமிட் ஆகியிருக்கேன். அதுல ஒரு படத்துல சென்னை ஸ்லாங்குல பேசி நடிக்கறேன்!

மாடர்ன், ஹோம்லினு எல்லா வகைலயும் நடிக்க ஆசை. என்னைப் பொறுத்தவரை கதைகள்தான் காஸ்ட்யூம்ஸை தீர்மானிக்குதுனு நம்பறேன்...’’ என்று சொல்லும் யாமினி, விஜய்யின் தீவிர ரசிகை: ‘‘அவரோட எல்லாப் படங்களையும் குறைஞ்சது பத்து முறையாவது பார்த்துடுவேன்...’’ இமைகள் படபடக்க சொல்லும் யாமினி, கிச்சன் குயினும் கூட:

‘‘பிரியாணி நல்லா சமைப்பேன். இது எங்கம்மா கிட்ட இருந்து நான் கத்துக்கிட்ட வித்தை. அம்மா நல்லா சமைப்பாங்க. ஸ்ரீதேவி மேம் சென்னை வர்றப்ப தன் மகள்களோடு எங்க வீட்டுக்கு வருவாங்க.

குறிப்பா அம்மா கையால சாப்பிட! டயட்டை எல்லாம் ஓரமா வைச்சுட்டு அம்மா சமைச்சதை ஒரு கை பார்ப்பாங்க!அம்மா, ரசிச்சு ரசிச்சு சமைக்கறதைப் பார்த்துதான் எனக்கும் சமையல்ல ஆர்வம் வந்தது...’’ என்கிற யாமினி, ஏவிஎம் சரவணன் சார் முதல் போனி கபூர் வரை திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தங்களுக்கு ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸாக இருப்பதாகச் சொல்கிறார்:

‘‘ஆனா, நான் நடிக்கறதைப் பத்தி இன்னும் யார்கிட்டயும் சொல்லலை! இனிமேதான் ஏவிஎம் சரவணன் சார்கிட்டயே சொல்லணும். ஆக்சுவலா தாத்தா பேரைச் சொல்லி வாய்ப்பு வாங்கறதுல எனக்கு விருப்பமில்லை... ‘வால்டர்’ ஆடிஷன்லகூட என் ஃபேமிலி பேக்ரவுண்டை நான் சொல்லலை. ஆடிஷன்ல செலக்ட் ஆனபிறகுதான் நான் யாரோட பேத்தினே சொன்னேன். தயாரிப்பாளர் ஸ்ருதிபிரபு மேம், இயக்குநர் அன்பு சார், சிபிராஜ் சார், நட்டி சார்னு எல்லாரும் ஆச்சர்யப்பட்டாங்க...

எப்படி தன் சொந்தக் கால்ல என் தாத்தா ஜெயிச்சாரோ... அப்படி என் திறமையால மட்டுமே நான் வெற்றி  பெற விரும்பறேன்...’’ அழுத்தம்திருத்தமாக யாமினி சொல்ல... பெருமையுடன் தங்கள் மகளை அள்ளி அணைத்தார்கள் ராஜ்சந்தரும் செல்வியும்.

செய்தி: மை.பாரதிராஜா

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்