மகாத்மா காந்தி பத்தின நூல் தொகுப்பில் ஒரு வரி கூட வ.உ.சி. குறித்து இல்ல...மறைக்கப்பட்ட வரலாற்றை வேதனையுடன் குறிப்பிடுகிறார் ரெங்கையா முருகன்

‘‘பொதுவா, நம்ம எல்லோருக்கும் வ.உ.சி.ன்னா கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்னு ஒருவரி செய்தியா மட்டுமே ெதரியும்.
ஆனா, அந்தக் காலத்துல இந்தியா முழுவதும் பேசப்பட்ட ஒரே தமிழகத் தலைவர் வ.உ.சி.தான். அன்னைக்கு பாலகங்காதர திலகர், அரவிந்தர்னு பலரும் அவரைக் கொண்டாடினாங்க. லாலா லஜபதிராய் தன்னுடைய ‘யங் இந்தியா’ நூல்ல தென்னாடுன்னா அது வ.உ.சி.னு தெளிவா குறிப்பிடுறார்.

அந்தளவுக்கு மாபெரும் ஆளுமையா விளங்கியிருக்கார். ஆனா, இன்னைக்கு முக்கியத்துவமில்லாத ஒரு  தலைவரா அவரை ஆக்கியிட்டோம். அதனாலதான் அவர் பத்தின பதிவுகள தொடர்ந்து செய்திட்டு வர்றேன்...’’ வேதனைபொங்க சொல்கிறார் ரெங்கையா முருகன்.கடந்த நான்காண்டுகளாக வ.உ.சியைப் படித்து வரும் இவர், வ.உ.சி. பற்றிய தகவல்களையும் சேகரித்து வருகிறார். மட்டுமல்ல. அதைச் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதுடன் கல்லூரி, பள்ளி, பேச்சரங்கம் என அழைக்கும் இடங்களில் பேசியும் வருகிறார்.

‘‘ஆரம்பத்துல எனக்கும் வ.உ.சி. பத்தி உங்களைப் போலதான் தகவல்கள் தெரியும். ஆனா, அவரைப் பற்றி வரலாற்று ஆய்வாளர் ஆ.சிவசுப்ர
மணியனின் ‘வ.உ.சி.வாழ்வும், பணியும்’ நூலைப் படிச்ச பிறகு ‘இவ்வளவு பெரிய ஆளுமையா’னு ஆச்சரியப்பட்டேன்.
பிறகு, ஆ.சிவசுப்ரமணியன் ஐயாவை சந்திச்சேன்.

அவர்கிட்ட இந்த நூலைச்சுருக்கி மக்கள்கிட்ட வ.உ.சி.யின் பணிகளைக் கொண்டு போலாம்னேன். அவர், ஏற்கனவே இதைச் சுருக்கி, கோவில்பட்டி ஓவியர் மாரீஸ் ‘மக்கள் தலைவர் வ.உ.சி’னு இருபத்திநாலு பக்கத்துல ஒரு வெளியீடு கொண்டு வந்திருக்கார். அதே போதுமானதுனு சொன்னார்.
நான் மாரீஸை சந்திச்சு அந்த நூலை வாங்கினேன். இப்ப நான் போற வர இடங்கள், சந்திக்கிற நண்பர்கள்னு எல்லோருக்கும் இந்நூலை இலவசமா வழங்கி வ.உ.சியை படிக்கச் சொல்றேன். தவிர, வ.உ.சி பற்றின செய்திகள் எதில் வந்தாலும் அதையும் சேகரிச்சு படிக்கறேன்.

நான் புதுசா எந்த ஆய்வும் செய்யல. ஆ.சிவசுப்ரமணியன், பெ.சு. மணி, ஆ.ரா.வேங்கடாசலபதி, மா.ரா.அரசு ஆகியோர் போட்ட பாதையில பயணிக்கிறேன். அவ்வளவுதான்...’’ என்கிற ரெங்கையா முருகன் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் MIDSல் நூலகராகப் பணியாற்றுகிறார்.

