முறுக்கு மீசை... முரட்டுப் பார்வை! அசரடிக்கிறார் வால்டர் சிபிகம்பீரமாக இருக்கிறார் சிபி. முறுக்கு மீசை சுமக்கும் உதடு. ‘ஜிம்’ உபய ‘கும்’ உடம்பு. அழுத்தமாக கை கொடுக்கிறார். சுருட்டிவிட்ட அரைக்கை சட்டையில் எகிறித்திமிறுகிறது ஏற்றி வைத்த ஆர்ம்ஸ். மிரட்டல் லுக்கில் புன்னகைக்கிறார் சிபி. ‘‘வெரி ஹேப்பி! ‘வால்டர்’ என் கேரியரில் நல்ல படமாக இருக்கும்னு தோணுது. ‘நாய்கள் ஜாக்கிரதை’க்குப் பிறகு கொஞ்சம் கவனமாகவே வருது என் படங்கள். ‘ஜாக்ஸன் துரை’, ‘சத்யா’ நல்ல பெயரெடுத்து வசூலையும் பார்த்தது. ‘வால்டர் வெற்றிவேல்’ படம் 1993ல் வரும்போது அப்பாவுக்கு அது பெரிய வெற்றிப்படம். அந்த வருஷத்தில் அதுதான் வசூலை அள்ளிக் குவித்த ரெக்கார்ட்.
 

‘வால்டர்’னு பெயர் கேட்டதும் அப்பாவிற்கு நியாயம் பண்ணனும்னு சின்ன பயம். ஆனால், அவ்வளவு களை கட்டியது கதை. அப்படியே உள்ளே போய் மூட் செட் பண்ணிட்டு அதிலேயே இருந்திட்டேன்...’’ சிதறடிக்கிற புல்லட் பார்வை பார்த்துப் பேச ஆரம்பிக்கிறார்.
டிரைலரே அசத்தலாக இருக்கு...முதன் முறையாக என்னோட கெட் அப் மக்களுக்குப் பிடிச்சு இணையதளத்தில் ட்ரண்டிங்கில் ரொம்ப நேரம் தாக்குப் பிடிச்சது ரொம்ப சந்தோசம்.

போலீஸ் படம், ஆக்‌ஷன் த்ரில்லர்னு இதை ஒரு வரியில் சொல்லிட முடியாது. ரொம்பப் புதுசா கதறடிக்கிற ஆக்‌ஷனுக்குள்ளே நிறைய உணர்வு பூர்வமான விஷயங்களையும் வெச்சிருக்கார் டைரக்டர் அன்பு. எனக்கும், அன்புக்கும் என்ன ஐடியான்னா... டெக்னிக்கலாவும், ஸ்கிரிப்ட் ஸ்டைல்லேயும் அடுத்த கட்டத்திற்குப் போகிற மாதிரி ஒரு படம் பண்ணணும்கிறதுதான். ‘வால்டர்’ அப்படி வந்திருக்கு.

ஒரு போலீஸ் ஆபீஸரை சுற்றி நடக்கிற கதைதான். கும்பகோணம் மாதிரி இடத்தில் நடக்கிற கதை. ஆனால் இதுவரைக்கும் பார்க்காத கலர்ல படம் இருக்கும். அப்பாவுக்கு ‘வால்டர் வெற்றிவேல்’, சூர்யாவுக்கு ‘காக்க காக்க’, விக்ரமுக்கு ‘சாமி’ மாதிரி எனக்கு ஒரு நல்ல அடையாளமும், வெற்றியும் கொடுக்கும்னு நிச்சயமாக நம்புகிறேன். என்ன ஆச்சரியம்னா ‘வால்டர் வெற்றிவேல்’ பண்ணும்போது அப்பாவுக்கு  38 வயது. நான் 37 வயதில் இந்தப் படம் பண்றேன். எனக்கு டைம் முக்கியமில்லை... இனிமேல் ஒவ்வொண்ணும் பெஸ்ட்டா வரணும்னு நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரைக்கும் நல்ல டைரக்டரும் நல்ல நடிகனும் மனப்பூர்வமாக இணைந்து கை கொடுக்கும் போதுதான் மேஜிக் நடக்கும். பக்காவான கதை. பக்கபலமாக புரொடியூசர் பிரபு திலக். திலகவதி ஐபிஎஸ் அவர்களின் மகன்.  

