முகம் மறுமுகம் - மதுஷாலினி பொட்டிக்!



மாடலிங் to டோலிவுட் வழியாக கோலிவுட்டை பிடித்தவர் மதுஷாலினி. பாலாவின் ‘அவன் இவன்’, கமலின் ‘தூங்காவனம்’ படங்களில்
அசத்தியவர். அதன் பிறகு மீண்டும் தெலுங்கில் பிசியானார். நீண்ட இடைவெளிக்குப் பின், தமிழில் ‘பஞ்சராக்‌ஷரம்’ படத்தில் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியவர், இப்போது சிபிராஜின் ‘ரேஞ்சர்’ படத்தில் ஆக்‌ஷன் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.

75% தமிழ், 25% ஆங்கிலம்... என கலந்துகட்டி பேசுபவர் தன் சொந்த தேசமான ஹைதராபாத்தில் ‘மதுஷாலினி பொட்டிக்’ என தன் பெயரிலேயே வெட்டிங், பிரைடல் காஸ்ட்யூம்களுக்கான பொட்டிக் ஒன்றை நடத்தி வருகிறார்.‘‘போன வருஷம் ரோலர் கோஸ்டர் ரைடு மாதிரி போச்சு. ஏற்ற இறக்கங்கள் அதிகம். நடிச்ச படங்கள் கரெக்டான டேட்ல ரிலீசாகலை. ஆனா, ஆண்டு இறுதில தமிழ்ல ஒரு படம் வந்து பெரும் நிம்மதியைக் கொடுத்தது!

எப்பல்லாம் நேரம் கிடைக்குதோ, அப்பல்லாம் ஹைதராபாத் போயிடுவேன். அங்கதான் என் பொட்டிக் இருக்கு. இந்த வருஷம் முதல் நாளே பொட்டிக் போயிட்டேன். சுறுசுறுப்பா என் கையால டிரெஸ்சை எடுத்துக் கொடுத்து சந்தோஷப்பட்டேன். பொட்டிக் என் passion. மாடலிங் பண்ணும்போதே, என் காஸ்ட்யூம்ஸை டிசைன் பண்ண ஆரம்பிச்சுட்டேன். பாலிவுட் மனிஷ் மல்கோத்ரா, தருண் தஹிலியானி, ரித்துகுமார், சப்யசாச்சி முகர்ஜினு டாப் டிசைனர்ஸ் எல்லோரோட டிசைன்ஸும் பிடிக்கும்.

இன்னிக்கு மெட்ரோ நகரங்கள்ல திரும்பின பக்கமெல்லாம் பொட்டிக்ஸை பார்க்க முடியுது. அதுக்கு காரணம், ரீத்துகுமார்தான். கொல்கத்தாவைச் சேர்ந்த டிசைனர். ஒவ்வொரு டாப் டிசைனரோட ஒர்க்கையும் கவனிச்சிருக்கேன்; கவனிச்சுட்டும் வரேன். அந்த இன்ஸ்பிரேஷன்தான் என்னையும் ஒரு டிசைனரா மாத்துச்சு...’’ மகிழ்ச்சியில் புன்னகைக்கும் மதுஷாலினி, டிரெஸ் மெட்டீரியல்களை உள்ளூர் ஏரியாவிலேயே கொள்முதல் செய்கிறார்.

‘‘ஆக்சுவலி நான் பொட்டிக் ஆரம்பிச்சது எதிர்பாராம நடந்த விஷயம். சினிமாவுல நமக்கான காஸ்ட்யூம்ஸ் டிசைன் பண்ண காஸ்ட்யூமர்ஸ் இருப்பாங்க. ஆனா, ஈவன்ட்ஸ்ல பங்கேற்கறப்ப எனக்கான ஆடைகளை நானும் எங்க அம்மாவும் சேர்ந்தே டிசைன் பண்ணுவோம்.
என் ஸ்கின் டோனுக்கும், என் ப்ளஸ், மைனஸ்ஸுக்கும் ஏற்ற காஸ்ட்யூம்ஸை வடிவமைப்பேன். இதுக்கு எக்கச்சக்கமான பாராட்டுதல்கள் கிடைச்சுது. ஸ்டைல், ஃபினிஷிங், டிசைன், ஸ்கின்டோன் கலர் சாய்ஸ்னு அத்தனைக்கும் அப்ளாஸ் அள்ளுச்சு.

