வந்தாச்சு செயற்கை கருப்பை!



ஒரு காலத்தில் சாதாரண நோய்க்கே மரணத்தைத் தழுவ வேண்டியிருக்கும். இன்று எவ்வளவு கொடிய உயிர்க்கொல்லி நோயாக இருந்தாலும் முற்றிலும் குணப்படுத்த முடியாவிட்டாலும் வாழ்நாளை நீட்டித்துக் கொள்ளும் அளவுக்கு மருத்துவம் வளர்ந்துவிட்டது.

ஆனால், எவ்வளவுதான் மருத்துவமும் விஞ்ஞானமும் வளர்ந்தாலும் பிரசவத்தின் போது தாயோ, குழந்தையோ மரணிப்பது மற்றும் குறைப்பிரசவம் போன்றவற்றை இன்னமும் மருத்துவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை.உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 1.5 கோடி குழந்தைகள் குறைப் பிரசவத்தில் பிறக்கின்றன. இப்படி பிறக்கும் குழந்தைகளில் 50 சதவீதம் இறந்துவிடுவது இன்றும் தொடர்கிறது.

இதனால் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாத்து உயிர்ப்பிக்க பல நாடுகளும் முயற்சி செய்துவருகின்றன. இதற்காக பல கோடிகளைச் செலவு செய்து ஆராய்ச்சிகள் செய்கின்றன. இப்படியான ஒரு முயற்சியில் வெற்றிபெற்று மருத்துவ உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள் நெதர்லாந்தின் விஞ்ஞானிகள். ஆம்; உலகிலேயே முதல் முறையாக மனிதனுக்கான செயற்கை கருப்பையை உருவாக்கியிருக்கிறது நெதர்லாந்து.

கரு உருவாகி 37 வாரங்களுக்கு முன்பே பிறக்கும் குழந்தையைக் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை என்கிறோம். இப்படி பிறக்கும் குழந்தையைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் இந்த செயற்கை கருப்பை. குறைப்பிரசவ குழந்தை பிறந்த உடனே பலூன் போன்ற வடிவில் இருக்கும் செயற்கை கருப்பைக்குள் வைத்துவிடுவார்கள். தண்ணீர் மற்றும் மினரல்கள் அடங்கிய திரவம் இந்தக் கருப்பைக்குள் இருக்கும்.

கோழி அடைகாப்பதைப் போல குழந்தையை செயற்கை கருப்பை அடைகாக்கும். நான்கு வாரங்களுக்குப் பிறகு குழந்தை நல்ல நிலையை அடைந்தவுடன் வெளியே எடுப்பார்கள். அதுவரை குழந்தைக்குத் தேவையான அனைத்தும் வெளியிலிருந்து குழாய் மூலமாக கருப்பைக்குள் அனுப்பிவைக்கப்படும். இது செயற்கையாக இருந்தாலும் ஒரு இயற்கையான சூழலைத்தான் குழந்தைக்குத் தரும்.

இந்தத் திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. சோதனைகள் மட்டுமே இப்போது நடந்துவருகின்றன. இது நடைமுறைக்கு வரும்போது குறைப்பிரசவத்தில் மரணிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும்.        

தொகுப்பு: த.சக்திவேல்