தொல்(லைக்) காப்பியம்



நடுவர் பூனைசம்பந்தம்: வணக்கம்யா. எல்லோரும் நல்லா இருக்கீங்களா? இந்த வருஷ பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் பார்க்க எல்லோரும் ரெடியா? இந்த வருஷம் நம்ம ஆட்டம் வெறித்தனமா இருக்கணும். என்ன தெறிக்கவிடலாமா?இந்த வருஷ பட்டிமன்ற தலைப்பு, ‘அழகிலும் திறமையிலும் நம் மனதில் எஞ்சி நிற்பது 90 களுக்கு முன் வந்த நடிகைகளா? இல்லை,அவர்களையும் மிஞ்சி நிற்பது 90களுக்கு பின் வந்த நடிகைகளா?’

90களுக்கு பின் வந்த நடிகைகளே என பேச வராரு முனைவர் முன்கோபலிங்கம்.முன்கோபலிங்கம்: தங்கத்தில் செஞ்ச சிங்கக் குட்டியாய், அச்சு வெல்லக் கட்டியாய், வேலையில்லாமல் ரொம்ப வெட்டியாய் உட்கார்ந்திருக்கும் நடுவர் அவர்களுக்கு எனது முதல் வணக்கம். நடுவர் அவர்களே... கக்கத்தில் கூசி விட முடியும், காற்றை கூசி விட முடியுமா? தகரத்தை வெட்ட முடியும், தண்ணீரை வெட்ட முடியுமா? விறகை எரிக்க முடியும், நிழலை எரிக்க முடியுமா?

நடுவர் பூனைசம்பந்தம்: வானத்தை மூட முடியும், உன் வாயை மூட முடியுமா? என்னய்யா பேசுற? பாயிண்ட் இல்லாட்டி பக்கத்துல இருக்கிறவனை பேச சொல்லுய்யா.

முன்கோபலிங்கம்: நடுவர் அவர்களே... அழகிலும் சரி திறமையிலும் சரி நம்மை கிறங்கடிக்க செய்வது 90களுக்கு பின் வந்த நடிகைகள்தான்.  
தாஜ்மகாலுக்கு தாவணி கட்டியது போல இருக்கும் சமந்தா மாதிரியோ, பைசா கோபுரத்துக்கு புடவை கட்டியது போல இருக்கும் அனுஷ்கா மாதிரியோ ஒரு நடிகையாவது அந்தக் காலத்தில் இருந்தார்களா?

டியூப்லைட்டுக்கே டார்ச் லைட் அடிச்ச மாதிரி இருக்கும் தமன்னா கலரிலோ, பாலுக்கே பவுடர் அடிச்ச மாதிரி இருக்கும் டாப்ஸி போலவோ சிகப்பான, சிறப்பான, சூப்பரான ஒரு ஹீரோயினை எதிர் அணியினரால் காட்ட முடியுமா நடுவர் அவர்களே?

அன்றைக்கு இருந்ததெல்லாம், தண்ணீருல ஊறிப்போன தென்னைமட்டை மாதிரி முத்திப்போயும், வெயில்ல காய்ஞ்ச கொத்தவரங்காய் மாதிரி வத்திப்போயும்தான் இருந்துச்சுங்க.  

எங்கள் ரம்பாவின் தொடைகளுக்கு முன்னால பழைய ஹீரோயின்கள் எல்லாம் காக்கா தூக்கிக்கிட்டு போன பாட்டி சுட்ட வடைகள் நடுவர் அவர்களே!ரம்பா ரிட்டையர்டு ஆன அடுத்த வருஷமே நிக்கி கல்ராணியை இறக்கிட்டாங்க எங்காளுங்க. எதிரணியோ அரைநூற்றாண்டு காலமா அம்பிகா ராதான்னே அரைச்சுக்கிட்டு இருந்தாங்க.

