கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-49



ஞானம் அருளும் வித்தகர்

தான், எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை அறிய, தலையைச் சுழற்றி நோக்கினான் அந்தச் சிறுவன். சுற்றிலும் கோபுரங்கள் தெரிந்தன. எண்ண ஆரம்பித்தான். சொல்லி வைத்தாற்போல இருபத்தோரு கோபுரங்கள்தான் இருந்தன. சரியாக ஏழு மதில் சுவர்கள்! அவை அனைத்தும் பெரிய யோக ரகசியத்தை தன்னுள்ளே வைத்துப் பாதுகாப்பதால்தான், அதற்கு முடி சூட்டியது போல இத்துணை கோபுரங்களா?

அவனது உள் மனது கேட்டது. சில நொடிகளில் தன்னை இங்கு அழைத்து வந்த சதாசிவ பிரம்மேந்திர யோகியின் நினைவு வந்தது. அவரையும் அங்கே தேடினான். அவரோ அந்த கோபுரங்களைப் பார்த்து, கைகளை சிரத்தின் மேல் குவித்து வணங்கிக் கொண்டிருந்தார். அருகில் சென்றான்.
அவரது இதழ்கள் மெல்ல ஒரு ஸ்லோகத்தை சொல்லியபடி இருந்தது.

காவேரி விரஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்திரம்....
ஸ வாசுதேவோ ரங்கேச: பிரத்யக்ஷம் பரம் பதம்...

கேட்ட அவனுக்கு பொறி தட்டியது. இதே ஸ்லோகத்தை அவனது பாடசாலையில் அவனது ஆசிரியர் சொல்லியிருக்கிறார். கூடவே அன்று ஒரு கதையையும் சொல்லியிருந்தார். பல வருடங்களுக்கு முன் சோழ சக்ரவர்த்தி ஒருவன், வேட்டையாடச்  சென்றானாம். அங்கே ஒரு மரத்தின் நிழலில் அவன் இளைப்பாறியபோது, அந்த மரத்தில் குடிகொண்டிருந்த கிளி ஒன்று இந்த ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டிருந்ததாம்.

இந்த ஸ்லோகத்தை வைத்துதான் தொலைந்து போன ரங்கம் கோயிலையே அந்த மன்னன் கண்டுபிடித்தானாம். அதனாலேயே அவருக்கு கிளிச் சோழன் என்ற பெயரும் வந்ததாம். அன்று அந்த அரசனுக்கு ஞானோதயம் தந்த இந்த ஸ்லோகம்... ஒரு பைங்கிளி மொழிந்த இந்த ஸ்லோகம்... இதை ஏன் இவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்?

யோசித்தான் பாலகன். அவனது மனதில் அந்த ஸ்லோகத்தின் பொருள் ஓட ஆரம்பித்தது. ‘பாய்ந்தோடும் இந்தக் காவிரியே வைகுண்டத்தில் ஓடும் விரஜா நதி!திருவரங்கமே வைகுண்டம்! ரங்கநாதன்தான் அந்த வைகுண்டநாதன். இதுவே கண் கண்ட பரமபதம்!’
எனில் நாம் இப்போது இருப்பது ரங்கத்திலா? பதறினான் சிறுவன். ‘‘ரங்கா... ரங்கா...’’ என்று அங்கு ஒலிக்கும் இனிமையான தமிழ் கானம் அவன் நினைப்பது உண்மைதான் என்பதை சொல்லாமல் சொன்னது.