‘‘வ.உ.சி. 1872 செப்டம்பர் 5ம் தேதி ஓட்டப்பிடாரத்துல பிறந்தார். அப்பா உலகநாதன் வழக்கறிஞர். அம்மா பரமாயி. வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் என்பதே வ.உ.சி. ஆரம்பக்கல்வியை  சொந்த ஊர்ல படிச்சவர், உயர்நிலையை தூத்துக்குடி கால்டு வெல்ல முடிக்கிறார். பிறகு, திருச்சியில சட்டம் படிச்சிட்டு ஏழைகளுக்கு இலவசமா வாதாடுறார். குற்றவியல் துறையில சிறந்த வக்கீல்னு பெயரெடுக்கிறார். ஆனா, நீதித்துறையையும் காவல்துறையையும் பகைச்சிட்டு வேலை செய்றார். இது அவர் அப்பாவுக்குப் பிடிக்கல. அதனால, அவர் தூத்துக்குடி போயிடுறார்.

இதுக்கிடையில வ.உ.சி.க்கும் வள்ளியம்மாளுக்கும் திருமணம் நடக்குது. இந்நேரம் ஒரு சம்பவம். இன்ைனைக்கு வ.உ.சி.யை ஒரு சாதிக்குள் அடைச்சிட்டு இருக்காங்க. இல்லையா? ஆனா, அன்னைக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலா தீண்டாமையை எதிர்த்திருக்கார்.விருதுநகரைச் சேர்ந்த ராமையா பரதேசினு கண்ணு தெரியாத ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு மனிதர். தமிழ்ப் புலமை கொண்டவர். அவரை வீட்டுல வச்சு சாப்பாடு போட நினைச்ச வ.உ.சி. மனைவிகிட்ட கேட்டிருக்கார். அவங்க சரினு சொல்லியிருக்காங்க.

அவர் தெரு ஆதிக்க சாதி நிறைஞ்சது. அந்த மனிதரை உள்ளே விடமாட்டாங்க. அதுக்காக ஒரு ஐடியா பண்ணியிருக்கார். ஒரு ஆசாரியை அழைச்சு இசக்கியம்மன் சிலையைக் கொண்டுவரச் செய்றார். அதை வீட்டுக் கதவருகே வைக்கிறார். ஏன்னா, இந்த அம்மன் இருந்தா அந்தப் பகுதிக்கு வர மக்கள் பயப்படுவாங்க. தென்மாவட்ட மக்களுக்கு இன்னைக்கும் அந்த பயம் உண்டு. அதைப் பயன்படுத்தியிருக்கார்.

பிறகு, அரசல்புரசலா மக்களுக்குத் ெதரிய வருது. மீண்டும் தன் மனைவியை அழைச்சு கேட்குறார். ‘சாப்பாடு போட்டாதானே பிரச்னை. இனி, நானே ஊட்டி விட்டுடுறேன்’னு சொல்றாங்க. வ.உ.சி அசந்து போயிடுறார். ஆனா, துரதிருஷ்டவசமா இளம் வயதிலேயே வள்ளியம்மாள் இறந்துட்டாங்க. பிறகு, இரண்டாவதாக மீனாட்சி அம்மாளைத் திருமணம் செய்றார். அவங்களுக்குதான் ஏழு குழந்தைகள் பிறக்குது...’’ என்கிறவர் வ.உ.சி.யின் போராட்டங்கள் பற்றி குறிப்பிட்டார்.

‘‘வ.உ.சி.யின் போராட்டங்கள்ல முக்கியத்துவமான காலகட்டம் 1906, 1907ம் ஆண்டுகள்தான். அவர் 1898லேயே காங்கிரஸில் உறுப்பினரா இருக்கார். இந்நேரம் இந்திய தேசிய காங்கிரசுக்குள்ளே சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமைனு திலகர், லஜபதிராய், விபின்சந்திரபால் ஆகியோர் முழங்கறாங்க. இவர்கள் தலைமையில சுதேசி இயக்கம்னு ஒரு கட்சி பிறக்குது. இந்த இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட வ.உ.சி, இந்தியர்களால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கவும், விற்கவும் சுதேசி பண்டகசாலை ஒன்றை உருவாக்குறார்.

