கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள் - 45



மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்!

‘‘பரம்பொருளே! பரந்தாமா! சரணம் சரணம்...’’ பல நாள் காணாத தாயைக் கண்ட குழந்தையைப் போல அரற்றியபடி மாலவனுக்கு தண்டனிட்டார் ரோமச முனிவர். கண்கவரும் அவரது நீல மணி ரூபத்தை தரிசித்து கண் பெற்றதன் பயனை அடைந்தார். அழுதார், தொழுதார், விழுந்தார், புரண்டார். 
இன்னும் ஆனந்தத்தில் அவர் என்னதான் செய்யவில்லை?
அவர் இப்படி இன்புறுவதைக்கண்ட எம்பெருமான், தானும் அக மகிழ்ந்தார்.‘‘மகனே ரோமசா! உன்னை இகழ்ந்தது பிரம்மனே ஆனாலும், அவன் தண்டனைக்குரியவனே! கேள் என் முடிவை! உன் உடலில் இருந்து இனி ஒரு ரோமம் விழுந்தாலும் பிரம்மனின் ஆயுளில் ஓர் ஆண்டு குறைந்து விடும். விஷயம் அறிந்த நான்முகன், இனி உனக்கு மட்டுமில்லை...

உன் ரோமத்திற்குக்கூட தீங்கு செய்ய அஞ்சுவான். இனி இந்த பூமியில் மாயவன் அடியவருக்கு தீங்கு செய்ய நினைப்போருக்கு உன் சரித்திரம் ஒரு பாடமாக அமையும்! வாழி நீ! வளர்க உம் தொண்டு...’’ ‘மழை முகிலும், இந்த முகில் வண்ணனின் கருணை மழையிடம் தோற்றுப் போகும்’ என்று வேதங்களும் சாஸ்திரங்களும் சொல்வதுதான் எவ்வளவு உண்மை என்று முனிவரைச் சிந்திக்க வைத்தது கோவிந்தனின் இந்த ஆசி மொழி.

ஊன் உருக, உயிர் உருக, திருமகள் கேள்வனை சரண் புகுந்தார்... காற்றோடு காற்றாக ரோமசர் கரைந்து போனார்...

‘‘மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்னு பெரியவங்க சொன்னதுக்கு அர்த்தம் இப்ப புரிஞ்சிருக்குமே! பெருமாள் மேல பக்தி செய்து பிரம்மாவை விட உயர்ந்தவராக ஆகிட்டார் ரோமசர்...’’கண்கொட்டாமல் நாகராஜன் சொன்ன கதையைக் கேட்டுக் கொண்டிருந்தனர் பத்மினியும், அவளது மகள் பவித்ராவும்.

நாகராஜன் சொன்ன தாடாள பெருமானின் மீதுபத்மினிக்கு மதிப்பும் பக்தியும் மரியாதையும் அதிகரித்து வருவதை அவளது முகம் வெளிச்சமிட்டுக் காட்டியது.  அதைக் கண்ட ஆனந்தி பூரித்தபடியே பேச ஆரம்பித்தாள்: ‘‘மனிதனுக்கு முதல் எதிரி ஆணவம்தான். நம்ம உலகாய வாழ்க்கைலயும் சரி, ஆன்மீக வாழ்க்கையிலும் சரி... பிரம்மா மாதிரி ஆணவம் கொண்டு தரி கெட்டுத் திரியும். எல்லாருக்கும் இந்த பெருமாள் நல்ல புத்திய கொடுப்பார். பிரம்மாவுக்கு சமமா ரோமசருக்கும் ஆயுள் கொடுத்த பெருமாள் இவர்.

