முகம் மறுமுகம்-தமிழ் நாவல்களை ஆங்கிலத்தில் வெளியிடும் சினிமா தயாரிப்பாளர்!ராதாமோகன் இயக்கத்தில், தரமான நகைச்சுவையில் கலகலக்க வைத்த ‘உப்புக் கருவாடு’ படத்தின் தயாரிப்பாளர் ராம்ஜி நரசிம்மன்.
‘களவாணி’ படத்தின் மூலம் ஃபைனான்ஸியராக தன் திரைப்பயணத்தை ஆரம்பித்த இவர், பின்னர், ‘வாகை சூடவா’, ‘அரவான்’ உட்பட பல படங்களின் விநியோகஸ்தராகவும் சிறகுகளை விரித்தவர்; விரித்தும் வருபவர்.

திரையுலகில் இயங்கியபடியே பெரும் லாபம் கிடைக்காது என்று தெரிந்தும் சிறுபத்திரிகை, இலக்கியம் சார்ந்த புத்தகங்களை தனது ‘ஜீரோ டிகிரி’ பதிப்பகம் மூலம் பதிப்பித்தும் வருகிறார். அதுமட்டுமல்ல... தமிழில் நூல்களைப் பதிப்பித்தபடியே தமிழ்ச் சூழலில் முத்திரை பதித்த பல நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் வெளியிட்டு வருகிறார்.தமிழ்மகனின் ‘வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’, லக்ஷ்மி சரவணகுமாரின் ‘கானகன்’,
அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ ஆகியவை அப்படி ஆங்கிலத்துக்கு சென்றிருக்கும் குறிப்பிடத்தக்க படைப்புகள்!

‘‘ஒரு காலத்துல உலக கிளாசிக்ஸ் எல்லாம் ஆங்கிலத்துல மட்டுமே இருக்கறதா நினைச்சுட்டு இருந்தேன். அதனால தமிழ் இலக்கியம் பக்கம் கவனம் செலுத்தலை. தவிர self development புக்ஸ்தான் என் புரொஃபஷனுக்கு தேவைனும் நினைச்சு அப்படிப்பட்ட புக்ஸை மட்டுமே படிச்சிட்டிருந்தேன்.
ஒரு முறை யதேச்சையா பாலகுமாரனின் ‘என் கண்மணி தாமரை’யைப் படிச்சேன். பியூட்டிஃபுல். அதோட தாக்கத்துல உடனே திருக்கடையூர் போனேன். பலமுறை அங்க போயிருந்தாலும் ‘என் கண்மணி தாமரை’ படிச்ச பிறகு போனப்ப புதுசா ஒரு ஃபீல். அப்படி ஒரு இம்பேக்ட்.

அதைப் பத்தி வீட்ல சொன்னப்ப எங்கப்பா சந்தோஷப்பட்டார். உடனே, அவர் பைண்ட் பண்ணி வச்சிருந்த ‘பொன்னியின் செல்வன்’ புக்கை கொடுத்து படிக்கச் சொன்னார். வாசிக்க ஆரம்பிச்சேன். கீழ வைக்க மனசே வராம சாப்பிடாம, தூங்காம ஐந்து வால்யூம்ஸையும் படிச்சு முடிச்சேன். இந்த நாவல் ஆங்கிலத்துல வந்தா எப்படியிருக்கும்னு முதல் முறையா அப்பதான் யோசிச்சேன்...’’ புன்னகைக்கிறார் ராம்ஜி.

‘‘என் பிசினஸ் பார்ட்னர்ஸான காயத்ரி, ராமுகிட்ட நான் படிச்ச நூல்களைப் பத்தி பேசுவேன்; பகிர்ந்துப்பேன். நாங்க மூணு பேரும் 14 வருஷமா ஒண்ணா டிராவல் பண்ற ஃப்ரெண்ட்ஸ். அவங்க மூலமா எழுத்தாளர் சாரு நிவேதிதா அறிமுகமானார். இவரோட ‘ஜீரோ டிகிரி’ நாவலை ஏற்கனவே நான் படிச்சிருந்தேன். அதனால அறிமுகமானதுமே சகஜமா அவர்கூட பேச முடிஞ்சது.

பேஸிக்கா சாரு நிவேதிதா ரொம்ப ஃப்ரெண்ட்லியானவர். தகப்பனா, ஃப்ரெண்டா, கைடா, மென்ட்டரா, சகோதரரா... எல்லாமாகவும் இருப்பார்; பழகுவார். மெல்ல மெல்ல நாங்க அவருக்கு நெருக்கமானோம்.அந்த நேரத்துல சென்னை புத்தகக் கண்காட்சி வந்தது. அவர் கூட நாங்க புக் ஃபேர் போனோம். அவரோட எல்லா புக்ஸையும் ஒண்ணா வாங்க நான் ஆசைப்பட்டு கடை கடையா ஏறி இறங்கினேன்... என்ன காரணம்னு தெரியலை... அவரோட புக்ஸ் கிடைக்கலை...

