ஆளுமைகளை ஆவணப்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது!



அழுத்தமாகச் சொல்கிறார் புதுவை இளவேனில்…

புகைப்படக்காரர் புதுவை இளவேனில் இப்போது, இன்னும் தீவிரமான ஆவணப்பட இயக்குநர்!‘பெருந்தொண்டர்’ எனப் பெயரிட்ட பெரியாரின் சீடர் ஒளிச்செங்கோ பங்கு பெறும் ஆவணப்படத்தை இயக்கியும், ‘அந்திமழை’ அசோகன் இயக்கிய ஓவியர் மனோகர் குறித்த ‘நீர்மை’ ஆவணப்படத்தை ஒளிப்பதிவு செய்தும் இருக்கிறார். சமீபத்தில், தமிழ்ப் பரப்பில் மிகுந்த கவனத்திற்குள்ளாகி இருக்கும் இந்த இரு படைப்புகளிலும் சம்பந்தப்பட்ட புதுவை இளவேனிலுடன் நடந்தது இந்தச் சந்திப்பு.

‘‘புகைப்படக்காரர் என்பதே ஓர் ஆளுமைதான். அவர்கள் சொல்வதை எல்லோரும் கவனித்துக் கேட்கிறார்கள். ஒரு செல்போனை விற்பதாக இருந்தால்கூட அதன் இயல்புகளைச் சொல்லிக் கேட்பதில்லை. இதில் போட்டோ எடுத்தால் இப்படி வரும் எனச் சொல்லித்தான் விற்கிறார்கள்.
போட்டோ என்பது நாளடைவில் வரலாற்றுப் பதிவாக மாறுகிறது. போட்டோ உங்களோடு பேசினால்தான் பிடிக்கும். பாஸ்போர்ட் சைஸ் படம் உங்களுக்குப் பிடிக்காது. அலை ஏன் பிடிக்கிறதென்றால், அலை உங்களுடன் பேசிக்கொண்டே இருக்கிறது.

ஹென்றி கார்டியர் பிரேசன் என்ற ஃப்ரெஞ்ச் புகைப்படக்காரர் எடுத்த காந்தியின் இறுதி நிகழ்வு படம்தான் இன்ைறக்கும் பேசப்படுகிறது. அதில் பல்லாயிரம் பேர் கூடியிருப்பார்கள். காந்தி சற்றே மேலே இருப்பார். பக்கத்தில் ஒரு மரத்தில் 100 பேர் கிளையை மறைத்து இருப்பார்கள்.
எல்லோரும் அந்த இறுதி ஊர்வலத்தைப் படம் எடுத்தார்கள். ஆனால், காந்தியின் இறுதிப்படமென்றால் அதுதான். அந்தப் படத்தைப் பார்த்தால், அது உங்களை அறியாமல் நகர்ந்து கொண்டே இருக்கும். திருவண்ணாமலையில் விச்ராந்தியாக ரமணர் உட்கார்ந்திருக்கும் படமும், புதுவையில் இருக்கும் அரவிந்தரின் படமும் அவர் எடுத்தவைதான்.

தமிழில் முக்கியமான நூறுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தியிருக்கிறேன். இதில், எழுத்தாளர்கள் எழுதுவது மாதிரியான, கன்னத்தில் பேனாவோடு கை வைத்து யோசிப்பது மாதிரியான பழைய மாடல்களைத் தவிர்த்திருக்கிறேன்.

நம்மிடம் ஏராளமான விஷயங்கள் இருக்கிறமாதிரி இருக்கும். ஒரு கட்டம் கழித்துப் பார்த்தால் அவற்றை ஒழுங்குபடுத்த மறந்து, ஆவணப்படுத்தத் தவறியிருப்போம். அப்படிப்பட்ட நிலைமை எழுத்தாளர்களுக்கு வரக்கூடாது என்று கருதியே இந்தப் பணியைச் செய்து வருகிறேன். யாரும் அதைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கிறேன்.

ஆன்மீகப் பாதையில் மனிதனுக்கு ‘நாளை’ என்று ஒன்று கிடையாது என்பார்கள். இன்றுதான் அந்த நாள். ஆனால், என்ன செய்ய வேண்டுமோ அதை இப்பொழுதே செய்ய வேண்டும் என்பார்கள். அதன் விளைவாகவே இந்த இரண்டு ஆவணப்படங்கள். ஆளுமைகளை ஆவணப்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை உணர்த்தவே இதைத் தயாரித்திருக்கிறேன்.

முன்பு, மறைந்த ஓவியர் ஆதிமூலத்தின் ஓவியப்பரப்பை வைத்து ஒரு ஆவணப்படம் செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஏனோ அவர் நம்பிக்கையைப் பெற முடியாது போகவே, கி.ராஜநாராயணன் எழுதிய கதைகளுக்கு ஆதிமூலம் வரைந்த ஓவியங்களை வைத்து ‘உயிர்க்கோடுகள்’ என்ற தலைப்பிட்டு புத்தகமாக்கினேன். கடைசியில், ஆதிமூலத்திற்கு அது மனதிற்கு நெருங்கிய புத்தகமாகி விட்டது.

அவ்வண்ணமே ஓவியர் மனோகரின் ஓவியத் திறமையை அறிந்திருக்கிறேன். சக ஓவியர்கள் அவரை மிகவும் பிரியமாக ‘அண்ணா’ என்றழைக்க, எத்தனையோ பேருக்கு உந்துசக்தியாக இருந்திருக்கிறார். அவர்களுக்கான ஓவிய வகைகளை அடையாளம் கண்டு கொடுத்திருக்கிறார். எங்கே போனாலும் அவரது நல்லியல்புகளால் பேசப்படுகிறார். ஆனால், அவருக்கோ அதைப்பற்றி யாதொரு பெருமையும் கிடையாது.

