நியூஸ் சாண்ட்விச்



ஃபேஸ்புக்கை மிஞ்சிய டிக் டாக்

டிக் டாக் செயலி குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைவரிடமும் பிரபலம். இதன் பயன்பாடு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சீனாவில் உருவாக்கப்பட்ட இந்த செயலியை நம் இந்தியர்கள் 2019ம் ஆண்டில் 5.5 பில்லியன் மணி நேரம் உபயோகித்துள்ளனர் என்ற சுவாரஸ்யமான தகவலை ஆப் ஆனி என்ற செயலி வெளியிட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் ஃபேஸ்புக்கில் 25.5 பில்லியன் மணி நேரங்கள்தான் நாம் செலவிடுகிறோமாம். டிக் டாக் செயலியில் ஒரு விடியோவைப் பார்க்க இந்தியர்கள் செலவிடும் நேரம், 11 நாடுகளைச் சேர்ந்த மக்கள் செலவிடும் நேரத்தைவிட அதிகம் என்றும் தெரியவந்துள்ளது!

ரஜினியை அடுத்து, தீபிகாவும் விராட் கோலியும்

டிஸ்கவரி தொலைக்காட்சியின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற நிகழ்ச்சிக்காக தொகுப்பாளரும் சாகச வீரருமான பியர் கிரில்ஸுடன் இணைந்து, கர்நாடக பந்திபுரா புலிகள் காப்பகத்தில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.

ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இப்போது இந்த வரிசையில் நடிகை தீபிகா படுகோனும், இந்திய கிரிக்கெட் அணித் தலைவரான விராட் கோலியும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹாரி பாட்டர் தீம் பார்க்

ஜப்பான் டோக்கியோ மாகாணத்தில் பிரபல ஹாரி பாட்டர் திரைப்படங்களைத் தழுவிய பொழுதுபோக்கு பூங்கா 2023ல் திறக்கப்படவுள்ளது.
1926ல் திறக்கப்பட்டு 94 ஆண்டுகளாக இயங்கி வரும் தோஷிமேன் என்ற பொழுதுபோக்கு பூங்காவை நிறுத்தி, அதே இடத்தில் இந்த புதிய தீம் பார்க்கை உருவாக்க உரிமையாளர் திட்டமிட்டுள்ளார். இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.

சென்னை திரையரங்குகளில் ஆஸ்கர் கொண்டாட்டம்

சினிமா துறையில், உலகின் மிகப்பெருமைக்குரிய அங்கீகாரமாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட  படங்கள் இப்போது நம் சென்னை திரையரங்கங்களில் திரையிடப்பட்டு வருகிறது. தென் கொரிய திரைப்படமான ‘பேரஸைட்’டில் தொடங்கி, ‘ஜோ ஜோ ரேபிட்’, ‘1917’, ‘பாம் ஷெல்’, ‘நைவ்ஸ் அவுட்’ போன்ற படங்களும் இடம்பெற்றுள்ளன. உலக சினிமா பிரியர்களுக்கு இந்த இரண்டு வாரங்களும் திருவிழா கொண்டாட்டம்தான்.

பிரதமர் மோடியைப் பாதுகாக்க ரூ.600 கோடி!

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட் விவரங்களை அறிவித்தார். அதில் பிரதமர் மோடிக்கு சிறப்பு பாதுகாப்பிற்காக ரூ.600 கோடியை ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார். கடந்தாண்டு ரூ.540 கோடியாக இருந்த அவரது பாதுகாப்புச் செலவு, இந்தாண்டு ரூ.60 கோடி அதிகரித்துள்ளது.

பனி யுகமாக மாறவிருக்கும் பூமி

சோலார் மினிமம் (Solar Minimum) என்று கூறப்படும் அறிவியல் மாற்றத்தால், பூமியின் வெப்பநிலை குறைந்து, பனி அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 30 ஆண்டுகள் இந்த நிலை தொடரும் என்றும், இதனால் அபாயகரமான பனிப் பொழிவுடன், உணவுத்தட்டுப்பாடும் ஏற்படலாம் என்றும் அதனால் இதை மினி ஐஸ் ஏஜ் என்றும் அழைக்கின்றனர்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்