‘எனக்கும் ரீசன் தெரியலை ராம்ஜி... ஆனா, மனசுக்கு கஷ்டமா இருக்கு’னு சாரு நிவேதிதா வேதனைப்பட்டார். அன்றிரவு எனக்கு தூக்கம் வரலை... மறுநாள் நாங்க சந்திச்சப்ப, ‘நீங்க வருத்தப்பட வேண்டாம்... நாம பிரமாதமா பப்ளிஷிங் ஹவுஸை பில்ட் பண்ணலாம்’னு சொன்னேன்.
உடனே சாரு பதறிட்டார். ‘ராம்ஜி... நீங்க நினைக்கற மாதிரி பதிப்பகம் சாதாரண விஷயமில்ல... எனக்காக நீங்க பொருளை இழக்க வேண்டாம்’னு தடுத்தார். நான் சிரிச்சுகிட்டே, ‘சினிமால நான் இழக்கறதை விட பப்ளிஷிங்ல ஒண்ணும் பெருசா இழந்துடப் போறதில்ல’னு சொன்னேன். இப்படித்தான் என் பார்ட்னர்ஸோடு சேர்ந்து பதிப்பகம் பக்கம் வந்தேன். எங்க பதிப்பகத்துக்கும் ‘ஜீரோ டிகிரி’னே பெயர் வைச்சோம்...’’ என்று சொல்லும் ராம்ஜி, கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை புத்தகக் கண்காட்சியில் பதிப்பாளராகப் பங்கேற்று வருகிறார்.

‘‘இதுவரை இருநூறு டைட்டில்ஸ் கொண்டு வந்திருக்கோம். பதட்டம் படபடப்புனு எதுவுமில்லாம ரிலாக்ஸா, சின்சியரா நூல்களை பதிப்பிக்கிறோம். நான் ஆசைப்பட்ட மாதிரியே ‘பொன்னியின் செல்வன்’ நாவலை ஆங்கிலத்துல பதிப்பிக்கிறேன். இதுவரை மூணு பாகங்கள் ஆங்கிலத்துல வந்துடுச்சு. 2020 இறுதிக்குள்ள மற்ற இரு பாகங்களும் வந்துடும்...’’ என்ற ராம்ஜி, தமிழின் முக்கியமான படைப்புகளை ஆங்கிலத்தில் கொண்டுவரும்போது பல நெகிழ்ச்சியான சம்பவங்களை சந்திப்பதாகச் சொல்கிறார்.

‘‘ஒருமுறை பாலகுமாரன்கிட்ட அவரோட ‘புருஷவதம்’ நாவலை ஆங்கிலத்துல பப்ளிஷ் பண்ண அனுமதி கேட்டேன். ‘அதுக்கென்ன... உரிய ராயல்டி கொடுங்க... பண்ணுங்க’னு சொன்னார். அந்த நொடியே அவருக்கு அட்வான்ஸ் கொடுத்தேன். உடனே புக்கை தூக்கி கைல கொடுத்தார்.
சில மாதங்கள்ல அதை ஆங்கிலத்துல கொண்டு வந்தோம். பிரஸ்ஸுலேந்து வந்ததும் அதை கொண்டு போய் அவர்கிட்ட காட்டினோம். அவர் கண்கள்ல இருந்து பொல பொலனு கண்ணீர் வழிந்தது. மறுநாளே தன் வலைத்தளத்துல ‘என் நாற்பதாண்டுக் கால கனவு நனவாகியது. என் எழுத்து ஆங்கிலத்தில் என் கைகளில் தவழ்கிறது’னு நெகிழ்ச்சியோடு எழுதியிருந்தார்.

எல்லா எழுத்தாளர்களுக்குமே தங்களோட படைப்புகள் பிற மொழிகள்ல... குறிப்பா ஆங்கிலத்துல வரணும்னு ஆசையிருக்கு... அதனாலயே நாங்க அப்ரோச் பண்றப்ப நெகிழ்ந்து போறாங்க...’’ என்ற ராம்ஜி, கடந்த இரண்டு வருடங்களில் சாரு நிவேதிதாவின் நூல்கள் மட்டும் தங்கள் பதிப்பகத்தின் வழியே 16 ஆயிரம் பிரதிகள் விற்றிருப்பதாகச் சொல்கிறார்.