அதனால இவர் தன்னோட பக்தர்கள் எல்லாருக்கும் நீண்ட ஆயுள் தருவாரு...’’‘‘ஆனா பாட்டி! தொலைந்து போனவங்களுக்கும், இந்த பெருமாளுக்கும் என்ன சம்பந்தம்? எதுக்காக பவித்ரா காணாம போனப்ப தாத்தா இந்த பெருமாளை வேண்டிக்க சொன்னார்?’’ ஆர்வம் தாங்காமல் கண்ணன் இடைமறித்தான். ‘‘கண்ணன் கேட்பது ரொம்ப சரி மாமா! அவரை வணங்கினதும் என் பொண்ணு ஓடோடி வந்துட்டாளே!’’ மடியில் இருந்த பவித்ராவின் தலையைக் கோதியபடியே கேட்டாள் பத்மினி.

‘‘ஒரு முறை இந்த பெருமாளே காணாம போய்ட்டார் தெரியுமா! இன்னொரு முறை அவரைக் கடத்திட்டு போய்ட்டாங்க! ஆனா, ரெண்டு முறையும் உண்மையான பக்தினால இந்த பெருமாள் நமக்கு மறுபடியும் கிடைச்சார்...’’ புன்னகையுடன் சொன்னாள் ஆனந்தி.
‘‘தாத்தா! தாத்தா... அதையும் சொல்லுங்க...’’ கண்ணன் ஆர்வம் தாங்காமல் துள்ளினான். அதைக் கண்ட நாகராஜன் மேலும் தாமதிக்காமல் கதைக்குள் சென்றார்.

சீர்காழி வளநகரின் மத்தியில் இருந்தது அந்த மண்டபம். எள் போட்டால் எடுக்க முடியாத அளவுக்கு கூட்டம். ஆச்சரியம் போல் அந்தக் கூட்டம் இரண்டாகப் பிரிந்திருந்தது. அதில் ஒரு பாதி நெற்றி நிறைய திருநீறு பூசி வாய் நிறைய சிவநாமம் மணக்க சிவப் பழமாகக் காட்சி தந்தது. கூட்டத்தின் மற்றொரு பகுதியோ ‘குலம் தரும் செல்வம் தந்திடும்... நலம் தரும் சொல்லை, நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்று திருமங்கை மன்னனின் தேன் தமிழை, வானத்தைப் பிளந்து விடும்படி முழங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் அனைவரது நெற்றியையும் திருமண் அழகு செய்தது.

அந்த வைஷ்ணவர்களின் கூட்டத்தின் தலைவராக, அழகுற அமர்ந்திருந்தார் திருமங்கை ஆழ்வார். அவர் அமர்ந்திருக்கும் விதமே புதுமையாக இருந்தது. ஒரு மன்னனுக்கும், வீரனுக்கும் உரிய தெனாவட்டும், பக்தனுக்கே உரிய அடக்கமும் சேர்ந்து அவரிடம் காணப்பட்டன. அவர் கண்களை மூடியபடி தியானத்தில் இருந்தார். விழி எல்லாம் கண்ணீர். ‘‘என் கண்ணே, தாடாளா, எங்கேடா போனாய்?’’ என்று அவரது இதழ்கள் புலம்பின. உள்ளத்தின் குமுறலை, முகத்தின் வாட்டம், பாரபட்சம் இல்லாமல் காட்டியது.

சிவ பக்தர்களின் தலைவராக ஒரு சின்னஞ்சிறு பாலகன் அமர்ந்திருந்தார். அவரது அருகில், திரு நீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும், அவரது மனைவி மதங்க சூளாமணியாரும் இருந்தார்கள். பாணர் யாழ் இசைத்தார். சூளாமணியார் ‘மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்...’ என்று அதி அற்புதமாகப் பாடினார். அங்கிருந்த அனைத்து சைவர்களும் அதைக் கேட்டு உருகினார்கள்.

ஆனால், தலைமை வகித்த பாலகன் முகத்தில் அதைக் கேட்ட பின் சோகப் புன்னகை படர்ந்தது. ‘‘நான் சர்க்கரையின் இனிப்பில் மயங்குகிறேன். அதற்காக, கட்டி வெல்லம் மட்டமாகுமா? வேதங்கள், ஒன்றே ஆன பரம்பொருள், பல்கிப் பலவாகி உலக நாடகம் ஆடுகிறது என்று சொல்கிறது. ஒன்றே ஆன அந்த பிரம்மம், ஈசனாகவும், திருமகள் நேசனாகவும் வேடம் தரிக்கிறது.