அன்னைக்கு சென்னை மாகாணத்துல ஆங்கிலேயரை எதிர்த்த ஒரே இடமா தூத்துக்குடி விளங்குச்சு. பிறகு, வ.உ.சி.யின் சுதேசி கப்பல் நிறுவனம் உருவாச்சு. இந்நிறுவனத்துக்கு பங்குதாரர்களைச் சேர்க்க இந்தியாவுக்கும், இலங்கைக்கும் வ.உ.சி. பயணமானார். இந்நேரம், அவரின் மூத்த மகன் உலகநாதன் இறந்து போனார். ஆனாலும், அவர் தன் பணியில இருந்து விலகல.

1907ம் ஆண்டு எஸ்.எஸ்.காலிேயா, எஸ்.எஸ்.லாவோனு ரெண்டு கப்பல்கள் தூத்துக்குடி வந்தன. இதை வாங்கும் வரை வ.உ.சி. காத்திருக்கல. முன்பே மாங்குசீட்டன்ங்கிற கப்பலை வாடகைக்கு அமர்த்தி வேலையைச் செய்திட்டு இருந்தார். கப்பல்கள் வாங்கியது பற்றி மகாகவி பாரதி தன்னுடைய ‘இந்தியா’ பத்திரிகையில தலையங்கம் எழுதி கருத்துப்படமும் போடுறார்.

இதைப் பார்த்திட்டு ஆங்கிலேயர்களும், அவங்க கப்பல் நிறுவனத்தினரும் சும்மா இருப்பாங்களா? வ.உ.சி.யின் சுதேசி நிறுவனத்துக்கு எதிராக சூழ்ச்சி செய்றாங்க.முதல்ல, கப்பல் கட்டணத்தைக் குறைக்கிறாங்க. இதனால, சரக்குகளும், பயணிகளும் வ.உ.சி. நிறுவனத்தை நாடி வரலை. பிறகு, வ.உ.சியும் கட்டணத்தைக் குறைக்கிறார். உடனே பிரிட்டிஷ் நிறுவனம், இலங்கைக்குச் செல்ல ஓராளுக்கு ஒண்ணேகால் ரூபாய்னு சொன்னது. வ.உ.சி. பின்வாங்காமல் ஓராளுக்கு ஒரு ரூபாய்னு சொல்றார்.

அப்புறம், ஆள் ஒன்றுக்கு அரை ரூபாய்னு பிரிட்டிஷ் நிறுவனம் சொல்ல, வ.உ.சி. சுதேசி கப்பலில் ஏறுங்கள், இலவசமான இலங்கைப் பயணம்னு சொல்றார்.அடுத்து பிரிட்டிஷ் நிறுவனம், ‘எங்கள் கப்பல்ல ஏறுங்க. இலவசமா இலங்கையைப் பாருங்க. ஆளுக்கு ஒரு குடை இலவசம்’னு அறிவிக்குது.
இந்த அசுரப் போட்டியை வ.உ.சி.யால் தாக்குப்பிடிக்க முடியல. தோல்வியை ஏற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுறார். ஆனாலும், அவரின் முயற்சியைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கு. காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் மூலகர்த்தர் வ.உ.சி.தான்.

இதற்குப் பிறகு, தூத்துக்குடி கோரல் மில் போராட்டம் ஆரம்பமாகுது. ஹார்வி நிறுவனம் தூத்துக்குடியில கோரல் மில்லை ஆரம்பிக்குது. இங்க வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைவா தரப்படுது. வேலைப் பளுவும் அதிகம். இதனால, தொழிலாளர்கள் கஷ்டப்படுறாங்க.
இதைப் பார்த்த வ.உ.சி அதனைப் ேபாக்க முன்வர்றார். சுப்ரமணிய சிவாவும், பத்மநாப அய்யங்காரும் துணை நிற்கிறாங்க. வேலை நிறுத்தம் செய்ய தொழிலாளர்களை ஊக்குவிக்குறார். 1908ல் வ.உ.சி.யும், சிவாவும் பேசிய கூட்டத்துல 3 ஆயிரம் பேர் கூடுறாங்க.  