எங்கோ இருக்கும் நெரூரில் இருந்து, எப்படி நொடியில் ரங்கம் வந்து சேர்ந்தோம்? அவன் மனம் அடுத்த கேள்வி கேட்டது. பலமுறை சிந்தித்தும் பதில் பிடிபடவில்லை. இறுதியாக தன் குழப்பம் அத்தனைக்கும் தீர்வு கொடுக்கக் கூடியவர் அந்த முனிபுங்கவரே என்பதை உணர்ந்து பிரம்மேந்திரர் அருகில் சென்றான். அவரும் ‘‘ரங்கா... ரங்கா...’’ என்று மெழுகாக உருகிக் கொண்டிருந்தார். நொடிகள் கடந்த பின் அவர் அந்தச் சிறுவனை நோக்கினார்: ‘‘ஆம் அப்பனே! நீ இருப்பது ரங்கமேதான். என் யோக பலத்தால் நொடியில் உன்னை இங்கு அழைத்து வந்தேன். யோக ரகசியம் அறிய வேண்டுமென்று கேட்டாயே.... இதோ உன் கண்ணெதிரே இருக்கிறது அது!’’

கேட்ட சிறுவன் ஒன்றும் விளங்காமல் விழித்தான். அதை கவனித்த சதாசிவர், வாஞ்சையோடு விளக்கம் தர ஆரம்பித்தார்.‘‘அப்பனே! உடலில் இடைகலை, பிங்களை என்று இரண்டு நாடிகள் இருக்கின்றன. இந்த நாடிகள் சூட்சுமமானவை; தெய்வீகமானவை. இந்த நாடிகள் இரண்டும், நதிபோல வளைந்து வளைந்து உடலின் ஊடே செல்லும். இந்த நாடியில்தான் உடலின் ஏழு ஆதார சக்கரங்கள் இருக்கின்றன. அதில், முதுகின் அடி தண்டுப் பகுதியில் மூலாதார சக்கரம் இருக்கிறது. அங்கு குண்டலினி சக்தி உறங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த குண்டலினி சக்தி, ஒரு பாம்பின் வடிவில் இருக்கும். அது சுருண்டு படுத்துக் கிடக்கும். அதை யோகத்தால் எழுப்ப வேண்டும். முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் இருக்கும் அந்த சக்தியை புருவ மத்தியில் இருக்கும், சஹஸ்ரார சக்கரத்துக்கு கொண்டு வர வேண்டும்.
அங்கேதான் பரம்பொருள், ஓராயிரம் இதழ் தாமரையில் இருக்கிறது. அதனோடு இந்த ஜீவாத்மாவை கலக்க வைப்பதே யோகம்!’’ சொல்லி நிறுத்தினார் சதாசிவர்.

சிறுவன் ஒன்றும் விளங்காமல் விழித்தபடியே இருந்தான். மெல்ல நகைத்தார் யோகி. அதில் தாய்மையின் வாஞ்சை வழிந்தோடியது. விளக்கத்தை தொடர வேண்டிய அத்தியாவசியத்தை உணர்ந்து தொடர்ந்தார்:‘‘அந்த இடைகலை, பிங்களை நாடிகள்தான் இந்த காவிரியும் கொள்ளிடமும். உடலின் ஏழு ஆதார சக்கரங்களே இந்த ஏழு மதில்கள். ஆயிரம் இதழ் கொண்ட தாமரைதான் ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன். அதன்மீது கள்ள நித்திரை கொண்டவனே பரம்பொருள். புரிகிறதா?’’ சொல்லிவிட்டு அர்த்த புஷ்டியோடு நகைத்தார் சதாசிவர்.

அவர் சொன்னதெல்லாம் நொடியில் விளங்கியதால் சிறுவனின் முகம் பிரகாசமானது. ‘‘அந்த ரங்கனை தரிசிக்க வரும் ஜீவாத்மாவான நாமே, குண்டலினி....’’ என்று அவனையும் அறியாமல் சதாசிவர் விட்டதை முடித்தான். அதைக் கேட்ட யோகிக்கு பரம சந்தோஷம். உடன் அவ னது கையைப் பற்றி இழுத்துக் கொண்டு சன்னிதானத்துக்கு ஓடினார். அங்கே வெள்ளைப் பாம்பணையில் திருமகளின் அணைப்பில் ரங்கனின் ஆனந்த சயனத்தை இருவரும் கண்டார்கள்!