அப்பதான் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும், ‘நீ ஒரு பொட்டிக் ஆரம்பிக்கலாமே’னு கேட்டாங்க. உடனே அம்மாகிட்ட பேசினேன். அம்மா அட்வகேட். அதனால, ‘ஒரு கடை நடத்தறது சாதாரண விஷயமில்ல. நீ சும்மா கேட்கறியா இல்ல சீரியஸாவா?’னு கேட்டாங்க. ‘சீரியஸ்’னு சொன்னதும் ஹைதராபாத்ல ‘மதுஷாலினி பொட்டிக்’னு என் பெயரிலேயே ஆரம்பிச்சுக் கொடுத்தாங்க.

பிரைடல் காஸ்ட்யூம்ஸ், பார்ட்டி வியர்ஸ், லெகன்காஸ்னு எல்லாமும் அதுல ஸ்பெஷல்தான். அம்மாவும் நானும்தான் பொட்டிக்கை பாத்துக்கறோம். அவங்களுக்கு ஒர்க் வர்றப்ப நான் கடைல இருப்பேன். எனக்கு ஷூட்டிங்னா, அவங்க இருப்பாங்க. ரெண்டு பேருக்கும் ஒர்க்னாலும் நோ வொரீஸ். ஏன்னா, பொட்டிக்கை பாத்துக்க நம்பிக்கையானவங்க இருக்காங்க.

இண்டோ வெஸ்ட் சாரீஸ், வெட்டிங் லெகன்காஸ்... இந்த இரண்டும் என் டிசைனிங்ல ரொம்ப ஸ்பெஷானது. வெளிநாடுகள்லயும் எங்க பொட்டிக்குக்
கான க்ளையன்ட்ஸ் இருக்காங்க. ப்ராமிஸ். பொய் சொல்லலை. ரா மெட்டீரியல்ஸ் ஹைதராபாத்லயே எல்லாம் கிடைக்குது. அப்புறம் ஏன் வெளியூர்ல தேடணும்? பொட்டிக்னா யுனிக் பீஸஸ்தான் வைச்சிருப்போம். ஒவ்வொருத்தர் ஸ்கின் டோனுக்கு செட் ஆகுறது மாதிரி கலர்ஸ் தேர்ந்தெடுத்து டிசைன் பண்ணுவேன்.

ஒருத்தரோட ப்ளஸ்ஸை அதிகமாக்கி, மைனஸை குறைவாக்கி, அவங்கள அழகா காட்டும் போது, அவங்ககிட்ட இருந்து ஒரு அழகான சிரிப்பு வரும்.
தவிர, வெட்டிங் அன்னிக்கும் அவங்க லுக்கிற்கு கிடைக்கற பாராட்டுகள் அத்தனையும் நமக்கு உற்சாக டானிக். அத்தனை கிரெடிட்ஸையும் நமக்கே டெடிகேட் பண்ணுவாங்க...’’ என்கிற மதுஷாலினி, ‘நாளுக்கு நாள் ஃபேஷன் மாறிக்கொண்டே வருவது வருத்தமளிக்கிறது’ என்கிறார்.
‘‘ஹைதராபாத்ல மிக்ஸ்டு கல்ச்சர் இருக்கு. ஸோ, பட்டுப்புடவையை விரும்பறவங்க குறைவுதான். காக்ரா, டிசைனர் பிளவுஸ், லெகன்காவை விரும்பறவங்க அதிகம்.

எங்க பொட்டிக்குக்கான மெட்டீரியல்களை எங்க ஏரியாவுலேயே கொள்முதல் பண்ணிக்குவேன். மும்பை, தில்லினு பறக்க வேண்டியதில்ல. ஹைதராபாத்ல நெசவாளர்கள், கைத்தறியினர் கொஞ்சம் பேர் பழக்கம். அவங்ககிட்ட மெட்டீரியல்ஸ் வாங்கிக்குவேன். இந்தத் துறைலயும் மைனஸ் இருக்கு. ஃபேஷன் என்பது நிரந்தரமல்ல. ஒவ்வொரு நாளும் டிரெண்ட் மாறிட்டே இருக்கும். ஸோ, ஃபேஷன் அப்டேட் பண்ணிட்டே இருக்கணும். ஒரு மெட்டீரியல் ரொம்ப குறைவான விலைல விக்குதேனு அதை அதிகம் வாங்கக் கூடாது.