அதற்குக் காரணம் இருக்கத்தான் செய்கிறது. அனைவரது விருப்பமும் ஒரே மாதிரி இருக்காது. சிலருக்கு சர்க்கரை பிடிக்கும், சிலருக்கு வெல்லம் பிடிக்கும். ஆனால், இரண்டும் இனிப்புதான். அதேபோல, ஒவ்வொருவரும் தனது மனப் பக்குவத்திற்கு ஏற்றாற்போல இறைவனை வழிபட அவர்களுக்கு உரிமை உண்டு. இவன் ஒருவனே கடவுள் என்று சொல்ல வேதத்திற்கு அதிக நேரம் ஆகாது. ஆனால், அவ்வாறு செய்யாமல் நீ விரும்பும் உருவத்தை, பெயரை வணங்கு என்று ஜனநாயக நோக்குடன் வேதம் செயல் படுகிறது.

ஆகவே, அது ஈசன், மாலவன், அம்பிகை என்று பரம்பொருளுக்கு பல வடிவம் தந்து, அந்த பல வடிவில் ஏதேனும் ஒரு வடிவை, நீ விரும்பும் வடிவை வணங்கு  என்று அன்புக் கட்டளையும் இடுகிறது!இவை அனைத்தையும் செய்து விட்டு, ஈசனாகவும் திருமகள் நேசனாகவும் இருப்பது ஒரே பரம்பொருளே என்று அது சொல்லவும் செய்கிறது.

‘ஓம் நமோ பகவதே ருத்ராய விஷ்ணவே மிருத்யுர் மே பாஹி’ என்று வேதம் ஈசனின் வடிவில் இருக்கும் மாதவனை அல்லவா போற்றுகிறது? இவர்கள் அனைவருக்கும் நாம் சைவம் போதித்த அளவிற்கு வேதத்தின் பொருளை போதிக்கவில்லை போலும். ஆம், அதுதான் உண்மை. நான் முறையாக இவர்களுக்கு வேதத்தின் பொருளை போதித்திருந்தால் இன்று இவர்கள் இப்படி செய்திருப்பார்களா? அனைத்தும் என் தவறுதான்...’’அந்த பிஞ்சுக் குழந்தையின் நெஞ்சம் பதைபதைத்தது. அந்த பதைபதைப்பிலும் சிவ நாம ஜெபத்தை அவரது நா மறக்கவில்லை.

வேதம் நான்கின் மெய்ப் பொருள், நாதன் நாமம் நமசிவாயவே என்று வீர முழக்கம் செய்த ஞானக் குழந்தை, ஞான சம்பந்த மூர்த்தி, இன்று தனது சிஷ்யர்கள் செய்த காரியத்தால் வருத்தத்துடன் காணப்பட்டார்.  நடந்த சம்பவம் அவரது மனக்கண் முன் ஓடியபடிஇருந்தது...‘‘சர்வ லோக ஏக நாயகன் திருமாலிடம் திரு மந்திர உபதேசம் பெற்ற திருமங்கை மன்னன் வருகிறார்! நால்கவி வித்தகர் வருகிறார்...’’ என்ற கோஷம் செவிக்கு இனிமையாக ஒலித்து, காழி மாநகரில், திருமங்கை ஆழ்வார் நுழைந்ததை உணர்த்தியது.  