ஆங்கிலேயர்கள், ெரண்டு நாள் போராடுவாங்கனு நினைச்சாங்க. ஆனா, வ.உ.சி. எல்லா மக்களிடமும் பணம் வசூலிச்சு மூணு வேளையும் தொழிலாளர்களுக்கும் அவங்க குடும்பத்துக்கும் உணவு அளிக்கிறார். ஒருகட்டத்துல நஷ்டம் அதிகரிக்க, 55 சதவீதம் சம்பளம் உயர்த்தித் தருது மில் நிறுவனம். தவிர, மருத்துவ வசதி, வார விடுமுறைனு எல்லாம் ஒரே நேரத்துல அளிக்கப்படுது.

அன்னைக்கு இந்தியாவில் நடந்த வித்தியாசமான போராட்டம்னு இது பேசப்படுது. தவிர, இந்தியாவின் முதல் பொது அரசியல் வேலை நிறுத்தப் போராட்டமும் இதுதான்.இதைப் பற்றி, ‘வந்தே மாதரம்’ பத்திரிகையின் ஆசிரியரா இருந்த அரவிந்தர் ஏழு தலையங்கம் எழுதுறார். ‘வெல்டன் சிதம்பரம்’னு ஒரு புகழ்பெற்ற தலையங்கமும் இதுல அடக்கம். அப்புறம், திலகர் ‘மராட்டா’விலும், ‘கேசரி’ பத்திரிகையிலும் வ.உ.சியின் போராட்டம் பற்றி எழுதுறார். இதன்பிறகு இந்தியாவின் ஐகான் ஆக வ.உ.சி. மாறுறார்.

இந்நேரம், வங்காள விடுதலை வீரர் விபின்சந்திரபால் நீதிமன்ற அவமதிப்புக்காக ஆறுமாத சிறைத் தண்டனைக் காலம் முடிஞ்சு வெளி வர்றார்.
அந்த நாளை சுயராஜ்ஜிய தினமாக நெல்லையிலும், தூத்துக்குடியிலும் கொண்டாடுறாங்க. இதனால் எரிச்சலடைஞ்ச பிரிட்டிஷ் அரசு பொதுக்கூட்டங்கள்ல வ.உ.சி.யும், சிவாவும் பேசத் தடைவிதிச்சு வழக்குத் தொடருது. 1908 மார்ச் 12ம் தேதி வ.உ.சி., சிவா, பத்பநாப அய்யங்கார் மூவரும் கைது செய்யப்படுறாங்க.

வ.உ.சி.க்கு ரெண்டு ஆயுளும், நாடு கடத்தல் தண்டனையும் கொடுக்கப்படுது. அவரை அந்தமானுக்கு அனுப்ப வேண்டியது. ஆனா, அங்க
கைதிகள் அதிகமா இருந்ததால கோவை சிறைக்குக் கொண்டு போனாங்க. அங்கிருந்து கேரளாவின் கண்ணனூர் சிறைக்கு மாற்றினாங்க. பிறகு, உயர்
நீதிமன்றத்தால் தீர்ப்பு குறைக்கப்பட்டுச்சு. நான்காண்டுகள் கழிச்சு வ.உ.சி. விடுதலையானார்.

