உலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்!சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த வாரம் பெங்களூருவில் ‘உலகின் சிறந்த அம்மா’வுக்கான போட்டி நடந்தது. இதில் நாடு முழுவதிலிருந்தும் பல பெண்கள் கலந்துகொண்டனர்.
ஆனால், புனேவைச் சேர்ந்த ஆதித்யா திவாரி என்ற ஆண், உலகின் சிறந்த அம்மாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்!டவுண் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட அவ்னிஷ் என்ற குழந்தையின் வளர்ப்புத் தந்தை இவர். பல போராட்டங்களுக்குப் பிறகு ஜனவரி 1, 2016 அன்று 22 மாதங்களே ஆன அவ்னிஷைத் தத்தெடுத்தார் ஆதித்யா.

சிங்கிள் தந்தையான அவர், அவ்னிஷுக்காக, தான் பார்த்து வந்த மென்பொருள் பொறியாளர் பணியைக்கூட விட்டுவிட்டார். பிறகு சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களுக்குக் குழந்தை வளர்ப்பு குறித்து கவுன்சிலிங் கொடுக்க ஆரம்பித்தார்.

இப்போது கவுன்சிலிங் பணியை அவ்னிஷுடன் சேர்ந்து செய்கிறார். இதுவரைக்கும் தந்தையும் மகனும் 22 மாநிலங்களில் உள்ள 400க்கும் மேற்பட்ட இடங்களுக்குச் சென்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்துள்ளனர்.

அடுத்து சிறப்புக்குழந்தைகளின் வளர்ப்பு குறித்து ஐநாவில் நடக்கும் கலந்துரையாடலில் கலக்கப் போகின்றனர் ஆதித்யாவும் அவ்னிஷும். =

த.சக்திவேல்