அவரைப் போற்றி வைணவர்கள் செய்த கோஷம்தான் அது. ஆழ்வார், சீர்காழியில் கோயில் கொண்ட தாடாள பெருமானை தரிசித்து அவருக்குப் பாமாலை சூட்டவே வந்திருக்கிறார் என்ற செய்தி ஊரில் பரவவே, மக்கள் திரண்டு வந்தனர். பூரண கும்ப மரியாதை செய்து வேதியர்கள் அவரை வரவேற்க, மங்கையர்கள் ஆரத்தி எடுத்து, மங்கை மன்னனின் திருஷ்டியை கழிக்க வேதியர்கள் வேதகானம் செய்ய, கூடவே தமிழ் வேதமாம் திவ்ய பிரபந்தத்தை வைணவர்கள் இசைக்க, ஊரே திருவிழாக் கோலம் பூண்டு விட்டது.

வீதி எங்கும் பல வண்ணக் கோலம். கோலங்களில் பூக்களின் வர்ண ஜாலம். செவிக்கினிய மேள தாளம். மாவிலைத் தோரணம், அடித்த தென்றல் காற்றில் முன்னேயும் பின்னேயும் ஆடி சூசகமாக ஆழ்வாரை வரவேற்றது. அப்பப்பா தேவலோகமேசீர்காழிக்கு வந்துவிட்டதோ... என்று மலைக்கச் செய்தது அந்த காட்சி. கூட்டத்தில் நடுநாயகமாக தேவலோகக் குதிரையைப் பழிக்கும் ஒரு வெள்ளைக் குதிரையில் வீற்றிருந்தார் ஆழ்வார். அவரது அழகிய தோற்றத்தைக் கண்டவர்கள், மாயவன் கல்கி அவதாரம் எடுத்து விட்டார் போலும் என்றே மயங்கினார்கள்.

இத்தனையும் சம்பந்தர் மடத்தில் இருந்த அவரது சேவகர்களுக்கு வயிற்றெரிச்சலை தந்தது. ‘‘முத்தமிழ் விரகன், நாற்கவி ராஜன், அறுமுகனின் அம்சம் சம்பந்தர் இருக்க கண்டவனை புகழ்வதா?’’ என்று விஷ்ணு பூஜையில் புகுந்த கரடியைப் போல, அந்த திருவிழாவில் புகுந்து கர்ஜித்தார்கள்.
முதலில் பொறுத்துப் போன வைணவர்கள், நேரம் செல்லச் செல்ல பொங்கி எழுந்தார்கள்.

இரு பிரிவினர்களுக்கும் பெரிய சண்டை வந்துவிடும் நிலைமை வந்தது. இனியும் பொறுத்தால் சரிப்படாது என்று உணர்ந்தார் ஆழ்வார். ‘‘நாளை, நாம் ஆளுடைப் பிள்ளையாரை வாதில் சந்திப்போம்! மற்றவற்றை அங்கு தீர்மானிப்போம்!’’ ஓநாய்களின் கூச்சலின் நடுவே ஒலிக்கும் சிம்ம கர்ஜனையைப் போல இருந்தது ஆழ்வாரின் குரல். கேட்ட அனைவரும் அதற்கு கட்டுப் பட்டார்கள். மவுனமாக கூட்டமும் கலைந்தது. எஞ்சி இருந்த தன் மெய்க்காப்பாளர்களை நோக்கினார் திருமங்கை மன்னன்.

‘‘இங்கு தாடாளப் பெருமாள் கோயில் எங்கிருக்கிறது? அவனைக் கண்ணாரக்கண்டாலே உங்கள் செவியார அருந்தமிழ்க் கவியை என்னால் பாட முடியும்...’’ ஆர்வத்தோடு வினவினார் ஆழ்வார். அதைக் கேட்டவர்களின் முகத்தில் ஈ ஆடவில்லை. விஷயம் தெரிந்தால் ஆழ்வார் என்ன செய்வாரோ என்ற பயம். ஒருவாறு தங்களைத் தேற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.‘‘அந்தப் பெருமானின் கோயில், காலப்போக்கில் என்ன ஆனது என்றே தெரியவில்லை சுவாமி!’’” பயந்து பயந்து வார்த்தைகளை உதிர்த்தார்கள் அவர்கள்!   

(கஷ்டங்கள் தீரும்)

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்