முரட்டுத்தனமான அழகுக்கு நக்மா, மென்மையான அழகுக்கு மீனா, அழகுக்கு ஐஸ்வர்யா, ஓஹோ அழகுக்கு சவுந்தர்யான்னு ஆரம்பிச்சு, மாநிறத்துக்கு லட்சுமி மேனன், மாம்பழ நிறத்துக்கு ரேஷ்மி மேனன், மங்காத நிறத்துக்கு நித்யா மேனன், இது மூன்றும் கலந்த நிறத்துக்கு சிந்து மேனன், ஸ்வேதா மேனன்னு போய், சோனியா அகர்வால்ல டர்ன் பண்ணி இப்ப காஜல் அகர்வால்ல நிக்குது!

ஆனா அன்னைக்கோ, படிக்கத் தெரியாதவன்கிட்ட புத்தகத்தை கொடுத்த மாதிரி, வெறும் சரோஜாதேவியை வச்சே வருசத்தை கடத்துனாங்க.
அழகை விடுங்கள் நடுவர் அவர்களே... திறமையைப்பாருங்கள்! எங்கள் யுவராணி போல கபடி ஆடவோ, எங்கள் ‘உள்ளத்தை அள்ளித்தா’ ரம்பா போல டென்னிஸ் ஆடவோ, இல்லை ‘முறைமாமன்’ குஷ்பூ போல கிரிக்கெட் ஆடவோ, ஏன், ‘ஜென்டில்மேன்’ படத்திலே ‘கப்ளிங்க்ஸ், ஸ்பூன்லிங்க்ஸ், ஜலபுலஜங்’ என விதவிதமான விளையாட்டுகளைக் கண்டுபிடித்து விளையாடும் சுப போலவோ விளையாட 90களுக்கு முன்னால் வந்திருந்த நடிகைகளுக்கு தெரியுமா நடுவர் அவர்களே?!

தன்னுடைய பத்தாவது படத்தில் நயன்தாரா கலெக்டர் ஆகிட்டாங்க நடுவர் அவர்களே! ஆனா அந்தக்கால நடிகைகள் பத்து படம் முடிந்த பின்னர் எம்ஜிஆர், சிவாஜிக்கு அம்மாவாதான் ஆனாங்க!அதனால் உங்கள் தீர்ப்பை எங்கள் பக்கம் வழங்குமாறு வேண்டிக்கொண்டு விடைபெறுகிறேன், நன்றி!
நடுவர் பூனைசம்பந்தம்: பிச்சுட்டிய்யா. கிழிகிழின்னு கிழிச்சுட்ட. சோத்துக்கு செத்துக்கிடந்த உங்க அணிக்கு வாத்துக்கறியே ஊட்டிவிட்டுட்ட! ம்ம்ம், வாங்க கவிஞர் நதியா ராஜன்...

வந்து குப்புற கிடக்கிற உங்க அணியை அப்புறப்படுத்துங்க.நதியா ராஜன்: நாலு பேரு நடமாடும் நல்லதொரு தெருவுக்கு நடுவிலே நாய் போல நடுநாயகமாக வீற்றிருக்கும் நடுவர் அவர்களுக்கு என் முதற்கண் வணக்கத்தை சொல்லிக்கொண்டு எனது பேச்சை ஆரம்பிக்கிறேன்.

நடுவர் அவர்களே... கைகளில் இருக்கும் வளையல் கூட தெரியாத மாதிரி சேலை கட்டியவர்கள்தான் அந்தக்கால நடிகைகள். இந்தக் காலத்திலோ, மத்தியப் பிரதேசம் முதல் உத்திரப் பிரதேசம் வரை எல்லாம் தெரிவது போல சேலை கட்டுகிறார்கள்!

அன்று ஹீரோயின்கள் படம் முழுக்க புடவையில் வந்தார்கள், இன்றோ பர்ஸ்ட் நைட் சீனுக்கு மட்டும் புடவையில் வருகிறார்கள். நடு நெற்றியில் வகிடு எடுக்கும் அம்பிகா ஹேர்ஸ்டைல் என்று ஒன்று இன்னைக்கும் இருக்கிறது நடுவர் அவர்களே... ஆனா, இன்னைக்கு எந்த கதாநாயகியாவது கூந்தலை முடிஞ்சு நடிக்குதா? பேய் படத்துக்கு போட்டோ ஷூட் பண்ற மாதிரிதான் அலையுதுங்க.

