மனித உணர்வுகளை அறியும் பெப்பர் ரோபோ!



ஒவ்வொரு குடும்பத்தின் அங்கத்தினராக ரோபோ மாறக்கூடிய காலம் தொலைவில் இல்லை. இன்று வளர்ந்த நாடுகளில் பிள்ளைகளின் இடத்தை எந்திரன்கள்தான் நிரப்பிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கூட ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ என்ற மலையாளப்படம் இதைப்பற்றி அருமையாக சித்தரித்திருந்தது.

கேரளாவில் பெரும்பாலானவர்கள் சொந்த ஊரை விட்டுவிட்டு வளைகுடா நாட்டில் வேலைக்குப் போய்விடுகின்றனர். வயதான பெற்றோர்கள் மட்டுமே தனிமையாக வீட்டில் இருக்கவேண்டிய நிலை. அப்போது அவர்களின் தனிமையை எந்திரன்கள்தான் விடுவிக்கின்றன. இதனால் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உறவே அறுந்துபோகிறது.

இப்படியான ஒரு சூழலில் உலகைக் கலக்கிக் கொண்டிருக்கிறது ‘பெப்பர்’ ரோபோ.மனிதர்களின் உணர்வுகளைக் கண்டுணர்ந்து கொள்ளக்கூடிய திறன் வாய்ந்த உலகின் முதல் ரோபோ இதுதான். மிகவும் சமூக உணர்வு வாய்ந்த இந்த ரோபோ மனிதர்களுடன் ஜாலியாக உரையாடவும் செய்கிறது. அழகாக நடனமும் ஆடுகிறது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இயங்கிவரும் ‘சாஃப்ட்பேங்க் ரோபோட்டிக்ஸ்’ என்ற நிறுவனம் 2014ம் வருடம் இந்த ரோபோவை அறிமுகம் செய்தது.

பல ஆண்டுகளாக ஆய்வு செய்து மனித உணர்வுகளை படிக்கும் விதமாக  இதனை டிசைன் செய்திருக்கின்றனர். அறிமுகமான அடுத்த நாள் சாஃப்ட்பேங்க் மொபைல் ஸ்டோரில் பார்வைக்காக பெப்பரை நிறுத்தி வைத்தனர். அடுத்த 60 நொடிகளில் 1000 ரோபோக்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன. மே 2018ல் மட்டும் ஐரோப்பாவில் 12 ஆயிரம் பெப்பர் விற்றிருக்கின்றன.

இன்று இங்கிலாந்தின் பெரும்பாலான அலுவலகங்களின் வரவேற்பாளர் பெப்பர்தான். முகத்தை வைத்து அலுவலகத்துக்கு வருபவர்களைக் கண்டுபிடிக்கிறது இந்த எந்திரன். இதுபோக ஜப்பானில் ஆயிரம் வீடுகளில் பெப்பர் இருக்கிறான். பள்ளி, கல்லூரி உட்பட பல கல்வி நிறுவனங்களில் ஆய்வுப் பணிக்குத் துணையாக இருப்பதும் பெப்பர்தான். இந்தக் கலக்கல் ரோபோவின் விலை சுமார் ரூ.2 லட்சம்.