‘கரியவாகி, புடை பரந்து, மிளிர்ந்து, செவ்வரி ஓடி, நீண்ட அப் பெரியவாய...’ ரங்கனின் கண்கள் அன்று திருப்பாணாழ்வாரை பேதமை செய்தது போலவே, அவ்விருவரையும் பேதமை செய்தது. ரங்கனின் அழகில் சொக்கிப் போனான் பாலகன்.  நினைவு வந்ததும் சதாசிவர் அவன் அருகில்தான் இருக்கிறார் என்று எண்ணி திரும்பினான் சிறுவன்.ஆனால், அவர் அங்கில்லை! அதை உணர்ந்த சிறுவன், பித்துப் பிடித்தவன் போலானான். அவனது இதய குருவை நாடி தேடினான், ஓடினான்.

ஆனால் மாடங்களும், கூடங்களுமே அவன் கண்ணில் பட்டன. அழகிய அந்த மாடங்கள் அவனைக் கவரவில்லை. காரணம், சதாசிவர் பாடும் பாடலையே அவனது மனம் நாடியது. அவரைத் தேடி அலைந்து திரிந்தான். அரங்கத்தை மறந்தான், அரங்கனை மறந்தான், தாயை மறந்தான், தந்தையை மறந்தான்.

மனதில் முழுக்க வியாபித்து நின்றிருந்த சதாசிவர், அனைவரையும் மனதிலிருந்து நொடியில் விரட்டி விட்டதை எண்ணி வியந்தான்.

ஒரு வழியாக பல இடங்களில் அவரைத் தேடிச் சுற்றி மீண்டும் நெரூர் வந்து சேர்ந்தான். அங்கு அதே பூஞ்சோலை. அதே வண்டுகளின் ரீங்காரம். அதே மயில்களின் நடனம், அதே மான்களின் துள்ளல். ஆனால், அவனது மனமோ சதாசிவரின் அமுதகானத்தையே தேடியது. ஆச்சரியம் போல் அங்கு சட்டென அது ஒலித்தது.

அந்த சிறுவன் அதை பிரமை என்றே எண்ணினான். ஆனால், விடாமல் ஒலித்தது அந்த ஞான கானம். ‘‘எல்லாம் கிருஷ்ண மயம்! இங்கு கண்ணன் கழல் இருக்க ஏது பயம்..?’’ செவியில் தேனாகப் பாய்ந்தது சதாசிவரின் மதுரக் குரல். கண்ணுக்கு விருந்தாக சோலையில் அவர் திரு உருவம் தெரிந்தது. உடன் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல அவரிடம் ஓடி அவர் முன்னே தண்டனிட்டான்.

அவரிடம் அதே நிச்சலனமான பார்வை. மீண்டும் அவனை அது சொக்க வைத்தது. ‘‘நீ பற்ற வேண்டியது அந்த ரங்கனை... இந்த ரங்கனை இல்லை...’’ மெல்ல மொழிந்தார் யோகி!‘‘எனக்கு அந்த ரங்கனை காட்டிக் கொடுத்த இந்த ரங்கன்தான் அந்த ரங்கனை விட மேல்!’’ பணிவோடு ஆணித்தரமாக உரைத்தான் சிறுவன். அவனது குருபக்தி, சதாசிவரை உருக்கியது. வாஞ்சையோடு அவனது சிரத்தில் தன் கரத்தை பதித்தார்.

உடன் அனைத்து ஞானங்களும் பள்ளம் கண்ட நீரைப் போல அவனிடம் வந்து சேர்ந்தன. முன்பு மூடன் என்று இவனைத்  தூற்றிய வையகம், இப்போது இவனை ‘ஆகாச புராண இராமலிங்க சாஸ்திரிகள்’ என்னும் மகா பண்டிதனாகக் கொண்டாடியது!கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணன் முகத்தில் ஈயாடவில்லை. அதைக் கண்ட நாகராஜன் புன்னகை பூத்தார்.