கொடுத்த காசுக்கு கூட நடிக்கத் தெரியாத இந்தக்கால நடிகைகளோடு கொடுத்த காசுக்கும் மேல நடித்த அந்தக்கால நடிகைகளை கம்பேர் செய்வது முதுகுல கோடு இருக்கு, மூஞ்சில மீசை இருக்குன்னு பூனையை கொண்டு போய் புலிகளோடு ஒப்பிடுவது மாதிரி!

எங்கள் கால நடிகைகள் அட்டகாசமாக அழுது நடிப்பார்கள். ஆனால், இன்றைய நடிகைகள் நடிப்பதைப் பார்த்தால் நமக்கு அழுகை வந்திடும்!
அந்தக்கால நடிகைகள் அம்மன் வேஷத்தில் வந்தால் தியேட்டரில் பெண்கள் சாமியாடுவார்கள் நடுவர் அவர்களே... இந்தக்காலத்துல நடிகைகள் தொப்புள்ள ஆம்லெட்டும் ஆட்டுக்கால் பாயாவும் போட்டுக்கிட்டு சனியன் மாதிரி ஆடிக்கிட்டு இருக்காங்க.

அதனால் அழகிலும் திறமையிலும் சிறந்து விளங்குபவர்கள் 90களுக்கு முன் அறிமுகமான நடிகைகள்தான் எனக்கூறி விடை பெறுகிறேன்!
நடுவர் பூனைசம்பந்தம்: பிச்சுட்டய்யா, பின்னிட்டய்யா, கே.ஆர்.விஜயா தற்கொலைப் படையில உங்க அப்பாவும், ஒய்.ஈ.விஜயா அட்டகாசப் படையில நீயும் போர்த் தளபதிகளா இருந்தத நிரூபிச்சட்டய்யா. அடுத்தது வாங்க, வந்து பேசுங்க பேராசிரியர் சிம்ரன் கண்ணன்.

சிம்ரன் கண்ணன்: வண்டியில் எட்டு போடுறவங்களுக்கு மத்தியில் வாயிலையே எட்டு போடும் கீர்த்தி சுரேஷின் போட்டோவை மொபைல் வால்பேப்பராய் வைத்திருக்கும் நடுவர் அவர்களே! இன்று சின்னத்திரையில் மாமியார்களாக வருவது 90களுக்குப் பின் அறிமுகமான நடிகைகள்தான்.

ஆனா, இங்கு கவனிக்கப்படவேண்டிய விஷயம், 90களுக்கு முன் அறிமுகமான முக்காவாசி ஹீரோயின்கள், அறிமுகமாகும்போதே மாமியார் மாதிரிதான் இருந்தார்கள் என்பது!இந்தக்கால நடிகைகளை பேயாக காட்ட பல லட்சத்துக்கு மேக்கப் செய்யவேண்டியதாக இருக்கிறது. ஆனா, 80களில் வந்த பல ஹீரோயின்களே பேய் மாதிரிதான் இருந்தார்கள்!

ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி, ஸ்ரீவித்யா என நாலஞ்சு ஸ்ரீகளை வைத்துக்கொண்டு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் இவங்க துவைச்ச துவைப்புல கோட்டு சூட்டு துணி கிழிஞ்சு கோவணமாகிடுச்சு. வயிறா இல்லை நைலான் கயிறான்னு இன்றைய ஹீரோயின்கள் இடுப்பை வச்சிருக்காங்க. ஆனா, அன்னைக்கு முந்நூறு பேருக்கு ஒட்டுக்கா சமைக்கிற மாதிரி இடுப்புன்னு தந்தூரி அடுப்பை வச்சிருந்தாங்க!

