கோலிவுட் கி(ச்)சு கி(ச்)சு
சினிமாவுக்கு வந்து வருஷம் இருபதை நெருங்குகிறது. ஆனால், இன்னமும் அம்மாவின் கஸ்டடியில்தான் இருக்கிறாராம் அந்த நடிகை.
புது இயக்குநர்களிடம் கதை கேட்டு வடிகட்டும் பொறுப்பை வகித்து வரும் அந்த க்யூட்டான தாய்க்குலம், ‘ஹீரோ இல்லாத கதைகளுக்கு’த்தான் முன்னுரிமை கொடுக்கிறாராம். அப்படி வருபவர்களுக்கு கணிசமான சம்பளக் குறைப்பையும் செய்கிறார் அவர்.
 சமீபத்தில் மூத்த இயக்குநர் ஒருவர் கொடுத்த பேட்டியைக் கேட்டு கல கலக்கிறது கோலிவுட். ‘‘சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?’’ என்ற கேள்விக்கு ‘‘இப்ப அவ்ளோ ஈஸியா யாரையும் எதுவும் பண்ணிட முடியாது. மீடூல போட்டு தாக்கிடறாங்க. நாம புரொபோஸ் வேணா பண்ணலாம். ஆனா, யாரையும் கம்பல் பண்ண முடியாது...’’ என வெளிப்படையாக உளறியிருக்கிறார். என்ன புரொபோஸ்? என்ன கம்பல்? மண்டையைப் பிய்த்துக் கொள்கிறது கோலிவுட்!
வில்லனாக இருந்து காமெடி வில்லனானவர் அவர். படப்பிடிப்பு யூனிட்களில் அவரது அடாவடி ராவடி பற்றியே பேச்சாக இருக்கிறது.
விக் பயன்படுத்தும் அவர், தான் நடிக்கும் படங்களில் தனக்கான விக்கை, தானே ரெடி பண்ணிக் கொள்வதாக முரண்டு பிடிக்கிறாராம். வெறும் சில ஆயிரங்களில் உள்ள விக்கிற்கு, ‘இதை மலேசியாவில்தான் ரெடி பண்ண முடியும்...’ என்று சொல்லி அரை லகரத்திற்கு மேல் பில் நீட்டுகிறாராம்.
ஷாட்களில் பயன்படுத்தும் செருப்பைக் கூட வீட்டிற்கு கொண்டு சென்று விடும் அவர், அந்த செருப்பிற்கான கேஷ்பில்லையும் மறக்காமல் கேட்டு வாங்கிக் கொள்கிறாராம்!
தமிழ் சினிமாவின் டிரெண்டை மாற்றிய இயக்குநர்களில் ஒருவர் அவர். சமீபத்தில் அவரது அலுவலகத்தில் அவரது மேஜை மீதிருந்த லேப்டாப், மொபைல் உட்பட சில பொருட்கள் திருடு போயின.
போலீஸில் புகார் கொடுத்தால், பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும் என்பதால், கப்சிப்பென கதறியிருக்கிறார் இயக்குநர். ஆனால், அலுவலகத்தில் நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள். இயக்குநர் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு சில மாதங்களாக சம்பள பாக்கி இருக்கிறது என்றும், சரியாக நடத்தவில்லையென்றும் காதைக் கடிக்கிறார்கள்.
கையில் ஒருசில படங்கள் வைத்திருந்தாலும், நடித்து முடித்த படங்களின் புரொமோஷனுக்கு வராமல் முரண்டு பிடிக்கும் லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறார் ரெண்டு கோடி சம்பளம் வாங்கி வரும் ஹீரோ.
ஆறு மாதங்களுக்கு முன்பே ரெடியான ஒரு படத்தின் புரொமோஷனுக்கு ஹீரோவை வரச்சொல்லி தயாரிப்பு தரப்பு அழைத்து. அதை ஹீரோ அலட்சியம் செய்ய, கடுப்பானார் புரொட்யூசர். சொந்தக் காசில் படம் தயாரித்து வரும் அவருக்கு மீட்டர் வட்டி கட்ட வேண்டிய சிக்கல்கள் இல்லாததால், தயாரித்த படத்தை அவரும் கண்டுக்காமல் விட்டுவிட்டார். இப்போது கையில் பச்சைக்கொடியோடு திரிகிறார் ஹீரோ.
மை.பா.
|