‘‘இப்ப நிறைய பேருக்கு தமிழ் பேசத் தெரியும். ஆனா, தமிழ்ல எழுதப் படிக்கத் தெரியாது. அப்படிப்பட்டவங்களுக்கு நம்ம தமிழ் நூல்கள் ஆங்கிலத்துல கிடைப்பது வரப்பிரசாதம். இதுவரை நாங்க ஆங்கிலத்துல பதிப்பிச்ச எல்லா நூல்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு.

இதுவரை பதிப்பகம் வழியா நாங்க பெருசா லாபம் சம்பாதிக்கலை. குறிப்பா ஆங்கில நூல்கள் வழியா. ஏன்னா, எழுத்தாளர்களுக்கு, மொழி
பெயர்ப்பவர்களுக்கு, எடிட்டிங்குக்குனு நிறைய செலவாகுது. ஆனாலும் நாங்க இதுபத்தி எல்லாம் கவலைப்படாம புத்தகம் கொண்டு வரோம்னா அதுக்கு காரணம் எங்க பேஷன்தான். கண்டிப்பா ஒருநாள் நாங்க ரீச் ஆவோம். அந்த நம்பிக்கை எனக்கு மட்டுமில்ல... என் பார்ட்னர்ஸுக்கும் இருக்கு...’’ என்ற ராம்ஜி, ஆரம்பக் காலங்களில் பல நிறுவனங்களிலும் சேல்ஸ் பிரதிநிதியாக பணிபுரிந்திருக்கிறார்.

‘‘நான் படிச்சது வளர்ந்தது எல்லாமே சென்னைலதான். அப்பா அடிசன் அன் கோ டூல்ஸ்ல ஒர்க் பண்ணினவர். அம்மா சாஸ்திரி பவன்ல வேலை பார்த்தாங்க. எனக்கு ஒரு தம்பி. அவர் அமெரிக்கால இருக்கார்.

படிப்புல நான் கொஞ்சம் லேட்பிக்கப். பதினொண்ணு வரைதான் படிச்சேன். அப்புறம் ஒரு டிப்ளமோ கோர்ஸ்ல சேர்த்துவிட்டாங்க. அதையும் முழுசா முடிக்கல. சேல்ஸ் ஜாப் போயிட்டேன். சேல்ஸ்மேனா இன்டர்கம் போன்களை விற்கற வேலையிலிருந்தேன். சேல்ஸ்ல கெட்டிக்காரனானேன். கைல நிறைய காசு புரண்டதும், படிப்பெல்லாம் நமக்கு தேவையில்ல போலிருக்குனு நினைக்க ஆரம்பிச்சிட்டேன்.  

டாடாவின் நெல்கோல ஜாயின் பண்ணின நேரத்துல ரங்கராஜன் நடத்தின ஒரு டிரெயினிங் புரோகிராம்ல கலந்துகிட்டேன். அது சேல்ஸ் டிரெயினிங் புரோக்ராம். தன் டீம்ல உள்ளவங்களோட பர்ஃபாமன்ஸ் பார்த்துட்டு அவராகவே சின்னதா அவார்டு ஒண்ணு கொடுப்பார். அதுல இருந்த வாசகம் இப்பவும் நல்லா ஞாபகத்துல இருக்கு. ‘Its a funny thing about life. If you refuse to accept anything from the best, you very often get it...’ இப்ப வரை மனசுல அப்படியே தங்கியிருக்கு!

அங்கதான் மனிதர்களையும் அழகா டிரெயின் பண்ண முடியும்னு புரிஞ்சுக்கிட்டேன். வாழ்க்கைல எதை வேணாலும் நம்மால கத்துக்க முடியும்னு அந்த புரோக்கிராமுக்குப் பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது.ரங்கராஜன் சாரோட நட்பானேன். டாடா வேலையை உதறிட்டு அவர்கிட்டயே வேலைக்கு சேர்ந்துட்டேன். 1995ல இருந்து 2001 வரை அல்மாமேட்டர்லதான் ஒர்க் பண்ணினேன்.

இந்த டைம்ல என் பேரண்ட்ஸ் ரிட்டயர் ஆனாங்க. அப்புறம் ஒரு நியூயார்க் நிறுவனத்துல வேலை கிடைச்சது. டிகிரி இல்லாததால புரொமோஷன்ஸ் பாதிக்கப்பட்டது. உடனே பிஏ சைக்காலஜி படிச்சு முடிச்சேன். கிராஜுவேட் ஆனதும் புரொமோஷன். கோடக் மஹிந்திராவில் ரீஜனல் ஹெட். அப்படியே பெரிய பெரிய நிறுவனங்கள், வங்கிகளின் டாப் போஸ்ட்னு ஒரு சுத்து சுத்தினேன்.

