பாலைவனத்தில் வேளாண்மைப் பண்ணை!



துபாயிலிருந்து அல்-அய்ன் நகரம் செல்லும் வழியில் கிட்டத்தட்ட நூறு கிலோ மீட்டர் தொலைவில் (ஒரு மணி நேரப் பயணத்தில்) இயற்கை வேளாண்மைப் பண்ணையான எமிரேட்ஸ் பயோஃபார்ம் இயங்குகிறது.

அமீரகத்தில் இயற்கை வேளாண்மையை முன்னெடுக்கும் மிக முக்கியமான பணியை இந்தப் பண்ணை மேற்கொண்டு வருகிறது.
விரிந்து பரந்து கிடக்கும் பாலைவனத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி சதுர அடியில் (ஒரு மில்லியன் சதுர மீட்டர்) இயற்கைப் பண்ணைக்கான விளைவிடத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

பண்ணை நிலம் உருவாகி இரண்டு வருடங்களே ஆகியிருப்பதால் இப்போது கால்வாசி நிலப்பரப்பில் - அதாவது கிட்டத்தட்ட 25 லட்சம் சதுர அடியில் -  மட்டுமே வேளாண்மை செய்கிறார்கள். இயற்கையான முறையில்  வருடத்தில் ஒன்பது மாதங்கள் காரட், பீட்ரூட், வெள்ளரி, கத்தரிக்காய், மிளகாய், தக்காளி, பார்ஸ்லி மற்றும் சில உள்ளூர் கீரை வகைகளையும் தோட்டச் செடிகளையும் இங்கே விளைவிக்கிறார்கள்.

இயற்கை வேளாண்மை என்பதால் செயற்கையான வேதியியல் தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகள் ஏதும் இவர்கள் உபயோகிப்பதில்லை. இயற்கை உயிர்க்கொல்லியாக வேப்பம்கொட்டையை காய வைத்து அரைத்து எடுக்கப்படும் வேம்பு எண்ணெயை உபயோகிக்கிறார்களாம்.

இதற்காகவே பண்ணையைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான வேப்பமரங்களை நட்டு வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து பெறப்படும் இலைகளையும் வேப்பங் கொட்டைகளையும் பயன்படுத்தியே பண்ணைக்குத் தேவையான இயற்கையான பூச்சி மருந்தைத் தயாரிக்கிறார்கள்.

சுற்றிலும் பாலைவனமாக இருக்க இந்த இடம் மட்டும் வேளாண்மைக்கு உகந்ததாக மாறியது மந்திரத்தால் விளைந்த மாங்காய் இல்லை. அதற்குப் பின்னால் கடும் மனித உழைப்பு இருக்கிறது. பாலை மணலை அகற்றி வரப்புகள் உருவாக்குவது, மண்ணைப் பதப்படுத்துவது, பதப்படுத்தப்பட்ட மண் வேளாண்மைக்கு உகந்ததா எனப் பரிசோதனை செய்வது என்று பல கட்டங்களைக் கடந்த பின்னரே, வெறும் பாலைவனமாக இருந்த இடத்தைக் கோழிகளின் கழிவுகளைக் காய வைத்து வேளாண்மைக்கு உகந்த மண்ணோடு கலந்து வரப்புகளை உருவாக்கி வரப்புகளில் சொட்டு நீர்ப்பாசனம் மூலமாக தாவரங்களுக்கு உயிர் கொடுக்கிறார்கள்.

ஒரே பயிரை அடுத்தடுத்த வரப்புகளில் வரிசையாகப் பயிரிடாமல் காரட், பீட்ரூட், கத்தரி என்று ஒவ்வொரு வரப்புகளிலும் வெவ்வேறு செடிகளை வளர்க்கிறார்கள். அறுவடை முடிந்ததும் பயிர்களை மீண்டும் மாற்றிப் பயிரிடுவார்களாம். இதன் மூலம் பூச்சிகளுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி விடுவார்களாம். தவிர பூச்சிகளை அழிப்பதற்கென்றே தனியாக ஓரிடத்தை உருவாக்கி அதிலும் பயிரிடுகிறார்கள் - பூச்சிகளின் முழுக் கவனமும் இந்த இடத்தில்தான் இருக்குமாம். அதற்குள் பிற இடங்களில் விதைத்ததை அறுவடை செய்து விடுவார்களாம்.