சொல்ல ஈசியா இருந்தாலும் ஃபேஷனுக்கு அப்டேட் ஆகறது சவாலானது. மிடில் கிளாஸ் மக்களும் வாங்கி மகிழக் கூடிய விலைலதான் நாங்க விக்கறோம்...’’ என்றவர், தமிழில் இடைவெளி விழுந்தது குறித்தும் பேசினார்.‘‘‘தூங்காவன’த்துக்குப் பிறகு தெலுங்கு, இந்தினு படங்கள் தேடி வந்துச்சு. எல்லாமே நல்ல ஆஃபர்ஸ். ஸோ, அங்க பிசியாகிட்டேன். அதுல தமிழ்ல கொஞ்சம் கேப் விழுந்துடுச்சு. இதை ஈடுகட்ட தமிழ்ல நல்ல கேரக்டர்களுக்காக காத்திருந்தேன். ‘பஞ்சராக்‌ஷரம்’, ‘ரேஞ்சர்’ படங்கள் வந்துச்சு.

என் பூர்வீகமே ஹைதராபாத்தான். அப்பா பிசினஸ்மேன். அம்மா, அட்வகேட். ப்ளஸ் அவங்க குச்சுப்புடி டான்ஸர். எனக்கும் குச்சுப்புடி தெரியும். மாடலிங் பண்றப்ப, ‘மிஸ் ஆந்திரபிரதேஷ்’ டைட்டில் வின்னரானேன். நிறைய மேகஸின்ஸ்ல என் போட்டோஸ் வந்திருக்கு. அதைப் பார்த்தே, டோலிவுட் மூவி ஆஃபர் வந்துச்சு.

ஷாக் ஆகி, எனக்கு நடிக்க விருப்பமில்லைனு சொல்லிட்டேன். அப்புறம், ஒரு வருஷத்துக்குப் பிறகு அதே இயக்குநர் என்கிட்ட ‘இப்ப உங்க மனசு மாறியிருக்குதா’னு கேட்டார். ‘சரி ஒரு படம் நடிச்சு பார்ப்போம். செட் ஆனா ஓகே. இல்லைனா, படிப்பை தொடர்வோம்’னு முடிவு செய்து சினிமாவுக்குள் வந்தேன். ‘கித்தகித்தலு’வில் அறிமுகமானேன். சிரஞ்சீவி சாரோட நடிச்ச ‘அந்தரிவாடு’க்குப்பிறகு அங்க பிசியானேன். சமீபத்துல நடிச்ச ‘கூடச்சாரி’ அங்க பெரிய ஹிட் ஆச்சு. தமிழ்ல என் முதல் படம் ‘அவன் இவன்’. இப்ப தமிழ் இண்டஸ்ட்ரிய பார்க்க ஆச்சரியமா இருக்கு. மத்த படஉலகை விட ரொம்பவும் அட்வாஸ்டா இருக்காங்க.

இப்ப வெப்சீரீஸ் ஒன்றிலும் நடிக்கறேன். இது ஒரு பீரியட் சீரீஸ். டைட்டில் இன்னும் வைக்கல. ஒரு படம் ரெடியாகணும்னா, ப்ரீ புரொடக்‌ஷன், ஷூட்டிங், போஸ்ட் புரொடக்‌ஷன்னு எல்லா ஒர்க்கையும் சேர்த்து ஆறு மாசமாவது ஆகும். அப்புறம்தான் அது ஹிட்டா ஃப்ளாப்பானு தெரியும்.

ஆனா, வெப்சீரீஸ்ல அப்படி இல்ல. ஒரே ஒரு நாட்டை வச்சு, பத்து பதினைஞ்சு சீரீஸா கொண்டு போறது சாதாரண விஷயமில்ல. ஸ்டிராங் கன்டன்ட் இருந்தா மட்டுமே அது சாத்தியம்.

ஆரம்பத்துல நாம டூரிங் தியேட்டர்ஸ்ல படம் பார்த்தோம். அடுத்து மல்டிஃப்ளக்ஸ் வந்துச்சு. ஆக, காலமாறுதலுக்கேற்ப படம் பார்க்கற முறையும் மாறிக்கிட்டே வருது. அந்த வகையில வெப்சீரீஸை ஒப்பிடலாம். நியூகம்மர்ஸ், டெக்னீஷியன்ஸ்னு எல்லாருக்குமே நல்ல ஒரு பிளாட்ஃபார்மா வெப்
சீரீஸ் இருக்கு. பொட்டிக் பாத்துக்கறது போல இதுவும் ஹேப்பியான ஒரு டிராவல்தான்!’’ என்கிறார் மதுஷாலினி பளிச் புன்னகை
யுடன்!

மை.பாரதிராஜா