வினாடிக்கு வினாடி வாழ்க்கையை அன்புமயமாகப் பார்க்கிற ஒருவரால்தான் இப்படியெல்லாம் மாணவர்களை உருவாக்க முடியும். ஆழமான அன்பு மற்றும் பரிவால் மட்டுமே இது சாத்தியமாகிறது. சகோதரர் ‘அந்திமழை’ அசோகன் தன் இயக்குதலை சரியாகச் செய்து ‘நீர்மை’யை ஆழப்படுத்தினார். ஓவியர் மனோகரை அவரது இருப்பிலேயே நிறுத்தி, அவரைப் பற்றிய நல் உணர்தலை வெளியே எடுத்து வந்தார். அதை என் ஒளிப்பதிவில் கொண்டு
வந்தது நிறைவாக இருக்கிறது.

அதேபோல, பெரியார் தன் நீண்ட நெடிய பயணத்தில் தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறார். சமூக நீதிக்கென புறப்பட்ட பெரும் பாய்ச்சலான சுற்றுப்பயணத்தில் தஞ்சை மாவட்டம் கண்கொடுத்தவனிதம் என்ற ஊரின் அருகில் இருக்கிற விடையபுரத்தில் ஒரு முக்கியமான வாசகத்தை மக்களுக்காகப் பரிந்துரைக்கிறார். ‘கடவுள் இல்லை, இல்லவே இல்லை’ என்பதை அங்கேதான் முழங்குகிறார். ஒளிச்செங்கோ என்ற பெரியார் பெருந்தொண்டர் அங்கிருக்கிறார். பார்த்தால், அவரே ஒரு வரலாற்று ஆவணமாக விளங்குகிறார்.

பெரியாரின் அத்தனை பயணங்களையும், நிகழ்வுகளையும், செய்திகளையும் நேரம், மாதம், வருடம், காலம், சூழல் முதற்கொண்டு துல்லியமாகச் சொல்லக்கூடியவர். 85 வயதிலும் அவரது நினைவுப்போக்கு ஆச்சரியப்படுத்தக் கூடியது. அந்த எளிய மனிதரின் பதிவை ஆவணமாக்கி இருக்கிறேன்...’’ புன்னகைக்கிறார் இளவை புதுவேனில்.

கி.ரா.விடம் உங்களுக்கு இருக்கிற உறவு அபூர்வமானது... எனது இளமைப்பருவம் மிகவும் வேதனையானது. நீங்கள் வீடு என்று எதைச் சொல்வீர்களோ, அது இல்லை என் வீடு. அம்மா பள்ளிக்கூடத்தில் ஆயாவாக வேலை பார்த்தார். அங்கே படிப்பேன். பிளாட்ஃபாரத்தில்தான் தூங்குவேன். விலை மலிவான நூல்கள் மட்டுமே படிக்க முடிந்தது. கி.ரா. புதுச்சேரி வருவதற்கு முன்னால் அவர் எழுத்துகளைப் படித்திருக்கிறேன். அவர் இங்கே வந்த பிறகுதான் பார்த்தேன். அவரிடம் கொஞ்சம் பழகிவிட்டு, தினமும் காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் வீட்டுக்குப் போய்விடுவேன். கணபதி அம்மா கொடுக்கிற முறுகல் தோசையையும், காப்பியையும் குடித்துவிட்டு அவர்கள் கொடுக்கிற தபால்களைக் கொண்டு போய் போஸ்ட் ஆபீஸில் சேர்ப்பேன்.

பிறகு, அவர்கள் வீட்டுக்கு வருகின்ற எழுத்தாளர்களை பஸ்ஸ்டாண்டில் விடுவேன். ஒரு நாள் ஒரு மஞ்சள் பையில் 60,000 ரூபாய் வைத்துக் கொடுத்து ‘பொழைச்சிக்கோ’னு கி.ரா. சொன்னார். இன்று என் மொத்த வாழ்க்கைக்கே அதுதான் முதலீடு. இப்போதுவரை அவர்களின் பிள்ளைகளுக்குள் ஏதாவது சின்னப் பிரச்னை என்றால் கூட, ‘இளவேனில்கிட்டே கேட்டுக்கங்க’னு தான் சொல்கிறார். எனக்கு தந்தையாக, உறவாக, இப்போது நண்பனாகக் கூட இருக்கிறார்.

கணபதி அம்மா இறந்தபோது, துக்கத்தால் கி.ரா. இறுதி அஞ்சலி செலுத்த எழுந்து வரவில்லை. அவர் மகன் உட்பட அத்தனை பேரும் கூப்பிட்டுப் பார்த்தும் சோகத்தில் சிலையாக உட்கார்ந்திருந்தார். யாரோ, ‘இளவேனில் கூப்பிட்டா வந்திடுவாரு’னு கூட்டத்தில் சொல்கிறார்கள். கி.ரா.

மகன் வந்து, ‘நீ கூப்பிடுப்பா’னு சொன்னார். ‘வாங்கப்பா’னு நான்  ஒரு வார்த்தை  சொன்னதும், உடனே எழுந்து என் தோளைப்பிடித்துக்கொண்டு வந்து அஞ்சலி செலுத்தினார். அதெல்லாம் அவர்மேல் நான் வைத்திருக்கிற அன்புக்குக் கிடைத்த பெரிய மரியாதை. வாசகனாக வந்து இப்போது மகன் மாதிரி உருமாறி நிற்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை!

நா.கதிர்வேலன்