கொடும் கோடையான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் தவிர்த்து மீதமுள்ள ஒன்பது மாதங்களும் இங்கே இயற்கையான முறையில் காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. தொடர் வேளாண்மை செய்தால் மண் வளம் மாசுபட்டு விளைச்சல் குறையுமென்பதால் அந்த மூன்று கோடை மாதங்களையும்  மண்ணைப் பதப்படுத்தும் காலமாகப் பயன்படுத்துகிறார்கள்.

கோழியின் கழிவுகளுக்காக கோழிப்பண்ணையையும் இவர்களே நடத்துகிறார்கள். பண்ணையில் விளையும் பொருட்களை கோழிக்கு இரையாகவும் கோழியின் கழிவுகளை பண்ணைக்கு உரமாகவும் பயன்படுத்துவதன் மூலம் செலவுகளைக் கட்டுக்குள் வைக்கிறார்கள்.

போதாக்குறைக்கு இயற்கை முறையில் உருவான கோழிப்பண்ணைகள் மூலம் விற்கப்படும் முட்டைகளுக்கு சந்தையில் தேவை அதிகமென்பது வருவாய் பெருக உதவுகிறது.மட்டுமல்லாமல், இங்கே இயற்கை முறையில் உருவாக்கப்படும் காய்கறிகளுக்கு நிறைய தேவைகள் இருப்பதால் பண்ணையிலேயே பொது மக்களுக்கான விற்பனை நிலையமும் நடத்துகிறார்கள்வீட்டில் வளர்க்கத் தேவையான காய்கறிச் செடிகளும் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பண்ணையைக் கட்டணம் வசூலித்து டிராக்டரில் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுகிறார்கள் (நம்மூர் பணத்தில் கிட்டத்தட்ட 700 ரூபாய்). காரட், பீட்ரூட், முள்ளங்கி போன்றவைகளை அறுவடை செய்வதெப்படி என்ற செயல்முறைையச் செய்து காட்டிவிட்டு விருந்தினர்கள் இரண்டு செடிகளிலிருந்து தேவையானதை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பாலைவனத்தின் கடும் வெப்பத்தைத் தாங்க முடியாத செடிகளுக்காகப் பசுமை இல்லங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மிகப்பெரும் மின்விசிறிகளின் மூலமாக ஒரு பக்கம் வெப்பக் காற்றை உறிஞ்சி எடுத்து அதனால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப எதிர்ப்பக்கம் வழியாக ஊடுருவி உள்வரும் காற்றை ஈரமான படுதாக்களின் மென் துளைகள் வழியே அனுமதிப்பதன் மூலம் கடும் வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கையாண்டு இந்தப் பசுமை இல்லங்களில் வருடம் முழுதுமே விளைவிக்கிறார்கள்.

வெற்றுப் பாலையிலும் சரியான தொழில் நுட்பம் மற்றும் முயற்சிகளின் மூலமாக வேளாண்மையை நடத்துவதன் மூலம் இந்த இயற்கைப்பண்ணை இந்தப் பகுதிக்கே முன்மாதிரியாக இருக்கிறது. பாலையிலும் பயிர் வளர்ப்பு சாத்தியமே என்பதை தனியே பாடமாகவும் நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இயற்கையை அழிக்கும் மனிதன்தான் மீண்டும் இயற்கையோடு இணைந்து வாழவும் ஏங்குகிறான் என்பதற்கான எளிய சான்றாக இந்தப் பண்ணை  இருக்கிறது!        

துபாயிலிருந்து ஆசிப்மீரான்