ஆனா, அவர் விடுதலையாகி வெளியே வரும்போது அவரை வரவேற்றது சுப்ரமணிய சிவாவும் இன்னும் ரெண்டு பேரும்தான். ஏன்னா, அவரை வரவேற்கிறவங்களை பிரிட்டிஷ் அரசு கண்காணிச்சு வழக்குத் தொடர முயற்சித்தது. அவரையும் கண்காணிப்பிலேயே வச்சிருந்தது. அவரின் வழக்கறிஞர் லைசென்ஸும் பறிக்கப்பட்டுச்சு. அப்புறம், சுதேசி நிறுவனப் பங்குதாரர்களைவிட்டு பங்குகளைக் கேட்க வச்சது. இதனால, நொடிஞ்சு போனார் வ.உ.சி.

கோவையில சில காலம் தங்கிட்டு பிறகு சென்னை வர்றார். இங்க சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர், பெரம்பூர் பகுதி யில வாழ்றார்.் பெரம்பூர்ல இருக்கிறப்ப தண்டபாணி பிள்ளையின் அரிசி கடையில வேலை செய்றார். இந்தக் காலகட்டத்துல அவர் திருக்குறள் அறத்துப்பாலுக்கு உரை எழுதினார். பல்வேறு நூல்களை மொழிபெயர்த்தார். சில நூல்களைப் பதிப்பித்தார்.

இந்த தண்டபாணி பிள்ளை பின்னாளில், ‘நாரதர்’ என்ற பத்திரிகை ெவளியிட்ட வ.உ.சி. நினைவு மலரில், ‘நானும், திருவிகவும் வ.உ.சி.யுடன் சேர்ந்து சென்னை பக்கிங்ஹாம் கர்னாடிக் ஆலைத் தொழிலாளர் சங்கம், ரயில்வே தொழிலாளர் சங்கம் ஆகியவற்றை உருவாக்கினோம்’னு குறிப்பிடுறார்.
அப்புறம், 1919ல் அமிர்தசரஸ்ல நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டிற்குப் போறாங்க. அப்ப வ.உ.சி.கிட்ட பணம் இல்ல. இந்நேரம், பெரியார், தண்டபாணி பிள்ளைகிட்ட முதல் வகுப்புச் சீட்டு வாங்கித் தரும்படி பணம் கொடுக்குறார். ஆனா, தண்டபாணி பிள்ளை ரெண்டு மூன்றாம் வகுப்பு டிக்கெட் வாங்கிட்டு மீதிப் பணத்தைசெலவுக்கு வ.உ.சி.கிட்ட கொடுத்திடுறார்.

பின்னர், பெரியார் டிக்கெட் என்னாச்சுனு கேட்க, அதற்கு தண்டபாணி பிள்ளை ஏதேதோ சொல்லிச் சமாளிச்சிருக்கார். இந்த ரெண்டு டிக்கெட்டில் தண்டபாணி பிள்ளையும், வ.உ.சி.யும் பயணிக்கிறாங்க. அப்ப ரயில் பூனா வந்ததும் ஒரே கூட்டம். மாலை மரியாதைகளுடன், கோஷம் போட்டுகிட்டு நிற்கிறாங்க. முதல் வகுப்பு, ரெண்டாம் வகுப்பு பெட்டி ஏறி திலகரின் சகாவான எங்கள் கப்பலோட்டிய தமிழன் எங்கேனு தேடுறாங்க. ஆனா, அவர் மூன்றாம் வகுப்பு பெட்டியில் இருக்கார்.

அவருக்கு எல்லா மரியாதையும் அளிச்சிட்டு பலகாரங்களும் கொடுத்திட்டு போறாங்க. அங்கிருந்து அமிர்தசரஸ் போகிற வரை வழிநெடுக வ.உ.சி.க்கு மரியாதை அளிக்கப்பட்டிருக்கு. இதையும் தண்டபாணி பிள்ளையே அந்த மலரில் குறிப்பிடுறார். எவ்வளவு பெரிய ஆளுமையை நாம் முக்கியத்துவம் இல்லாதவரா ஆக்கிட்டோம்னு பாருங்க...’’ என்கிற ரெங்கையா முருகன், காங்கிரஸ் கட்சி அவரை மறந்துவிட்டது மட்டுமல்லாமல் மறைத்தும்
விட்டது என வருந்துகிறார்:

‘‘பட்டாபி சீதாராமய்யா எழுதிய காங்கிரஸின் அதிகாரபூர்வ சரித்திரத்துல வ.உ.சி. பத்தி ஒருவரி கூட இல்ல. அது இன்று வரை தொடருது. மகாத்மா காந்தி பத்தி தொண்ணூறு வால்யூம்கள் கொண்ட நூலுக்கான இண்டெக்ஸே ஒரு நூலா இருக்கு. அதுலயும் ஒருவரி கூட வ.உ.சி. பத்தி குறிக்கப்படல.
ஆனா, வ.உ.சி. சிறையில் இருந்தப்ப அவர் குடும்பத்திற்கு உதவி செய்ய டர்பன் நகர்ல இருந்து தில்லையாடி வேதியப்பிள்ளை என்பவர் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை அங்கிருந்து இந்தியா திரும்பிய காந்தியடிகளிடம் கொடுக்குறார். அவர் அரசியல் பிரச்னைகளில் அதை மறந்துடுறார்.

இதை வேதியப்பிள்ளை, தண்டபாணி பிள்ளையிடம் சொல்லியிருக்கார். அவர், வ.உ.சியிடம் சொல்ல, பணம் கிடைக்கலைங்கிறார். உடனே, 1920ல் சபர்மதியில் காந்தியைச் சந்திச்ச தண்டபாணி பிள்ளை இதுபற்றி கேட்குறார். காந்தி மறந்துவிட்டதைச் சொல்லி, பணத்தை பம்பாய் கோபாலி என்ற முஸ்லீம் பிரமுகரிடம் தன் பெயர் சொல்லி வட்டியுடன் வாங்கிக் கொள்ளுமாறு கூறியிருக்கார்.

பிறகு, இந்த விஷயத்தை திலகரிடம் சொல்ல அவர் கோபாலிக்கு கடிதம் கொடுத்துள்ளார். வ.உ.சி.யும், தண்டபாணியும் பணத்தை வாங்க பம்பாய் சென்றனர். காந்தி பணம் கொடுக்க மறந்துட்டார். அதுக்காக வட்டி வாங்கக்கூடாதென 5 ஆயிரம் ரூபாய் பணத்தை மட்டும் வாங்கிட்டு வ.உ.சி. வந்்திருக்கார். இதையும் தண்டபாணி பிள்ளை வ.உ.சி. மலரில் குறிப்பிடுறார்.

இந்த விஷயங்கள் எதுவும் காந்தி பற்றின நூல்களிலோ, சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் வரலாற்றிலோ இல்ல. பல விஷயங்கள் இங்க
இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கு. 1936ல் வ.உ.சி  இறந்ததைக் கூட ஒருவரி செய்தியாதான் பத்திரிகைகள் பதிவு செய்திருக்கு...’’ என்கிற ரெங்கையா முருகன், ‘‘அதனால, முதல்ல பள்ளி, கல்லூரி அளவுல வ.உ.சி. பற்றி அறியப்படாத தகவல்களை பாடமா கொண்டு செல்லணும். அப்பதான் அவர் எப்படிப்பட்ட தலைவர்னு இப்ப இருக்கிற தலைமுறைக்குப் புரியும்.

2022ல் வ.உ.சி.யின் 150வது ஆண்டு வருது. அதை அரசு நல்ல ஒரு விழாவாக எடுக்கணும். அந்நேரம், பல்கலைக்கழக அளவுல ஆய்வு இருக்கையா கொண்டு போகணும். அப்படிச் செய்றப்ப நிறைய ஆய்வுகள் வ.உ.சி. பத்தி வரும். அதுவே, சுதந்திரத்திற்காக தன்னலமற்று உழைச்ச அந்த உன்னதத் தலைவருக்கு நாம் செலுத்துற மரியாதையா இருக்கும்...’’ அழுத்தமாக முடிக்கிறார் ஆய்வாளர் ரெங்கையா முருகன்! l

பேராச்சி கண்ணன்