ஒரு போலீஸ் அதிகாரியின் செயல்பாடுகள் எப்படியிருக்கும், செயல்முறைகள், அவர்கள் எப்படி பொது வெளியில் நடந்துக்கணும்னு இருக்கிற விதிமுறைகளை எல்லாம் சில போலீஸ் அதிகாரிகள் கிட்டே தெரிஞ்சிக்க வைச்சார். அது ரொம்ப உபயோகமாக இருந்தது. படத்திற்கு என்ன கேட்டாலும், அதன் மதிப்பு கெடாமல் செய்து கொடுப்பார்.

எக்கச்சக்க போலீஸ் படங்கள் வந்திருக்கு… இது என்ன வகை?

இது வேற கதை. வேற கலர். நீங்க சொன்ன ஒவ்வொருத்தரும் அவங்களுக்குரிய நடிப்பை அதில் வைச்சாங்க. காதல், ஆக்‌ஷன், எமோஷன், த்ரில்னு எல்லாமே ‘வால்டரில் இருக்கு. போலீஸ் கதையா 100 படம் பார்த்திருப்பீங்கதான். ‘வால்டர்’ ட்ரீட்மென்ட்டில் பின்னி எடுக்கிற கதை. தீப்பிடிக்கிற ரகத்தில் திரைக்கதையிருக்கு. நான் உறுதியாக நினைக்கிற ஒரு விஷயம், உழைப்பு மட்டும்தான் நம்மகிட்டே இருக்கு. படம் நல்லாயிருந்து பார்க்கிறவங்க மனசுக்கும் பொருந்தி இருந்தால் ஓடும்.

எல்லாமே டைரக்டர் கொடுக்கிற விதமும், நடிகர்கள் நாங்க நடிக்கிற விதமும்தான். அந்தக் கோர்வைதான். இதில் தீவிர உடற்பயிற்சியில் உடம்பை உருமாற்றினேன். ஹீரோயின் ஷெரின்…நல்ல ஆர்டிஸ்ட் என்ன தேவையோ அதை சிறப்பாக கொடுத்திருக்காங்க. சந்தானத்தோட ‘டகால்டி’யில் கூட அவங்கதான் ஹீரோயின். அவங்களுக்கு இதில் ரொம்ப நல்ல ரோல். ஷூட்டிங்கிற்கு வந்தோம், நிறைவாக நடிச்சுக் கொடுத்திட்டுப் போனோம்னு இருக்காங்க. நிச்சயம் அவங்களும் ஒரு பெரிய ரவுண்ட் வருவாங்கன்னு தோணுது.

நட்டி, சமுத்திரக்கனி இரண்டு பேருக்கும் செம ரோல்கள் இருக்கு. ராசாமதிதான் கேமரா. மியூசிக்கிற்கு தர்ம பிரகாஷ் என்பவரை அறிமுகம் செய்திருக்கோம். அவர் புதுசுங்கிற தினுசில் இல்லாமல் மெனக்கெட்டு ம்யூசிக் செய்திருக்கார். படத்திற்கு தேவையான நியாயமான இடங்களில் பாடல்கள் அமைஞ்சிருக்கு.

இப்ப என் கேரியர் நல்ல நிலையில் இருக்கு. அப்பா இன்னிக்கும் சரியான திட்டமிட்டு பிஸியாக தன்னை வச்சிருக்கார். சின்ன வேடம்னு ஆரம்பிச்சு, ஹீரோவாகி, ஒரு கட்டத்திற்குப் பிறகு ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, ‘பெரியார்’னு திசை திரும்பி, இப்ப நல்ல கேரக்டர் ஆர்டிஸ்ட்னு நிக்கிறார். ஒண்ணும் அவசரமில்லை, அவருடைய அனுபவம் கைக்குள் வரும்போது எல்லாம் சரியாக இருக்கும்னு நம்புறேன்.

அடுத்து தனஞ்செயன் சார் தயாரிப்பில் ‘கபடதாரி’, இயக்குநர் ‘மதுபானக்கடை’ கமலக்கண்ணன் டைரக்‌ஷனில் ‘வட்டம்’னு ஜாலியா, ரசனையாக ஒரு படம் இருக்கு. ‘ரங்கா’, அப்புறம் ‘மாயோன்’னு ஒரு ஃபேன்டஸி படம்னு அடுத்தடுத்து வருது.‘வால்டரில்’ ஒரு நல்ல போலீஸ்காரனின் அருமையான சூழலைக் காட்டியிருக்கோம். மக்கள் பார்த்திட்டு சொல்லணும். அந்த நாளுக்காக காத்திருக்கோம்!

நா.கதிர்வேலன்