பிறகு என் கேரியரே மாறிப்போச்சு. எச்ஆர் டிரெயினிங் கவுன்சிலிங் கிளாஸ்கள் கொடுக்க ஆரம்பிச்சேன். அதன்பிறகு நண்பர் ராஜேந்திர ஆர். மேத்தாவின் உதவியால சொந்தமா பிசினஸ்ல இறங்கினேன். இப்ப வரை அவர்தான் எனக்கு ஃபுல் சப்போர்ட்.

இதுவரை மூணு படங்கள் தயாரிச்சிருக்கேன். ஏகப்பட்ட படங்கள் டிஸ்ட்ரிபியூட் பண்ணியிருக்கேன். கார்ப்பரேட் எச்ஆர் டிரெயினிங்கை இப்பவும் நடத்தறேன். நான்காவது படம் தயாரிக்க ரெடி ஆகிட்டேன். கைல முழுப் பணமும் வைச்சுட்டு படம் தயாரிப்பதுதான் என் பாலிசி... கடன் வாங்கி ப்ரொட்யூஸ் பண்றதுல விருப்பமில்ல...’’ என்ற ராம்ஜியின் பேச்சு அப்படியே சினிமா பக்கம் தாவியது.

‘‘எதிர்பாராமதான் திரைத்துறைக்கு வந்தேன். நண்பர் வெங்கட் கேட்டுகிட்டதால ‘களவாணி’க்கு ஃபைனான்ஸ் பண்ணினேன். அந்தப் பட சக்சஸ் சினிமால ஒரு பிடிப்பை கொடுத்தது. ‘வாகை சூடவா’, ‘அரவான்’னு பல படங்களுக்கு அடுத்தடுத்து ஃபைனான்ஸ் பண்ணினேன். ‘பிச்சைக்காரன்’, ‘அஞ்சல’ படங்களை விநியோகிச்சேன். எதுவும் என் பணம் கிடையாது. ‘நீயே பார்த்துக்கோ’னு என்னை நம்பி என் ஃப்ரெண்ட்ஸ் கொடுத்தது.  
பார்த்திபன் சாரோடு மூணு வருஷங்கள் இருந்தேன். அவரோட கதை விவாதங்கள்ல பங்கேற்றேன். சாதாரண ஒன்லைனை அவர் திரைக்கதையா மாற்றும் விதம் பிரமிப்பா இருக்கும். சினிமா மேல எனக்கு காதல் வர அவரும் ஒரு காரணம்.

‘உப்புக்கருவாடு’ நல்ல காமெடி படம். ஆனா, அந்தப் படம் ரிலீசானப்ப நல்ல மழை. அதனால தியேட்டர் வசூல் பாதிச்சது. ஆனாலும் அது சின்ன பட்ஜெட் படம். ஸோ, சாட்டிலைட்ஸ், வெளிநாட்டு உரிமைனு கையைக் கடிக்கலை...’’ என்ற ராம்ஜி, தெலுங்கு, இந்திப் படங்களையும் விநியோகம் செய்கிறார்.

‘‘நான் தயாரிச்ச, தயாரிக்கப் போற பட விழாக்கள்லயும் சரி... ஃபைனான்ஸ் பண்ற பட விழாக்கள்லயும் சரி... நான் கலந்துக்க மாட்டேன். விருப்பமில்ல. படம் எடுக்கறதே பணம் சம்பாதிக்கத்தான். வேற எந்த பெருமைக்காகவும் இல்ல. படம் தயாரிச்சா, அது நல்லா ஓடி, வசூல் குவிக்கணும். அதுல நடிச்சவங்க புகழ் பெறணும். அதான் இலக்கு.

இதுல தயாரிப்பாளர் தவிர மத்தவங்க எல்லாரும் முன்னேறி மேல போயிடுவாங்க. படம் ரிலீஸ் ஆன பிறகு அந்தப் படத்தை தயாரிச்சவர் காணாமல் போயிடுவார்! இதுதான் எதார்த்தம். அப்படி யிருக்க கடைசில காணாமப் போறதுக்கு முதல்ல இருந்தே காணாமல் போவோமே என்றுதான் விழாக்கள்ல பங்கேற்காம தலைமறைவா இருக்கேன்!’’ புன்னகைக்கும் ராம்ஜியின் மனைவி பிந்து, கிரிமினாலஜியில முனைவர் பட்டம் பெற்றவர். இவர்களது ஒரே செல்ல மகள் லத்திகா, பள்ளியில் படித்து வருகிறார்.

செய்தி: மை.பாரதிராஜா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்