‘‘ஏன் தம்பி கதையை நம்ப முடியலையா?’’ நாகராஜனின் மனைவி ஆனந்தவல்லிதான் மவுனத்தை உடைத்து அவனைக் கேட்டாள்.
மேலும் கீழுமாக தலையை மட்டும் அசைத்தான் கண்ணனின் அத்தைப் பையன் என்று அறிமுகமான கிருஷ்ணன். எந்த மேல் படிப்பு படிப்பது என்ற குழப்பத்தில் இருப்பதாகச் சொன்னான். நாகராஜனும் அவனது குழப்பத்தைத் தீர்க்கும் விதமாக வழக்கம் போல கதையை ஆரம்பித்தார்.

ஆரம்பம் முதலே ஒரு சன்னியாசியால் தனக்கு தீர்வு வரும் என்பதை கிருஷ்ணனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நாகராஜனும் அதை அவன் முகபாவனையிலேயே அறிந்தார். ஆனாலும் சதாசிவரின் மீதிருந்த நம்பிக்கையால் தைரியமாகச் சொல்ல ஆரம்பித்தார்.
இப்போது இதுவரை சொன்னதை நம்பமுடியவில்லை என்கிறான் அவன். இதற்கு தாத்தா என்ன பதில் சொல்லுவார்? ஆர்வமாக நாகராஜனை ஏறிட்டான் கண்ணன்.அவரும் மெல்ல தனது வாயைத் திறந்தார்: ‘‘ஒரு காலி பாத்திரம் இருக்கு! இன்னொரு பாத்திரமும் இருக்கு! ஆனா, அதுல வழிய வழிய தண்ணீர்! இப்போ சொல்லு... அந்த காலி பாத்திரத்தை எப்படி நிரப்புவ..?’’ புதிர் போட்டார் நாகராஜன்.

‘‘இதென்ன கேள்வி தாத்தா..? அந்த காலி பாத்திரத்தை நிரம்பின பாத்திரத்துல முக்கி எடுக்கணும்...’’ சட்டென பதில் சொன்னான் கிருஷ்ணன்.
‘‘அதேதான். இறை அருள்லயும் இறை அனுபவத்திலும் நிரம்பினவங்க மகான்கள்! அள்ள அள்ள குறையாம இறை அருளை பெருக்க அவங்களால முடியும். இப்ப சொல்லு, நம்மை மாதிரி காலி பாத்திரங்களை அவங்களாலதானே நிரப்ப முடியும்?’’ ஒரே போடாகப் போட்டார் நாகராஜன். மலைத்துப் போய் தன்னை மறந்து கைதட்டினான் கண்ணன்.

‘‘ஒரு ஒட்டைப் பாத்திரத்தை, நிரம்பின பாத்திரம்னு நினைப்பது நம்ம தப்புதானே தவிர மகான்களோட தப்பு கிடையாது...’’ ஆனந்தவல்லியும் சேர்ந்துகொண்டாள்.‘‘நல்ல குருவை விவேகானந்தர் மாதிரி தேடிக் கண்டுபிடிக்கணும்... சரிதானே தாத்தா! அப்புறம் அவர் வாழ்க்கைலயும்
இது மாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்கு இல்லையா..?’’ தனக்குத் தெரிந்ததைச் சொன்னான் கண்ணன். அவனை வாரி அணைத்து உச்சி முகர்ந்து ‘‘ரொம்ப சரிடா கண்ணா...’’ என்று ஆனந்தவல்லி நெகிழ்ந்தாள்.

‘‘அந்த சிருங்கேரி சாரதா பீடாதிபதி நெரூர் வந்ததா சொன்னீங்களே... எப்படி வந்தார்? ஏன் வந்தார்? என்ன ஆச்சு அதுக்கு அப்புறம்?’’ ஆர்வத்துடன் கேட்டான் கிருஷ்ணன். அவனுக்குள் மகான்களின் மீது மதிப்பு அதிகரித்திருப்பதைக் கண்டு நாகராஜன் குளிர்ந்தார். இவ்வளவு சொன்னபிறகும் சதாசிவர் மீது கிருஷ்ணனுக்கு மரியாதை வரவில்லை என்றால்தானே ஆச்சரியம்?!

(கஷ்டங்கள் தீரும்)