நடுவர் அவர்களே... இவர்கள் இங்கிருந்த ஹேமமாலினி, ஸ்ரீதேவியைக் கூட பாலிவுட்டுக்கு தாரை வார்த்த இனத் துரோகிகள்! ஆனால், நாங்கள் வாரம் ஒரு மும்பை ஹீரோயினை கோலிவுட்டுக்கு இறக்கி, தமிழ் சினிமாவின் கை விரல் முதல் கால் விரல் வரை மோதிரம் போட்டுக்கிட்டு இருக்கோம் எனக் கூறி விடை பெறுகிறேன்...நடுவர் பூனைசம்பந்தம்: அருமையா சொன்னய்யா, அற்புதமா சொன்னய்யா... இப்ப கடைசியா பேச வராரு நம்ம பெருங்காய நேசன்.

பெருங்காய நேசன்: 90களுக்கு முன் அறிமுகமான கதாநாயகிகள் அறிமுகமாகும் போதே ஆன்ட்டிகள் போல இருந்தாங்களாம். ‘ஆம்பள’ படத்தில, 80களில் அறிமுகமான ரம்யா கிருஷ்ணனுடன் கூட சேர்ந்து மாமியாராக நடித்தது 90களில் அறிமுகமான ஐஸ்வர்யாவும் கிரணும்தான் நடுவர் அவர்களே!

ஒன்றை கவனிக்கணும்... 50 வயதாகியும் 30 வயதைப் போல இருக்கும் எங்கள் ரம்யா கிருஷ்ணன் போல ஒரு நடிகையை இவர்கள் காட்ட முடியுமா? எதிரணியினருக்கு தெரியாது நடுவர் அவர்களே... எங்கள் ரம்யாகிருஷ்ணன் கடந்த 30 வருடங்களாக 20வது பிறந்தநாளையே கொண்டாடிக்கிட்டு இருக்கிறார் என்று!90களுக்கு முன் அறிமுகமான நடிகைகள் எத்தனை சதவிகிதம் ஆடையால் மறைக்காமல் இருந்தார்களோ அதே சதவிகிதம்தான் இன்றைய நடிகைகள் மறைக்கிறார்கள்.

நடுவர் அவர்களே... ‘வட சென்னை’ படம் பார்த்தீர்களா? இன்றைய ஹீரோயின்கள் கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்கள். ஆனா, எங்கள் கால ஹீரோயின்கள் காதுல கேட்ட வார்த்தைகளைக் கூட திருப்பி பேசாதவர்கள். அன்றைய ஹீரோயின்கள் குத்தாட்டம் ஆடி பார்த்திருக்கீங்களா? இன்றைய ஹீரோயின்கள் குத்துற குத்துல பூமாதேவி கூட சத்தமா கத்துறாங்க நடுவர் அவர்களே!

கடைசியாக ஒன்று சொல்கிறேன்... வெங்காய பஜ்ஜிக்காக கடலை மாவில் முக்கி சுட்டாலும் வெங்காயம் அதோடு ஒட்டாது! அதுபோல ஆயிரம் நமீதாக்கள் நயன்தாராக்கள் வந்தாலும் எங்கள் சில்க் ஸ்மிதாவுக்கு எட்டாது! வாய்ப்புக்கு நன்றி நடுவர் அவர்களே...

நடுவர் பூனைசம்பந்தம்: அற்புதம்யா. நடிகைகள் பற்றிய என் பூனைக் கண்ண திறந்து ஞானக்கண்ணா மாத்திட்டீங்க. சாப்பிடணும்னு முடிவு பண்ணிட்டா சாம்பாரா இருந்தா என்ன சால்னாவா இருந்தா என்ன? நெட்டு இருந்தா வாட்சப்ல பேசு, துட்டு இருந்தா போன் பண்ணியே பேசு.

போர்த்திக்கிட்டு படுக்கிறப்ப முதல்ல காலை மூடணும்... படுத்துட்டு போர்த்தும் போது கடைசியா காலை மூடணும்! இவ்வளவுதான் வித்தியாசம்.
அதனால என் தீர்ப்பு என்னன்னா... 90க்கு முன்னால வந்தாலும் 90க்கு பின்னால வந்தாலும், அத்தனை நடிகைகளும் நமக்கு இனிமைகள்தான்.
ஹேப்பி பொங்கல்!  

 தோட்டா ஜெகன்