நாடோடிகள்- 2
சென்ற முறை கல்வி நிறுவனங்களின் அநியாயத்தை தட்டிக் கேட்ட சமுத்திரக்கனி, இந்த முறை சாதிய வெறியர்களை சுளுக்கெடுத்து காதலர்களை சேர்ப்பதே ‘நாடோடிகள் 2’.மிகுந்த சமூக உணர்வுடன் ஊரில் நடக்கிற அநியாயங்களை தட்டிக் கேட்கிறார் சசிகுமார். கிராமத்துக்கு வேண்டிய அனைத்து தேவைகளையும் நிதி வசூலித்து நிறைவேற்றுகிறார். நண்பர்கள் பரணி, அஞ்சலி, இன்னும் இரண்டு பேர் என ஓர் அணியாக செயல்படுகிறார்கள்.

சாதிக்கு எதிராக அவர்கள் போராட ஆரம்பிக்க, சாதித் தலைவருக்கு எரிச்சல் உண்டாகிறது. சமூகப் பிரச்னைகளில் முன்னணி வகிப்பதால் சசிக்கு பெண் தர மறுக்கிறார்கள்.
இறுதியாக சொந்த சாதியைச் சேர்ந்த அதுல்யா ரவியை திருமணம் செய்து வைக்கிறார்கள்.வாழ்க்கையை ஆரம்பிக்கச் செல்லும் சசிகுமாருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன அதிர்ச்சி, அதற்கு மாற்று நடவடிக்கை என்ன… சாதி ஒழிப்புக்கு கடைசியில் என்ன செய்தார் சசி என்பதே மீதி திரைக்கதை.
காதலர்களைச் சேர்த்து வைக்கும் முயற்சியில் உயிரை பணயம் வைத்து இறங்குவதென முந்தைய ‘நாடோடி’யின் அடித்தளம்தான். ஆனால், இதற்கு சாதிய களையெடுப்பு என்ற சமூக சீர்திருத்தத்தை உண்மையான அக்கறையோடு கதையில் சேர்த்திருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி.
மனதில் கனன்று கொண்டிருக்கும் கோபத்தையும் சமூக அக்கறையின் பிடியையும் கதாபாத்திரத்தில் சொல்லி அடித்திருக்கிறார் சசிகுமார். சமுத்திரக்கனியும் சசியும் கூட்டணி போட்டாலே என்ன எதிர் பார்க்கலாமோ அதெல்லாம் நமக்கு தாராளமாகக் கிடைக்கிறது.
டாக்டராக அஞ்சலி படு இயல்பு. ஒன்றுக்கு இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் மனதுக்கு நெருக்கமாவது அஞ்சலிதான். வீதியில் இறங்கி மக்களை அழைத்து போராடுவது, சசியின் எல்லா பிரச்னைகளிலும் துணை நிற்பது ஈர்க்கிறது. அதே ‘நாடோடி’யில் பார்த்த குறும்புக்கார பரணி.
கொஞ்சம் அவ்வப்போது சிரிப்பும் காட்டுகிறார். சொந்த பந்தங்களின் சாதிய பாசத்தைப் புரிந்துகொள்ளாமல் அவர்களின் வலையில் சிக்கிப் பாடுபடும் அதுல்யா ரவி என கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். சாதியத்துக்கு பெட்ரோல் ஊற்றி நெருப்பு மூட்டும் அத்தை கன கச்சிதம். மூர்த்தியின் கதாபாத்திரம் சிறப்பு.
என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு ஃப்ரெஷ் லுக் தருகிறது. ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசையில் பதற்றம் தந்து ‘அதுவா அதுவா...’ பாடலில் சிறப்பு காட்டுகிறார்.சாதி வெறி கொண்டுவந்து சேர்க்கும் இடைஞ்சல்கள் அநேகம்தான்.
ஆனால், சினிமா விஷுவல் மீடியம் என்பதை அடியோடு மறந்து வசன மழை பொழிவது ஏன்? சொல்வதற்கு எத்தனிப்பது எல்லாம் உண்மைதான். ஆனால், அதற்கேற்ற சினிமா மொழியில் சொல்ல வேண்டாமா?வசனங்களைக் குறைத்து காட்சிகளில் நெகிழ்வை அடுக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக படத்தைக் கொண்டாடியிருக்கலாம். l
குங்குமம் விமர்சனக் குழு
|