வலிமைஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு திரும்பி இருக்கிறது அஜித் நடிக்கும் ‘வலிமை’ யூனிட்! ‘நேர் கொண்ட பார்வை’க்குப் பிறகு இயக்குநர் எச்.வினோத் - யுவன் ஷங்கர் ராஜா - நீரவ்ஷா கூட்டணி என்பதாலும், ஃப்ரெஷ்ஷான ஸ்கிரிப்ட் என்பதாலும் ‘வலிமை’க்கு வார்ம் வெல்கம் தந்து வருகிறார்கள் அஜித்தின் ரசிகர்கள்.

* ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக். அஜித் - இயக்குநர் வினோத் முதல் சந்திப்பு நடந்த நாள் அது. ‘‘பிங்க்’ ரீமேக்கை நீங்கதான் இயக்கணும்...’ என வினோத்திடம் அஜித் கேட்டுக் கொண்ட போது, முதலில் அவர் மறுத்திருக்கிறார். ‘முதன் முதலா உங்களோட இணையறேன். ரீமேக் வேண்டாம். உங்களுக்கான கதையே எங்கிட்ட நிறைய இருக்கு.

அதில் ஒன்றை பண்ணலாமே...’ எனச் சொல்லவும்... சிரித்து விட்டார் அஜித். ‘உங்கமேல நம்பிக்கை இருக்கு. இந்த ரீமேக் நல்லா வரும். பண்ணுங்க. அடுத்த படத்தையும் நீங்களே இயக்குங்க’னு  வாக்குறுதியும் அளித்தார் அஜித். அந்த வாக்கை ‘வலிமை’யாக காப்பாற்றியிருக்கிறார் தல!

* இது ஒரு ஃபேமிலி ஆக்‌ஷன் ட்ராமா. முதல் ஷெட்யூல் ஹைதராபாத்தில் தொடர்ந்து 25 நாட்கள் நடந்திருக்கிறது. ஸ்டண்ட் சில்வாவின் ஃபைட் சீக்குவென்ஸை ஷூட் செய்திருக்கிறார்கள். இடையே கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் அஜித்தின் மகள் அனோஸ்கா பிறந்தநாள் வந்ததால் படப்
பிடிப்பிற்கு சின்ன பிரேக்!

இதனைத் தொடர்ந்து அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பு வட இந்தியாவில் பரபரக்கிறது. ‘தீரன் அதிகாரம் ஒன்று’க்காக ராஜஸ்தானின் குக்கிராம ஏரியாவில் மராத்திய நடிகர்களை நடிக்க வைத்திருந்தார் வினோத்.

இதிலும் அப்படி கதைக்கான முகச்சாயல் கொண்ட மும்பை நடிகர்கள் நடிக்கிறார்கள். படத்தில் ஹீரோயின் யாரென இன்னும் முடிவாகவில்லை. ஆனாலும் பாலிவுட் யாமி கௌதம் என தகவல்கள் தந்தியடிக்கின்றன.

இன்னொரு சுவாரஸிய செய்தி. ராமோஜிராவில் அஜித் படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு பக்கத்தில்தான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி - சிவா முதன்முறையாக இணையும் பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங்கும் நடந்திருக்கிறது. ஆனால், அஜித் - ரஜினி சந்திப்போ... சிவா - அஜித் சந்திப்போ நிகழவில்லை.

*படத்தில் டபுள் அஜித் என கிறுகிறுக்கிறது ஏரியா. அதில் ஒரு அஜித் போலீஸ் அதிகாரி என்றும் இன்னொரு அஜித் ‘மங்காத்தா’ அஜித் ஆகவும் இருக்கலாமென கொளுத்திப் போடுகிறது கோலிவுட். யூனிட்டிடம் விசாரித்தால், ‘தீரனை’விட ‘வலிமை’யான ஆக்‌ஷன் ஸ்கிரிப்ட் இது என்று மட்டும் சொல்கிறது!